Skip to main content

கிராமதானத்திற்கு உகந்த தமிழ்நாடு | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan
தமிழ்நாட்டில் பாபாவின் யாத்திரை ஒன்றே முக்கால் மாதமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. ஊழியர்களுக்கு ஒருமுறை என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். ஏனெனில் உங்களுடைய ஒத்துழைப்பும், உதவியுமில்லாமல் பூதான இயக்கப் பணி இங்கே நடைபெற முடியாது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் தமிழகத்தில் நடைபெறுகின்ற செயல் சமக்கிரகமாகவும், பரிபூரணமாகவும் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளேன். சமக்கிரக என்று சொன்னால் பூதான இயக்கத்தோடு எல்லா நிர்மாணப் பணிகளையும் சேர்ந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்த அளவிற்குக் காரியம் செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் செய்யவேண்டும்.
தெலுங்கானாவில் பூதான உதயம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கம் தெலுங்கானாவில் தோன்றியது என்பதை அறிவீர்கள். இயக்கம் ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணமோ, சங்கல்பமோ அதற்கு முன்னால் இதயத்தில் தோன்றவேயில்லை. தெலுங்கானாவில் காணப்பட்ட நிலையில், அச்சூழ்நிலையில் பூமிதான இயக்கம் இயற்கையாகவே தோன்றியது. இரு கிராமத்திலுள்ள நிலமில்லாத மக்களுக்கு 80 ஏக்கரா வேண்டுமென்று கேட்டேன். ஒருவர் முன்வந்து 100 ஏக்கரா தானம் தந்தார். அந்தச் சம்பவம் எனக்குச் சிறிய விஷயமாகத் தோன்றவில்லை, அப்படிப்பட்ட எண்ணம் உதித்திருப்பின் அன்றே விஷயம் தெரிந்திருக்கும். இந்தியாவில் மட்டுமல்லாது, ஆசியா முழுமையும் நிலப்பிரசினை இருக்கவே செய்கின்றது.
ஆசிய நாட்டினர் தங்கள் தங்கள் வழிகளில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்கிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழியும் துறையும் பாரதத்திற்கு ஏற்ற வழியுமல்ல, தகுதியுடையதுமல்ல. எனவே தானம் என்ற முறை ஏற்பட்டிருக்காவிட்டால், நமது நாட்டிற்குத் தகுந்த வழியில் நிலப்பிரச்னை தீர்ந்திருக்காது. தவறான வழியில் அடியெடுத்துவைத்து அவதிப்பட்டிருப்போம். அஹிம்சையின் சக்தியை உணர்ந்தே இக்காரியத்தை மேற்கொண்டிருக்கிறோம். அதனால்தான் இயக்கம் உருவாகிய அன்றைக்கே இந்தியாவில் குறைந்தது 5 கோடி ஏக்கரா தானம் பெறாமல் பிரச்னை தீராது என்ற எண்ணம் எழுத்தது. நிலத்தைக் கேட்பது என்பதும், 5 கோடி ஏக்கரா பெறுவதென்பதும் என்னைப் போன்ற பாமர மனிதனுக்குக் கடினம்தான். ஏதோ ஒருசில ஆயிரம் ஏக்கரா நிலங்கள் பெற்று சிலரைத் திருப்தி அடையச் செய்திருக்கலாம், ஆனால் அஹிம்சையின் சக்தி வெளிப்படாது.
