Illustration Courtesy: Jayachandran / LiveMint |
(காந்தி எழுதிய ஆசிரம வாழ்க்கை வரலாறு நூலுக்கு காகா காலேல்கர் எழுதிய முன்னுரை.)
(1)
பாபூ
அவர்கள் சிறை சென்ற ஒவ்வொரு சமயத்திலும் நாங்கள் அவரிடம் ஏதேனும் எழுதும்படி
கோருவது வழக்கம். ஒரு சமயம் நான் அவரிடம் ஒரு தார்மீக வாசக மாலை எழுதித் தரும்படி
கேட்டுக்கொண்டேன். அதற்குப் பதிலாக அவர் 13 பாடங்கள் கொண்ட பாலசிட்சையொன்று
தயாரித்துத் தந்தார். ஆனால் அதற்குக் காரணமாயிருந்த கருத்தை விளக்கி, “இந்தக் கருத்து ஏற்கப்படுமானால்தான் இந்த பாலசிட்சையை அச்சிடலாம்” என்றார்.
பாபூவின்
கருத்து மிகவும் புரட்சிகரமானதாயிருந்ததால் எங்களில் எவராலும் அதை ஏற்கக்
கூடவில்லை. ஆகவே அந்த பாலசிட்சை நாளது வரையில் அச்சாகாமலே இருந்துவிட்டது .
மற்றொரு
சமயத்தில் நான் அவரிடம், “நீங்கள் ‘சத்திய
சோதனை’ எழுதியிருக்கிறீர்கள். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக
வரலாறும் எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது எங்களுக்கு சத்தியாக்கிரக ஆசிரமத்தின்
வரலாறு எழுதிக்கொடுங்கள். நீங்கள் யாத்திரை செய்து செய்து சிரத்தையின் மூலதனம்
செலவழிந்து போகும்போது மீண்டும் தூண்டுதல் பெறுவதற்காக ஆசிரமத்திற்கு வருவதாகப்
பலமுறை சொல்லியிருக்கிறீர்கள், ஆசிரமவாசிகளாகிய எங்களிடமிருந்து
உங்களுக்கு (ஆன்மீக) உணவு கிடைக்கக்கூடிய அளவுக்கு எங்களிடம் சரக்கெதுவும்
கிடையாது. இதற்கு மாறாக எங்கள் சிறுமை காரணமாக உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு
கொடுத்துவருவதோடு, நீங்கள் எப்பொழுது ஆசிரமத்திற்கு
வரப்போகிறீர்களென்று காத்துக்கொண்டிருக்கிறோம். ஆசிரமத்தின் லட்சியமும், இந்தச் சோதனைக்குக் காரணமாயுள்ள உங்கள் நம்பிக்கையும் உங்களுக்கு
உண்மையில் புதிய புதிய தூண்டுதல்களை அளித்துக்கொண்டிருக்கலாம். ஆகையால்
இவையெல்லாவற்றையும் எங்களுக்கு வரிசைக்கிரமமாய் எழுதி உதவுங்கள். ஆசிரமத்தை
நடத்துகையில் எங்களால் உங்களுக்கேற்படும் கஷ்டத்தையும், எங்களுடைய
குறைகள் காரணமாக ஆசிரமத்தின் வளர்ச்சியில் குறுக்கிடும் தடைகளையும் தயங்காமல்
எழுதுங்கள். எங்களிடம் தாட்சிண்யமே காட்டவேண்டாம். சத்தியாக்கிரக ஆசிரமம் தற்கால
இந்தியாவில் ஓர் அற்புதமான பாரமார்த்திகம் கலந்த சமூக வாழ்க்கைச் சோதனையாகும். இது
அரசியல், பொருளாதாரம் ஆகிய இரு துறைகளிலும் புரட்சியை
உண்டாக்கக்கூடியது. இது பற்றிய உண்மையானதும், வரிசைக்கிரமமானதுமான
விவரம் உலகிற்குக் கிடைத்தாக வேண்டும். நீங்களே சத்திய சோதனையில் ‘என்னைப் போன்ற எத்தனையோ பேர் பலியான போதிலும் சத்தியம் வெல்வதாக! ஓர்
அற்பாத்மாவை அளக்கும் பொருட்டு சத்தியத்தின் அளவுகோல் என்றும் குறுகாதிருப்பதாக!’
என்று எழுதியிருக்கிறீர்கள். இதே நியாயத்தை எங்கள் விஷயத்திலும்
பொருத்தி ஆசிரமத்தின் வரலாற்றை இனி வரவிருக்கும் தலைமுறையினருக்காக எழுதித்
தாருங்கள்” என்றேன். அவரளித்த பதிலின் சாரம் பின்வருமாறு:
முடிந்தால்
வஞ்சனையில்லை, எழுதுகிறேன். ஆனால் உண்மையில் இந்த வேலையை
நீங்களேதான் செய்யவேண்டும். இந்தச் சோதனை உங்கள் மூலமாகவே நடந்துவருவதால் இந்த
வரலாற்றை எழுதவேண்டியவர்களும் நீங்கள்தான்.
