காஃப்கா என்கிற பெயரை முதல் முதலாக நான் புதுமைப்பித்தன் மூலமாகத்தான் கேள்விப்பட்டேன் என்று எண்ணுகிறேன். 1937 மத்தியில் இருக்கலாம். Dorothy Norman என்பவருடைய Twice A Year Press வெளியீடாக வந்த அமெரிக்கப் பதிப்பு ஒன்று எப்படியோ Second Hand work ஆக நண்பர் புதுமைப்பித்தனுக்குக் கிடைத்தது. அதில் ஒன்றிரண்டு கதைகளையும் அவர் மொழிபெயர்க்க உத்தேசித்து மொழிபெயர்த்தார் என்று எண்ணுகிறேன். A Franz Kafka Miscellaneous என்கிற பெயருடன் வெளிவந்த அந்த நூலில், காஃப்காவிலிருந்து பல பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன; காஃப்காவைப் பற்றியும் ஒருசில கட்டுரைகளும் இருந்தன. ஒருநாள் அந்த நூலை என்னிடம் தந்து அதை ஒரே நாளில் படித்துவிட்டுத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கொடுத்தார் புதுமைப்பித்தன். காஃப்காவைப் பற்றிய கட்டுரைகளை நான் படிக்கவில்லை; எனக்கு விமர்சனத்தில் அன்றும் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது; இன்றும் கிடையாது. ஆனால் அந்த நூலில் இருந்த காஃப்கா மொழிபெயர்ப்புகளையெல்லாம் உடகார்ந்து இரவோடு இரவாகப் படித்துவிட்டேன்.
இரவு எப்போது தூங்கினேன் என்கிற நினைவில்லை. ஆனால் காஃப்காவைப் படிப்பதும், தூக்கத்தில், கனவில் ஒரு உலகத்தைக் காண்பதும் ஒன்றுதான் என்று சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. Nightmares என்று சொல்லுவார்களே அது போன்றவை காஃப்காவின் கதைகளும் முடிவுறாத நாவல்களும். “கனவு காண்பது போல இருந்தது” என்று சொல்லி நான் மறுநாள் புதுமைப்பித்தனிடம் அந்த நூலைத் திருப்பித் தந்தபோது, புதுமைப்பித்தன் விமர்சனப் பகுதியில் பல இடங்களில் காஃப்காவின் கதைகளில் ஃபிராய்டின் மனோதத்துவ அலசல் கனவுகள் பலமான இடம் பெற்றிருப்பதாகப் பலரும் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, அவருடைய பல சிறுகதைகளும், நாவல்களில் ஒன்றும் இன்னும் ஆங்கிலத்தில்கூட மொழிபெயர்க்கப்படாதிருப்பதாகவும் கூறினார். அதற்குப் பிறகு காஃப்காவின் நூல்களையும், கதைகளையும் ஜெர்மன் மூலத்தில் தேடிப்பிடித்துப் படித்தேன். Trial என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பு 1937ல் தான் வெளிவந்தது. பின்னர் டையரிகள், பல கதைகள் எல்லாம் வரிசையாக வெளிவந்தன.
இந்தக் கதைகளில் நானும் புதுமைப்பித்தனும் 1937 மத்தியில் படித்த 'Metamorphosis' - கூடுவிட்டுக் கூடு பாய்தல் - அல்லது மாற்றம் என்கிற கதையைப் பற்றிப் படித்துவிட்டு நாங்கள் பேசிக்கொண்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்தக் கதையைப் படிக்காதவர்களுக்கும், படித்துவிட்டு மறந்துவிட்டவர்களக்குமென்று (அப்படி மறப்பது என்றும் சாத்தியமில்லை என்றே நான் நினைத்தாலும்கூட) இங்கு நினைவுபடுத்துகிறேன்.
மிகவும் அருவருப்பை உண்டாக்கும் கதை அது. ஊர்சுற்றி வியாபாரி ஒருவன் - அவன் வாலிபன் - ஒருநாள் காலையில் எழுந்து பூச்சியாக மாறியிருப்பதை உணருகிறான். அவன் பெற்றோர்கள் - தங்கள் பொருளாதாரக் கதி மோக்ஷம் அவன்தான் என்று எண்ணியிருப்பவர்கள் - கரப்பான் பூச்சியாக மாறிவிட்ட தங்கள் பிள்ளையோடு, அருவருப்புடனும் அலக்ஷியத்துடனும் வாசிக்க வேண்டி வருகிறது. இதுதான் கதை.