இந்தியாவிற்கு சுதந்திரம் அஹிம்சா சக்தியின் பலத்தினால் கிடைத்தது. காந்தியடிகள் அஹிம்சா வழியை விரும்பியதால் மக்களும் இவ்வழியையே விரும்பினர்கள் காந்திஜியைப் பின்பற்றி ஏதாவது செய்யலாம் என்ற முடிவுக்கு வேறு வழி தோன்றாத காரணத்தினால் வந்தார்கள். அஹிம்சா சக்தி மக்களின் இதயத்தில் ஆழமாகப் பதியவில்ல. அப்படி ஏற்பட்டிருக்குமானால் சுதந்திரம் பெற்றததற்குப் பின்னால் இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டிருக்காது. எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். ஆயிரமாயிரம் மாதர்கள் அவதிக்குள்ளாகியிருக்க மாட்டார்கள். ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் அகதிகளாக இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் அலைந்திருக்க மாட்டார்கள்.  இச்சம்பவங்கள் மிகப் பயங்கரமான சம்பவங்களாகத் தோன்றுகின்றன. அஹிம்சையில் நம்பிக்கையிருந்தால் இப்படிப்பட்ட சோக நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்காது. அதனால்தான் காந்தியடிகள் ஒருமுறை, “மக்கள் கடைபிடித்த அஹிம்சை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அஹிம்சைஎன்று கூறினார். ஆகையால், சுதந்திரத்திற்குப் பின்னால், அஹிம்சா சக்தியில் மக்களுக்குப் பக்தி பாவனை ஏற்பட வேண்டும்.
மக்கள் மொழியிலேயே ஆட்சி
ஒரு நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னால்தான் பல பிரச்னைகள் முளைத்தெழுகின்றன. சுதந்திரம் பெற்றதற்குப் பின்னால் பொருளாதாரப் பிரச்னையும், சமூகப் பிரச்னையும் ஏற்பட்டு ஒருவித சூழ்நிலை அமைகின்றது. இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் சுயராஜ்ஜியம் என்பது நிலைத்து நிற்கமுடியாது. எத்தனையோ ராஜ்ஜியங்கள் தோன்றின, இருந்த இடம் தெரியாமல் அழிந்தன. புரட்சி நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. காரணம் அடிப்படை, பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. ஆகையால் அரசியல் சுதந்திரம்-விடுதலை பெற்ற நாம் பொருளாதார, சமூகத் துறைகளிலும் விடுதலை பெறவேண்டும். இவ்விடுதலைக்கு அஹிம்சா சக்தி நல்ல பலனளிக்கும் என்பதை நாம் நிரூபித்துக் காட்டவேண்டும். தற்பொழுது எஸ்.ஆர்.சி. ரிப்போர்ட்டு வெளியான பொழுது ஹிம்சையின் சக்தி வெளிப்பட்டது. இந்த மாகாணம் எனக்குச் சொந்தம், இந்தப் பகுதி எங்கள் பகுதிஎன்பதெல்லாம் ஹிம்சையின் சின்னம் என்றுதான் சொல்லவேண்டும். மொழிவாரி மாகாண அமைப்பால் மக்களுக்கு நல்லதுதான்., அம்மாதிரி மாகாணங்கள் அமையாவிட்டால் உண்மையான சுதந்திரம் இல்லையென்றும் எடுத்துரைப்பேன். சுயராஜ்ஜியம் என்று சொன்னால் அந்தந்த மாநிலத்தில், மாநில மக்கள் மொழியிலேயே எல்லா நடவடிக்கைகளும் நடைபெற வேண்டும். சிலர் ஆங்கிலம் இல்லாமல் ஆட்சி முறையும், பிறவும் நடைபெறாது என்று கூறுகிறார்கள். அப்படியானால் ஆங்கிலேயர்களிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெறவேண்டுமென்று அவசியம் இல்லையே. அசோகன் ஆட்சியில் ஹர்ஷரின் காலத்தில், குப்தர்கள் ஆட்சியின்போது விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் எல்லாம் மக்கள் பேசும் மொழியிலேயே ஆட்சிமுறை நடந்துவந்தது. ஆங்கில மொழி மகத்துவமும், பெருமையும் வாய்ந்தது. வெளிநாட்டுத் தொடர்புகளுக்கும் வேண்டியதென்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆகையால் ஆங்கிலம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாதென்பது தவறான கருத்தாகும். ஆனால் ஒரு மொழியின் ஆட்சி ஏற்படுமானால் ஹிம்சை வந்துவிடுகிறது. இப்படிப்பட்ட பிரச்னைகளில் ஹிம்சை தலைகாட்டுகிறது என்பதை எடுத்துக்கூறவே இம்மொழிவாரி மாகாணப் பிரச்னையை உதாரணமாகக் கூறினேன்.