அவர்
சிறையிலிருந்து வெளிவந்த பொழுது துண்டு துண்டாய் எழுதப்பட்டதும், அரைகுறையானதுமான வரலாற்றை உடன் கொண்டுவந்தார். எழுதியிருந்ததும் ஒரே
தன்மையதாயில்லை. அவர் சொன்னதாவது: “இந்த வேலையைச் செய்து
முடிக்க இயலவில்லை. மறுமுறை சரிபார்க்கவேண்டியது மிகவும் அவசியம். அரைகுறையாய்
எழுதியிருப்பதை முடிக்க இயலுமா என்பதும் தெரியவில்லை. உள்ளதை அப்படியே
அச்சிட்டுவிடலாமென்றால் இது அதற்குத் தகுந்ததாயுமில்லை. திருத்தியான பிறகே
தருவேன்.” அதற்கு நான், “அப்படியே
செய்யுங்கள். ஆனால் இப்பொழுதுள்ளதைப் பார்த்து பிரதி செய்யச் செய்கிறேன்” என்றேன்.
நான்
கையெழுத்துப் பிரதியை உடனே வாங்கிக்கொண்டேன். திரு. மகன்பாய் தேசாயைக்கொண்டு
அதற்கு 3-4 பிரதிகள் தயாரிக்கச் செய்தேன். அதன் ஒரு பிரதியை பூனாவில் பேராசிரியர்
ஜெயசங்கர்பாய் திரிவேதியிடம் கொடுத்தேன். இரண்டாவது பிரதியை திரு. மகன்பாய்
வித்தியாபீடத்தில் வைத்துக்கொண்டார். மூன்றாவது பிரதியை நவஜீவனுக்குக் கொடுத்திருப்பேன்.
மூலப் பிரதி இப்போது எங்கே, யாரிடமிருக்கிறதென்று
தேடவேண்டும். இப்படைப்பில் அவர் கை மீண்டும் படுவதற்கே இடமில்லாது போய்விட்டது!
ஆகவே எழுதி முடிப்பதற்கு இடமேது? ஆகையால் இப்பொழுதுள்ள
உருவிலேயே இதை ஒரு முறை மக்கள் முன் இடுவதென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆசிரமத்தில்
பல முயற்சிகளும் எப்படியெப்படி வளர்ந்தன என்பதை விளக்கிக் கூறும் சிறந்த வரலாற்றை
இந்த அத்தியாயங்களில் காணலாம். ஆசிரமத்தின் பிரார்த்தனை, எங்கள்
கூட்டு உணவு விடுதி, கக்கூசு சுத்தி, கதர்
வேலை, விவசாயம், கோசாலை, இரவில் வந்த திருடர்கள், அவர்களுக்காகக் காவல்,
ஆசிரமத்தில் நடந்த கலியாணம், நிகழ்ந்த சாவு
முதலிய பல அத்தியாயங்கள் மனதைக் கவருபவையாய் இருப்பதைப் போலவே, இந்தியாவின் புனரமைப்பைக் கருதுகையில் முக்கியமானவையாயும் இருக்கின்றன.
1915-இல்
சத்தியாக்கிரக ஆசிரமம் ஸ்தாபித்ததற்கு முன் காந்தியடிகள் ஆசிரமம் பற்றிய தம்
கருத்தை எழுதி, அதற்கு 2-3 பெயர்களையும் குறிப்பிட்டு,
இந்தியாவின் பல சிந்தனையாளர், ஊழியர், தலைவர், ஆகியோருக்கு அவர்கள் அபிப்பிராயத்தைக் கோரி
சுற்றுக் கடிதமாக அனுப்பி வைத்தார். அதோடு கூட ஆசிரமத்தின் விரதங்களின்
விளக்கமொன்றையும் அனுப்பியிருந்தார். இந்த 11 விரதங்களுள் சத்தியம், அஹிம்சை, பிரம்மச்சரியம், அஸ்தேயம்
(கள்ளாமை), அபரிக்ரஹம் (வௌவாமை) என்ற 5 விரதங்களும் யோக
மார்க்கத்தில் யமங்கள் என்று அழைக்கப்படும். வைதிக மதத்தில் மட்டுமின்றி பௌத்தம்,
ஜெயினம் முதலிய எல்லாச் சமயங்களிலும் இந்த யமங்களுக்கு மிகுந்த
முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சுயராஜ்யம் பெறுவதற்காகவும்,
சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் பல்வேறு மதங்களைப் பின்பற்றிவரும்
இந்திய மக்களை முன்னேற்றுவதற்காகவும் நடத்தப்படவிருந்த ஆசிரமத்தில் புதிய
திருந்திய உருவில் பழைய யமங்கள் தோன்றியிருப்பதைப் பார்த்த பழையதும் நவீனமுமான
எல்லாவகைக் கருத்துள்ளவர்களுக்கும் ஆசிரமத்தின் விஷயத்தில் ஓர் ஆவலும்
மதிப்புணர்ச்சியும் உண்டாயின.
ஆசிரமத்தின்
இந்த விரதங்களுக்கு விளக்கம் அல்லது விரிவுரையை 1930-இல் எரவாடா சிறையிலிருந்து
ஒவ்வொரு செவ்வாய் காலையிலும் எழுதி அனுப்பிவந்தார். இது ‘மங்கள்
பிரபாத்’ (செவ்வாய்க் காலை) என்ற பெயரில்
பிரசித்தியடைந்துள்ளது.
ஆனால்,
அந்த விளக்கமும் முழுதும் தத்துவ ரீதியாகவே செய்யப்பட்டிருந்தது.
