புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம்
இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும், சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன்
சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர்
படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள், சித்தாந்தங்கள் முதலியவற்றையும், அவருக்கிருந்த இலக்கிய நோக்கம், வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும்.
இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன்
கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச்
சொல்லியிருக்கிறார்.
‘வாழ்வு, வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே
உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது, மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம்,
ஸ்திதி, மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை.
வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை.
இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக
உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று, சூத்திரம் ஒன்று என்று வற்புறுத்துவது ஆஸ்திகம். வாழ்வு நியதிக்குக்
கட்டுப்படாதது. பிரபஞ்ச உற்பத்தியே அகஸ்மாத்தாக நிகழ்ந்த சம்பவம். இதில் நியதிக்கோ,
ஒரு கட்டுக்கோப்புக்கோ இடம் உண்டு என
நினைப்பது வெறும் சொப்பனாவஸ்தை என வற்புறுத்துவது நாஸ்திகம்.
இவ்விரண்டு விதமான மனநிலைகளுக்கும்
பிறப்பிடம் மனித சித்தம். இதைச் சித்திரங்களாகத் தீட்டுவது இலக்கியம்.
மனிதனுக்கும் புறவுலகுக்கும் உள்ள தொடர்பை அல்லது தொடர்பின்மையை மனிதக் கண்கொண்டு
பார்ப்பது இலக்கியம். மனிதன் உணர்ச்சிக்கு உட்பட்டவன். உணர்ச்சி உண்மையறியும்
சாதனமாகவும், அதை மறைக்கும்
திரையாகவும் அமைந்துள்ளது. இலக்கியம், மன அவசத்தில் தோன்றி, புறவுலகின்
அடிமுடியை நாட முயலும் ஒரு பிரபஞ்சம். இது தேசந்தோறும் பாஷைக்கும் பண்புக்கும்
தக்கபடி பல்வேறு ரூபங்களில் அமைந்துள்ளது. இதன் பொது விதிகளை, தன்மைகளை ஆராயும் நோக்கத்துடன்
இக்கட்டுரைகள் எழுதப்பட்டன.’
இந்தச் சிறிய முன்னுரையை முழுவதும் இங்குத் தந்திருப்பதற்குக் காரணம் இதில்
புதுமைப்பித்தனின் இலக்கியக் கொள்கைகளின் சில அடிப்படைகளைக் காண இயலுகிறது
என்பதால்தான். இதை ஒரு முக்கியமான சித்தாந்த வெளிப்பாட்டு முயற்சியாகக்
கருதவேண்டும். இலக்கியம், தத்துவம்,
உணர்ச்சி, வாழ்க்கை, மன அவசம் முதலியவற்றுக்கு உள்ள உறவுமுறைகளை ஓரளவுக்குத் தெளிவாகவே
கூறியிருக்கிறார். வாழ்வு, வாழ்க்கை
என்கிற பிரிவினையும் ஒரு முக்கியமான விஷயமாகக் கருதவேண்டும். இது பலருக்கும்
தெளிவாகத் தெரிவதில்லை என்பது உண்மை. வேறு பல விஷயங்கள்கூட இதில் நேரடியாகச்
சொல்லியும், சொல்லாமலும்
தெளிவாக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்திகம், நாஸ்திகம், முற்போக்கு,
சநாதனம் முதலிய வாழ்க்கையின்
தவிர்க்கமுடியாத இருகூறான முரண்பாடான அம்சங்களை அவர் எழுத்துகளில் நாம் காணலாம்.
இவை முரண்பாடுகளால் எழுந்தவை அல்ல; வாழ்க்கை நியதியால் எழுந்தவை. இலக்கியத்தில் எல்லாவற்றிற்கும் இடமுண்டு
என்பதையே புதுமைப்பித்தன் சொல்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தன்
கதைகளைப்பற்றி ‘எரிந்த கட்சி எரியாத கட்சி ஆடுகிறார்கள்’ என்று அவர் வேறு ஒரு இடத்தில் கூறுவதையும்
இங்குக் கவனிக்க வேண்டும். தன்னையும், தன் எழுத்தையும் மதித்தவர்களையும் மதியாதவர்களையும் அளவாக, சீராக மதிப்பிடும் தன்மையும் அவருக்குக்
கைவந்திருந்தது என்று பல சமயங்களில் நேரில் கண்டவன் நான். அதற்கெல்லாம் ஆதாரத்தை இந்தக்
கூற்றில் காணலாம் என்றே தோன்றுகிறது.