கடவுளை நம்பியே மேற்கொண்டேன்
சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு அஹிம்சையைக் கடைப்பிடிப்பது தவிர்க்க முடியாததாகும். ஆகையால்தான் தானம் கிடைத்த அன்றே இப்பணியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெரிந்தும், இயக்கத்தை நடத்த முன்வந்தேன். அப்பொழுது மற்ற நண்பர்களையோ அரசியல் தலைவர்களையோ கலந்து ஆலோசித்திருப்பேனேயானால் இயக்கத்தை ஆரம்பித்திருக்க முடியாது. ஏனெனில் இயக்கம் இம்முறையில் நடைபெற்று, பொருளாதாரப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அப்பொழுது ஏற்படவில்லை. மோட்சம் அடையவேண்டி தவம் செய்பவன் தாய், தந்தையர்களுடன் கலந்து ஆலோசிப்பானா? அப்படி ஆலோசித்தால் அவர்கள் மகனை அனுமதிப்பார்களா? அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உலக பந்தத்தில் கட்டுண்டுடிருக்கிறார்கள். வியாசருக்கும்கூட மோகம் ஏற்பட்டதால் சுகதேவனை வெளியே போகவேண்டாம் என்று தடுத்தார். ஆகையால் இப்பணியை உள்ளத்திலுள்ள நிஷ்டையோடு, இறைவனை நம்பி மேற்கொள்ளவேண்டியிருக்கிறதே, மிகச் சிக்கலான பிரச்சினை என்பதால்தான் இயக்கத்தைப் பார்த்து பெரிய மனிதர்கள் வியப்படைந்தார்கள். மேலும் சிக்கல் ஏற்படும் என்று இயக்கத்தின்மீது அவர்களுக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை. என்றாலும் பாபா அவர்கள் கெட்ட காரியத்தைச் செய்யமாட்டார், நல்ல பணியினையே செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு. ஏனெனில் பாபாவின் வாழ்வின் பெரும் பகுதி அஹிம்சா பூர்வமான நிர்மாணப் பணியிலே செலவிடப்பட்டிருக்கிறதென்பதை அறிந்திருக்கிறார்கள்.
சில ஆட்சேபணைகளுக்கு பதில்
பெரிய மனிதர்களுக்கு பூமிதான இயக்கத்தின் மீது கணக்கிலடங்காத சந்தேகங்கள் தோன்றுகின்றன. அதற்காக பாபா கவலைப்படுவதில்லை. துளசிதாஸர், அறிந்து அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக செய்யவேண்டும் என்று கூறினார். நானும் இப்பெரிய மனிதர்களும் இயக்கத்தை அறிந்து, கொஞ்சம் கொஞ்சமாக காரியமாற்ற வந்துவிடுகிறார்கள் என்று நம்புகிறேன். பூமிதான இயக்கத்தினால் நிலம் துண்டாடப்படுகிறது என்று கூறிவருகிறார்கள். இதற்குப் பொருளாதார நோக்கத்தோடு பதிலளிக்க வேண்டும். நான் துண்டாடப்படக்கூடிய பேச்சு பேச வரவில்லை. இதயங்களை ஒன்று சேர்க்கவே பாடுபடுகிறேன். நிலம் துண்டாடப்படுகிறது என்று கூறுபவர்கள் இதயம் துண்டாடப்படுவதை உணருகிறார்களில்லைஎன்று கூறினேன். இதுதான் பரமார்த்திகமான, உண்மையான பதில். பின்னர் பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள் எதற்கு தானம் தருகிறார்கள்?” என்று கூறினார்கள். இது இறைவனுடைய மாயையாகும். இறைவன் சிறியவர்களின் இதயத்தைப் பெரிதாகவும், பெரியவர்களின் உள்ளத்தைச் சிறிதாகவும் செய்கிறான். இது இறைவனுடைய போக்கிரித்தனம்! இறைவன் இப்படியெல்லாம் செய்து