Skip to main content

புதுமையும் பித்தமும் - 6 | க. நா. சுப்ரமண்யம்

 

புதுமையும் பித்தமும் - 5 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் வகுத்துத் தந்த பாதையில் தமிழ்ச் சிறுகதை வெகுதூரம் அவருக்குப்பின் இந்த நாற்பது ஆண்டுகளில் வளம் பெற்று நடைபெற்று வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவில் அந்த வளத்தைச் சாத்தியமாக்கியவர் என்பதற்காகவேனும் புதுமைப்பித்தனுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள். புதுமைப்பித்தனை சிரத்தையாகப் படித்து அவர் கற்ற, செய்துகாட்டிய உண்மை ஒளி, சிந்தனை வேகம், சிந்தனைச் சுதந்திரம், கருத்து விஸ்தீரணம், உருவ அமைதி இவற்றைப் படித்து பிரக்ஞையில் போட்டுக்கொள்ளுவது இன்று எழுதுகிறவர்களுக்கும், இனி வரப்போகிற எழுத்தாளர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

அதேபோல அவர் காலத்தில் அவர் முன்னணியில் நின்றார் என்பதற்காக அவரை மட்டும் படித்துவிட்டால் போதுமானது என்று நினைப்பதும் தவறு. அவரே குறிப்பிட்டுக் காட்டிய அவர் காலத்திய, அவருக்கு முந்திய காலத்திய சிறுகதாசிரியர்களையும் தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்துக்கொள்ளுவது மிகவும் உபயோகமான விஷயமாக இருக்கும். வ.வே.சு. அய்யர், அ. மாதவையா, ராமாநுஜலு நாயுடு போன்றவர்கள் அவருக்கு முன் வந்தவர்கள். சமகாலத்தவர் என்று மௌனி, கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, த. நா. குமாரசாமி, பி. எஸ். ராமையா, கி. ரா. முதலியவர்களையும் தேடிப்பிடிக்கவேண்டிய அவசியம் உண்டு. இலக்கியத்தில் மரபு என்பது ஒரு முக்கியமான சரடு. அதைப் புரிந்துகொள்ளவும் அந்த மரபுச் சரட்டில் புதுமைப்பித்தனின் இடத்தை நிர்ணயித்துக்கொள்ளவும் அவர் சொல்லுகிற பல கதாசிரியர்களையும் படித்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிடுகிற ஐந்திணைப் பதிப்பகத்தார் சமீபகாலத்திய தமிழ்ச் சிறுகதை மரபை ஸ்தாபிக்க மிகவும் பெரிய அளவில் உதவுகிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அதேபோல, பல சிறுகதாசிரியர்களின் முழுப்படைப்புகளும் வெளிவரவேண்டிய அவசியம் இருக்கிறது. யாராவது பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்யவேண்டும். இலக்கியத்தில் எதுபற்றியும் அவசரப்படவேண்டிய அவசியமில்லை. ஆனால் சில விஷயங்கள் அதனதன் காலத்தில் நடைபெறவேண்டிய அவசியம் மட்டும் உண்டு.

சென்னை

1-6-87

***

‘புதுமைப்பித்தன் படைப்புகள் - 1 (சிறுகதைகள்)’ நூலுக்கு எழுதிய முன்னுரை, ஐந்திணைப் பதிப்பகம், 1987

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...