‘இலக்கியத்தின் உட்பிரிவுகள்’ என்கிற பிறிதொரு கட்டுரையில், ‘வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச்
சொல்லுவது, அதன் ரசனையைச்
சொல்லுவது இலக்கியம்’ என்று பிரிக்கிறார். ‘ஒரு நூல் இலக்கியமா அல்லவா என்பது அதன்
அமைப்பைப் பொறுத்துத்தான் இருக்கிறது. ‘தட்சிணத்துச் சரித்திர வீரர்’ என்று மாதவையா ஒரு
சரித்திரம் எழுதியிருக்கிறார். ஸ்ரீனிவாச ஐயங்காரும் ‘பல்லவ சரித்திரம்’ ஒன்றை
எழுதியிருக்கிறார். இரண்டும் சரித்திரம்தான். முன்னது இலக்கியம்;
பின்னது சரித்திரம் அல்ல, வெறும் பஞ்சாங்கம். சரித்திரத்தை
இலக்கியத்தின் வாயிலாகத்தான் அறியமுடியும் ... இலக்கியத்திற்கு ஜீவநாடி அமைப்பு
... இலக்கியத்தின் அமைப்புத் தன்மை, அமைப்பு ரகஸியம் ஒன்றாக இருந்தாலும், அது பல வடிவத்தில் இருக்கும்.’
இலக்கியத்தின் உட்பிரிவுகளைக் கவி, வசனம் என்று பிரித்துக்கொண்டு, கவியில், காவியம், தனிப்பாடல் (Lyric), நாடகம் என்றும், வசனத்தில், வசன காவியம், வியாசம்,
சிறுகதை, நாவல், நாடகம் என்றும் பிரிவுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பிரிவுகளில்
சிறுகதை பற்றிச் சொல்லுகிறபோது, ‘சிறுகதைகள் வாழ்க்கையின் சாளரங்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின்
தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது’ என்று
கூறுகிறார்.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வாழ்க்கை என்கிற பெருமாளிகையின் தனிப்பட்ட,
வேறுவேறு சாளரங்களைத் திறந்து
காட்டுகிற காட்சிகளாக நாம் காணமுடிகிறது. ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’
என்கிற கதையில் ஒரு சாளரத்தின் மூலம்
பார்க்கிறோம். ‘நினைவுப் பாதை'யில் இன்னொரு சாளரத்தின் மூலம் பார்க்கிறோம் ‘சாப விமோசன’த்தில் வேறு ஒரு
சாளரம் திறந்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சற்று பழமையான, பழக்கத்திலுள்ள மாளிகைச் சாளரத்தைத் திறந்து
ஒரு புதுக்காட்சியைக் காட்டுகிறது. இப்படியே ‘காஞ்சனை’, ‘செல்லம்மாள்’, ‘கயிற்றரவு’ எல்லாம் வெவ்வேறு சாளரங்களாக, வெவ்வேறு தனிப்பட்ட விஷயங்களைத் திறந்து காட்ட புதுமைப்பித்தனுக்கு உபயோகப்பட்டிருக்கிறது.