வேடிக்கை பார்க்கிறார்! பெரிய செல்வந்தர்கள் கஞ்சர்களாகி, துவேஷத்திற்குப் பாத்திரமாகி, வருத்தப்படுவதை வேடிக்கை பார்க்கிறார்! ஆகையால் இந்தக் குறையை இறைவனிடம் கூறுங்கள்என்று கூறினேன். கொடுக்க வேண்டும் என்ற அறிவை ஆண்டவன் யாருக்குக் கொடுக்கிறானோ அவர்கள் முதலில் கொடுக்க வேண்டும். குரங்குகளின் படை கிளம்பியதால்தான் சுக்ரீவன் வெளிவந்தான். இராமச்சந்திரமூர்த்திக்கு வானர சேனை உதவிதானே முதலில் கிடைத்தது. கிருஷ்ண பகவானுக்கு இடையர்கள்தானே உதவ முன்வந்தார்கள். ஏசுகாதருக்கு செம்படவர்களும், தச்சர்களுமே சீடராகச் சேர்ந்தார்கள். சிறிது நாட்களுக்குப் பின்னர் ஒரு செல்வந்தர் ஏசுநாதரிடம் வந்து சேர்ந்தார். ஏசு, “திருடக்கூடாதுஎன்று உபதேசம் செய்தார். எப்பொழுதும் திருடுவதில்லையேஎன்று பதிலளித்தார். அப்படியானால் உன் உடைமையையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு வா. ஏனெனில் இரும்புப் பெட்டியின் அருகில்தான் உன் இதயமும் இருக்கிறதுஎன்று கூறினார். இன்னும் மிகக் கடுமையான உபதேசத்தைக்கூட ஏசு கூறினார். ஊசிக்காதில் ஒட்டகம் நுழைந்தாலும் செல்வத்தர்களுக்கு மோட்சத்தில் இடம் கிடைபாதுஎன்று கூறினார். ஏசுவின் நிலையே இப்படி இருக்கும்போது பாபாவின் நிலை எப்படி இருக்கும். மக்கள் ஆட்சேபணைகள் செய்வது கண்டு மகிழ்ச்சியுறுகிறேன். ஏனெனில் அவைகளை அப்படியே சுவாகாசெய்துவிடுகிறேன்! ஒன்றரை லட்சம் ஏழை விவசாயிகள் தானம் கொடுத்த பின்னர், சூழ்நிலை மாறிய பின்னர் செல்வந்தர்கள் தானம் கொடுக்காமல் இருப்பது நல்லதல்லவென்பதை உணர்ந்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அதற்குப் பின்னர் பணக்காரர்கள் மோசமான தார் நிலங்களைத் தருகிறார்கள் என்ற ஆட்சேபணையைக் கிளப்பிவார்கள். மோசமான நிலங்களைக் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கு தோஷமல்ல, வாங்குபவர்களுக்குத்தான்என்று சொன்னேன். டில்லியில் திட்டக் கமிஷனிடம் என்னுடைய கருத்தை எடுத்துக்கூறிவரச் சென்றபோது ஒரு தலைவர், “இதய மாற்றத்தில் காரியம் நடைபெறுவது நல்லதுதான். ஆனால் நிலச்சுவான்தார்கள் தரிசு நிலங்களைத்தான் தானம் தருவார்கள்என்று கூறினார். ஆற்றில் வெள்ளம் வரும்பொழுது ஆரம்பத்தில் எல்லாக் கழிவுகளும் சேர்ந்து அழுக்கு நீர்தான் வரும். பின்னர் நல்ல நீர் வருவது போல முதலில் தரிசு நிலங்களைத் தருகிறார்கள். பின்னர் நல்ல நிலங்களை, நன்செய் நிலங்களை, விளைநிலங்களைத் தானம் தருவார்கள்என்று விளக்கம் கொடுத்தேன். ஒரு கூட்டத்தில், “மோசமான மண் என்பதே கிடையாது; யாராவது தன் தாயை அழகில்லாதவள் என்று கூறுவார்களா? தாய் எப்படி இருந்தாலும் குழந்தை விரும்புகிறது, அதன் கண்களுக்கு அழகாகவே தென்படுகிறாள். கிருஷ்ணன் ருக்மணியை ஏற்றுக்கொண்டதில்தான் அவனது பெருமை இருக்கிறது. அதைப்போல் பாபா