இந்த விரதங்களை அனுஷ்டிப் பதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் அவற்றிலிருந்து
வளரக்கூடிய கருத்துத் தொடரையும் இந்தப் புத்தகத்தில்தான் காணலாம். சத்தியமென்ற
விரதத்தை அனுஷ்டிப்பதிலும் பிறரை அனுஷ்டிக்கச் செய்வதிலும் தோன்றக்கூடிய சிரமங்கள்
காரணமாக எழுந்த பல பிரச்சினைகளின் விவரங்களும் இந்நூலின் (‘பிராயச்சித்தம்’,
‘உபவாசம்’ என்ற இரு பகுதிகளில் எவ்வளவு
விஸ்தாரமாய் அளிக்கப்பட்டிருக்கின்றனவோ அவ்வளவு காந்தியடிகளின் நூல்களில் வேறு
எங்குமே காணமுடியாது. தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு ஆத்மசுத்திச் சூழ்நிலையைத்
தோற்றுவித்து நிலைக்கச் செய்வதற்காக காந்தியடிகள் ஆசிரமத்தில் அனுபவித்த
கஷ்டங்களின் உள்ளமுருக்கும் வருணனையை ‘சத்திய சோதனை’யில் காணலாம். ஆனால் அதுவே இன்னும் சிறந்த முறையில் இங்கே
விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அத்தியாயம் முழுதும் மிகுந்த அடக்கத்துடன்
வரையப்பட்டிருப்பதால், அதன் சிறப்பு நம் கவனத்தை அதிகம்
ஈர்க்கிறது.
சுதேசி
விரதம் எப்படி வளர்ந்தது என்பதின் சுருக்கமான வரலாறு இங்குதான் நமக்கு
வரிசைக்கிரமமாய்க் கிடைக்கிறது.
ஆசிரமத்தோடுகூட
அதற்குள்ளேயே ஆனால் ஒரு தனி ஸ்தாபனமென்ற வகையில் பாபூ கல்வி பற்றிய சோதனையொன்றும்
நடத்தினார். இந்தச் சோதனையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆசிரமத்தின் சூழ்நிலையில்தான்
இருந்துவந்தார்கள். ஆனால் ஆசிரமத்தின் விரதங்களையும் விதிகளையும் முழுதும்
அனுஷ்டிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் அவர்களுக்கில்லை. ஒரே சூழ்நிலையில் ஒரே
பாபூவின் தூண்டுதலினால் நடக்கும் இரு ஸ்தாபனங்களின் வாழ்க்கை வேறு வேறாய்
இருப்பதற்கில்லை. மேலும் நாங்கள் ஒருவர் மற்றவர் வேற்றுமைகளைப் பாராட்டாதிருந்துகொண்டு
காரியங்களை நடத்தும் விதத்தையையும் அதிகம் கற்றிருக்கவில்லை. இதன் பயனாக இரு
சாராரும் பாபூவுக்குக் கெடுத்துவந்த அளவு தொந்தரவு வேறு யாரும்
கொடுத்திருக்கமாட்டார்கள். உத்தவருக்கும் அக்ரூரருக்குமிடையில் தோன்றிய
சச்சரவுகளினால் கிருஷ்ணருக்கு என்ன சிரமம் ஏற்பட்டதோ, ஏற்பட்டதாக
அவரே நாரதரிடம் தெரிவித்திருக்கிறாரோ அதுவே பாபூவுக்கும் ஏற்பட்டது. அதையும் இந்த
நூலில் இவர் ஜாடையாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதோடுகூட கல்வியின் விஷயத்தில்
1932-இல் அவர் கொண்டிருந்த கருத்துக்களையும் இங்கே வெளியிட்டிருக்கிறார். இந்தக் கருத்துக்களில்
ஆதாரக் கல்வியின் ஆரம்ப உருவம் காணக் கிடைப்பது ஒரு பெரிய லாபமாகும்.
இந்தக்
கருத்துக்களனைத்தும் பள்ளி ஆசிரியர்கள் முழுதும் ஒத்துக்கொண்டவையே என்று நான்
இங்கே சொல்லியாக வேண்டும். சில கொள்கைகளை எந்த அளவுக்கு வற்புறுத்த வேண்டும்
என்பதிலும், 2-3 தத்துவங்களை எவ்வாறு இணைப்பது என்பதிலும்
அபிப்பிராய பேதமிருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முக்கியமாக சிரமம் இருந்தது
இரு ஸ்தாபனங்களையும் நடத்துவதில்தான். அந்தக் காலத்திய இக் கல்வி சம்பந்தமான
அல்லது பாபூ சொல்லிவந்தபடி பாரமார்த்திகப் பூசலிலிருந்தே ‘வர்தா
கல்வித் திட்ட’த்தின் தன்மை நிர்ணயிக்கப்பட்டது. மேலும்
தேசிய மகத்துவம் பொருந்திய கிராமக் கைத்தொழில்களை வளர்க்கும் வேலையை
ஆசிரியர்களிடமே ஒப்புவித்து கல்வி போலவே நடத்தவேண்டும் என்ற முடிவுக்கு பாபூ
வந்தார்.
