Skip to main content

இரு சகோதரர்கள்

 

[அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல்]

நேர்கண்டவர்: எஸ். குரு

படங்கள்: திரு. சுதாகர்

நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன்

நீங்கள் பதிப்பாளரானது எப்படி?

தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின.

முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு, அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து, என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா, காபி முக்காலணா, பீடா காலணா, ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது.

ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர், சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு, ஆறு மணியிலிருந்து, ஏழரை மணிவரை கவிராயரிடம் சென்று பாடம் கேட்பேன். எனக்கு நல்ல சாரீரம். நன்றாகப் பாடுவேன். நாடக வசனங்கள், பாடல் எல்லாம் நன்றாக மனப்பாடம் ஆனதும் ‘வள்ளித் திருமணம்’, ‘கோவலன்’, ‘பவளக்கொடி’ முதலிய நாடகங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்றேன். ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில் நாரதர் வேடம். ‘பவளக்கொடி’யில் பெண் வேடம் ஏற்றுப் பவளக்கொடியாகவே நடித்தேன்.

அப்புறம் காஞ்சிபுரம் சென்றேன். அங்கு ‘நியூ மாடல் லஞ்ச் ஹோம்’ என்ற ஹோட்டலில் வேலை. தினம் பத்தே முக்காலணா சம்பளம். என்னை ஆட்டுக்கல்லில் மாவரைக்க உட்கார்த்தி வைத்தார்கள். தினசரி நாற்பது படி புழுங்கலரிசி, பதினேழு படி உளுந்து இட்லிக்கு அரைத்துக் கொடுப்பேன். நாடகங்களிலும் நடிப்பேன்.

‘நவயுகம்’ பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த டி. எஸ். சொக்கலிங்கத்திடம் அண்ணா அ. கி. ஜெயராமன் உதவியாளராகச் சேர்ந்தார். என்னையும் சென்னைக்கு வரவழைத்தார். 1942 என்று நினைக்கிறேன். அண்ணாவுடன் இருந்துகொண்டே நிறையப் புத்தகங்கள், சஞ்சிகைகள் படித்தேன். ‘ஆனந்த விகடன்’ அப்போது இரண்டு அணா விலை. ‘ஆனந்தபோதினி’, ‘அமிர்தபோதினி’, ‘கலைமகள்’ முதலிய பத்திரிகைகள் என் இலக்கியப் பசிக்கு விருந்தாயின.

திருநெல்வேலி முனிசிபல் சேர்மன் ப.ரா. ‘நவயுகப் பிரசுராலயம்’ என்று ஒரு பதிப்பகம் ஆரம்பித்தார்.

“ஹோட்டலில் சர்வராக இருந்துகொண்டு சிரமப்படாதே. என்னிடம் சேர்ந்து புத்தகங்கள் விற்றுக் கொடு. உனக்குத்தான் நல்ல சாரீரமாச்சே. பாடியே புத்தகங்கள் விற்றுவிடுவாய். கமிஷன் எடுத்துக்கொள்” என்றார் ப.ரா. அவரிடம் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு, திருவையாறு வந்தேன். தெருவோரம் கடை விரித்தேன். திருவையாறில் சங்கீதக் கச்சேரிகள் நடந்துகொண்டே இருக்கும். ஆனந்தமாகக் கர்நாடக சங்கீதம் கேட்டுக்கொண்டே புத்தகம் விற்றேன். நவயுகப் பிரசுராலயத்தினர் ஒரு ரூபாய், எட்டணாவுக்கெல்லாம் புத்தகம் போட்டிருந்தார்கள். ‘எல்லோரும் ஓர் குலம்’, ‘மைக்கேல் காலின்ஸ்’, ‘புதுமைப்பித்தன் கதைகள்’ முதலிய நவயுகப் பிரசுராலயப் புத்தகங்கள் நன்றாக விற்பனை ஆயின.

மாயவரம், கும்பகோணம், மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம் எல்லாம் சென்று புத்தகம் விற்றேன்.

1942-ன் இறுதியில் சென்னை திரும்பிவிட்டேன். பிறகு திருவல்லிக்கேணியில் ‘ஜோதி புக் ஸ்டால்’ ஆரம்பித்தேன். பைக்ராப்ட்ஸ் ரோடு, முரளி கேஃப் பக்கத்தில்தான் ‘ஜோதி புக் ஸ்டால்’ வைத்திருந்தேன். தினசரிகள், மாத இதழ்களும் விற்றேன். பம்பாய் பத்திரிகைகள் பூரா வரும். ‘எஸ்கோயர்’, ‘லைஃப்’, ‘ஸாடர்டே ஈவ்னிங் போஸ்ட்’, ‘டைம்’, ‘டெய்லி மிரர்’ போன்ற ஆங்கில இதழ்களும் விற்பனைக்கு வரும். எல்லா பிரபலஸ்தர்களும் என் கடைக்கு வருவார்கள்.

