“பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண
வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது
என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக்கூடாது. எல்லாச் சமூகத்தினரும்
அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன்."
இதுவே, உலக உத்தமர் காந்தியாரின் இலட்சியம்
என்று அறிவிக்கிறார் பண்டித நேரு.
ஒரு நாடு, அன்னியரிடம் அடிமைப்பட்டு, விடுதலைப் போர்
தொடுத்து, பிறகு தன்னாட்சி பெறுவது, மகத்தானதோர் சம்பவம் - உலக வரலாற்றில், ஒவ்வொரு சமயம், படை பலத்தாலோ இராஜ தந்திர பலத்தாலோ, ஏதேனும் ஒரு நாடு பிறநாடுகளை அடிமை கொள்வதும் அடிமைப்பட்ட நாட்டின்
செல்வத்தைச் சுரண்டுவதும் உலக வரலாற்றிலே எங்கோ ஓர் மூலையிலே காணப்படும் சிறு
விஷயமல்ல. அந்த வரலாற்றிலே மிக முக்கியமான பகுதியே, இந்த சம்பவத்தைக் கொண்டதுதான். அலெக்சாண்டர், ஜுலியஸ் சீசர் போன்ற அதிமகாவீரர்கள் கால முதற்கொண்டு, பெர்லின் சர்வாதிகாரி ஹிட்லர் காலம் வரையிலே, இந்த நாடு பிடிக்கும் போக்கு, இருந்தவண்ணமிருக்கிறது. அவர்கள் காலத்திலே, போர்த்திரனோடு வீர உணர்ச்சியும் தன்னம்பிக்கையும்
ஊட்டப்பட்ட மக்கள் உண்டாயினர். அந்தந்த நாடுகளில், அவர்களைப் பலிகொடுத்து அந்த மாவீரர்கள், மண்டலம் பல வென்று கடைசியில் மாநில முழுவதையுமே தமது ஏகபோக ஆட்சியின்கீழ்
கொண்டுவர வேண்டுமென்ற பேராசை கொண்டு நின்றனர். அதேபோல, போதுமான பலமும், தக்க தலைவரும் இல்லாமல், உள்நாட்டுக் குழப்பமும் பேதநிலையும் கொண்டு
இருந்த நாடுகள், புயலில் சிக்கிய நெடுமரங்களெனச்
சாய்ந்தன. சரிந்த அரசுகளின் மீது, வெற்றி
பெற்றவர்கள், சர்வாதிகாரம் செலுத்தினர். அடிமைப்பட்ட
நாடுகளிலே, மக்களின் அழுகுரல் கிளம்பி, பிறகு, விம்முதாகி அது
குறைந்து பிறகு ஏக்கமாகி,
பிறகு அதை வெளியே காட்டுவதும்
குற்றம் என்று கோல்கொண்டோன் மிரட்ட அதனையும் நீக்கிவிட்டு, உணர்ச்சியற்றுப் போன நிலையும், பிறந்ததுண்டு.
ஆனால் இந்த இருள், நிலைப்பதில்லை. ஒளி கிடைக்க, தாமதம் ஏற்படினும்; இடையே சொல்லொனாச் சங்கடம் விளையினும் விடுதலைச் சுடரொளி, எப்படியும் கிளம்பித் தன் வேலையை வெற்றிகரமாகச்
செய்துவந்திருக்கிறது. அவ்வப்போது, ராணுவ பலத்தால்
அமைக்கப்பட்ட பல்வேறு சாம்ராஜ்யங்கள், சில பல
காலத்துக்குப் பிறகு, சிதறி, பழையபடி தனி அரசு கொண்ட பல நாடுகளாகிவிட்டன. விடுதலைப்போர் முரசொலி, அடியோடு எங்கும் எப்போதும் அழிந்துபடுவதில்லை.
முரசு இருந்து, அதைக் கொட்டும் திறம் உடையோர் முன்வராமல்
இருந்ததுண்டு. முரசறையும் திறமுடையோர் இருந்து, முரசு அமையாது இருந்ததுண்டு. ஆனால் அடிமைப்பட்ட எந்த நாடும், எப்பாடுபட்டேனும், எத்தனை முறை தோற்றேனும் விடுதலையைப் பெறாமல் போனதில்லை. ஏறத்தாழ இயற்கையின்
கட்டளை, இந்த விடுதலை வேட்கை. எனவேதான், எவ்வளவு பெரிய பலமுள்ள நாட்டின் பிடியிலே
சிக்கிவிட்டாலும், ஒருநாள், விடுதலை பெறுவோம் என்ற எண்ணம் கருதவில்லை.