சத்தியாக்கிரக
ஆசிரமத்தின் தெய்வ அருள் பெற்ற மேதையான ஸ்தாபகரின் கையால் எழுதப்பட்ட இந்த வரலாறு
ஆரம்பிக்கப்பட்டு இடையில் நின்றுபோனது விசனிக்கத்தக்க விஷயமாகும். சத்தியாக்கிரக
ஆசிரமத்தை மூடிவிட்டு சபர்மதியிலிருந்து கிளம்பி அவர் வர்தாவுக்கு வந்த பொழுது
ஆசிரமவாசிகளான எங்கள் 2-3 பேர்களிடம், “சத்தியாக்கிரக
ஆசிரமத்தில் நாம் எந்த பாரமார்த்திக சமுதாய வாழ்க்கையை வளர்த்தோமோ, அதை வளர்த்து வருகையில், அவ்வப்போது எந்தெந்த
விதிகளை அமைத்தும் திருத்தியும் மாற்றியும் வந்தோமோ அவைகளையெல்லாம் தொகுத்து
வரிசைக்கிரமமாய் எழுதிவிடுங்கள். இது ஆசிரமத்தின் நினைவுச் சின்னமாய் இருந்து
உதவும்” என்று சொன்னார். இதற்காக நான் சுமார் 50 தலைப்புகள்
தயாரித்து பாபூவிடம் காட்டினேன். அவர், “இவற்றுள் எல்லாம்
அடங்கிவிடுமே” என்றார். ஆனால் என்னால் பிரார்த்தனையைப்
பற்றிய ஓர் அத்தியாயம் தவிர வேறு எதையும் எழுத முடியவில்லை; மற்றவர்களாலும்
இவ்விஷயத்தில் எதுவும் ஆரம்பிக்கக் கூடவில்லை. திரு. ஜுகத்ராம் பாய் ‘ஆத்ம ரச்னாயா ஆச்ரமீ சிக்ஷா’ (ஆத்ம நிர்மாணம் அல்லது
ஆசிரமப் பயிற்சி) என்ற பெயருள்ள பெரிய புத்தகமொன்று எழுதியிருந்த போதிலும் அதன்
நோக்கம் வேறாகும்.
ஆசிரமத்தின்
வேலையிலிருந்து விடுவித்து பாபூ என்னை குஜராத் வித்தியாபீடத்தை நடத்துவதற்காக
அனுப்பிவைத்தது முதல் (1927) ஆசிரமத்தின் வேலைகளுக்கும் எனக்குமிருந்த தொடர்பு
குறைந்து போயிற்று. பிறகோ காலை, மாலைப் பிரார்த்தனையும்
சபர்மதிக் கரையிலுள்ள அது நடந்த இடமுமே சத்தியாக்கிரக ஆசிரமம் என்று கருதப்பட்டு
ஆசிரமத்தின் எல்லா வேலைகளுக்கும் ‘உத்தியோக மந்திரம்’
என்ற பெயர் அளிக்கப்பட்டது. 1933-இல் போரின் முடிவில்
விவசாயிகளுக்குத் தொந்தரவளிக்கும் சர்க்காரின் போக்கை எதிர்த்து பாபூ ஆசிரமத்தை
இறுதியாகக் கலைத்துவிட்டார். இந்தப் பாழடைந்த ஆசிரமத்தை சர்க்கார்
கைப்பற்றாதிருப்பதைப் பார்த்து 18 ஆண்டுகளாக நடந்த ஆசிரமத்தின் எல்லா ஸ்தாவர
சொத்துக்களையும் அரிஜன சேவைக்கு அர்ப்பணம் செய்துவிட்டார். இன்று அந்த ஆசிரம
நிலத்தில் அரிஜனப் பெண்களுக்கென ஒரு மாணவிகள் விடுதி நடந்துவருவதோடு, அரிஜனப் பிள்ளைகளுக்கு மிகவும் சிறந்த ஆதாரக் கல்வியும் அளிக்கப்பட்டு
வருகிறது.
சத்தியாக்கிரக
ஆசிரமம் கலைக்கப்பட்ட பிறகு காலஞ்சென்ற ஜம்னாலால் (பஜாஜ்) அவர்களின் ஏவலினால்
ஸ்தாபிக்கப்பட்ட ‘காந்தி சேவா சங்கம்’ சிறப்பாக
வளர்ச்சியுற்றது. இந்த ஸ்தாபனத்தின் நோக்கம் காந்தியடிகளின் கொள்கைகளில் நம்பிக்கையுடன்
இந்தியாவெங்கும் உள்ள ஊழியர்களின் காரியங்களை ஒழுங்குபடுத்துவதும், அவர்களுக்குத் தேவையான உதவியளித்துவருவதும் ஆகும். இந்த வேலை 6-7 ஆண்டுகள்
வரை உற்சாகமாய் நடந்தது. பல அரசியல் காரணங்களினாலும் வேறு உள் காரணங்களினாலும்
1940-இன் தொடக்கத்தில் இதைக் கலைக்க வேண்டியதாயிற்று.