அ. கி. கோபாலன்

‘தினமணி’ ஏ. ஜி. வெங்கடாச்சாரி, நீதிபதி இஸ்மாயில் இருவரும் இரண்டு, மூன்று பஸ்களையும் தவறவிட்டுவிட்டு என் கடைக்கு முன்னாடி நின்றுகொண்டு மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்பார்கள். எஸ். எஸ். மாரிசாமி, புதுமைப்பித்தன், பெ. நா. அப்புசாமி, கி. வா. ஜகந்நாதன், ரா. பி. சேதுப்பிள்ளை, ம.பொ.சி.... எல்லாம் என் கடைக்கு வருவார்கள். பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் எனக்குப் பழக்கமானார்கள். அவர்கள் வீடுகளுக்கு எல்லாம் பேப்பர் போட்டேன். வாங்குகிற செய்தித்தாளுக்குப் பணம் தரும் வசதி பலருக்கு இல்லை. அந்த தேசபக்தர்களிடம் நான் காசு எதிர்பார்க்காமல் இலவசமாகவே பேப்பர் போட்டேன்.

அப்போது க.நா.சு. பாரகன் டாக்கீஸ் அருகில் குடியிருந்தார். புதுமைப்பித்தன் ராயப்பேட்டை ட்ராம் ஷெட் பக்கத்தில் - இப்போது அஜந்தா ஹோட்டல் இருக்குமிடம் அருகில் குடியிருந்தார்.

பி. எஸ். ராமையா, புரசைவாக்கத்தில் குடியிருந்தார். அங்கிருந்து வருவார். கு.ப.ரா., திருவல்லிக்கேணி சைடோஜி தெருவில் இருந்தார். கும்பகோணத்துக்காரரான கு.ப.ரா., சென்னையில் சுமார் பதினைந்து வருடங்கள் இருந்தார். கு.ப.ரா.வின் மனைவி அம்மணியம்மாள் விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர். அவருக்கு இருந்த கஷ்டத்திலும் விருந்தினர்களை நன்றாக உபசரித்து, தன் வீட்டில் சாப்பிடச் சொல்வார் கு.ப.ரா.

மாலை நான்கரை மணிக்கு இலக்கிய ஜாம்பவான்களின் கோஷ்டி ஒன்று பீச்சுக்குக் கிளம்பும். கு.ப.ரா., சிதம்பர சுப்ரமணியம், வ.ரா., புதுமைப்பித்தன், எஸ். எஸ். மாரிசாமி, காசி விஸ்வநாதன், என். ராமரத்தினம், க.நா.சு., ஏ. என். சிவராமன், ப. ரா., ஏ. கே. செட்டியார் (‘உலகம் சுற்றும் தமிழன்’ புத்தகம் எழுதியவர்), பி.ஸ்ரீ..... முதலியோர் அடங்கிய குழு அது.

என் பையன் கிருஷ்ணமூர்த்தியைப் பேப்பர் கடையில் உட்கார்த்தி வைத்துவிட்டு இவர்களது ‘இலக்கியக்’ கூட்டத்தில் கலந்துகொள்ள நான் பீச்சுக்குச் சென்றுவிடுவேன். பேசுவார்கள், பேசுவார்கள் அப்படிப் பேசுவார்கள். கேட்கக் கேட்க அலுக்காது. இரவு ஏழரை மணிக்கு பீச்சிலிருக்கும் ஒலிபெருக்கியில் ரேடியோ செய்தி முடியும். அப்போது எல்லோரும் வீட்டுக்குத் திரும்புவோம்.

நாமே ஒரு பதிப்பகம் ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி 1947 நள்ளிரவு 12 மணிக்கு நம் தேசம் சுதந்திரமடைந்தபோது, என் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.

பதிப்பகத்தின் பெயர் ‘தமிழ்ச்சுடர் நிலையம்’. புத்தகங்கள் பதிப்பிக்கும்போது கடன் வாங்கித்தான் பப்ளிஷ் செய்தேன். பேப்பர் வாங்குமிடத்தில் கடன். அச்சடிக்கும் அச்சகத்தில் கடன். அப்போது நம்பிக் கடன் கொடுப்பார்கள். பிராட்வேயில் இருக்கும் தாம்ஸன் பிரஸ்ஸில்தான் என் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன.

நோபல் பரிசு நாவல்கள் போடக் காரணமாயிருந்தவர் யார்?

மொழிபெயர்ப்பு நாவல்கள் நிறையப் போட்டேன். குறிப்பாக நோபல் பரிசு பெற்ற நாவல்கள். இதற்கெல்லாம் காரணமானவர் க.நா.சு. சிறந்த வெளிநாட்டு இலக்கியங்கள் பற்றி எனக்கு எடுத்துச் சொன்னவர் அவர்தான். இருவருமாகச் சேர்ந்து ஹிக்கின்பாதம்ஸ் செல்வோம். வருஷத்திற்கு மூன்று முறைதான் அங்கு நோபல் பரிசு நாவல்கள் பார்சலில் வரும். எங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வருவோம்.

‘ஒரு பக்கம் மொழிபெயர்த்துக் கொடுத்தால் ஒரு ரூபாய்’ என்று என்னிடம் பேசிக்கொண்டு க.நா.சு. மொழிபெயர்த்துக் கொடுத்தார். தினமணியில் வேலை பார்த்த வெ. சந்தானம், நா. ராமரத்தினம் ஆகியோரும் த. நா. குமாரசாமி, த. நா. சேனாபதி.... இவர்களும் எனக்கு மொழிபெயர்ப்புகள் எழுதிக் கொடுத்தார்கள்.