‘சிறுகதை என்பது ஒரு சாளரம்’ என்கிற கருத்தைப் புதுமைப்பித்தன் சிறுகதை பற்றி
எழுதிய மூன்று கட்டுரைகளிலும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். திறந்த சாளரத்தின்
மூலம் எட்டிப் பார்ப்பதுபோலவே, முன்கூட்டியே திட்டமிட்ட அளவில், வாழ்க்கையில் ஒரு தனி சம்பவத்தை, தனிமனிதர்களின் குணாதிசயங்களை, ஒரு தனிப்பட்ட மனிதனின் உணர்ச்சிகளை, ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல்களை ஒரு விஷயத்தின் போக்கைக் காட்டுவது
அவருக்குப் பெருமளவில் சாத்தியமாகவே இருந்திருக்கிறது. ‘சித்தி’ என்கிற சிறுகதையில் ஒரு தனிமனிதனின்
அனுபவங்களையும், உணர்ச்சிகளையும்
ஒரே சரடாக எத்தனை துல்லியமாகக் காட்டியிருக்கிறார்! அதேபோல, ‘விநாயக சதுர்த்தி’ என்கிற கதையிலும், ‘பொன்னகரம்’ என்பதிலும், ‘மகா மசானம்’
என்பதிலும், ‘செவ்வாய் தோஷம்’ என்பதிலும் இன்னும் வாசகர்களே சொல்லிக்கொள்ளக்கூடிய
மற்றக் கதைகளிலும் அவரால் பல தனிப்பட்ட விஷயங்களை, அந்தந்தச் சாளரங்களைத் திறந்து, காட்ட முடிந்திருக்கிறது. இத்தனை வேறுபட்ட
சாளரங்களை, எண்ணிக்கையிலும்,
காட்சி வேற்றுமையிலும் அதிகமான
சாளரங்களைத் தமிழில் வேறு யாரும் திறந்து காட்டியதில்லை என்று நிச்சயமாகச்
சொல்லலாம். செக்காவிலும், மாப்போஸானிலும்,
ஓ ஹென்றியிலும் பலப்பல சாளரங்கள்
திறந்து திறம்படக் காட்டப்படுகின்றன என்று சொல்லலாம். மற்றச் சிறுகதாசிரியர்கள்
எல்லாம் வேறு அளவில் இலக்கிய மேதைகளாகச் செயல்பட்டிருந்தாலும் இத்தனை மாறுபட்ட
கோணங்களை அதிகமாகக் காட்ட முயலவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெரிய, விஸ்தாரமான, உயரமான, ஏழடுக்கு மணிமாடத்தின் பல கூடங்களிலும், அறைகளிலும், தளங்களிலும் அமைந்துள்ள சாளரங்களைத் திறந்து திறந்து காட்டுவது போலக்
காட்டியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
ஒரு ஆரம்பம், நடு, முடிவு என்ற வரிசையாக இல்லாமல், எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ, பூர்த்தியாகாமலே, ஆனால் சிந்தனையைத் தூண்டுகிற மாதிரி முடிவதனால்தான்
சிறுகதை என்கிற நவீன இலக்கியத்துறையை மரபுவாதிகள் ஏற்க மறுக்கிறார்கள் என்று
புதுமைப்பித்தன் அபிப்பிராயம் சொல்கிறார். ‘ஆனால் அகப்பொருள் துறைகளிலும்
புறப்பொருள் துறைகளிலும் பல்வேறு மன அவசங்களைக் காட்டி ஒரு காட்சியை, ஒரு கதையைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்
அற்புதமான பாட்டுகளை நுகர்ந்தவர்கள்கூட இது புரியவில்லை என்று சொல்லும்போதுதான்
விசித்திரமாக இருக்கிறது. சிறந்த சிறுகதைகளுக்கு இலக்கணமாக யாப்பில் எத்தனையோ
உண்டு; வசனத்தில் தோன்றியுள்ள
இன்றைய சிறுகதைகளைப் புரிந்துகொள்ளாதவர்கள் பழைய காவிய நுகர்ச்சியிலும் அதே
நிலையில்தான் இருக்கிறார்கள்’ என்றும் புதுமைப்பித்தன் சொல்லிக்காட்டுகிறார். நவீன,
ஐரோப்பியச் சிறுகதை இலக்கியப்
பரிச்சயம் போலவே தமிழில் பழைய யாப்புக் கவிதைகளின் பயிற்சியும்
புதுமைப்பித்தனுக்கு அவரது சிறுகதை முயற்சிகளில் கைகொடுத்திருக்கிறது. இந்த
அளவுக்கு இரு துறைகளிலும் உரமான அஸ்திவாரம் அமைந்தவர்கள் என்று, தமிழில் சிறுகதை எழுதியவர்களில் வேறு
யாரையும் சொல்லமுடியாது. புதுமைப்பித்தனின் சிறுகதை வார்ப்பும், அமைப்பும் இதனால் அமைதி கூடி வந்தன என்று
சொல்லலாம். தமிழ் யாப்புக் கவிதைகளை அறியாத, ஆங்கிலம் மூலம் சிறுகதை இலக்கியப் பரிச்சயம் உள்ள
மௌனியின் கதைகளில் நடையும், அமைப்பும்,
வார்ப்பும் சில சமயம் தமிழின்
மரபுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததைப் புதுமைப்பித்தனே குறிப்பிட்டிருக்கிறார்.
புதுமைப்பித்தனின் நடையில், வார்ப்பில்
தமிழ் மரபுக்கு ஒவ்வாதது - அதுவரை சொல்லப்படாத விஷயம் என்பதைத் தவிர - வேறில்லை.