இந்தியா
சுதந்திரமடைந்து, அதே சமயத்தில் துண்டாடப்பட்ட பிறகு
நாட்டின் நிலைமை முழுதும் மாறிப்போய்விட்டது. காந்தியடிகளின் கொள்கைகளையும்,
அவர் நடத்திய நிர்மாண வேலைகளையும் இந்திய அரசாங்கம் ஓரளவுக்கு
ஏற்றுக்கொண்டிருப்பதோடு, இந்தக் கொள்கைகளையும், வாழ்க்கை முறையையும் தம் வாழ்க்கையில் ஓரளவேனும் ஏற்றுள்ள பெருந்தொகையினர்
நாடெங்கும் இருக்கிறார்கள். சத்தியாக்கிரக ஆசிரமம் அல்லது காந்தி சேவா சங்கம்
என்பதைவிட அது எவ்வளவோ பெரியதாகிவிட்டது. அவர்களுக்கு வழி துலக்குவதற்கு இப்போது
பாபூ இல்லையாகையால் அவர்கள் சமீபத்தில் சேவா கிராமத்தில் கூடி அஹிம்சையில்
கருத்துள்ளவர்களின் ‘சர்வோதய சமாஜ’த்தை
அமைத்திருக்கிறார்கள். பாபூவின் எல்லா நிர்மாண வேலைகளும் சேர்ந்த ‘சர்வ சேவா சங்கம்’ போன்ற அகில உலக சங்கமொன்றும்
தயாராகி வருகிறது. இவ்வாறு தென்னாப்பிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட சின்னஞ்சிறு ‘பினிக்ஸ் ஆசிரமம்’ சிறிது சிறிதாய் மலர்ந்துகொண்டே
இருந்திருக்கிறது. சர்வோதய சமாஜம் இப்பொழுதைக்கு இந்தியாவில் மட்டுமே வளர்ந்து
வருவதாகத் தோன்றும்; ஆனால் இது இந்த நாட்டோடு
நின்றுவிடுமென்று எண்ணத் தேவையில்லை.
ஆசிரம
வாழ்க்கை பற்றிய காந்தியடிகளின் கற்பனை ஒரு புதிய யுகத்தையே
தோற்றுவிக்கக்கூடியதாகும். மூல நோக்கம் நிறைவேறும் வரையில் இம்மாதிரியான கற்பனை
மேன்மேலும் வளர்ந்துகொண்டேதான் போகும். வாழ்க்கை முழுவதிலும் பரவக்கூடியதும்,
உலகமெங்கிலும் வியாபிக்கக்கூடியதுமான ஒரு கருத்து முற்றிலும்
நிறைவேறுவதற்குள் ஒரு கல்ப காலமே கழிய வேண்டி வந்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.
‘பினிக்ஸ்’
என்பது மேலைநாட்டுப் புராணங்களில் வருணிக்கப்படும் ஒரு கற்பிதமான
பறவையாகும். இது மற்றப் பறவைகளைப் போல் முட்டையிலிருந்து பிறப்பதில்லை. அது தானே
தோற்றுவிக்கும் தீயில் விழுந்து எரிந்து இறந்துபோகுமாகும். அது இவ்வாறு எரிவதனால்
எஞ்சும் சாம்பலிலிருந்து புதிய ‘பினிக்ஸ்’ தோன்றுமாம். தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள் ஸ்தாபித்த ‘பினிக்ஸ் ஸெட்டில்மெண்டு’க்குப் பிறகு சபர்மதிக்
கரையில் ஸ்தாபித்த சத்தியாக்கிரக ஆசிரமமும், அதைக் கலைத்த
அடியிலேயே தோன்றி வளர்ந்த காந்தி சேவா சங்கமும், அது
சிதறிப்போய் பாபூவும் பலியான பிறகு இந்திய விடுதலையுடன் தோன்றிய சர்வோதய சமாஜமும்
என்ற இந்த வழிவழி வந்த பரம்பரை, மேலே கூறிய புராணத்தில்
வரும் பறவை எரியிலிருந்து பிறப்பது போன்றே இருக்கிறது. இந்த ஒவ்வொரு பிறவியையும்
பற்றி தனித்தனியாக விஸ்தாரமான வரலாறுகள் நமக்குக் கிடைக்கவேண்டியதுதான்.
(2)
தற்காலத்தில்
உடல் நோய்களைப் போலவே மன நோய்களும் அதிகமாகிக்கொண்டு வருவதால் அவைகளுக்கு
வைத்தியம் செய்வதற்குத் திறமை வாய்ந்த இரு வகை டாக்டர்கள் தயாராகிவிட்டார்கள்.
மனநோய்களை ஆராய்ந்து, பாகுபாடு செய்து, அவற்றிற்குச் சிகிச்சை செய்துவரும் டாக்டர்கள் மனித சாதியின் மனம்
தற்சமயம் மிகவும் சிக்கலாகி வருவதாகவும், அச்சிக்கல்
குறைவதற்குப் பதிலாக வரவர அதிகமாகிக்கொண்டிருக்கின்றன என்றும் கூறுகிறார்கள்.
இச்சிக்கலைப் போக்கி, மனிதன் மனதை நோயில்லாமலும்
வலிவுள்ளதாகவும் ஆக்கவல்ல சக்தி தர்மத்திற்குத்தான் உண்டு என்றும் அவர்கள் சொல்லத்
தொடங்கியிருக்கிறார்கள். ஆகையால் மக்களுக்கு தர்மத்தினிடம் சிரத்தையேற்பட வகைசெய்ய
வேண்டும்.