நார்வே நாட்டு நாவலான ‘நிலவளம்’, ‘அன்பு வழி’ (ஸ்வீடிஷ்), ‘தபால்காரன்’, ‘தாசியும், தபசியும்’ (பிரெஞ்சு), ‘அன்னை’, ‘ரோம் நகரப் பெண்’ (இத்தாலி), ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘அன்னை’ (ருஷ்யா), ‘சித்தார்த்தன்’ (ஜெர்மன்), ‘கடலும் கிழவனும்’, ‘திமிங்கில வேட்டை’, ‘அவமானச் சின்னம்’ (அமெரிக்கா).... போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களை நான் வெளியிட்டேன். ‘இறவாத புகழுடைய நூல்களும் நோபல் பரிசு நாவல்களும்’ என்று விளம்பரம் செய்வேன்.

நான் பதிப்பித்த புத்தகங்களை ‘ஆனந்த விகட’னில் விமர்சனம் செய்த கல்கி, ‘படிப்பதற்குச் சுவையான புத்தகங்கள். சுவாரஸ்யமாகப் படிக்கலாம். தலையணையாக வைத்துக்கொண்டும் தூங்கலாம். கனமான புத்தகங்கள்...’ என்று வேடிக்கையாக எழுதினார்.

பெரிய, பெரிய வால்யூம்களாகப் புத்தகம் இருக்கும். ஆனால் தூக்கிப் பார்த்தால் வெயிட் இருக்காது. ‘ஆன்டிக்’ பேப்பர், அல்லது ‘ஃபெதர் வெயிட்’ பேப்பர் என்று சொல்வார்கள். அந்த மெல்லிய தாளில் அச்சிட்டேன்.

நான் வெளியிட்ட நூல்களில் டாக்டர் பட்டாபி சீதாராமையா எழுதிய ‘காங்கிரஸ் மஹாசபை சரித்திரம்’ மிக முக்கியமானதாகும். மூன்று பகுதிகள் கொண்ட நூல் அது. மூன்று வால்யூம்களாக வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. ‘அன்னா கரீனா’ 800 பக்கங்கள். விலை ஏழு ரூபாய், எட்டணா. பரிசுப் பதிப்பு இரண்டு தனி வால்யூம்கள் ரூ.12. டால்ஸ்டாய் நூல்களில், ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘போரும் அமைதியும்’ வெளியிட்டிருக்கிறேன்.

புத்தகங்கள் ஆயிரம் பிரதிகள் விற்க ஐந்து வருடங்கள் ஆயின. அப்போது மொழிபெயர்ப்பு நூல்களில், சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், தாகூர் புத்தகங்கள் நன்றாக விற்றன.

நான் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிட்டபோது, ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ குப்புசாமி ஐயர் பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் வங்க நூல்களை (மொழிபெயர்ப்புகள்) வெளியிட்டார். வங்க நூல்களை த. நா. குமாரசுவாமியும், அ. கி. ஜெயராமனும் மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். நவயுகப் பிரசுராலயத்தினரும் சில மொழிபெயர்ப்புகளை வெளியிட்டனர். அவர்களுக்குக் க.நா.சு., புதுமைப்பித்தன், அ. கி. ஜெயராமன், ப.ரா., வ.ரா., பெ. நா. அப்புசாமி இவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். ‘சக்தி’ பிரசுராலயத்தைச் சேர்ந்த கோவிந்தன் டால்ஸ்டாய் புத்தகங்களையும் மகேஷ் குமார சர்மா மொழிபெயர்த்த பங்கிம் சந்திரர் நாவல்களையும் வெளியிட்டார். மாம்பாக்கம் குப்புசாமி ஐயர் என்பவர்தான் மகேஷ் குமார சர்மா என்ற பெயரில் வங்க நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘அஸ்வினி குமார தத்தரின் உபன்யாசங்கள்’ என்ற வங்க நூலை ‘பக்தி யோகம்’ என்ற பெயரில் குப்புசாமி ஐயர் மொழிபெயர்த்தார்.

என் புத்தகங்கள் பல ‘பைண்ட்’ செய்யப்படாமல் ஃபாரங்களாகப் பிரிண்ட் பண்ணிக் கிடக்கும். ஆர்டர் வந்ததும் ‘பைண்ட்’ செய்து விற்பேன். சில சமயம் சாப்பாட்டுக்கு இல்லாமல் கஷ்டப்பட்ட நேரங்களில், அச்சடித்து வைத்திருந்த ஃபாரங்களையே எடை போட்டு விற்றிருக்கிறேன்.