சொந்தக் கற்பனை மேதையினாலும், யாப்புக் கவிதைப் பரிச்சயத்தினாலும், உலக இலக்கியச் சிறுகதை அறிவினாலும் புதுமைப்பித்தனுக்குச் சிறுகதை எழுதும் கலை
மிகவும் நேர்த்தியாகக் கைவந்திருந்தது. வேறு பலருக்கும் சொல்லமுடியாத தகுதி இது.
தமிழில் சிறுகதைகளின் சரித்திரத்தை அன்று இருந்தவரையில் சொல்ல முற்பட்ட
புதுமைப்பித்தன் பின்வருமாறு சொல்லுகிறார்:
‘தமிழில் சிறுகதை என்பது சுமார் ஐம்பது
வருஷத்து விவகாரந்தான். செல்வசேசவராய முதலியார் எழுதியுள்ள ‘அபிநவக் கதைகள்’ என்ற
சிறு தொகுதியை ஆரம்பமாக வைத்துக்கொண்டு கவனித்தால், இன்று நம்முடைய சாதனை
பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடியதுதான்.
சிறுகதைகள் பிறந்து வளர்ந்த காலத்தை மூன்று
பகுதியாகப் பிரிக்கலாம். செல்வகேசவராய முதலியாரிலிருந்து வ.வே.சு ஐயர் காலம் வரை
ஒரு பகுதி. இதை வெறும் சோதனைக்காலம் என்று சொல்லவேண்டும். குறிப்பிடத்தக்க கதைகள்
எதுவும் கிடையாது என்று பொதுவாகச் சொல்லலாம். இக்காலத்தில் பிறநாட்டுக் கதைகள்,
வாய்மொழியாக உலாவி வந்தவைகள், எழுத்தில் அமைந்தன. அவற்றில்
பெரும்பான்மையாக ஒரு கதையிருக்கும்; அவற்றில் நடமாடும் பாத்திரங்கள் உயிர் பெற்று இயங்காது. ஆசிரியர் அவற்றை
இயக்குவதற்காக, சூத்திரக்கயிற்றைப்
பிடித்து இழுப்பதுங்கூட நமக்குத் தெரியும்.
இதற்கடுத்தபடியாக வ.வே.சு. ஐயர் யுகம் என்று
சொல்லவேண்டும். தமிழில் சிறுகதைக்கு உருவும் உயிரும் கொடுத்தவர் அவர்தான். ஒருவிதத்தில்
இவரை ‘சிறுகதையின் பிதா’ என்று ஆங்கில மரபையொட்டிக் குறிப்பிடலாம் ... குளத்தங்கரை
அரச மரத்தை யார்தான் மறக்கமுடியும்? அவருடைய கதைகளில் பாலையின் வெக்கை நம்மைப் பொசுக்கும். முகலாய அந்தப்புரத்து
நந்தவனங்களின் வைபவம் நம்மைக் களிப்பூட்டும். கிரேக்க தேசத்துக் கடவுளர் நம்முடன்
உறவாடுவர். பிரெஞ்சு போர்க்கள ரத்த பயங்கரம் நம்மை மிரட்டும். பிறநாட்டு
மரபுகளையும் பெயர்களையும் நம்மால் ரசிக்க முடியாது என இன்றைய விமர்சகர்கள் சிலர்
சொல்லிக்கொண்டிருப்பதற்குத் தகுந்த பதில் அவரது கதைகள். இவர் காலத்தில் மாதவையா,
சுப்பிரமணிய பாரதியார், ராமாநுஜலு நாயுடு ஆகியோர்கள் கதைகள்
எழுதிவந்தார்கள் .... (மாதவையா) அவர் பதிப்பித்த ‘பஞ்சாமிருதம்’ என்ற
பத்திரிகையில் சில சிறந்த சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ‘மூன்றில் எது?’ என்று வெளிவந்தது இன்றும் ஞாபகமிருக்கிறது.
டாக்டர் சிகிச்சை, நாட்டு
வைத்தியம், கோயில் பிரசாதம்
இம்மூன்றில் எது சாகக்கிடந்த குழந்தையைப் பிழைக்க வைத்தது என்பதுதான் கதையின்
ஆதாரக் கேள்வி. ... கடைசியாக அவர் பதிப்பித்த இதழில் ‘கண்ணன் பெருந்தூது’ என்ற கதை
பிரசுரிக்கப்பட்டுள்ளது - உருவ வார்ப்புக்குச் சிறந்த உதாரணமாக அதைத்தான்
சொல்லவேண்டும். கதைப் பாத்திரங்களின் குண விஸ்தாரமும் கதையின் போக்கும் பிரமாதம். ...