மறுபக்கத்தில்,
உலக வரலாற்றை ஆழ்ந்து படித்துத் தம் தம் நாட்டிற்கு வழி துலக்கும்
இக்காலத்திய தலைவர்களோ மனிதனுடைய மனத்தை மிகவும் குறுக்கி அவனைத் தவறான பாதையில்
அழைத்தேகி, அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும்படி செய்யக்கூடிய
பயங்கரமான தத்துவமொன்று உண்டென்றால் அது தர்மமே என்றும், தர்மத்தின்
பெயரால் தான் செய்துள்ள அநியாயங்களுக்காக மனிதன் வருந்துவதுமில்லை. ஆகையால் மனித
சாதியைக் காக்கவேண்டுமானால் இந்த தர்மமென்ற முள்ளை பாதையிலிருந்து அகற்றியே
ஆகவேண்டும் என்றும் அறைகிறார்கள்.
ரஷ்யப்
புரட்சியைத் தோற்றுவித்தவர்கள் வரலாற்றை ஆழ்ந்து படித்து தர்மத்தைப் பற்றி
மூன்றாவது வகை அபிப்பிராயம் கொண்டுள்ளார்கள். அவர்கள் மனிதனுடைய சிந்தனா சக்தியை
உறங்கச்செய்து எந்த இழிந்த நிலையிலும் திருப்தியோடிருக்கும்படி போதிக்கும் இந்த
தர்மம் அபினைவிட மோசமான பொருளாகும்; அபின் சாப்பிட்டவன்
ஏதேனும் ஒரு சமயத்தில் விழித்து சுய நினைவு பெறக்கூடும்; ஆனால்
தர்மபோதை ஏறியவனோ தன் ஈன வாழ்க்கைக்கும் ஒரு தத்துவம் அமைத்துக்கொண்டு அதிலேயே
மகிழ்ந்திருக்கிறான்; ஆகையால் மனித சாதியின்
சுதந்திரத்தையும் கௌரவத்தையும் காக்கவேண்டுமானால் தர்மமென்ற பெயருக்கே இடமில்லாமல்
செய்துவிட வேண்டும் என்கிறார்கள்.
ஒவ்வொரு
மனிதனும் தர்மம் என்பதற்கு வெவ்வேறு பொருள் கூறுகிறான். உண்மையைக் கேட்டால்
தர்மத்தில் புகுந்து ஒரே தர்மத்தைப் பலவாக்கும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும்
சடங்குகளும் மூடக் கொள்கைகளுமாக மனித சாதியை சின்னாபின்னப்படுத்தி, அறிவை மழுங்கச் செய்துவிட்டன. தர்மம் குறித்துப் பெருமைப்படும் மனிதன்
கொடிய செயல்கள் புரியத் தொடங்கிவிடுகிறான். ஆனால் தர்மங்களுக்கெல்லாம்
உயிர்ப்பிச்சையளிக்கும் பரம மங்களகரமான எந்த முக்கிய தர்ம தத்துவம் உண்டோ, எதை இப் புத்தகத்தில் காந்தியடிகள் ‘பரம தர்மம்’
என்று குறிப்பிட்டிருக்கிறாரோ அது இல்லாமையால் இன்று உலகம் இருளில்
சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பரம தர்ம தத்துவத்தை சொந்த
வாழ்க்கையில் போலவே சமூக வாழ்க்கையிலும் புகுத்தும் நோக்குடன் காந்தியடிகள்
ஆசிரமம் ஸ்தாபித்தார். இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கு காந்தியடிகளின் சுயராஜ்ய
முயற்சி கவர்ச்சியுள்ளதாய்த் தோன்றியதே தவிர, அவரால்
ஸ்தாபிக்கப்பட்ட ஆசிரமத்தின் தார்மீக வாழ்க்கை பழைய காலத்தின் ஏதோ ஓர்
அர்த்தமில்லாத பகுதி போல் இருந்தது. சில பெரியவர்கள் அவ்வப்போது அதை தூஷிக்கவும்
செய்தார்கள்! இப்பொழுது அதிகார ஆசையினால் ஏவப்பட்ட மக்களிடையே சுயராஜ்யம் வந்ததும்,
அல்லது வருவதற்கு முன்னமேயே எனக்கு உனக்கென்று போட்டா போட்டி ஏற்பட்டிருப்பதால்,
பலர் அரசியல் குஸ்திகளிலிருந்து ஒதுங்கி நின்று நிர்மாண வேலையுண்டு
தாமுண்டு என்று இருப்பவர்களும், நாட்டில் கலகங்கள்
நடக்கும்போது சமாதானப் படையாய் பணிசெய்வோரும் இப்போது இருந்தால் உதவியாயிருக்குமே
என்று எண்ணுகிறார்கள்.
ஒரு
வகையில் பார்க்கையில் ஆசிரமத்தில் இருந்தவர்களால் காந்தியடிகளின் லட்சியத்தை
எய்துமளவுக்கு மேலே எழ முடியவில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்னொரு வகையிலோ
நாட்டின் சக்தியையும் நியாயமென்ற மூலதனத்தையும் வளர்க்கக்கூடிய இச் சோதனையின்
ரகசியத்தை வெளியிலுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போய்விடவே காந்தியடிகளின்
இம் முயற்சி முழுதும் அனுஷ்டிக்கப்படாமலே இருந்துவிட்டதென்று
சொல்லவேண்டியிருக்கிறது.
ஆயினும்
18 ஆண்டுகள் நடந்த இச்சோதனையிலிருந்து இக்காலத்திற்கு உதவக்கூடிய எத்தனையோ
படிப்பினைகள் கிடைக்கக்கூடும்.