பெரிய, பெரிய பைகளில் புத்தகங்களை இட்டு நிரப்பிக்கொண்டு, வீடு வீடாக ஏறிச் சென்று விற்றேன். காலையில் அரை அணாவுக்கு ஒரு மலை வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ட்ராம் ஏறி ஆழ்வார்பேட்டைக்கு வந்துவிடுவேன். அந்தக் காலத்தில் ஆழ்வார்பேட்டையில் இருந்த வக்கீல்கள், வீட்டுப் பெண்மணிகள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்குவார்கள். கே. பாஷ்யம், சம்பத் ஐயங்கார், பதஞ்சலி சாஸ்த்ரி போன்ற பிரபல வக்கீல் வீடுகளில் மிகவும் விரும்பிப் புத்தகங்கள் வாங்குவார்கள். மூன்று மணிநேரத்தில் சுமார் ஆறு வக்கீல் வீடுகளில் நூறு ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுவிடுவேன்.

அ. கி. கோபாலன் குடும்பத்துடன்

அண்ணன் அ. கி. ஜெயராமனும் நானுமாகச் சேர்ந்து இதுவரை ஐந்நூறு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். என் பதிப்பகத்தின் பெயர் ‘தமிழ்ச்சுடர் நிலையம்’, அண்ணாவின் பதிப்பகத்தின் பெயர் ‘ஜோதி நிலையம்’.

மவுண்ட் ரோடில் ‘லிபரேட்டர்’ பத்திரிகை ஆபீசில் ‘லிபரேட்டர்’ ஆசிரியர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க வந்திருந்தார் பாரதிதாசன். அவரிடம் ‘அன்னா கரீனா’ முதலிய மொழிபெயர்ப்பு நூல்களைக் காட்டினேன். பாரதிதாசன் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘’பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டார் பாரதி. இப்படித்தான் தமிழை வளர்க்க வேண்டும்” என்று பாராட்டினார்.

பாரதிதாசன் பாடல்களை அந்த நாளில் அதிகமாகப் பிரச்சாரம் செய்தவர், கவிஞர் திருலோக சீதாராம். நோபல் பரிசு நாவல்களில், ‘சித்தார்த்த’னை மொழிபெயர்த்துக் கொடுத்தவர் அவர்தான்.

அறிஞர் அண்ணாவிடமும் என் புத்தகங்களைக் காட்டியிருக்கிறேன். “இந்தப் புத்தகங்களை எல்லாம் எப்படி விற்கிறீர்கள்? விற்பது கஷ்டமாயிற்றே!” என்றார் அண்ணா, “தெருத் தெருவாகச் சென்று விற்கிறேன். கடை கடையாகச் சென்று விற்கிறேன்” என்று அவரிடம் சொன்னேன்.

ராஜாஜி, காமராஜர் முதலியோரும் என் புத்தக வெளியீடுகளைப் பாராட்டியிருக்கிறார்கள்.

நீங்கள் ‘காதம்பரி’ மாத இதழை ஆரம்பித்தது எப்போது?

1948-ம் வருஷம், மார்ச் மாதம் முதல் இதழ் வந்தது.

ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு லட்சியத்துடன்தான் ஆரம்பிக்கப்படுகிறது. ‘காதம்பரி’யும் அதற்கு விதிவிலக்கல்ல.

வளரும் தமிழ் இலக்கியத்திற்கு நாங்களும் ஏதோ செய்ய வேண்டும் என்ற ஆர்வமே இந்த முயற்சியில் - சிரமமான முயற்சியில் இறங்கச் செய்தது.

‘காதம்பரி' என்ற வார்த்தைக்கு சரஸ்வதி, மலர், மது, மயில் என்ற அர்த்தமும் உண்டு. காதம்பரி நாம் வழிபடும் கலை அரசியாகவும், இலக்கிய மணம் கமழும் நறுமலராகவும், கலை இன்பம் பயக்கும் மதுவாகவும், சைத்திரிகனின் வர்ண ஜாலங்களை வீசும் தோகை மயிலாகவும் திகழ வேண்டும் என்பதே எமது கனவு.

‘காதம்பரி’ தமிழ்நாட்டின் வீடுதோறும் செல்ல வேண்டும், யாவரும் விரும்பிப் படிக்க வேண்டும். இதுதான் எங்கள் ஆசையாக இருந்தது.

‘காதம்பரி’ முதல் இதழை ‘அமரர் கு.ப.ரா. அவர்களின் நினைவுக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்று தலையங்கம் எழுதியிருந்தேன்.

ஒரு முழு நாவல், ஒரு கவிதை, ஒரு ஓரங்க நாடகம், இரண்டு தொடர் நாவல்கள், இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை என்று காதம்பரி சுவை மிகுந்ததாகி வெளிவந்தது. ‘காதம்பரி’யில் வரும் முழு நாவலுக்கு ‘ஒரு பவுன்’ பரிசு என்று விளம்பரம் செய்தேன். அப்போது ஒரு பவுன் விலை அறுபத்தியேழு ரூபாய்.

‘மாதம் ஒரு பவுன்: ‘காதம்பரி’யில் ஒவ்வொரு மாதமும் ஒரு முழு நாவல் வெளியிட்டு வருகிறோம். ஏற்றுக்கொள்ளுகிற நாவலுக்கு ஒரு பவுன் சன்மானம் வழங்குகிறோம். நாவல் ‘காதம்பரி’யில் 33 பக்கங்களுக்குக் குறையாமல், 50 பக்கங்களுக்குள் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்’ என்று விளம்பரம் செய்தேன்.