இந்தக் கதை புதுமைப்பித்தனுக்கும் - எனக்கும்தான் - ஒரு விதத்தில் பொருத்தமாக இருந்ததை நாங்கள் இருவருமே பேசிக்கொண்டோம். உணர்ந்தோம். புதுமைப்பித்தன் தன் தகப்பனாரிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவர்; தன் தகப்பனாருடைய அருவருப்பையும் அலட்சியத்தையும் சம்பாதித்துக்கொண்டவர். அதேபோல ஆங்கிலத்தில் எழுதுவதற்கென்று பழக்கப்படுத்தப்பட்டிருந்த நான் என் தகப்பனாரின் ஆலோசனையை அவமதித்து தமிழில் எழுதத் தொடங்கி அவர் விரோதத்தை, அலட்சியத்தை சம்பாதித்துக்கொண்டவன். புதுமைப்பித்தனின் தகப்பனாரும் என் தகப்பனாருமே உலக வாழ்க்கையில் ஓரளவுக்கு வெற்றி பெற்றவர்கள்; நாங்கள் இருவரும் ஓரளவுக்குத் தோல்வியுற்றவர்கள்.
“என் தகப்பனார் காஃப்கா படிக்கமாட்டார்” என்று தன் உணர்ச்சியைச் சொன்னார் புதுமைப்பித்தன்.
“என் தகப்பனார் படிப்பார்” என்றேன் நான்.
காஃப்காவின் வாழ்வும் இலக்கியமுமே பூரணமாக அவருக்கும் அவர் தகப்பனாருக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவுகள் காரணமாக எழுந்தவை, தோன்றியவை என்று சொல்லுவது வழக்கம் - ஜீவிய சரித்திரத்தையே ஆதாரமாகக் கொண்டு இலக்கிய விமர்சனம் செய்கிற ஒரு ஐரோப்பிய கோஷ்டி இப்படித்தான் அடித்துச் சொல்லுகிறது. இதேபோல திருமணங்கண்டு பயந்து ஒதுங்கிய காஃப்கா ஒரு கனவுலகத்தில் வாழ்ந்து அந்தக் கனவுலகத்தைச் சாதாரண உலகத்தைவிட அதிக உண்மையானதாகக் கண்டு நீட்டினார் என்று சொல்லுவதும் பொருந்தும். எழுதுவது கலையாக அல்லாமல் ஒரு வாழ்க்கை நியதியாக, இந்திய அர்த்தத்தில் வாழ்க்கைத் தர்மமாகவே அவருக்குத் தோன்றியது. இந்தத் தர்மத்தை அவர் தனக்காகவன்றி பிறருக்காக மேற்கொள்ளவில்லை. ஆகவேதான் எழுத்துக்களைப் பிரசுரிக்கத் தேவையில்லை என்று தன் நண்பரிடம் தெரிவித்து உயில் எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர். அதேபோல அவர் தன் தகப்பனாருக்கு எழுதிய ஒரு கடிதமும் இருக்கிறது - தன் தோல்விக்கெல்லாம் காரணம் தன் தகப்பனார்தான் என்கிற அளவில் குற்றம் சாட்டுகிற மாதிரியே எழுதப்பட்ட கடிதம் அது. அதையும் ஒரு இலக்கிய நூலாகவே கருதலாம்.
இரண்டு முடிவுறாத நாவல்கள், பல உருப்பெற்ற சிறப்பான சிறுகதைகள், பல கடிதங்கள், சில டையரிகள் - இவைதான் காஃப்காவின் நூல்கள். அவர் தனது இளமைப் பிராயத்திலிருந்து நாற்பத்தியோராவது வயதில் இறந்தது வரையில் எழுதியதெல்லாம் ஜெர்மன் மொழியிலும் பின்னர் மொழிபெயர்ப்பிலும் பிரசுமாகியுள்ளன. இவற்றைப் படிக்கும்போது காஃப்காவின் உருவம், இலக்கிய உருவம், தனித்தன்மை, பர்சனாலிடி பளிச்சிடுகிறது. கரப்பான் பூச்சி உலகத்தை நோக்குகிறது. காஃப்காவின் நூல்களில் இந்தக் கரப்பான் பூச்சிக்கு எழுத்துக்கலை கைவந்திருந்தது - தன் நோக்கைப் பூரணமாக எழுத்தில் வடித்துக் காட்ட முடிந்தது, இந்த மேதையான கரப்பான் பூச்சியினால். முக்கியமாக இரண்டு யுத்தங்களுக்கு மத்தியில் நசுக்குண்ட ஐரோப்பிய மக்களின் நிலைமை கரப்பான் பூச்சியினுடையது போலத்தான் - helpless morally, pointless ஆக இருந்தது. இந்த pointless, helplessness இரண்டையும் காஃப்கா அளவுக்கு வார்த்தைகளில் வடித்துத் தந்த கலைஞர் ஐரோப்பிய இலக்கியத்தில் வேறு யாரும் இல்லை. அதுதான் காஃப்காவின் பெருமை.
