Skip to main content

பல ரூபங்களில் காந்தி: பிச்சைக்காரர் | அனு பந்தோபாத்யாயா

மக்கள் நலனில் காந்திஜியின் ஈடுபாடு அதிகரித்துக் கொண்டு சென்றதன் காரணமாக அவரால் தனது குடும்பத்தினருக்கோ தனது வக்கீல் தொழிலுக்கோ ஒதுக்கப்பட்ட நேரம் குறைந்துகொண்டு வந்தது. அப்போது அவருக்கு இவ்வாறு ஒரு எண்ணம் தோன்றியது. "நான் மக்களின் தொண்டனாக மாற வேண்டும் என்றால் வறுமையை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் உள்ள சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிடவேண்டும்.'' ஒரு காலகட்டத்தில் அவருக்குச் சொத்து சேர்ப்பது பெரும் குற்றமாகத் தோன்றியது. அதைத் தியாகம் செய்தது அவருக்கு மன நிம்மதியை அளித்தது. ஒவ்வொன்றாக அவருடைய சொத்து சுகங்கள் அவரிடமிருந்து விலகிச் சென்றன. தனது தந்தை வழியான பரம்பரைச் சொத்தில் தனக்குப் பங்கு வேண்டாம் என்று முதலில் அறிவித்தார். தொடர்ந்து காப்பீட்டுத் தொகைக்கு (இன்ஷ்யூரன்ஸ்) சந்தா கட்டுவதை நிறுத்திவிட்டார். மாதம் ரூ. 4,000க்கு மேல் வருமானம் தந்துகொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலை அவர் கைவிட்டார். அவருக்கு அன்பளிப்பாகக் கிடைத்த தங்க மற்றும் வைர நகைகளையும், தென் ஆப்பிரிக்க நாட்டில் அவர் பெயரில் பதிவாகி இருந்த ரூ. 65,000 மதிப்புள்ள ஃபீனிக்ஸ் பண்ணையையும் பற்றி ஒரு அறக்கட்டளைக்கான சாசனப் பத்திரம் தயார்செய்துவிட்டார். அந்தப் பணம் அனைத்துமே பொது நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்தது. தனக்கென நிச்சயமானநிரந்தரமான வருவாயுடன் கூடிய பாதுகாப்பான வாழ்க்கையை அவர் துறந்துவிட்டார். தனது மனைவி மகன்கள் மற்றும் உறவினர்களையும் அதே கடினமான வாழ்க்கைக்குப்படுத்தினார்.
நண்பர்கள் மற்றும் தொண்டர்களின் நன்கொடைகளின் ஆதாரத்தில்தான் அவரது வாழ்வின் கடைசி நாற்பது ஆண்டுகள் கழிந்தன. டால்ஸ்டாய் பண்ணை வாசத்தின்போது காந்திஜி மற்றும் அவரது குடும்பத்தினருடைய செலவுகளை அவரது ,நண்பர் கல்லன்பாக் ஏற்றுக்கொண்டார். காந்திஜி இந்தியாவில் அமைத்திருந்த எல்லா ஆசிரமங்களுமே நண்பர்கள் மற்றும் கொடையாளர்களின் ஆதரவுடன் இயங்கின.
பண்டித மாளவியா பிச்சைக்காரர்களின் இளவரசர்என்று அழைக்கப்பட்டார். காந்திஜியோ பிச்சைக்காரர்களின் மன்னர்என்று அழைக்கப்பட்டார். பொது நலனுக்காகப் பிச்சை எடுப்பதில் காந்திஜி ஒரு உலகச் சாதனையே புரிந்துள்ளார். தன்னிடம் இப்படிப்பட்ட ஒரு திறமை இருப்பதை காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் நேட்டால் இந்தியன் காங்கிரஸிற்காக நன்கொடை வசூலிக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தபோது உணர்ந்தார். ஒருநாள் மாலை நேரத்தில் சற்று தாமதமாக ஒரு பணக்காரரிடம் பணம் வசூலிக்க அவர் சென்றிருந்தார். காந்திஜி அப்பணக்காரரிடம் எண்பது ரூபாய் நன்கொடையை எதிர்பார்த்தார். அப்பணக்காரரோ காந்திஜி எவ்வளவோ மன்றாடியும்கூட ரூபாய் நாற்பது மட்டுமே தர ஒப்புக்கொண்டார். காந்திஜிக்குப் பசியாகவும் சோர்வாகவும் இருந்தது. இருப்பினும் அவர் தளரவில்லை. இரவு முழுவதும் அப்பணக்காரர் வீட்டிலேயே அவர் உட்கார்ந்திருந்தார். விடியும் தருவாயில் எண்பது ரூபாய் அவருக்குக் கிடைத்துவிட்டது.