பவுன் பரிசுத் திட்டத்தில் முதன்முதலில் நாவல் எழுதிப் பரிசு வாங்கியவர் ஜெகசிற்பியன். “எனக்கு ஒரு பவுன் வேண்டாம். பத்து, பத்து ரூபாயாகக் கொடுத்துவிடுங்கள்” என்றார் ஜெக சிற்பியன்.

புதுமைப்பித்தனும் பல சந்தர்ப்பங்களில் பணமாக வாங்கிக்கொள்ளாமல், காபிப் பொடி வாங்கிக் கொடுங்கள், வெற்றிலை வாங்கிக் கொடுங்கள் என்பார்.

புதுமைப்பித்தனுக்கு நான் சரியாகப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டேன் என்று ‘சுபமங்களா’வில் ஒருதலைப்பட்சமாக எழுதியிருக்கிறார்கள். என்னையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம். நான் புதுமைப்பித்தனை மோசம் செய்யவில்லை. புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்த நாளிலிருந்து, அவர் காலமாகும்வரை அவரிடம் சகோதர பாசத்துடன் பழகி இருக்கிறேன். அவருக்கு 200 ரூபாய் வரை கொடுத்திருக்கிறேன்.

எஸ். எஸ். மாரிசாமியும் எழுதிக் கொடுத்ததற்குப் பணமாகக் கேட்காமல், பாம்பே மல் வேட்டி, பாட்டா செருப்பு வாங்கிக் கொடுங்கள் என்பார்.

‘காதம்பரி’ பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது. ‘காதம்பரி’ பழைய பேப்பர் கடைக்கு வந்ததே இல்லை. வாங்கிய எல்லோரும் அதைப் பத்திரப்படுத்திப் பாதுகாத்தார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.

‘காதம்பரி’ நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு சந்தர்ப்பத்தில் வெளியூர் ஏஜண்டுகள் மூன்று மாதங்கள், நான்கு மாதங்கள் சேர்ந்தாற்போல் பணம் அனுப்பவில்லை. சுமார் ஏழாயிரம் ரூபாய் வசூல் ஆகாமல் நின்றது. அதனால் ‘காதம்பரி’ இதழை நிறுத்த வேண்டி வந்தது. பனிரெண்டு, பதிமூன்று இதழ்களுக்கு அப்புறம் காதம்பரி நிறுத்தப்பட்டது. ‘மங்கள இதழ்’ என்று நாமகரணம் சூட்டிக் கடைசி இதழை அச்சடித்து நிறுத்தினேன். பணம் வசூல் ஆகாத காரணத்தினால் நிறுத்துகிறேன் என்று உண்மைக் காரணத்தைத் தெரிவித்திருந்தேன்.

நான் வாழ்க்கையில் நான்கு முறைகள்தான் அழுதிருக்கிறேன். மகாத்மா காந்தி, நேரு, புதுமைப்பித்தன் இறந்தபோது. அப்புறம் ‘காதம்பரி’ நின்றபோது.

இப்போதும், எண்பதைத் தாண்டிவிட்ட நிலையிலும், புத்தக வெளியீட்டை நீங்கள் நிறுத்தவில்லை அல்லவா?

இப்போது பக்தி இலக்கியங்கள் வெளியிட்டு வருகிறேன். நன்றாக விற்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நூல் ‘சம்ப்ரதாய ஹரிஹர குஹ பஜனாம்ருதம்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, உருது, பக்திப் பாடல்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறேன்.

இந்தியா முழுக்கக் காலாற நடந்து சென்று, அனைத்து மொழி பஜனைப் பாடல்களையும் ஒன்றாகத் தொகுத்தவர் மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் என்பவர்.

நான் பஜனைப் பாடல்களை நன்றாகப் பாடுவேன். எங்கள் கிராமமான மேலக்குமாரமங்கலத்தில் பத்து வயதிலிருந்தே நான் பஜனைக் கோஷ்டிகளில் பாடி வருகிறேன். ‘பாகவத சிரோன்மணி’, ‘பாகவத சூடாமணி’, ‘பாகவத ரத்தினம்’... போன்ற பட்டங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.

சரத் சந்திரர் எழுத்துக்கள் அனைத்தையும், - அவரது சுய சரித்திரம் உட்பட ஒரு வால்யூம் ஐநூறு பக்கங்கள் என்று பத்து வால்யூம்களாக வெளியிட ஆசை.

இப்போது இலக்கிய ருசியில்லாத பதிப்பாளர்கள் அதிகம். அவர்கள் மொழிபெயர்ப்புகளை ஆதரிப்பதில்லை. மொழிபெயர்ப்புகள் நிறைய வரவேண்டும். அப்போதுதான் இலக்கியம் வளரும்.

*

சரத் சந்திரர் நூல்களைத் தமிழில் தந்த அ.கி. ஜெயராமன்

நீங்கள் எழுத்துத் துறைக்கு வந்தது எப்படி?

நான் மேலக்குமாரமங்கலத்தில் 1911-ல் பிறந்தவன். சிதம்பரம், குற்றாலம் இங்கெல்லாம் என் பள்ளிப் படிப்பு நான் இன்டர்மீடியட் வரை படித்திருந்தேன். அப்பா இறந்த பிறகு வேலை தேடும் படலம்.