வேதாந்தத்தில் சொல்லுவார்கள் - நிஜ உலகம் என்று. நாம் நம்புவதைப் போலவே நமது கனவுகளில் வருகிற உலகமும் நிஜமானதுதான் - அந்த அளவுக்கு நிஜமானதுதான் என்று சொல்லுவார்கள். காஃப்காவின் கனவுலகம் நிஜமான உலகமாக உருப்பெறச் செய்த அந்த எழுத்துக்கலை வன்மையானது - இதற்கு முன் யாரும் சாதிக்காதது.
'ஒரு நாயின் ஆராய்ச்சிகள்' என்கிற கதையை எடுத்துக்கொள்வோம். இந்த நாய் தனது ஆராய்ச்சியின் ஆரம்பமாக ஒன்றை ஏற்க மறுக்கிறது. நாய்கள் மனிதனுக்கு அடிமைப்பட்டவை என்று ஏற்க மறுத்துத் தன் ஆராய்ச்சியைத் தொடங்குகிறது. நாய் உலகத்தின் அடிப்படையான அம்சங்கள் எவை, எவை? நாய்களுக்கான உணவு எங்கிருந்து, எப்படிக் கிடைக்கிறது? பூமியிலிருந்து கிடைக்கிறது என்றும், தங்களுக்கு உணவளிக்கும் பூமியை முகர்ந்து அதற்கு நீர் வார்க்க வேண்டும் - அது நாய்களின் கடமை என்றும் எல்லா நாய்களும் அறிந்திருக்கின்றன. உணவு தேடும் நாய் பூமியைப் பார்ப்பதில்லை. வானத்தைப் பார்த்தே குலைக்கிறது என்று விஞ்ஞானியான நாய் கண்டறிந்து வைத்திருக்கிறது. இது ஏன் என்று விசாரிக்கிறது. மனிதர்கள் இல்லை என்று கற்பனை செய்துகொள்வது நாய்களுக்கு சுபாவமாகிவிட்டது - கடவுள் இல்லை என்று மனிதன் நினைப்பது இந்தக் காலத்தில் சுபாவமாகிவிட்டதுபோல. காஃப்காவில் முடிவுறாத நாவல்களைப் போலவே இதுவும் முடிவுறாத ஒரு கதை.
'விசாரணை' என்கிற நாவலில் குற்றம் சாட்டப்பட்டவன் - என்ன குற்றமோ, யாரால் அவன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டானோ - என்னவானால் என்ன? தான் குற்றம் செய்தவன்தான் என்கிற எண்ணம் கதாநாயகனுக்கு ஏற்பட்டுவிட்டதாகவேதான் காஃப்கா வருணிக்கிறார். தன்னையே நாயும், பூச்சியும் ஆக்கிக்கொள்கிற வித்தையை காஃப்கா , நமது சைவப் பெரியார்களைப் போலவே அறிந்திருந்தான் என்று புதுமைப்பித்தன் ஒருதரம் சொல்லி, நான் கேட்டதுண்டு. காஃப்காவின் எழுத்திலே ஒரு தோல்வி, ஒரு கசப்பு மனப்பான்மை, ஒரு frustration தொனிப்பது தெளிவாகவே தெரிகிறது. இந்த விஷயங்களில் நமது புதுமைப்பித்தன் காஃப்காவுக்கு ஈடுசொல்லக்கூடியவர்தான்.
1937ல் காஃப்காவின் எழுத்து எனக்கு முதல் முதலாகப் புதுமைப்பித்தன் மூலம் பரிச்சயமாயிற்று. அதற்குப் பிறகு பல தடவைகள் அவர் நூல்களை ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் படித்திருக்கிறேன். இப்படி ஒருதரம் அண்ணாமலை சர்வகலாசாலையில் The Great Wall of China என்கிற நூலைப் படித்துவிட்டுத் திருப்பித்தர எடுத்துப்போகும்போது சிதம்பரத்தில் மௌனி யைச் சந்தித்து அவரிடம், “இதைப் படித்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கலாம்” என்று தந்தேன். மறுநாளே பூராவையும் படித்து மௌனி அந்தப் புஸ்தகத்தைத் திருப்பித் தரும்போது, “இந்த நூல்களை நீங்களும் மற்றவர்களும் எதற்காகப் படிக்கிறீர்களோ, எனக்குத் தெரியவில்லை. இந்த காஃப்கா எனக்காகவே எழுதியிருக்கிறான்” என்றாரே பார்க்கலாம்.
ஒரு சிறந்த இலக்கியாசிரியனுக்கு இதைவிடச் சிறந்த Tribute வேறு ஒருவரும் சொல்ல முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது.
Sorry - எழுதி முடித்த பிறகு தலைப்பை மாற்றி, ‘காஃப்காவும் மூன்று தமிழ் எழுத்தாளர்களும்’ என்று சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியே வைத்துக்கொள்ளுங்களேன்.
- கசடதபற, மார்ச்-ஏப்ரல் 1972 (க.நா.சு. சிறப்பிதழ்)
Comments
Post a Comment