ஸ்ரீ ராமாநுஜலு நாயுடு கதை சொல்லுவதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த்தன்மையுடன்
இயங்குபவை. பெண்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப்
பற்றியும், பெண்மையைப்
பற்றியும் டால்ஸ்டாய் விசித்திரமான அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக
அவர் சிறந்த கலைஞன் என்பதை நாம் மறந்துவிடுகிறோமா? அம்மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க
வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக 1930-ம் வருஷத்துக்குப்
பின் உப்பு சத்தியாக்கிரகத்தின் இலக்கிய அலையாக ஒரு புதுவேகம் இலக்கியத்தில்
ஏற்பட்டது. அதாவது எதையும் சிரிக்கச் சிரிக்க எழுதவேண்டும் என்று ஒரு பாணியை
வகுத்து அந்தத் துறையில் சிலர் இறங்கித் திறமைகளைக் காட்ட முயன்றார்கள். இவர்களுள்
பிரதானஸ்தர் கல்கி. இவர்களுக்குச் சிரிப்பு மூட்டக்கூடிய தன்மையில் எழுத வேண்டும்
என்பதே பிரதான லட்சியம். ஹாஸ்யச் சுவை என்பது இயல்பாக அமையவேண்டிய விவகாரமாதலால்,
வலிந்து கட்டிக்கொண்டு சிரிக்க வைக்க
முயலுவது ஃபோட்டோவுக்காக சிரித்த மாதிரியாகத்தான் அமையும். ... கல்கி
பிராபல்யத்துக்கு வந்தது அவர் சிரிக்கச் சிரிக்க எழுதுவார் என்பதிலிருந்துதான்.
ஆனால் பிற்காலத்தில் அவர் சிறுகதைத் துறையில் இறங்கிய பொழுது அவரது எழுத்துகளில்
மருந்துக்குக்கூட சிரிப்பு இல்லாமல் போனதற்குக் காரணம், ஹாஸ்யம் இவருக்கு இயல்பான குணம் அல்ல என்பதுதான்.
ஆனால் ஹாஸ்யமாக கதை எழுதக்கூடியவர்கள் தமிழில் உண்டு. அவர்களிருவர்: எஸ்.வி.வி.யும்
கொனஷ்டையும். எஸ்.வி.வி.யைவிட கொனஷ்டையில் கலையம்சம் ரொம்பவும் நயமாக இருக்கும்;
கதைப்பாணி புதிதாக இருக்கும். இந்த ஹாஸ்ய
யுகத்தின் வேகம் ஒடுங்கும் நிலையில்தான் இன்னும் ஒரு பேரலை எழுந்தது. அதில்தான்
சிறுகதை தமிழில் பூரண வடிவம் பெற்றது. இதைச் சிறப்பாக மணிக்கொடி யுகம் என்று
சொல்லவேண்டும். இக்காலத்தில்தான் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது.
பிச்சமூர்த்தி, கு.ப.ரா.,
பி. எஸ். ராமையா, சிதம்பர சுப்பிரமணியன் முதலியவர்களும்
நானும் கதைகள் எழுத ஆரம்பித்தோம். வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை
வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பித்தது. ‘பரமசிவன்
வந்து வந்து வரங்கொடுத்துப் போவார், பதிவிரதைக்கின்னல் வரும் பழையபடி தீரும்’ என்றிருந்த நிலைமை மாறி நிலாவும்
காதலும் கதாநாயகனுமாக சோபித்த சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர்நின்று நோக்க ஆரம்பித்தன.”