தென் ஆப்பிரிக்காவில் குடியேறி இருந்த இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய காலகட்டத்தில் அப்போராட்டத்திற்காக நிதி திரட்டும் பொறுப்பு காந்திஜியிடம் இருந்தது. கூடவே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 5,000 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலத்திற்கும் நிதி தேவைப்பட்டது. நாள் ஒன்றுக்கு ரூ. 3,200 செலவாகிக்கொண்டிருந்தது. காந்திஜி தந்தி மூலம் அனுப்பி இருந்த வேண்டுகோளுக்கிணங்கி இந்திய நாட்டினர் தாராளமாக நிதி உதவி தர முன்வந்தனர். அரச குமாரர்களும் பணக்கார வியாபாரிகளும் பணம் அனுப்பினர். அப்போது நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் காந்திஜியின் தென் ஆப்பிரிக்கப் போராட்டத்திற்கு நிதி உதவி வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டபோது கரன்சி நோட்டுக்களும் தங்கமும் வெள்ளியும் மழைபோல் பொழிந்தன.
காந்திஜி வரவு செலவு பற்றி எல்லா விவரங்களும் அடங்கிய கணக்குகளை அனுப்பிவைத்தார். கொடையாளர்களின் உணர்வுகளை மிகவும் மதித்த காந்திஜி போராட்டம் தவிர வேறு எப்பணிக்கும் ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை. பொது நிதியை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்பதே அவருடைய கொள்கை. இதுபற்றி எந்த ஒரு நபருக்கும் ஐயம் ஏற்பட்டால் அவர்கள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளைப் பார்வை இட வழி செய்தார்.
திலகர் சுயராஜ்ய நிதிக்காக ரூ. ஒரு கோடியை மூன்று மாதங்களுக்குள் திரட்ட வேண்டும் என்று அவர் இலக்கு வைத்திருந்தார். ஒரு நண்பர், சில சினிமா நட்சத்திரங்களை அழைத்து ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் பணம் விரைவில் வசூலாகிவிடும் என்று கருத்துத் தெரிவித்தார். காந்திஜி அக்கருத்தினை ஏற்கவில்லை. இருப்பினும் அவர் வரையறுத்திருந்த காலக்கெடுவுக்குள் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய் வசூல் ஆகிவிட்டது. காந்திஜி அடிக்கடி கூறுவதுண்டு: ''பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் நிதி உதவி செய்வதை நான் வரவேற்கிறேன். இருப்பினும் ஏழை மக்கள் மனமுவந்து அளிக்கும் செப்புக் காசுகளும் வெள்ளி ரூபாய்களும் முக்கியமானவை. அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு காசும் நமது சுயராஜ்ய கொள்கைக்கு அவர்கள் தரும் ஆதரவின் அடையாளம்.'' சில வயது முதிர்ந்த வறியோர்கள் நடுங்கும் கரங்களுடன் செப்புக் காசுகள் அடங்கிய முடிச்சை தங்களது இடுப்பிலிருந்து அவிழ்த்து ஒரு சில காசுகளை நன்கொடையாக அளித்த செயல் அவரை மனம் நெகிழ வைத்தது. "அவர்கள் கடின உழைப்பின் மூலம் பெற்ற பணத்தை மனவிருப்பத்துடன் தருகிறார்கள்'' என்று கூறி அவர்களை அவர் பாராட்டினார். திலகர் சுயராஜ்ய நிதி தவிர காந்திஜி தியாகி தில்லையாடி வள்ளியம்மை, கோகலே, லாலா லஜபதிராய், தேசபந்து தாஸ், ஆண்ட்ரூஸ் மற்றும் ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் ஆகியவற்றிற்கும் நிதி திரட்டினார். ஜாலியன் வாலா தோட்டத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான நிதியை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வசூலிக்க இயலவில்லை என்றால் தனது ஆசிரமத்தை விற்றுப் பணத்திற்கு ஏற்பாடு செய்யப்போவதாக அறிவித்தார்! ஆசிரமம் விலைபோகவில்லை. ஏனெனில் நிதி வசூல் செய்யப்பட்டுவிட்டது.
தேசபந்து (சித்தரஞ்சன் தாஸ்) நினைவு நிதிக்கான இலக்கு பத்து லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இரண்டே மாதங்களில் இத்தொகை வசூலாகிவிட்டது.
