‘எழுத்து’ இதழ்களை அமேசான் கிண்டிலில் மின்னூலாகப் பதிவேற்றும் பணி இன்று அவ்விதழின் ஆசிரியர் சி. சு. செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில் ஆரம்பமாகிறது. இதற்காக இதழியலாளர் சு. அருண் பிரசாத் உதவியுடன் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. சுப்ரமணியன் அவர்களை அணுகி அனுமதி கோரியபோது, மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தார். இதழ்களைத் திரட்டவும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் அவர்தான்.
'எழுத்து' 11 ஆண்டுகளைக் கடந்து 112 இதழ்கள் வெளியானது. இரட்டை இதழ்களாக வந்தவை 7. இதனால் இதழ் எண் 119 வரை செல்கிறது. முதல் இதழ் ஜனவரி 1959ல் வெளியானது. 12ஆம் ஆண்டின் முதல் ஏடாக ஜனவரி 1970ல் வெளியான இதழே கடைசி இதழாகவும் அமைந்தது.
ஆரம்ப இதழ்கள் சிலவும் இடையிடையே சில இதழ்களும் தவிர்த்து, 83 ஏடுகள் தமிழிணையம் (https://www.tamildigitallibrary.in/) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அந்தத் தளத்தில் விடுபட்டிருக்கும் இதழ்களில் பெரும்பாலானவற்றை திரு. சுப்ரமணியன் அவர்களே தனது சேகரிப்பிலிருந்து எடுத்து அனுப்பினார். பைண்ட் செய்யப்பட்ட தொகுப்பைப் பிரித்து பக்கம் பக்கமாக பொறுமையாக ஸ்கேன் செய்து அனுப்பிவைத்தார். 21 மற்றும் 22வது இதழ்கள் அவரிடமும் சேதமடைந்திருந்தன. பலரிடம் விசாரித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகத்திலிருந்து அந்த இதழ்களையும் பெற்றுத் தந்தார்.
விடுபடல் ஏதேனும் இருக்கிறதா என்று அறிய எல்லா இதழ்களையும் வரிசையாகப் பார்வையிட்டபோது தமிழிணையம் இணையதளத்திலிருந்து எடுத்துக்கொண்ட சில இதழ்களில் ஓரிரு பக்கங்கள் இல்லாமலிருப்பதும் சில பக்கங்களில் எழுத்து தெளிவில்லாமல் இருப்பதும் தெரிந்து, அவை சரிசெய்யப்பட்டன.
கணிசமான எண்ணிக்கையிலான இதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றி பேருதவி புரிந்திருக்கிறது தமிழிணையம் இணையதளம். இதழ்களில் விடுபட்டவற்றைப் பெறவும் சீர்செய்யவும் உதவியவை புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகமும் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும். இவற்றின் நிர்வாகிகளுக்கும் எல்லா வகையிலும் துணை நிற்கும் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. செ. சுப்ரமணியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
-
அச்சில் வெளியான இதழை மின்னூல் வடிவில் தரும்போது அதன் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அவை பற்றிய விளக்கங்கள் வருமாறு:
(1) அச்சில் பக்க அமைப்பு வசதிக்காக ஒரு படைப்பை வெவ்வேறு பக்கங்களில் பிரித்து அமைப்பது வழக்கம். மின்னூலாகத் தயாரிக்கும்போது ஒவ்வொரு படைப்பும் முடிவுற்ற பிறகே அடுத்த படைப்பு இடம்பெறும் வகையில் அமைக்கப்படும். (2) ஒரு படைப்பிற்குள் இடையில் கவிதையோ அறிவிப்போ விளம்பரமோ வேறு ஏதேனும் குறிப்போ இடம்பெற்றிருந்தால் அவையும் அந்தக் குறிப்பிட்ட படைப்பு நிறைவுற்ற பின், அதற்கு அடுத்த இடத்தில் வைக்கப்படும். (3) விளம்பரங்கள் பெரும்பாலும் எழுத்துரு வடிவுக்கு மாற்றப்படாது. இதழில் இடம்பெற்ற வடிவத்திலேயே சேர்க்கப்படும். (4) அச்சுப்பிழை போன்ற சிறிய பிழைத்திருந்தக் குறிப்பு ஏதேனும் இருந்தால், தேவையான திருந்தம் செய்யப்பட்டு அந்தக் குறிப்பு நீக்கப்படும்.
-
ஒவ்வொரு இதழும் 49 ரூபாய். அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு இதழும் 3 நாட்கள் இலவசமாகக் கிடைக்கும். வாசகர்கள் தங்கள் கருத்துகளை எழுதியும் இதழ்களின் சுட்டிகளைப் பகிர்ந்தும் துணை நிற்கவேண்டும்.
-
எழுத்து இதழ்த் தொகுப்பு
Comments
Post a Comment