காங்கிரஸ்
மகாசபை கூடியிருந்தது.
காந்தி
தமது கூடாரத்தில் இருந்தார். ஏதோ தேடிக்கொண்டிருந்தார். வெகு கவலையோடு தேடினார்.
பரபர என்று தேடினார்.
காகா
காலேல்கர் அங்கே வந்தார். அவர் ஒரு பேராசிரியர்; பெரிய
படிப்பாளி. ஆசார்ய காலேல்கர் என்று அவரைச் சொல்வார்கள்.
"பாபு, என்ன தேடுகிறீர்கள்?" என்று ஆசார்யா கேட்டார்.
"ஒரு சிறு பென்சிலை தேடுகிறேன்" என்றார் காந்தி.
காலேல்கர்
தமது கைப்பையைத் திறந்தார். ஒரு பெரிய பென்ஸிலை எடுத்து."இந்தாருங்கள். இதை
வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறு பென்சில் போனால் போகிறது" என்றார்.
பென்சிலைக் காந்தியிடம் கொடுத்தார்.
"இல்லை, இல்லை. எனக்கு இது வேண்டாம். அந்தச் சின்ன
பென்சில்தான் வேண்டும்" என்று காந்தி சொன்னார்.
"இப்போது அதை உபயோகியுங்கள் பாபு. அப்புறம் அதை நான் தேடி எடுத்துத்
தருகிறேன் " என்று காலேல்கர் சொன்னார்.
"இல்லை, காகா. அந்தப் பென்சில் எவ்வளவு முக்கியமானது,
தெரியுமா? உங்களுக்குத் தெரியாது. அது
காணாமற்போகக் கூடாது" என்றார் காந்தி.
காலேல்கர்
கேட்டார்: "என்ன அப்படி முக்கியம் அந்தப் பென்சிலில்?"
காந்தி
சொன்னார்: "நான் சென்னைக்குப் போயிருந்தேனே; அப்போது
கிடைத்தது அது. ஜி. ஏ. நடேசன் என்ற தலைவரை உங்களுக்குத் தெரியுமே. அவருக்கு ஒரு
மகன் இருக்கிறான்; சிறுவன். எனக்கு ஒரு பென்சில்
வேண்டியிருந்தது. அவன் ஓட்டமாய் ஓடினான்; ஒரு பென்சிலைக்
கொண்டுவந்தான்; எனக்குக் கொடுத்தான். அதுதான் நான் தேடுகிற
பென்ஸில். அடடா! என்ன அன்போடு கொடுத்தான்! அதை நான் தொலைக்கலாமா? கூடாது. கூடாது."
"அப்படியானால் நானும் தேடுகிறேன்" என்றார் ஆசார்யா.
அந்தப்
பொல்லாத பென்சிலை இருவரும் தேடினார்கள். கடைசியில் அது அகப்பட்டது. காந்திக்கு
அப்போதுதான் மனநிம்மதி ஏற்பட்டது. அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால்,
அந்தப் பென்சிலின் நீளம் என்ன தெரியுமா? ஒரே
ஓர் அங்குலந்தான் !
அதன்
நீளமா முக்கியம்? அதைத் தந்தானே சிறுவன், அவனுடைய அன்புதான் முக்கியம். அது அவனுடைய அன்புப்பரிசு. அதை அசட்டை
செய்யலாமா? கூடாது என்று காந்தி எண்ணினார்.
அன்பை
காந்தி போற்றினார். எல்லார் மீதும் அன்பு செலுத்தினார். யார் எப்படி அன்பைக்
காட்டினாலும் கொண்டாடினார்.
அடுத்தக் கதை: சிறுமியின் தங்க நகை
Comments
Post a Comment