ரவீந்திரநாத் தாகூர், சாந்தி நிகேதன் ஆசிரமத்திற்கு நிதி திரட்டுவதற்காக நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடத்திவருவதைக் கேள்வியுற்ற காந்திஜி, தாகூரிடம் உடனடியாக சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரே ரூபாய் ஐம்பதாயிரத்தை நன்கொடையின் முதல் தவணையாக அளித்தார்.
நாட்டின் எப்பகுதியிலாவது வெள்ளமோ, பஞ்சமோ, பூகம்பமோ ஏற்பட்டால் காந்திஜி பிக்ஷாபாத்திரத்தைக் கையில் ஏந்திவிடுவார்! கதர் இயக்கத்திற்காகவும் தீண்டாமை ஒழிப்பிற்காகவும் அவர் நாடு தழுவிய சூறாவளிப் பயணம் மேற்கொண்டார். ஹரிஜன நல நிதிக்காக அவர் இரண்டு கோடி ரூபாய் வசூல் செய்தார். ஏழை மக்களின் உணவுக்காக என்று யாராவது நிதி உதவி செய்தால் அதை காந்திஜி ஏற்பதில்லை. மனிதனின் உண்மையான பசி உணவைப் பற்றியதல்ல. அது அடிப்படை வசதிகள் மற்றும் சுயகௌரவம் பற்றியது. அவர் மேலும் சொல்வார்: ''ஆடை இல்லாதவனுக்குப் பழைய துணிகளைக் கொடுத்து நான் அவனை அவமானப்படுத்த விழையமாட்டேன். அவனுக்குத் தேவையான நல்லதோர் வாழ்க்கையை அமைத்துத்தரவே நான் முயலுவேன்.''
ஒரு சிறைவாசத்தின்போது ஒரு மருத்துவர் அவரிடம் "பாபுஜி, திடகாத்திரமான உடலுடன் கூடியவர்கள் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட வேண்டாமா? அப்படி ஒரு சட்டத்தை நீங்கள் இயற்றுவீர்களா?'' என்று கேட்டார். அதற்கு காந்திஜி, ''நிச்சயமாக அப்படியே செய்வோம். ஆனால், என்னைப் போன்றவர்களுக்கு மட்டும் பிச்சை எடுக்க அனுமதி வேண்டும்" என்றார். ''பிச்சை எடுப்பவர்கள் விரும்பியதை எல்லாம் பெற முடியாது'' (பெக்கர்ஸ் ஆர் நாட் சூஸர்ஸ்) என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. காந்திஜி இப்பழமொழிக்கு விதி விலக்காக விளங்கினார். அவரது வார்த்தைகள் (Slogan) நன்கொடையாளர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம், நன்கொடையை ஏற்றுக்கொள்வதற்கு அவர் விதித்த நிபந்தனைகள் எல்லாமே அசாதாரணமானவை. ரயில் வண்டியில் நின்றபடியோ பிளாட்பாரத்தில் நின்றபடியோ ஓடிக்கொண்டிருக்கும் காரிலிருந்து பிக்ஷாபாத்திரத்தை வெளியே நீட்டியபடியோ அவர் பிச்சை கேட்பார். பெரிய கூட்டமே நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பிச்சை போடுவதற்கு அவரை நோக்கி ஓடும். நூற்றுக்கணக்கான மக்கள், வறியோர், முதியோர், ஆண்கள், பெண்கள் எல்லோரும் பல கிலோ மீட்டர்கள் ஓடியும் நடந்தும் வந்து காந்திஜிக்குப் பிச்சை போட்டார்கள். சிலர் தங்களது தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காய், பூசணிக்காய் போன்ற காய்களைக் கொண்டுவருவார்கள். ஒரு மாதிரிப் பள்ளியின் மாணவர்கள் ஏராளமான நூல் சிட்டங்களையும் அவர்களே நெய்த கொஞ்சம் கதர்த்துணியையும் கூடவே தாங்கள் சேமித்து வைத்திருந்த சிறு தொகையையும் அவருக்கு அளித்தனர். அத்தொகையை சில நாட்கள் நெய், பால், ஒரு வேளை உணவு ஆகியவற்றைத் தவிர்த்து அவர்கள் சேர்த்திருந்தனர். ஒரு தடவை ஒரு விதவை யாரிடமோ இரண்டு அணாவை (12 பைசா) கடனாகப் பெற்று காந்திஜியிடம் அளித்தார். காந்திஜி "ஏன் இரண்டணா மட்டும் தருகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு ''நான் உங்களது நற்பணிகளுக்காக இப்பணத்தைத் தரவில்லை, எல்லாவற்றையும் துறந்த மகாத்மாவிற்குப் பிச்சை போட்டேன் என்ற பெருமைக்காகத் தருகிறேன்'' என்று அப்பெண்மணி கூறினார்.