விடுதலைப் போர் நடத்தப்படும் காலம் நாட்டின்
வரலாற்றிலே சுவையுள்ள பகுதி வீரச் செயல்கள், தியாக நிகழ்ச்சிகள் நிரம்பிய பகுதி குன்றுகள் கோட்டைகளாகி, வீதிகள் போர் முகாமாகி, வீடுகளெல்லாம் பாசறையாகி, நாட்டு மக்கள்
வீரர்களாகும் வேளை அது. அப்போதெல்லாம் அவர்களின் ஒரே நோக்கம், ஒரே லட்சியம் தன்னாட்சி பெறுவது என்பதுதான்.
தோட்டத்துக்குள்ளே புகுந்து புலியை விரட்டி அடித்துக் கொல்ல வேண்டுமென, தோட்டக்காரர் தன் துணைவருடன் கூடி ஆயுதமெடுத்து, புலி தப்பி ஓடாதபடி நாற்புறமும் நல்ல முறையில்
காவல் அமைத்து, தாமாக உள்ளே நுழைந்து புலியுடன்
போராடுகிறபோது, எப்படியாவது இந்தப் புலியை அடித்துக்
கொன்றுவிட்டால் போதும் என்ற ஒரே எண்ணம்தான் தோன்றும். புலி கொல்லப்பட்டதும், “அப்பா! கொன்றுவிட்டோம் புலியை. இனிப் பயமில்லை” என்ற ஆறுதல் தோன்றும். ஆயாசமும் ஏற்படக்கூடும்.
அதுபோலவே பல்வேறு நாடுகளிலே, விடுதலைப்போர்
நடந்த காலங்களிலெல்லாம் எப்படியாவது, நம்மை
அடிமைப்படுத்திய அன்னிய ஆட்சியை ஒழித்து நாட்டிலே, தன்னாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம், ஒரே இலட்சியமே தலை சிறந்து விளங்கிற்று. அந்த ஒரே குறிக்கோளுடனேயே, மக்கள் வீரமாகப் பணியாற்றினர். அவர்களை நடத்திச்
சென்ற தலைவர்களும் பல நாடுகளிலே விடுதலை வேட்கையை மட்டுமே, முக்கியமானதாக்கினர். பல நாடுகளிலே விடுதலை கிட்டியதும், மக்கள், தமது நோக்கம்
ஈடேறிவிட்டது. அன்னியன் விரட்டப்பட்டான். தாய்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.
சுதந்திரக் கொடி கெம்பீரமாகப் பறக்கிறது. ஆகவே, நமது வேலை முடிந்தது. இனிச் சொந்த வேலையைப் பார்ப்போம் என்று எண்ணி அங்ஙனமே, பழையபடி “பிரஜைகள்” ஆகிவிடுவதே முறை எனக் கொண்டனர். புலியைக்
கொன்றான், பிறகு தோட்டக்காரன் தன் வேலை முடிந்தது
என்று எண்ணிவிடுவது போலவே,
புலி புகுந்ததால் ஏற்பட்ட
சேதம், புலியைக் கொல்ல போரிட்டதால் உண்டான சேதம்
ஆகியவைகளைப் போக்குவது, வேறு ஏதேனும் துஷ்ட மிருகங்கள் புகாதபடி
பாதுகாவல் அமைப்பது போன்ற காரியங்களைக்கூட தோட்டக்காரன் வெற்றிபெற்ற மகிழ்ச்சியால், கொஞ்ச காலம் பொறுத்துத்தான் செய்ய முற்படுவான்.
அதுபோலவே அடிமைப்பட்டிருந்தபோது ஏற்பட்ட அவதிகளையும் அல்லல்களையும் துடைத்திடும்
அரும்பணியை விடுதலைப் போரில் வெற்றிபெற்ற பல நாடுகள் செய்யாமல்
இருந்துவிட்டதுண்டு. காலங் கடந்தபின் செய்யத் தொடங்கியதுண்டு.
இந்தியாவின் விடுதலை சம்பந்தமாகக் கவனித்தாலோ, இவை போல மட்டுமல்ல, மற்ற நாடுகளிலே ஏற்பட முடியாத நிலைமை இங்கு இருக்கக் காணலாம். அடிமைப்பட்ட
பல நாடுகளிலே, சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே
பிரச்சினை. இங்கோ, சுதந்திரமும் வேண்டும், புது சமுதாய அமைப்பும் வேண்டும் என்று கேட்க
வேண்டிய நிலைமை இருந்தது. இங்கோ, விடுதலை வேண்டும்
என்று போராடத் தொடங்கியபோது, அன்னிய ஆட்சி ஒழிய
வேண்டும் என்பது மட்டும் முழக்கமாக இல்லை. அந்த ஒரு முழக்கம் மட்டும் போதுமானதாகத்
தெரியவில்லை. அன்னிய ஆட்சி மட்டும் தொலைந்தால் போதும் என்ற அளவுடன் நின்றுவிட
மனமில்லை. ஏனெனில் இந்நாட்டு அமைப்பு முறை, தேவையான வேறு பல இலட்சியங்களைக் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது.