தரிசு நிலத்தையே முதலில் கேட்கிறார். இருக்கிற தரிசு நிலங்கள் முழுவதையும் தந்துவிடுங்கள்எனக் கூறினேன். தரிசு நிலங்கள் என்று கூறுகிறவர்கள் ஏன் தரிசு நிலங்களை வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. கல்லும் மண்ணும் கலந்த பூமியைக் கொடுத்துவிட்டு கல்லும் மண்ணும் கலந்த பூமி என்று கூறுகிறர்கள். வேண்டுமானால் பாபாவிற்கு இமய மலையைத் தானம் தரட்டும்.. அப்போது பாபா என்ன செய்கிறார் பாருங்கள்! யமுனையும், கங்கையையும் கட்டுப்படுத்திவிடுவார்! (சிரிப்பு) எனவே பாரதத்தில் இருக்கின்ற எல்லா நிலங்களையும் பண்படுத்த வேண்டும். பீகாரில் பல ஜமீன்தார்கள் அதிக அளவில் தானம் தந்து இயக்கப் பொறுப்பையே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஏறத்தாழ 50,000 பெரிய நிலச்சுவான்தார்களும், ஜமீன்தார்களும் தானம் தந்து பூமிதானப் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இறைவன் விழித்துவிட்டான். இதுவரை நடந்த காரியம் என் பள்ளியெழுச்சிப் பாடுதலே! விழித்துவிட்ட இறைவன் இனி தானாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவான். ஆஸ்திரேலியாவைப் பாருங்கள். எவ்வளவு பெரிய தேசம்! அங்கு ஜனத்தொகை மிகக் குறைவு. சீனா, ஜப்பான் மக்களை அனுமதிப்பதில்லை. ஒரு சாரார் ஒரு நாட்டினின்று உடைமை கொண்டாடுவது இறைவனுக்குச் செய்கின்ற துரோகமாகும். இந்தக் கருத்து சிறிய அளவிலும், பெரிய அளவிலும் இருக்கின்றன. ஆனால் விஞ்ஞான யுகத்தில் நிச்சயமாக நிலைத்திருக்க முடியாது. தமிழகத்தின் பிரஜை எப்படி பாரதத்தின் பிரஜையாக இருக்கினரோ அப்படி எல்லா மக்களும் உலகப் பிரஜையாக வேண்டும். பூமிதான இயக்கம் இவ்வித பரந்த நோக்கமுடையது. இப்பொழுது ஒரிஸ்ஸாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் உடைமையை விட்டுவிட்டார்கள். சர்வ சேவா சங்கமும், தாலிமி சங்கமும், கஸ்தூரிபா சங்கமும் மற்றும் பல நிர்மாண ஸ்தாபனங்களும் சேர்ந்து கிராம ராஜ்ஜியத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கிராமதானத்திற்கு உகந்த தமிழ்நாடு
தற்போது தமிழகத்தில் அடுத்த அடி வைக்க விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் அந்தக் காரியம் பூர்த்தியடைந்து முன்னால் செல்வேன். அந்தச் காரியம் என்பது பூமிதான இயக்கப் பணியோடு கிராமக் கைத்தொழிலை வளர்ப்பதும், ஆதாரக் கல்வியும், ஜாதி வித்தியாசத்தைப் போக்குதலின் அவசியத்தை வற்புறுத்துவதும், கதர் திட்டத்தை ஏற்று கதர்ப் பிரசாரம் செய்வதும்தான். தமிழ்நாட்டில் முன்னர் கதர் வேலை நடந்து வந்ததே. இப்பொழுது கிராமோதய காரியமும், ஆதாரக் கல்வியும் நடைபெற்று வருகிறது. ஆனால் அதன் எல்லைகளுக்கு இன்னும் போகவில்லை. தமிழ்நாட்டில் கிராமதானத்திற்கு நல்ல சூழ்நிலை இருக்கின்றது. உண்மையான கிராம பாவனையை ஒவ்வொரு கிராமத்திலும் பார்க்கிறேன்.