இந்தப் பகுதியை அவர் கட்டுரையிலிருந்து எடுத்து முழுவதும் சொல்வதற்குக்
காரணமுண்டு. தமிழில் சிறுகதைகள் மேன்மையாக எழுதுவதற்கு அவருக்கு ஐரோப்பிய
அமெரிக்கச் சிறுகதைச் சிகரங்கள் உதவியது போல அன்றுவரை தமிழில் வந்திருந்த கதைச்
சிகரங்களும் உதவியிருக்கின்றன என்பது அவர் எழுதியிருப்பதிலிருந்து தெளிவாகவே
தெரிகிறது. சிறுகதையில் மேதைமை காட்டிய புதுமைப்பித்தன் தனி ஒரு சிருஷ்டிகர்த்தாவாக
மேதைமையினால் மட்டும் உருவானவர் அல்ல. இலக்கிய மரபும் ஓரளவுக்கு அவருக்கு
உதவியிருக்கிறது என்பது அவர் வ.வே.சு. ஐயர், மாதவையா, ராமாநுஜலு நாயுடு முதலியவர்களைப் பற்றிக் கூறியதிலிருந்து நன்கு
தெரியவருகிறது. அவர் காலத்திய சிறுகதைச் சாதனையை மதிப்பிடுபவராக அவர் இதே
கட்டுரையில் கடைசியாக ஒரு பாரா எழுதினார். அது பின்வருமாறு அமைந்திருக்கிறது:
‘தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும்
சிறப்பாகவும் வழிவகுத்தவர் ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் ‘மௌனி’ என்ற
புனைபெயரில் எழுதிவருபவரைத்தான் குறிப்பிடவேண்டும். அவரைத் தமிழ்ச் சிறுகதையின்
திருமூலர் என்று சொல்லவேண்டும். அவர் மொத்தத்தில் இதுவரை பத்துக் கதைகள்தான்
எழுதியிருப்பார். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபட
மறுக்கும் கருத்துகளையும் மடக்கிக் கொண்டுவரக்கூடியவர் அவர் ஒருவரே. தமிழிலே ‘நட்சத்திரக்
குழந்தைகள்’, ‘சிவசைலம்',
‘எங்கிருந்தோ வந்தான்', ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற
தலைப்புகளில் வெளிவந்துள்ள கதைகள் ஒப்புயர்வற்றவை.’ (முதல் கதை பி. எஸ். ராமையா
எழுதியது. இரண்டாவது த. நா. குமாரசாமி, மூன்றவாது மௌனி. நாலாவது புதுமைப்பித்தனே எழுதியது.)
மௌனியைப் பற்றிப் புதுமைப்பித்தன் சொல்லுகிற சில வாக்கியங்கள்
புதுமைப்பித்தனுக்கும் பொருந்தும் என்றும், இந்த வார்த்தைகளில் தன் லட்சியங்களையும் சேர்த்தே
சொல்லுகிறார் என்றும் நாம் அனுமானிக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழ்
மரபுக்கும், போக்குக்கும்
புதிதாகவும், சிறப்பாகவும் வழி
வகுப்பதும், கற்பனையின்
எல்லைக்கோட்டில் நின்று, வார்த்தைக்குள்
அடைபட மறுக்கும் கருத்துக்களை மடக்கிக் கொண்டுவருவதும் புதுமைப்பித்தனும் செய்த
காரியங்கள்தான். மௌனியைப் பற்றிச் சொல்லுகிறபோது, மௌனியைப் பற்றிச் சொல்லுகிற சாக்கில் தன்னைப்
பற்றியும் சொல்லிக்கொள்கிறார் என்று நம்புவதில் தவறில்லை. அதற்கு அந்தக் காலத்தில்
நாங்கள் எல்லோரும் விரும்பிப் பரவலாகப் படித்த ஆங்கில ‘ரொமாண்டிக்’ கவிதை மரபு உண்டு (ஜான் மில்டன், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த், டென்னிஸன்).
இன்றைய தமிழ் வாசகர்களில் பலர் புதுமைப்பித்தனையேகூடத் தேடிப் படிப்பவர்களாக
அதிகம் பேர் இல்லை என்பது வருத்தப்படவேண்டிய விஷயம். அதையும்விட வருத்தப்படவேண்டிய
விஷயம் அவர், தன்
முன்னோடிகளாகவும், சகபாடிகளாகவும்
கருதிய, மதிப்புக்குரியவர்களாக
எண்ணிய கதாசிரியர்களையும், கதைகளையும்
படிக்காமல் இருப்பதுதான். பாரிச வாயுவும் பக்கவாதமும் அன்று புதுமைப்பித்தன்
சொன்னது போல இன்றும் தமிழ் இலக்கிய உலகத்தைப் பிடித்து ஆட்டிக்கொண்டுதான்
இருக்கின்றன. நல்லெண்ணெயும், நல்லெண்ணமும்கூட
இன்று கலப்படமாகவேதான் இருக்கின்றன என்று அவர் காலத்தில் சொன்னார். இன்று, நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டு பொருள்களோடு இன்னும் இருநூறு
பொருள்களும் கலப்படமாகிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம் நாம். புதுமைப்பித்தனையும்
படிக்காமலே பாராட்டுவதும், சர்வகலாசாலைகளில்
பிஎச்.டி. போன்ற ஆய்வுப் பட்டங்களுக்கு அவரை விஷயமாக எடுத்துக்கொள்வதும்
பெருமைப்படவேண்டிய விஷயங்கள் அல்ல. இது ஸ்டேட்டஸ் (ஸ்திதி) உயர்கிறது
என்பதற்காகவும், ஸ்நாப்
மதிப்பீடுக்காகவும், தன்னைப்
பெரியவர்கள் என்று எண்ணுவார்கள் என்ற எண்ணத்தினாலும் சென்னையில் சங்கீதக்
கச்சேரிகளுக்குக் கூட்டம் சேருவது போலத்தான் இதுவும். தலைமுறைக்குப் பின் தலைமுறை
புதுமைப்பித்தனைத் தமிழர்கள் படித்து, அனுபவித்துப் பார்க்கவேண்டியதுதான் முக்கியமான விஷயம். இதில் இன்றுள்ள சில
நல்ல வாசகர்களுக்கும், சில
நல்ல விமர்சகர்களுக்கும் சந்தேகம் வருவதற்கேயில்லை.