மனித
சாதியின் அறிவு ஒன்றின் பின் ஒன்றாய் நடந்த இரு மகா யுத்தங்கள் காரணமாக
வறண்டுபோய்விட்டது; அது மூன்றாவது மகா யுத்தம் பற்றி எண்ணவே
நடுங்கிக்கொண்டிருந்தபோதிலும், அந்த யுத்தத்தைத் தடுப்பதற்கு
பதிலாக அதை வா வா என்று அழைத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த யுத்தத்திலிருந்து
தப்பும் பொருட்டு நாம் அஹிம்சைமயமான சமூகத்தை அமைப்பதென்று தீர்மானித்துவிட்டோம்;
ஆனால் நமக்கு அதற்கான வழி புலப்படவில்லை. இத்தகைய சமயத்தில் 15
ஆண்டு காலம் ஆசிரம வாழ்க்கையில் அனுபவம் ஏற்பட்ட பிறகு காந்தியடிகளினால்
எழுதப்பெற்ற இந்த ஆசிரம வரலாறு நமக்குப் பலவகையில் தூண்டுதல் அளித்து உதவக்கூடியதாகும்.
காந்தியடிகள் எந்த விதிகளை அமைத்திருந்தாரோ, அவருக்கு
என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டிருந்தனவோ அவற்றையேதான் மீண்டும் அமைக்கவேண்டும்,
ஏற்கவேண்டுமென்று எவரும் சொல்லமாட்டார்கள். ஆனால் சத்தியம் அஹிம்சை
ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை நிறுத்தவேண்டுமென்றால் புலனடக்கம், வௌவாமை, தவம் ஆகிய சாதனைகளைச் செய்வதைத் தவிர வேறு
வழியில்லை. அஹிம்சை, அஹிம்சையென்று சொல்லிக்கொண்டிருந்தால்
மட்டும் போதாது; அஹிம்சையை நிலைநாட்டுவதற்கு
புலனடக்கத்தையும் வௌவாமையையும் வளர்த்தேயாகவேண்டும். இவ்வாறு செய்யாத பொழுது தூய,
சுயநலமற்ற சேவை சாத்தியமல்ல.
இம்சையை
நம்பியிருக்கும் சமூகத்தின் ராணுவம் அமைதி காலத்தில் எவ்வாறு பயிற்சிகளும்
முன்னேற்பாடுகளும் செய்கிறதோ, அவ்வாறு அஹிம்சை முறையில்
அமைந்துள்ள சமூகத்திலுள்ள சாந்தி சேனை எதுவும் செய்யவேண்டியிருப்பதில்லை. ஆனால்
தம்மவர் அன்னியரென்ற வேற்றுமையே இன்றி எல்லா மக்களுக்கும் வாழ்க்கை முழுவதையும்
தொடக்கூடிய பணியை அல்லும் பகலும் ஆண்டு பூராவும் செய்துவருவதனால்தான் கலகங்களில்
முனையும் மக்களை அடக்கும் சக்தியைப் பெறமுடியும். இம்சைப் படையினால்
எதிர்க்கட்சியை பலமாக வெறுக்கும் பொழுதுதான் முழு வீரத்துடன் போர் புரிய முடியும்.
ஸ்டாலின்கிராட் போரில் ஜெயிப்பதற்கு முன் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் தம் சேனையின்
வீரர்களிடம், “நீங்கள் ஜெர்மானியரை முழு மனதுடன் வெறுக்கக்
கற்றுக்கொண்டாலல்லது உங்களால் வெற்றி பெறமுடியாது” என்று
வற்புறுத்திச் சொன்னார். அஹிம்சை வழி நடக்கும் படையோ இதற்கு நேர் மாறாக
நடந்துகொள்ளும். நம் வீடு வாயிலை எரித்தவர்களிடமும், நம்
பெண்டு பிள்ளைகளைக் கடத்திச் சென்றவர்களிடமும் பகைமை பாராட்டாமலும், அவர்களுக்குத் தீங்கு நினையாமலும் இருக்கக்கூடிய வீரர்களே சாத்துவிக
எதிர்ப்பில் வெற்றி பெறக்கூடும். இதற்கு விரோதத்தைத் தூண்டிவிட முடிவதைப் போலவே
பற்றின்மை, அருள் ஆகியவற்றிலிருந்து தொடங்கி நட்பு, மகிழ்ச்சி வரையிலுள்ள சிறந்த குணங்களையும் நம்மால் தோற்றுவிக்க
முடியுமென்ற நம்பிக்கை வேண்டும். கடினமான வாழ்க்கையை இரண்டிலுமே பின்பற்ற
வேண்டியிருந்தபோதிலும், அஹிம்சைப் படைக்கு வாழ்க்கைத் தூய்மை
அதிகம் தேவை. (சிவாஜி, கிராம்வெல், கிச்னர்
ஆகிய இம்சைப் போரின் சேனாதிபதிகள், ஏன் ஹிட்லர்கூட ஆயுதங்கள்
கொண்டு செய்யப்படும் போரிலும் வாழ்க்கைத் தூய்மை மிகுந்த உதவி அளிக்கிறதென்று
நம்பிவந்திருக்கிறார்கள். இஸ்லாம் மத ஸ்தாபகரான முகம்மது நபி போருக்கு முதல் நாள்
தம் படை வீரரை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்யச் சொல்லியிருக்கிறார்.)