எனவேதான் இங்கு சாதாரணமாக,
அடிமைப்படுத்தப்பட்ட மற்ற
நாடுகளிலே, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும் என்ற ஒரே முழக்கம்
மட்டும் கிளம்பியது போலல்லாமல்,
அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும்
மக்களாட்சி மலர வேண்டும்.
இந்து - முஸ்லீம் ஒற்றுமை வேண்டும்.
தொழில்கள் பெருக வேண்டும்.
கல்வி பரவ வேண்டும்.
ஜாதி பேதம் ஒழிய வேண்டும்.
தீண்டாமை போக வேண்டும்.
கிராமம் சீர்பட வேண்டும்.
வறுமை போக வேண்டும்.
சுரண்டல் முறை ஒழிய வேண்டும்.
என்ற வேறு பல இலட்சிய முழக்கங்கள் கிளம்பின. மற்ற
நாடுகளிலே நடைபெற்ற விடுதலைப் போர் நடந்தபோதும், அதற்குப் பிறகும் உள்ள சூழ்நிலைக்கும், இது ஓர் மகத்தான வித்தியாசம். இதிலேதான், எதிர்காலத்தை உருவாக்கும் சூட்சமும் இருக்கிறது.
சூதாடி ராஜ்யத்தைத் தோற்றுவிட்ட நளன் மீண்டும்
ராஜ்யத்தைப் பெற்ற கதைக்காலத்திலிருந்து மகத ராஜ்யத்தை சேதி நாட்டரசன்
பிடித்துக்கொண்டான், என்றுள்ள சரிதகாலம் வரையிலே, ஒரு ராஜ்யம், ஒரு அரசன் கரத்திலிருந்து வேறோர் அரசனிடம் சிக்கி, மீண்டும் சொந்த அரசனிடம் வந்து சேரும் சம்பவம். கொடிகள் மாறுவது, அதிகாரிகள் மாறுவது என்ற இவ்விதமான அளவோடுதான்
இருக்கும். ஆனால், இக்காலத்தில், அதிலும் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போர், கொடி மாற்றமோ அதிகார மாற்றமோ மட்டும் குறிக்கோளாக அமைந்ததல்ல. தன்னாட்சி
மட்டுமல்ல இலட்சியம்; அந்தத் தன்னாட்சி மக்களாட்சியாக, அந்த மக்களாட்சியும் நல்லாட்சியாக, அந்த நல்லாட்சியும் மக்களுக்குப் புதிய வாழ்வை, முழு வாழ்வைத் தரக்கூடிய ஆட்சியாக அமைதல்
வேண்டும் என்று இவ்வளவு உன்னதமான இலட்சியத்தையும் உண்டாக்கியதுதான். எனவேதான்
இங்கு, விடுதலைப் போரின்போது கிளம்பியது ஒரு
முழக்கமல்ல, பல; ஒரே ஒரு குறுகிய இலட்சியமல்ல. பரந்த இலட்சியம். எனவேதான் மறைந்த உத்தமர்
அன்னியராகிய வெள்ளையர் நீங்கிய, இந்தியர்
அரசாள்கிற இந்தியாவைக் காண்பதே எனது இலட்சியம் என்று மட்டும் கூறாமல், பண்டிதர் எடுத்துக் காட்டியது போல.
ஏழை ஈடேற வேண்டும்.
ஏழை உரிமை பெற வேண்டும்.
ஜாதி பேதம் ஒழிய வேண்டும்.
ஒற்றுமை மலர வேண்டும்.
என்று கூறியதுடன், “இத்தகைய இந்தியா உருவாக வேண்டும், அதுவே என்
இலட்சியம், அதற்கே நான் பாடுபடுகிறேன்” என்றும் கூறினார். மற்ற நாடுகளின் நலிவு அன்னிய
ஆட்சியின்போது, அதன் விளைவாகவே ஏற்பட்டதால், அந்த நாடுகளிலே தோன்றிய தலைவர்கள், நாட்டின் நலிவை நீக்க அன்னியரை விரட்டினாலே
போதும் என்று கருதினர் - அவர்கள் அங்ஙனம் கருதினதில் தவறுமில்லை. அதுபோல இங்கு
அன்னியர் விரட்டப்பட்டு,
நாடு தன்னாட்சி பெறுவது
மட்டுமே போதும் என்று கருதினால், நிச்சயமாகத் தவறு.