சிறிய கிராமமாயிருந்தாலும் பெரிய கோவிலைப் பார்க்கிறேன். இங்கே கிராமத்திலிருக்கின்ற சிறிய கோவில் வட இந்தியாவிலிருக்கும் பெரிய கோவிலுக்குச் சமமாகும். எப்படிப்பட்ட கோவிலைக் கட்டினாலும் பக்தி ஏற்படுவது ஒரே மாதிரியாக இருக்கும். இவ்வளவு கோயில்களை ஏன் கட்டினார்கள்! எந்த பாவனையோடு கோவில் ஏற்பட்டதோ அந்த பாவனை இங்கு இல்லாமற் போய்விட்டது. நம்முடைய வாழ்வு முறை எப்படி அமைய வேண்டும் என்பதைக் கோவில்கள் உணர்த்துகின்றன. மாணவர்கள் முன்னர் கோவில்களில் இரவு நேரங்களில் உறங்கி காலையில் எழுந்து கல்வி பெற்றார்கள். அதனால்தான் ஸ்கூல்என்ற சொல்லிற்கு பள்ளிக்கூடம்என்று தமிழில் சொல்கிறார்கள். வேறு மொழிகளில் இவ்வளவு சிறந்த பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.
நாம் இருக்கின்ற எல்லா உடைமைகளையும் இறைவனிடம் அர்ப்பணித்து அவனது பிரசாதத்தை சாப்பிட வேண்டுமே அல்லாது உடைமை என்று அதிலிருந்து சாப்பிடக்கூடாது. பூமிதான இயக்கத்தைப்பற்றி பேசுகின்றார்களே தவிர கதரைப்பற்றிப் பேசவில்லையே. காந்தியடிகள் கதரைத் தீவிரமாக பரப்பினரே என்று கூறுகிறார்கள். கதரைப்பற்றி பிரசாரம் செய்ய பாபாவிற்கு கற்றுக்கொடுக்க வேண்டாம். ஒரு விவசாயி கிணறு தோண்ட ஆரம்பித்தானம். அப்பொழுது ஒருவன், “விவசாய வேலையை விட்டுவிட்டு கிணறு தோண்டும் வேலையைச் செய்கின்றாயா?” என்று கேட்டானாம். அந்தக் கதையைப் போலவே இவர்கள் கேள்வி கேட்பதும் இருக்கின்றது. கிணறு வெட்டினால்தானே வயல் வளமாக இருக்கும். காடு கழனியாகும். இன்று உலகத்திலிருக்கின்ற கோடிப் பிரச்னைகளைத் தீர்க்காவிட்டால் கதர்ப் பிரசாரம் எவ்வளவு நாள் செய்தாலும் காரியம் நடைபெறாது. காந்தியடிகள் கதரை சுதந்திரத்தோடு பிணைத்ததால்தான் கதருக்கு மதிப்பு ஏற்பட்டது. மில் துணி அணிபவர்களையும் தாயக விடுதலைக்கு தகுதியுடையவர்கள் என்று அன்று காந்தியடிகள் கருதியிருப்பாமானால் ஒருவரும் கதரை அணிய முன்வந்திருக்கமாட்டார்கள். அதைப்போல நிலப் பிரச்னையோடு கதரை இணைத்தால்தான் கதர் வேலையும் நன்கு நடைபெற முடியும். கிராமத்தில் கதர் உற்பத்தியாகும் பொழுது வெளித் துணிகளுக்கு அவசியமின்றிப் போய்விடும். 20 வருடங்களாக கதர் வேலை செய்துகொண்டு வருகிறோம். ஆனால் எங்கு கதர் உற்பத்தியாகின்றதோ அங்கேயே அது உபயோகப்படுவதில்லை. ஆகையால் நிலப் பிரச்னை முக்கியமான பிரச்னையாக நம் முன் நிற்கின்றது. மக்கள் இப்பொழுது இப்பிரச்னையைத் தீர்க்கவே விரும்புகிறார்கள்.