உண்மையில்
அஹிம்சை மயமான சமூகம் நிறுவுவதென்றால் சாந்தி சேனையை அமைக்காத வரை அது
கைகூடுவதற்கில்லை. சாந்தி சேனையை உண்மையில் அமைப்பது இப்புத்தகத்தில் காந்தியடிகள்
கூறியுள்ளபடி தவமியற்றி, புலனடக்கத்துடன் வாழாத வரையில்
முடியாது. “சமூகம் அஹிம்சையின் அடிப்படையில் அமைக்கப்படும்
பொழுது குண்டையும் வெடிமருந்தையும் சேமித்து வைப்பதற்குப் பதிலாக தவமியற்றி
புலனடக்கத்துடன் வாழவேண்டும். அவற்றை உபயோகிக்கும் வீரர்கள் சமூகத்தைப்
பாதுகாப்பார்கள். உலகம் இதுவரை இத்தகைய தர்மத்தை ஏற்றதில்லை. இந்தியாவில் இது
ஓரளவு ஏற்கப்பட்டிருந்தபோதிலும் பேரளவில் ஏற்கப்பட்டதாகச் சொல்வதற்கில்லை. இத்தகைய
அஹிம்சை எங்கும் வியாபிக்கவேண்டும், வியாபிக்கக்கூடும்.
ஆசிரமத்தில் இதன் அடிப்படையில் சமூகத்தை நிறுவ முடியுமென்று நம்பப்பட்டுவந்திருக்கிறது.
இந்த நம்பிக்கையுடன் சோதனைகள் நடந்துவருகின்றன. இதுவரையில் கிடைத்துள்ள வெற்றி
மிகவும் குறைவு என்றுதான் சொல்லப்படும்.”
தர்மமென்ற
சொல்லை எடுத்துக்கொண்டு அதை அக்குவேறு ஆணிவேறாய்ப் பிரித்துப் பொருள் கூறுவோரின்
பரம்பரை நம் நாட்டில் இன்னும் அற்றுப்போகவில்லை. ஆனால் அனுஷ்டானத்தின் மூலம்
ஒவ்வொரு கொள்கையையும் சோதித்துப் பார்ப்பவர்கள் வெகு சிலரே. காந்தியடிகளுக்கு
சாத்திர நூல்களில் பெயரளவுக்குக்கூடப் பயிற்சியில்லாதிருந்தது ஒருவகையில்
நல்லதாயிற்று. ஏனெனில் அவர் கேள்விப்பட்ட எல்லா விஷயங்களிலும் தொடக்கத்தில் சாதாரண
சிரத்தையும் தர்மப்பற்றும் கொண்டு அவற்றை ஏற்றவர்; பிற்காலத்தில்
தம் வாழ்க்கை முழுவதையுமே ஈடுபடுத்தி அவை எல்லாவற்றையும் பரிசோதித்துப்
பார்த்துவிட்டார். அனுபவத்தின் இறுதியில் துறக்கத்தக்கவையென்று தோன்றியவைகளை
தைரியமாக அப்புறப்படுத்துவதற்கு வரிந்து கட்டிக்கொண்டு முனைந்ததோடு, விரும்பத்தக்கவையாயும் நன்மை பயப்பவையாயும் தோன்றியவைகளை சேர்த்து,
தம் அனுபவத்தையும் உறுதியையும் உலகத்தின் முன் இட்டு, மக்களையும் அவ்வாறு செய்வதற்குத் தயாராக்கினார். இவ்வாறு பழையவைகளில்
ஜீவனுள்ளவற்றைக் காத்து அவற்றிற்குப் புத்துருவளித்து தர்மத்தை உயிர்ப்பித்தார்.
அஹிம்சை
வழியில் சென்று, சாதாரண முயற்சிகளினாலேயே பெற்றுள்ள
சுதந்திரத்தை இழந்துவிடாதிருக்கவும், அதன் வேரை
உறுதிப்படுத்தி உலகத்திற்குச் சேவை செய்யக்கூடிய சக்தியை நாட்டிற்கு உண்டாக்கவும்
வேண்டுமானால் காந்தியடிகளின் ஆசிரம வாழ்க்கை பற்றிய சோதனைகளை நாடு முழுதும்
மீண்டும் ஏற்று நடத்தவேண்டும். இத்தகைய ஆசிரமங்கள் கிராமக் கைத்தொழில்மயமாய்
இருக்கவேண்டியதோடு, அவற்றின் சூழ்நிலையில் கல்வியின் மணமும்
அதிகம் கமழவேண்டும்.
இப்புத்தகத்தை
ஏதோ பழைய காலத்தில் நடந்த படிப்பினைகள் மலிந்த சோதனைகளின் வருணனைகளைக் கொண்டதென்று
கருதக்கூடாது. தேசத் தந்தையின் மூலம் வருங்கால 500 ஆண்டின் தேசிய சாதனைக்கென
இயற்றப்பட்ட ஓர் ஊக்கமளிக்கும் சோதனையென்று கொண்டு படித்து, மனஉறுதி
பெறும் பொருட்டு இவ்வரலாற்றைப் பயிலவேண்டும். 1933-இல் நின்றுபோன சோதனை பல
உருவங்களில் நாட்டின் பலவிடங்களிலும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான்
இந்தியா புத்துயிர் பெற்று எழும்.
***
Comments
Post a Comment