1936-ல் இருந்து எழுத்தையே முழு நேரத் தொழிலாகக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

நீங்கள் வங்காள மொழி கற்றுக்கொண்டது?

‘மணிக்கொடி’ ஆரம்பித்தபோது அந்த எழுத்தாளர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா, க.நா.சு., சிதம்பர சுப்ரமண்யம், கு.ப.ரா., எல்லோரும் என்னுடன் நன்றாகப் பழகினார்கள்.

கு.ப.ரா., திருவல்லிக்கேணி சைடோஜி தெருவில் குடியிருந்தார். அவருக்கு வங்க மொழி தெரியும். அவரிடமிருந்து ஆரம்பப் பாடங்களைக் கற்றுக்கொண்டேன். ராமைய்யர் என்பவர் திருச்சி நேஷனல் காலேஜில் பேராசிரியராக இருந்தார். அவரும் நான் வங்க மொழியில் தேர்ச்சி பெற உதவினார்.

எனக்கு ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகள் தெரியும். நான் ஹிந்தியில் வித்வான் கோர்ஸ் தேறியவன்.

சரத் சந்திரர் நூல்களை மொழிபெயர்த்தது பற்றிச் சொல்லுங்கள்?

சரத் சந்திரர் வங்கத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் தேவானந்தபூர் என்ற சிறிய கிராமத்தில் 1876-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தவர். தனது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கினார். எழுதியவர் யாரென்று குறிப்பிடப்படாமலே, சரத் சந்திரரின் ‘பரதீதி’ என்ற கதை ‘பாரதி’ என்ற பத்திரிகையில் தொடராக 1907-ல் வந்தது. அதை எழுதிவருபவர் தாகூராகத்தான் இருக்கவேண்டுமென்று வாசகர்கள் கருதினார்கள்.

அப்புறம் முப்பது ஆண்டுகளில் சரத் சந்திரர் ஏராளமாக எழுதிக் குவித்தார். 22 நாவல்கள், 7 சிறுகதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுதி, ஒரு நாடகம் ஆகியன சரத் சந்திரரின் படைப்புகள்.

சரத் சந்திரரின் ‘மதனி’ என்ற நாவலைத்தான் நான் முதன்முதலில் மொழிபெயர்த்தேன். அப்போது எனக்கு பெங்காலி தெரியாது. ஹிந்தியில் இருந்துதான் சரத் சந்திரரின் நூலை மொழிமாற்றம் செய்தேன்.

‘மணிக்கொடி’ பத்திரிகைக்காக சரத் சந்திரர் நாவல் கேட்டிருந்தார்கள். ஆனால் நான் மொழிபெயர்த்தது பிரசுரமாவதற்குள் ‘மணிக்கொடி’ நின்றுவிட்டது. 1936 என்று நினைக்கிறேன். பின்னர் ‘மணிக்கொடி’க்காரர்களே ‘மதனி’ நாவலைப் புத்தகமாக வெளியிட்டார்கள். மணிக்கொடிப் பத்திரிகை ஸைஸிலேயே அந்த நாவல் வெளியிடப்பட்டது.

‘மதனி’க்கு அப்புறம் நான் மொழிபெயர்த்த சரத் சந்திரர் நாவல் ‘தேவதாஸ்’.

சரத் சந்திரரின் 22 நாவல்களையும், சிறுகதைகள் அனைத்தையும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். சரத் சந்திரரின் நூல்கள், சிறுகதைகள் அனைத்தும் என் மொழிபெயர்ப்பில் 42 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. என்னைத் தவிர ஆர். ஷண்முகசுந்தரம், த. நா. குமாரஸ்வாமி, த. நா. சேனாபதி, எஸ். குருசாமி, சௌரிராஜன், கே. பி. ராஜகோபாலன், தினகரன், வி. எஸ். வெங்கடேசன், எம். வி. வெங்கட்ராமன்.... இவர்களும் சரத்தின் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

அ. கி. ஜயராமன்

150 பக்கம், 200 பக்கமிருக்கும் சரத் சந்திரரின் நாவல்கள் எல்லாம் தமிழில் ஆறு பதிப்புகள், ஏழு பதிப்புகள் வந்திருக்கின்றன. 500 பக்கங்களுக்கு மேல் உள்ளவை இரண்டு பதிப்புகள் வந்திருக்கின்றன. அவருடைய நாவல்களில் ஒன்றைப் படித்தால், இன்னொன்றையும் படிக்கத் தோன்றும்.

‘கிரஹதாகம்’, ‘சாவித்திரி’, ‘ஸ்ரீகாந்தன்’, ‘விப்ரதாஸ்’, ‘பாரதி’ இவை சரத் சந்திரரின் பெரிய நாவல்கள். ‘ஸ்ரீகாந்தன்’ என்ற நாவல் அவரது மாஸ்டர் பீஸ். இது சுயசரிதை போன்ற போக்கில் அமைந்தது. இதில் சுமார் 500 கதாபாத்திரங்களை சரத் உருவாக்கித் தந்திருக்கிறார்.