கிராமத்தின் சங்கல்ப சக்தி
எல்லா நிலங்களும் கிராம உடைமையாகும்பொழுது ஓர் பாவனை ஏற்படுகின்றது. அப்பொழுது மக்கள் சங்கல்பம் செய்துகொள்வார்கள். கோராபுட் கிராமத்தில் மக்கள் கிராமராஜ்ஜியத்தை உருவாக்க சங்கல்பம் செய்துகொண்டுவிட்டார்கள். பசுமாட்டு மாமிசம் மலிவுற்றாறும் இந்துக்கள் கையால்கூடத் தொடமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பசுமாதாவென்று கூறி அப் புலால் உண்பதில்லையென்று சங்கல்பம் செய்துகொண்டார்கள். சங்கல்பம் செய்யும்போது எல்லோரது சக்தியும் ஒன்று. சேருகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தையே கூறினேன். அதைப்போலவே கிராம மக்கள் சங்கல்பம் செய்துகொள்வார்களேயானால் வெளித் துணி மலிவாக இருந்தாலும் வாங்கமாட்டார்கள். எனவே சமூக ரீதியில் கதர் அபிவிருத்தி செய்யவேண்டுமானால் இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, சர்க்கார் மில்களை மூடி கதர் வேலையை எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றொன்று, கிராம மக்கள் ஆலைத் துணிகள் அணிவதில்லையென சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பாபா கதர் வேலையை விட்டுவிடவில்லை. பூமிதான இயக்கத்தின் அடிப்படையில் கதர் நிலைத்து நிற்க முயற்சிக்கிறேன். ஆகையால் நம்முடைய எல்லா சக்திகளும் ஓர் மையப்புள்ளிக்கு வந்தாக வேண்டும். வங்காளத்தில் ஒரு ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தபொழுது பக்கத்து கிராமம் ஒன்றுக்குச் சென்றேன். அந்தக் கிராம நிலங்கள் அடுத்த கிராமத்தில் வாழ்கின்ற ஒருவருக்குச் சொந்தமாக இருக்கின்றன. ஆசிரமத்தில் இருக்கிறவர்கள் ஏன் அவர்களும் சென்று நிலம் கேட்கக்கூடாது என்று கேட்டேன். ஆசிரமத்தில் அதிக வேலையாய் இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் சோம்பலாக இல்லையென்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் காந்தியடிகள் திரும்பத் திரும்ப எடுத்துக்கூறிய சமக்கிரக புத்தி இல்லை என்று கூறுகிறேன். ஆகையால் எவ்வளவு நிர்மாண ஸ்தாபனங்கள் இருந்தாலும் அவைகள் எல்லாம் பூமி பிரச்னையின் அடிப்படையில்தான் காரியமாற்ற வேண்டும். காந்தியடிகளுக்கு நிச்சயமாக பூமிதான இயக்கத்தின்மீது பூர்ணமான திருப்தி ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை. ஆகையால் காந்தியத்தில், அஹிம்சையில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பூமிதான இயக்கத்தில் பங்குகொண்டு பணியாற்ற வேண்டும். எல்லா நிர்மாணத் திட்டங்களையும் இணைத்து பூமிதான இயக்கம் நடைபெற வேண்டும்.