‘சிறுகதைகள் எப்படி அமைய வேண்டும்’ என்பது பற்றியே போல, ‘சிறுகதை’
என்று ஒரு இரண்டாவது கட்டுரையையும் புதுமைப்பித்தன்
எழுதியிருக்கிறார். சிறுகதை பற்றி அவருடைய நிலைமையைத் தெளிவு செய்துகொள்ள அந்தக்
கட்டுரையிலும் சில பகுதிகளைப் பார்க்கலாம்.
மற்ற இலக்கியப் பகுதிகள் போலவே சிறுகதைகளும் ‘மனித உள்ளத்தின் அடைய முடியாத
ஆசைகளின் எதிரொலி’ என்று சொல்லிவிட்டு, ‘எதுதான் சிறுகதை? சிறுகதையின்
எல்லை என்ன? சிறுகதைக்கு என்று
தனிப்பட்ட ரூபம் ஒன்று உண்டா? இதற்கெல்லாம் சூத்திரங்கள் ஒன்றும் கிடையாது’ என்று பதிலளிக்கிறார். மேலும்,
‘சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே
வருகிறது. ஒவ்வொரு கதையாசிரியனும் எடுத்தாண்ட ரூபங்கள் எண்ணிறந்தன. இருக்கும்
கதைகளை வைத்துத்தான் இவைதான் சிறுகதை என்று நிர்ணயிக்க வேண்டும்.
‘சிறுகதையின் ஜீவநாடி ஒன்று. அதில்
எடுத்தாளப்படும் சம்பவம் அல்லது நிகழ்ச்சி தனிப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும்.
சிறுகதை வாழ்க்கையின் சாளரம். ... சிறுகதையில் ரூபம் கதை எழுதுபவனின்
மனோதர்மத்தைப் பொறுத்தது...
...சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்று மூன்று
பகுதிகள் உண்டு. சாதாரணமான கதைகளில் இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்துகொண்டே
போகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்கச் சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம்,
முடிவு என்ற இரண்டு பகுதிகளும்
கிடையவே கிடையாது. கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில்
ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது. இன்னும் வேறு ஒரு விதமான கதைகளும் உண்டு.
அவற்றில் முடிவு என்ற ஒன்று கிடையாது. அதாவது கதையை வாசிப்பது நமது சிந்தனையின்
சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும் பொழுது அதைப் பற்றிய சிந்தனை
முடிவடைந்துவிடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகிறது என்று
சொன்னால் விசித்திர வாதமாகத் தோன்றும்; ஆனால் அதுதான் உண்மை ... கடவுள் வாழ்க்கையின் கடைசிப் பக்கத்தை எழுதிவிடவில்லை;
அவரால் எழுதவும் சாத்தியப்படாத
காரியம் ... கதைகளுக்கு சம்பவம் அவசியமா, இப்படிப்பட்ட விகற்பங்கள் இருக்கலாமா என்று பலர் கேட்கிறார்கள். கதைகள்
அவரவருடைய சுவையையும் ரசனையையுந்தான் பொறுத்தது ... அவரவர்களுடைய அனுபவத்திற்கும்
ரசனைக்கும் ஏற்றபடிதான் கதைகளைப் படிக்கமுடியும்.’