1941-ல் நான் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி சென்னையில் சிறையில் அடைக்கப்பட்டேன். மாணிக்கவாசகம், திருச்சி அருணாசலம் போன்றவர்கள் என்னோடு சிறையில் இருந்தார்கள். கம்யூனிஸ்டுகளும் கைதாகி இருந்தனர். மோகன் குமாரமங்கலம், பி. ராமமூர்த்தி...

சிறையில்கூட நான் சரத்தின் நாவலை மொழிபெயர்த்துக்கொண்டுதான் இருந்தேன். சென்னை சென்ட்ரல் ஜெயில்தான். அப்போது அதற்கு ‘பெனிடன்ட்ஷரி’ ஜெயில் என்று பெயர்,

இத்தனைக்கும் சரத் பெண்களை மிகவும் உயர்வாகச் சித்தரித்தவர். ‘நாரீர் மூலய’ -அதாவது ‘பெண்மையின் மகத்துவம்’ என்று ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார் சரத் சந்திரர். பொதுவாக அவர் நாவலில் வரும் பெண்கள் அனைவருமே உயர்ந்த பாத்திரங்கள்.

‘சேஷ பிரச்ன’ நாவலின் கதாநாயகி கமலா, ‘விப்ரதாஸி’ல் வந்தனா, ‘தேவதாஸி’ல் பார்வதி, சந்திரமுகி, ‘நபபிதானி’ல் உஷா, ‘சரித்ரஹீனி’ல் சாவித்ரி, ‘கிராம சமாஜ’த்தில் ரமா, ‘பரதீதி’யில் மாதவி, ‘ஸ்ரீகண்டனி’ல் ராஜலட்சுமி, அபயா, அன்னதா, ‘ஸ்வாமி’யில் சௌதாமினி, ‘கிருஹதாகத்’தில் அசலா, ‘பாமுனேர் மேயி’ நாவலில் சந்தியா போன்ற பெண் பாத்திரங்கள் மிக உயர்ந்த சிருஷ்டிகள். இத்தகைய பெண்களைப் படைத்து உலவவிட்ட சரத், ‘சரித்ரஹீனி’ல் ஏன் ஒரு கெட்டுப்போன பெண்ணைப் பற்றி எழுதினார் என்று அவரது நாவலையே கொளுத்தினார்கள்.

‘பதேர் தாபி’ என்று ஒரு நாவல். புரட்சிக்காரர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பல இந்தியப் புரட்சிக்காரர்களைப் பெயர் மாற்றம் செய்து கதாபாத்திரங்களாக வைத்திருக்கிறார். அன்றைய பெங்காலி அரசாங்கத்தால் இரண்டு முறை தடைசெய்யப்பட்ட நாவல். வ.வே.சு. ஐயரை, கிருஷ்ணய்யர் என்ற கதாபாத்திரமாக்கி இந்த நாவலில் வைத்திருக்கிறார் சரத். இதைத்தான் நான் ஜெயிலில் இருந்தபோது மொழிபெயர்த்தேன். சரத் சந்திரர் சிறந்த தேச பக்தர். சி. ஆர். தாஸுக்கு வலதுகையாக இருந்தவர்.

‘ஏழையின் சொர்க்கம்’ என்ற தலைப்பில் நான் சரத் சந்திரரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். ‘ஏழையின் சொர்க்கம்’ ஒரு அருமையான சிறுகதை. ஹரிஜனப் பெண் ஒருத்தி. மிகவும் ஏழை. பிராமணர்கள் தங்கள் பிணங்களை எரிப்பதைப் பார்த்துவிட்டு, சடலங்களை எரித்தால்தான் ஆன்மா சொர்க்கத்துக்குப் போகும் என்ற முடிவுக்கு வருகிறாள். தன் மகனிடம் சொல்கிறாள்: “நான் இறந்தால் என்னைப் புதைக்க வேண்டாம். எரித்து விடு.”

தாய் இறந்ததும், பிணத்தை எரிப்பதற்காக மகன் விறகு வாங்கப் பணத்திற்காக அலைகிறான். பணம் கிடைக்கவில்லை. அதனால் விறகு வாங்க முடியவில்லை. கடைசியில் பிணத்தைப் புதைத்துவிடுவது என்ற முடிவுக்கு வருகிறான். தன் மன சாந்திக்காகத் தாயாரின் முகத்தருகே மாத்திரம் கொஞ்சம் வைக்கோலைப் போட்டுக் கொளுத்தி, புகை மேலே செல்லும்போது, அதன் வழியாகத் தாயார் சொர்க்கத்திற்குச் செல்கிறாளா என்று பார்க்கிறான்.

மனதை உருக்கிவிடும் கதை.

த. நா. குமாரஸ்வாமி என்னிடம் சொன்னார்: “என்னைவிட சரத்தின் எழுத்துக்களை நீங்களே நன்றாக மொழிபெயர்க்கிறீர்கள். இனி நீங்களே அந்தப் பணியைச் செய்யுங்கள்.”

த. நா. குமாரஸ்வாமி மொழிபெயர்ப்பில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாக இருக்கும். த. நா. குமாரஸ்வாமி என்னைப் பாராட்டியது எனக்கு மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சரத் சந்திரரின் ‘கிருஹதாகம்’ என்ற நூலை நான் மொழிபெயர்த்து வெளியிட்டபோது அதை த. நா. குமாரஸ்வாமிக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.

