Skip to main content

பல ரூபங்களில் காந்தி: விவசாயி | அனு பந்தோபாத்யாயா


விவசாயியை உலகத்தின் தந்தையாகச் சித்தரிக்கும் கவிதை ஒன்றை காந்திஜி படித்தார். அக்கவிதை கூறியது என்னவென்றால், ''கடவுள் எல்லோருக்கும் உணவளிக்கிறார்; அதில் விவசாயிகள் கடவுளின் கரங்களாகச் செயல்படுகிறார்கள்.'' விவசாயிகள் வறுமை மற்றும் அறியாமை ஆகிய தளைகளிலிருந்து விடுதலை பெறும்போதுதான் இந்தியா சுதந்திர நாடாகத் திகழும் என்று காந்திஜி கூறுவார். "நாட்டின் ஜனத் தொகையில் 75 சதவிகிதம் விவசாயிகள்தான். அவர்கள் பூமியின் உப்பைப் போன்றவர்கள். அவர்கள் பாடுபடும் நிலம் அவர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்; நிலச்சுவான்தார்களுக்கு அல்ல; எல்லா நிலமும் ஆண்டவனுடையது. அதை உழுபவன் அனுபவிக்கலாம். வேறு யாருக்கும் அதன் மீது உரிமை கிடையாது. விவசாயிகளது உழைப்பின் பயனை நாம் எடுத்துக்கொள்வது சுயராஜ்யம் ஆகாது. நமக்கு விடிவுகாலம் விவசாயிகள் வாயிலாகத்தான் பிறக்கும்; வக்கீல்களாலோ, டாக்டர்களாலோ, பணக்கார நிலச்சுவான்தார்களாலோ நமக்கு விடிவுகாலம் பிறக்கப்போவதில்லை.''
அரசின் வருவாயில் 25 சதவிகிதம் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. நிலவரியின் சுமை பளுவானதுதான். இந்தியாவின் பெரு நகரங்களில் அரண்மனை போன்ற கட்டிடங்கள் கட்டப்படுவதைக் கண்ணால் பார்த்தாலோ, ஏன் அப்படி ஒரு கட்டிடம் கட்டப்படுவதாகக் கேள்வியுற்றாலோகூட காந்திஜி வருத்தத்துடன், ''இது விவசாயிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு கட்டப்படுகிறது" என்று கூறுவார். நகரங்களின் வளமை, கிராமங்களில் விவசாயிகள் மீது சுமத்தப்படும் வரிச்சுமையையும் சட்டத்திற்கு புறம்பான சுரண்டல்களையும் திருப்பித்தர இயலாத கடன் சுமைகளையும் படிப்பறிவின்மையையும் மூட நம்பிக்கைகளையும் வியாதிகளையும் அவருக்கு நினைவூட்டியது.
காந்திஜி விவசாயியாகப் பிறக்கவில்லை, ஆனால், விவசாயியாகத் திகழ பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டார். பள்ளிப் பருவத்திலிருந்தே பழமரங்களை வளர்ப்பதில் அவருக்கு நாட்டம் இருந்தது. தினந்தோறும் மாலை நேரங்களில் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்ட செடிகளுக்கு நீர் ஊற்ற வாளி வாளியாகத் தண்ணீரை எடுத்துச் செல்வார். தனது 36வது வயதில் ஒரு பண்ணையைத் தொடங்கி விவசாயியின் வாழ்க்கை முறையை அவர் மேற்கொண்டார். பழமரங்களுடன் கூடிய ஒரு ஏக்கர் நிலம் அவரைக் கவர்ந்தது. அதை விலைக்கு வாங்கி அங்கேயே குடும்பத்துடனும் மேலும் சில நண்பர்களுடனும் வசிக்கத் தொடங்கினார். தனது வக்கீல் தொழிலைப் படிப்படியாகக் கைவிட்டு விவசாயத் தொழிலை அவர் மேற்கொண்டார். வசிப்பதற்கான குடிசைகள் ஆசிரமவாசிகளாலேயே கட்டப்பட்டன. காந்திஜி நிலத்தை உழுது, தண்ணீர் பாய்ச்சி, காய்கறிச் செடிகளையும் பழமரங்களையும் வளர்த்தார். சமயத்தில் மரங்களை வெட்டுவதும் அறுப்பதும் உண்டு. அந்த நிலம் விரைவில் ஒரு தோப்பாக மாறிவிட்டது.