சில லட்ச ரூபாய்களை வசூல் செய்வது காந்திஜிக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஒலிபெருக்கி மூலமோ சிலருக்குத் தந்திகளை அனுப்பியோ பத்திரிகைகள் வாயிலாக வேண்டுகோள் அனுப்பியோ அவர் லட்சங்களை வசூல் செய்துவிடுவார். ஒரு தடவை ஒரு கூட்டத்தில் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு பத்திரிகைக்காரரின் தொப்பியைக் கழற்றி அதையே திருவோடாக வைத்துப் பிச்சை கேட்கத் தொடங்கிவிட்டார். குழப்பமடைந்த அப்பத்திரிகையாளர் காந்திஜியின் இந்தப் புதிய பரிசோதனைக்கு முதல் பலிகடா! கூடவே தனது பையிலிருந்தும் கொஞ்சம் பணத்தை எடுத்து காந்திஜியின் கைக்கு மாறிவிட்டிருந்த தனது தொப்பியில் போட்டார்!
பர்மா நாட்டிற்குத் திருவோட்டுடன் சென்றபோது இப்படி ஒரு வேண்டுகோளை வெளியிட்டார்: ''நான் பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் பர்மாவுக்கு வந்துள்ளேன். பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய பஞ்சத்தை நீங்கள் எப்படி எதிர்நோக்குவீர்களோ அப்படியே என்னையும் எதிர்நோக்குங்கள். தரித்திர நாராயணர்களின் பிரதிநிதியாக வந்துள்ள எனது பசியைத் தீர்த்து வையுங்கள். இன்னொரு முறை உங்களிடம் நான் வரமாட்டேன்." பெரும் பணக்கார வியாபாரிகள் அற்பத்தனமாக சிறிய தொகைகளை அளித்தது அவருக்குப் பிடிக்கவில்லை. "இந்த நன்கொடைப் பட்டியலைக் கிழித்து எறியுங்கள்; புதிதாகப் பட்டியல் போடுங்கள். நான் குஜராத்தியர்களின் பைகளில் ஆழமாகவே கையை நுழைப்பேன்; ஏனெனில் நான் ஒரு குஜராத்திச் செட்டியார்!" அவருடைய இந்தக் கோபத்தின் பயனாக நன்கொடைத் தொகை இரு மடங்காகியது.
இலங்கைக்கு அவர் சென்றபோது இவ்வாறு கூறினார். "மகேந்திரன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது இந்திய நாட்டின் குழந்தைகள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கவில்லை. எங்களது நிலைமை நன்றாக இருந்தது. அப்பெருமையில் நீங்களும் பங்கு கொண்டீர்கள். உங்களுக்கு எங்களுடன் உள்ள உறவை நீங்கள் இன்னமும் மறக்கவில்லை என்றால், அந்த உறவு பற்றி நீங்கள் பெருமை கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் பணத்தை மட்டும் அல்ல, நகைகளையும் தரவேண்டும்.'' பணமும் நகைகளும் குவிந்தன.
கட்சு பகுதிக்குச் சென்று அவர் வசூல் நடத்தியபோது அம்மக்கள் அங்கே வசூல் செய்த பணத்தை அப்பகுதிக்கே செலவிட வேண்டும் என்று கோரினார்கள். கோபமுற்ற காந்திஜி "உங்களுக்கு நான் பணத்தை உரிய முறையில்தான் செலவு செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே நன்கொடை தாருங்கள்'' என்று கேட்டார்.