பூமிதான இயக்கம் பாபாவின் பணியல்ல. உங்களுடைய பணியில் உதவி செய்யவே பாபா வந்திருக்கிறார். நான் உங்களுக்கு ஒரு பூர்த்தி செய்யப்படாத செக் கொடுக்கிறேன். எத்தனை நாட்கள் பாபாவை பயன்படுத்த விரும்புகிறீர்களோ அத்தனை நாட்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாரதத்தின் தெற்கு எல்லையிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதற்குள் இயக்கத்தின் கடைசி காரியம் வரை நடந்தாக வேண்டும். இங்கே பரிபூரண வேலை நடைபெற்ற பின்னர்தான் வடக்குத் திசை நோக்கித் திரும்புவேன். தார்மீகப் புருஷர்கள் கங்கை நீரைக் கொண்டுவந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் அங்கிருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தால்தான் யாத்திரை பூர்த்தியடைந்ததாகக் கருதுவார்கள். தமிழகத்தில் சமக்கிரக கிராம ராஜ்யத்தை ஏற்படுத்த விரும்புகின்றேன். ஆகையால் எல்லோருடைய முழு சக்தியும் கிடைத்தாக வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டு தங்கள் தங்கள் பங்கைப் பகிர்ந்துகொண்டு பணிசெய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜில்லாவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வயலூர் கிராமதானம்
வயலூரில் கிராமசாஜ்யம் உதயமாகிவிட்டது. சகோதரர் ராமகிருஷ்ண செட்டியார் தன்னுடைய அதிகபட்ச நிலங்களை நிலமில்லாதவர்களுக்குக் கொடுத்துவிட்டார். செங்கற்பட்டு ஜில்லா யாத்திரை முடிந்தவுடனே, “ஏன் நீங்கள் ஜீவன் தானம் செய்யக்கூடாது. பக்கத்து கிராமங்களுக்குச் சென்று பூமிதான, கிராமதானக் கருத்துக்களை எடுத்துச் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்என்று அவர்களிடம் கேட்டேன். அவர் ஜீவன் தானமே தந்துவிட்டார். ஆகையால் என் சம்பந்தப்பட்ட வரையில் பூமிதான இயக்கக் காரியமும் பூர்த்தியாகிக்கொண்டு வருகிறது என்று உணருகிறேன். இப்பொழுது மற்ற நிர்மாணத் திட்டங்களையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன். இங்கே வந்திருக்கின்ற சகோதரர்கள் இயக்கப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் ஆதரவும் இயக்கத்திற்கு இருக்கிறது. அரசாங்கத்தின் நிறம் இப்போது மாறிக்கொண்டு வருகிறது. சமுதாய நலத்திட்ட அதிகாரிகளும் உதவி தருவது கண்டு மகிழ்கின்றேன்.
சகோதார் ஜெகந்நாதன் (தமிழ்நாடு பூதான கமிட்டி கன்வீனர்) ஒரு சூன்யம்; அவருடைய சமிதியும் சூன்யம்; சைபர்; இந்தச் சூன்யத்திற்கு முன்னால் எத்தனை எண்கள் சேர்க்கின்றேமோ அதனைப் பொறுத்துத்தான் இயக்கம் தீவிரமாக நடைபெறும். சைபருக்கு முன்னால் 4 சேர்த்தால் 40 என்று ஆகும். ஜெகந்நாதன் தனியாக இருந்தால் சூன்யமும் தனியாகத்தானிருக்கும். இதனை உணர்த்து எல்லா ஊழியர்களும் காந்திஜி பாதையில் கருத்தும் கவனமும் கொண்டோர், அஹிம்சா சக்தியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டோர் அனைவரும் இந்த இயக்கப் பணியில் ஈடுபட வேண்டும்.
(திண்டிவனம்-3-7-’56)

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...