புதுமையும் பித்தமும் - 5 | க. நா. சுப்ரமண்யம் புதுமைப்பித்தன் வகுத்துத் தந்த பாதையில் தமிழ்ச் சிறுகதை வெகுதூரம் அவருக்குப்பின் இந்த நாற்பது ஆண்டுகளில் வளம் பெற்று நடைபெற்று வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவில் அந்த வளத்தைச் சாத்தியமாக்கியவர் என்பதற்காகவேனும் புதுமைப்பித்தனுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள். புதுமைப்பித்தனை சிரத்தையாகப் படித்து அவர் கற்ற , செய்துகாட்டிய உண்மை ஒளி , சிந்தனை வேகம் , சிந்தனைச் சுதந்திரம் , கருத்து விஸ்தீரணம் , உருவ அமைதி இவற்றைப் படித்து பிரக்ஞையில் போட்டுக்கொள்ளுவது இன்று எழுதுகிறவர்களுக்கும் , இனி வரப்போகிற எழுத்தாளர்களுக்கும் உபயோகமாக இருக்கும். அதேபோல அவர் காலத்தில் அவர் முன்னணியில் நின்றார் என்பதற்காக அவரை மட்டும் படித்துவிட்டால் போதுமானது என்று நினைப்பதும் தவறு. அவரே குறிப்பிட்டுக் காட்டிய அவர் காலத்திய , அவருக்கு முந்திய காலத்திய சிறுகதாசிரியர்களையும் தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்துக்கொள்ளுவது மிகவும் உபயோகமான விஷயமாக இருக்கும். வ.வே.சு. அய்யர் , அ. மாதவையா , ராமாநுஜலு நாயுடு போன்றவர்கள் அவருக்கு முன் வந்தவர்கள். சமக...