ஏனெனில் இங்கு, அன்னிய ஆட்சியினால் மட்டுமல்ல அதற்கு
முன்பிருந்தே, நமக்கென்று தோன்றிய சில அரசர்களாலும்
அவர்கள் அனுஷ்டித்த முறைகளாலும், நமது சமூக
அமைப்பினாலும் அதன் பயனாக ஏற்பட்ட பழக்க வழக்கங்களாலும் நமது வாழ்க்கை
இலட்சியத்தினாலும் அதை ஒட்டி கட்டிவிடப்பட்ட வெட்டி வேதாந்த முறைகளினாலும், நமது மத அமைப்பினாலும் அதைப் பயன்படுத்திக்கொண்ட
தன்நலக்காரரின் போக்கினாலும், பலப்பல கேடுகள்
முளைத்துக் காடெனக் கிடந்தன. எனவே அன்னிய ஆட்சி அகன்றால் நாட்டின் நலிவு
நீங்கிவிடும் என்ற அளவோடு அடிகள் நிற்கவில்லை. அன்னிய ஆட்சியை நீக்குவதுடன், மக்களாட்சிக்கு, நல்லாட்சிக்குத் தடையாக உள்ள சகல கேடுகளையும் நீக்கியாக வேண்டும் என்று
தெளிவாகக் கூறினார்.
அவர் காண விரும்பிய காட்சி இந்தியர் ஆளுகின்ற
இந்தியா என்பது மட்டுமல்ல,
தீண்டாமை அடியோடு ஒழிந்து, மதத்தின் மாசும் தூசும் போக்கப்பட்டு, ஜாதி பேதம் களைந்தெறியப்பட்டு, ஏழையின் வாழ்விலே புதியதோர் கிளர்ச்சி ஏற்பட்டு, நாடு இலட்சிய பூமியாக இருக்க வேண்டும்
என்பதாகும்.
நான் காண விரும்பும் இந்தியா இவ்விதமானது என்று
உரைத்துவிட்டார். உயிர் துறக்கும் நேரம் வரையிலும் அதற்காகவே உழைத்தார். அவர்
உயிர் பிரியும்போது அவருடைய மனக்கண் முன், எத்தகைய இந்தியா தெரிந்திருக்கும்? அவர் காண விரும்பிய காட்சியா! அல்லவே அவர் காண விரும்பிய இந்தியாவில்
கோட்சே இருக்க முடியுமா - இருக்க இடமுண்டா? அவர் காண விரும்பிய இந்தியாவில் சேரிகள் உண்டா? அவர் காண விரும்பிய இந்தியாவில், ஜாதி பேதக் கொடுமை
இருக்குமா? அவர் காண விரும்பிய இந்தியாவில் ஏழையின்
வாழ்வு இருண்டு கிடக்குமா?
அவர் அவ்விதமான இந்தியாவை
அல்ல, ஏழைக்கு வாழ்வு தரும் இந்தியாவை -
எல்லோரும் ஓர் குலம் என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்தியாவைக் காண விரும்பினார். அந்த
இலட்சிய பூமியை உருவாக்குவதையே பணியென்று கொள்வதுதான், அவருடைய காலத்திலே பிறந்தவர்களின் கடமை. அப்போதுதான் எதிர்காலத் தலைமுறைகள், 'உத்தமர் மறைந்தார் - ஆனால் அவருடைய
உள்ளத்திலிருந்த இலட்சியத்தை, அவர் காலத்தவர்
உருவாக்கிக் காட்டினார்'
என்று பெருமையுடன் பேசுவர்.
விடுதலை, போர் அன்னிய ஆட்சியாளரிடமிருந்து நாட்டை
மீட்பது என்ற அளவோடு மட்டும் உள்ளது என்ற முறையிலே அவர் கொள்ளவில்லை. அறிவித்தது
அதுவல்ல. ஒரு இலட்சிய பூமியைக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். நாட்டை அன்னிய
ஆட்சியிலிருந்து விடுவிக்கும் விடுதலைப் போர் கட்டம், அன்னியப் படை பலத்துக்கு மட்டுமே நாம் பயப்படக்கூடிய நிலையை
உண்டாக்கக்கூடியது. விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும்
கடலிலிருந்தும் அன்னியர்,
எதிர்த்து அடிப்பர்.