இதைத் தொடர்ந்து ராமையாவின் ‘பூச்சூட்டல்’ என்கிற கதையைப் புதுமைப்பித்தன் அலசிக்
காட்டுகிறார். முடிவில், சிறுகதை
என்பது, ‘அதாவது தற்கால
விமர்சனத்தின்படி கருதப்படும் சிறுகதை தமிழ்நாட்டிற்குப் புதிய சரக்கு. மேல்நாட்டு
இலக்கிய கர்த்தர்கள் ஒரு நூற்றாண்டு பழகிய கையால் எழுதும் கதைகளுக்கும் தற்பொழுது
தோன்றியிருக்கும் ஸ்ரீ ந. பிச்சமூர்த்தி, ஸ்ரீ கு.ப.ரா. முதலான எழுத்தாளர்களின் கற்பனைகளுக்கும் ஏற்றத்தாழ்வைக் காணவே
முடியாது’ என்று கட்டுரையை முடிக்கிறார். புதுமைப்பித்தன் கதைகளை மட்டும்
படிப்பதாகப் பாவனை செய்துகொண்டு அவர் சமகாலத்திய மற்ற நல்ல சிறுகதாசிரியர்களைப்
படிக்காமல் விட்டுவிடுகிற ‘பாரிச வாயு, பக்கவாத’ விமர்சகர்களும், வாசகர்களும் புதுமைப்பித்தனின் இந்தக் கூற்றை மனத்தில் கொள்ளவேண்டும்.
சிறுகதை பற்றிப் புதுமைப்பித்தன் எழுதியுள்ள மூன்றாவது கட்டுரையில்
சிறுகதையின் அம்சங்களை இன்னும் சற்று ஆழமாகவே விவரிக்கிறார் புதுமைப்பித்தன்.
ரூபம் என்பது இரண்டாவது கட்டுரையில் இடம்பெற்றது போல மூன்றாவது கட்டுரையில்
சிறுகதைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிற விஷயம் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.
‘நான் படித்த பழைய கதைகளில் ‘கண்ணன்
பெருந்தூது’ என்கிற கதை தமிழ் சிறுகதைகளின் இலட்சியம் என்றே கூறலாம். அதன் அமைப்பு
வெகு அற்புதமாக விழுந்திருக்கிறது ... அய்யரவர்களின் சிறுகதைகள் மிகவும் உயர்ந்த
ரகத்தைச் சேர்ந்தவை. அவர் தமது சிருஷ்டிகளில் மனிதனின் மேதையை, தெய்வீகத் துயரத்தை, வீரத்தை, காண்பிப்பதில் களித்தார். இலட்சியத்தை சிருஷ்டிப்பதில் இலயித்தது.
‘ஆனால் மனிதனின் சிறுமைகளை, தப்பிதங்களை, அதில் அவன் நாடும் வெற்றியை, இலக்கியமாகச் சிருஷ்டிப்பதற்கு, நல்ல கலைத்திறமையுடன் சிருஷ்டிப்பதற்கு,
வெகுகாலம் சென்றது. தமிழிற்கே
விமோசனம் கிடையாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வெள்ளி
முளைத்தாற்போல் சில கதை எழுதுகிறவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களுடைய
எழுத்துகள், கற்பனைகள் எல்லாம்
தமிழுக்குப் புதியவை. புதிய விஷயங்களில் முதலில் வெறுப்பு ஏற்படுவது மனித, அதாவது சாதாரண மனித இயற்கை. இந்த
எழுத்தாளர்களின் கற்பனைகளில் யாவையும் இடம்பெறுகின்றன ... இவர்களுக்குள் இரண்டு
மூன்று பேர்களின் எழுத்துகள் சாகாத எழுத்துகள் என்று கூறலாம். ‘நட்சத்திரக்
குழந்தை’யின் ஆசிரியரும், ‘கலைமக’ளில் வந்த ‘விஜயதசமி’ என்ற கதையின் ஆசிரியரும் தமிழ் நாட்டின்
கற்பனைப் பொக்கிஷங்கள் என்று கூறவேண்டும். இருவருடைய கலையுணர்ச்சியும்,
சிருஷ்டித்திறனும் இவர்களை
எழுத்தாளர்களின் விதிவிலக்காக்குகிறது. தமிழ்க் கதை வளரவேண்டுமானால் இவர்கள் சென்ற
பாதையில் புதிய விஷயங்களை எழுதும் ஆற்றலுடையவர்கள் தோன்ற வேண்டும்.’
***
'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)
புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)
Comments
Post a Comment