சற்று மனம் தளர்ந்துபோன ஒரு சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கூறினார்: "என்னிடமும் அனுமாருக்கு இருந்த சக்தி இருந்திருக்குமானால் என் இதயத்தைப் பிளந்து உங்களுக்குக் காட்டி இருப்பேன். அங்கே ராமன் மீது நான் வைத்துள்ள அன்பைத் தவிர வேறு எதையுமே நீங்கள் காணமாட்டீர்கள். பட்டினியில் தவிக்கும் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களில்தான் நான் ராமனைக் காண்கிறேன்.'' பல சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். அங்கெல்லாம் அவர் கேட்பார்: ''கால் அணாவோ, அரை அணாவோ, ஒரு பைசாவாக இருந்தாலும் பரவாயில்லை, கொடுங்கள்" என்று. ''எங்கே என் பணமுடிப்பு?" பணம் கிடைக்காவிட்டால் நான் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன். தனியாகவே இங்கேயேதான் அமர்ந்திருப்பேன்," என்று அடம் பிடிப்பார். பணம் வசூல் செய்யப்பட்டு அவரிடம் அளிக்கப்படும். சில சமயங்களில் பெரிய கூட்டமே அவருக்காக நள்ளிரவு வரை காத்திருந்து வீடுகளையும், நகைகளையும், காசோலைகளையும் கரன்சி நோட்டுக்களையும் தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளையும் கதர் சிட்டங்களையும் கதர்த்துணியையும் அவருக்கு அளிக்கும். அவரது 78வது பிறந்த நாளன்று அவருக்கு 78 லட்சம் கதர்ச் சிட்டங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
வசூலாகிய காசுகளுக்கிடையே ஒரு தடவை சோழி ஒன்று காணப்பட்டது. காந்திஜி அதை ஒரு ஏழையின் தியாக உணர்வின் சின்னமாகக் கருதினார். தங்கத்தைக் காட்டிலும் விலை உயர்ந்தது என்றும் கூறினார். ஒரு கொலைக் குற்றக் கைதி தூக்கு மேடையில் ஏறுவதற்கு முன் தனது கணக்கில் வரவாகி இருந்த நூறு ரூபாயை காந்திஜிக்கு நன்கொடையாக வழங்கும்படி சிறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எப்போதுமே ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும் சில்லறைகளை எண்ணுவதற்கு மூன்று அல்லது நான்கு பேர்கள் தேவைப்பட்டனர். சில சமயங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செப்புக் காசுகளை ஏழை மக்கள் வாரி வழங்குவதுண்டு. அவற்றில் பாசம் படிந்திருக்குமாகையால் அவற்றை எண்ணும் தொண்டர்களின் கைகளில் பச்சைக் கறை படிந்துவிடும். அதைக் காணும் காந்திஜி கூறுவார்: "இது விலை மதிப்பற்ற நன்கொடை. அந்த ஏழை மக்களின் அர்ப்பணம். உலகில் இன்னமும் நல்லவையே நடக்கும் என்ற நம்பிக்கை இப்படிப்பட்ட செயல்களால்தான் உதயமாகிறது''.
பிச்சையை ஒரு தொழிலாக பலர் மேற்கொண்டுள்ளதை காந்திஜி எதிர்த்து வந்தார்! பிடி சோற்றுக்காக தன்மானத்தை இழந்து கையேந்தும் பிச்சைக்காரர்களைப் பார்க்கும்போது அவர் கோபம் கொள்வார். அவர்களுக்குப் பிச்சை போடக்கூடாது. அவர்களுக்கு ஏதாவது வேலை தரவேண்டும் என்பார். 56 லட்சத்திற்கு மேல் இந்தியாவில் பிச்சைக்காரர்கள் உள்ளனர் என்று கேள்வியுற்ற அவர் அதுபற்றி கோபமுற்றார். ஆரோக்கியமான உடலுடன் கூடிய எந்த ஒரு நபரும் பிச்சை எடுக்கக் கூடாது; ஏதாவது பணியில் ஈடுபடவேண்டும் என்று கூறுவார். பிச்சை கொடுப்பதும் தவறு; ஏற்பதும் தவறு என்பது அவரது வாதம். ஆரோக்கியமான உடலுடன் கூடியவர்கள் பிச்சை எடுப்பது திருடுவதற்கு ஒப்பானது என்பார்.
பீகாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் மதக் கலவரங்களினால் அகதியானவர்களையும் தங்களது உணவு, உடை மற்றும் இருப்பிடத்திற்காக ஏதாவது பணி செய்ய வேண்டும் என்று அவர் வற்புறுத்துவார். அப்படி வேலை ஏதும் செய்யாவிட்டால் பிறரைச் சார்ந்து வாழும் மனப்பான்மை அவர்களிடையே வளர்ந்துவிடும் என்று எச்சரிப்பார். பிறரைச் சார்ந்திருப்பது தவறானது என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் கூறுவார். அவருடைய அறிவுரை: நேர்மையுடன் நன்றாகப் பணி செய்யுங்கள். பிச்சைக்காரர்களை நான் வெறுக்கிறேன். வேலை கேளுங்கள் அதை நன்றாகச் செய்யுங்கள். வேலை செய்யுங்கள் பிச்சை எடுக்காதீர்கள்.
(மொழிபெயர்ப்பாளரின் பின்குறிப்பு - காந்திஜி பிச்சைக்காரர்களின் மன்னராகத் திகழ்ந்தார். ஆனால் அவர் எடுத்த பிச்சை பொது நலனிற்காக. அந்தப் பிச்சைக்காரர் சுய நலனுக்காக யாரும் பிச்சை எடுப்பதை வன்மையாகக் கண்டித்தது சற்று வேடிக்கைதான்).
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...