விடுதலைப் போரின் மற்றோர் கட்டத்தின்போது, மறைந்தவரின் மனக்கண் முன் தோன்றிய நாடு உருவாவதற்காக நடத்தப்படும்
விடுதலைப் போரின்போது, அன்னியரிடமிருந்தல்ல, நம்மிடமிருந்தே, விண், மண், கடல் எனும் இடங்களிலிருந்து மட்டுமல்ல, நம் ஒவ்வொருவர் மனதிலேயே இருந்துங்கூட, சந்தேகம், பயம், சஞ்சலம், நம்பிக்கைக் குறைவு, பழக்க வழக்கம் ஏற்படுத்தியதால் உண்டான பற்று, பாசம் ஆகிய பல்வேறு எதிரிகள் கிளம்பக்கூடும்.
இவைகளை எல்லாம் முறியடிக்க வேண்டும் உலகம். இதை நாம் செய்ய முடியுமா; நமக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா என்று பார்க்கக்
காத்துக்கொண்டிருக்கிறது. நாம் அவருடைய காலத்தவர், அவருடைய கருத்துக்களை அறிந்தவர்கள் என்பதற்கு நாம் உதிர்த்த கண்ணீர்
மட்டும் உலகுக்கு அத்தாட்சியாகிவிடாது. ‘அவர் எத்தகைய
இந்தியாவைக் காண விரும்பினாரோ, அதை உருவாக்கும்
அரும்பணியை நாங்கள் ஏற்று நடத்துகிறோம் பாரீர்’ என்று கூறி, வெற்றிகரமாக நடத்துவதுதான் தகுதியான
அத்தாட்சியாகும். அவர் காண விரும்பிய இந்தியாவை மீண்டும் கவனத்திற்குக்
கொண்டுவருவோம்.
ஏழை ஈடேறி, ஏழை உரிமை பெற்று விளங்கும் நாடு.
மக்களில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற நிலை இல்லாத நாடு.
எல்லோரும் தோழமையுடன் வாழும் நாடு.
இந்த நாடு - காந்தி நாடு - காண்பதுதான் நமது
தலைமுறைக்கு உள்ள வேலை. இதைச் சாதிக்க, அனைவரும் ஒன்றுபட, நமது தலைவர்களெல்லாம் கூடிப் பேசி, அனைவரின் ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி, இந்த அரும்பணியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
நாடெங்கும், நகரெங்கும் இலட்சக்கணக்கிலே கூடினர்
மக்கள். அவர்கள் மறைந்த உத்தமருக்குத் தமது கண்ணீரை அர்ப்பணித்தனர். அவர் காட்டிய
வழி சென்று தீட்டிய சித்திரத்தைக் காண, இனிப் புதியதோர் ஆர்வத்துடன், அனைவரும் ஒன்றுபட்டுப் பணிபுரிய மக்களுக்கு
நேர்வழி காட்டுவதும், ஒற்றுமைக்கான திட்டம் தீட்டுவதும், தலைவர்கள் கடமை.
அவர் வாழ்க்கையில் ஓர் சம்பவம்
1893-வது ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் ஒரு
வழக்குக்காகச் சென்றிருந்தார். தலைப்பாகையுடன் கோர்ட்டுக்குச் சென்றிருந்ததைக்
கண்ட நீதிபதி தலைப்பாகையை அகற்றும்படி உரைத்தார். காந்தியடிகள் அங்ஙனம் செய்ய
மறுத்துக் கோர்ட்டை விட்டு வெளியேறினார். செய்கையைக் கண்டித்துப் பத்திரிகைகளுக்கு
எழுதினார். இன்னொரு சமயம்,
பிரிடோரியா என்னும்
இடத்துக்கு முதல் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்தார். நிறத்திமிர் கொண்ட ஒரு
வெள்ளையன், ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் உதவியைக்
கொண்டு முதல் வகுப்பு வண்டியினின்றும் இறக்கிவிட்டான். இத்தகைய கொடுமைகளை, காந்தியடிகளுக்கு வெள்ளையரின் நிறத்திமிரை
ஒழித்துக்கட்ட உறுதி கொள்ளும்படிச் செய்தது. கடைசியில் வெள்ளையரின் ஆதிக்கமே
இந்நாட்டில் ஒழிந்ததற்கு உத்தமரின் ஓயா உழைப்பே காரணமாயிற்று.
('உலகப் பெரியார் காந்தி' நூலிலிருந்து)
Comments
Post a Comment