சரத் சந்திரரின் ‘கிராம சமாஜம்’ என்ற நாடகமும் மிகவும் பிரசித்தமானது. இது சரத் சந்திரர் இருக்கும்போதே 108 நாட்கள் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டது.

நீங்கள் சரத் சந்திரரின் நூல்களைச் சுருக்கி மொழிபெயர்த்தீர்களா?

சரத் சந்திரரின் எழுத்தில் ஒரு சொல்லைக்கூட நான் எடுக்கவில்லை. அப்படியே மொழிபெயர்த்திருக்கிறேன். அவரது எழுத்து மிகவும் வன்மை வாய்ந்தது. ஒரு சொல்லை எடுத்தால்கூட ரசக்குறைவு ஏற்பட்டுவிடும்.

சரத் சந்திரரின் படைப்புகள் வங்க இலக்கியத்தை வளப்படுத்தியது போலவே தமிழ் இலக்கியம் செழுமையுறவும் பயன்பட வேண்டுமென்பதே என் மொழிபெயர்ப்பின் நோக்கம். மேலும் சரத் சந்திரர் படைத்த புதுமைப் பெண்களை, தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்பதும் என் ஆசை.

சரத் சந்திரர் தன் எழுத்துக்களை தேசவுடமையாக்கியிருந்தார்.

‘தேவதாஸ்’, ‘மாலையிட்ட மங்கை’, ‘எங்கள் வீட்டு மஹாலஷ்மி’ போன்ற திரைப்படங்கள் (தமிழ்) சரத் சந்திரரின் படைப்புக்களை வைத்து எடுக்கப்பட்டவை. வங்க மொழியில் சரத் சந்திரரின் படைப்புகள் அனைத்தும் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

டாக்டர் பட்டாபி சீதாராமையா எழுதிய ‘இந்திய தேசிய காங்கிரஸ் வரலாறு’, ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ‘காந்தீய சோஷலிஸம்’, ரமேஷ் சந்திர தத்தரின் நூல்கள் சில, பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ இவைகளையும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.

சரத் சந்திரரின் நூற்றாண்டு விழாவின்போது நான் கௌரவிக்கப்பட்டேன். ‘சரித்ரஹீன்’ நாவலை நான் மொழிபெயர்த்தபோது ‘ராணி’ இதழ் ஆசிரியர் அ. மா. சாமி அதைத் தன் பத்திரிகையில் 42 வாரங்கள் வெளியிட்டார். சாண்டில்யன் ‘சுதேசமித்திரன்’ ஆசிரியராக இருந்தபோது என்னிடம் சரத் நாவல்களை மொழிபெயர்த்து வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

‘பாரத தேவி’, ‘தினமணி’, ‘நவயுகம்’, ‘சோஷலிஸ்ட்’ என்ற செய்தி இதழ்களின் உதவி ஆசிரியராக நான் பணியாற்றி இருக்கிறேன். ‘காதம்பரி’, ‘சினிமா’ என்ற பத்திரிகைகளை நடத்தியும் ஆசிரியராக இருந்து இருக்கிறேன்.

1942-ல் ‘ஜோதி நிலையம்’ என்ற பதிப்பகம் ஆரம்பித்தேன். 120 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறேன்.

அ. கி. ஜயராமன் குடும்பத்துடன்

சரத் நூல்களை மொழிபெயர்க்க நீங்கள் எடுத்துக்கொண்ட கால அளவு?

சிறிய நாவல்களை ஒரு வாரம், இரு வாரங்களில் மொழிபெயர்த்துவிடுவேன். பெரிய நாவல்கள் மொழிபெயர்க்க இரண்டு மாதங்கள் வரை ஆகும்.

சரத் சந்திரருக்கு அப்புறம் என்னைக் கவர்ந்த நாவலாசிரியர் தாரா சங்கர் பானர்ஜி. தற்கால எழுத்தாளர்களில் எனக்கு விமல் மித்ராவைப் பிடிக்கும்.

வ.ரா.விடம் நீங்கள் உதவி ஆசிரியராக இருந்தீர்களாமே?

‘பாரத தேவி’ என்று ஒரு வாரப் பத்திரிகை. ‘ஆனந்த விகடன்’ சைஸில் இருக்கும். பம்பாய் முதலாளி ஒருவர் முதலீடு செய்தார். வ.ரா.தான் ஆசிரியர். நான், கு.ப.ரா., சி. சு. செல்லப்பா எல்லாம் வ.ரா.வின் தலைமையில் உதவியாசிரியர்களாகச் செயல்பட்டோம்.

அப்புறம் வ.ரா. ‘நவயுகம்’ பத்திரிகையின் ஆசிரியரானார். அப்போதும் நான் அவரிடம் உதவி ஆசிரியரராக வேலைக்கிருந்தேன். சொந்தமாகவும் நான் சுமார் 40 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.

***

(நன்றி: ‘புதிய பார்வை’, 1-15 ஜனவரி 1995;

சுந்தர ராமசாமி நினைவு நூலகம், நாகர்கோவில்)

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...