தென் ஆப்பிரிக்காவில் பத்தாண்டு பண்ணை வாழ்க்கை அவரை ஒரு விஷயம் தெரிந்த மற்றும் அனுபவமிக்க விவசாயியாக மாற்றிவிட்டது. அவர் விஞ்ஞான முறையிலான மற்றும் அஹிம்சை அடிப்படையிலான தேனீ வளர்ப்பையும் அறிமுகப்படுத்தினார். தேனீக்களைக் கொல்லாமலும் தேன்கூட்டைச் சிதைக்காமலும் தேன் எடுக்க அவருக்குத் தெரிந்திருந்தது. மேலும், தேனீ வளர்ப்பின் பயனாக பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சலும் கூடும் என்பதையும் அவர் விளக்கினார். தேனீக்கள் தங்களது கால் இடுக்கில் மகரந்ததூள்களை ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்குச் சுமந்து சென்று அயல் மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்தி மகசூலைப் பெருக்குகின்றன.
விவசாயத்தைப் பொருத்தவரை நிலம் வளமற்றது, சரியான உபகரணங்கள் இல்லை தண்ணீர் போதாது போன்ற வாதங்களை காந்திஜி புறக்கணித்துவிடுவார். ஒரு விவசாயியின் சொத்து தனது உழைப்பைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதில்தான் உள்ளது என்பார் அவர். விவசாயி திறமையுடனும் ஊக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். ஆதாரக் கல்வித் திட்டத்தில் பணியாற்றிய அலுவலர் ஒருவர் காந்திஜியிடம் தங்களுக்குத் தரப்பட்டுள்ள நிலம் விவசாயத்திற்கு ஏற்றது அல்ல என்று கூறியபோது காந்திஜி சொல்வார். "தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் விவசாயம் தொடங்கியபோது எங்களுக்குக் கிடைத்த நிலம் எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியாது. உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் நிலத்தைக் கலப்பையைக் கொண்டு உழுதிருக்கமாட்டேன். மாணவர்கள் கையில் களைக்கொத்துக்களைக் கொடுத்து நிலத்தைத் தோண்டுவதற்குப் பயிற்சி அளித்திருப்பேன். அது ஒரு கலை. எருதுகளைப் (ஏர் உழவை) பிற்பாடு கொண்டுவரலாம். நிலத்திற்கு மேலெழுந்தவாரியாகச் சிறிது வண்டல் மண்ணையோ, தொழு உரத்தையோ போட்டிருப்பேன்; அதைக்கொண்டு காய்கறிகளையும் கீரை வகைகளையும் வளர்க்கலாம். மனிதக் கழிவுகளை ஆழம் குறைவான வாய்க்கால்களில் மண்ணுடன் கலந்து மட்கவைத்து உரம் ஆக்குவதற்கு 15 நாட்களே பிடிக்கும். சிறுவர்கள் மனதில் உழவுத்தொழில் கௌரவமானது என்ற எண்ணம் பதிய வேண்டும். அது இழிவான தொழில் அல்ல, மேலான தொழிலாகும்.'' ஆதாரக் கல்வி திட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான பங்கு உண்டு என்று காந்திஜி நம்பினார்.
இந்தியாவின் பிரிவினைக்குச் சற்று முன்பாக நவகாளியில் இருந்த ஹிந்துக்கள் காந்திஜியைக் கேட்டனர்: ''எங்களுக்கு உணவு கிடைக்காத நிலையில் நாங்கள் எப்படி இங்கே தொடர்ந்து வாழ முடியும்? இங்குள்ள முஸ்லீம் விவசாயிகள் எங்களுடன் ஒத்துழைப்பதில்லை. எங்களுக்கு உணவு தானியங்களையோ, எருதுகளையோ, கலப்பையையோ தருவதில்லை.'' காந்திஜி சற்றுச் சூடாகவே பதில் கொடுத்தார்: ''சில பிக்காசிகளைக் கொண்டுவாருங்கள், நிலத்தைத் தோண்டுங்கள். அப்படி விவசாயம் செய்வதால் பயிர் விளைச்சல் குறைந்துவிடாது.''
1943ம் ஆண்டு காந்திஜி சிறையில் இருந்தபோது வங்காளப் பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். அந்தக் கொடூர சம்பவத்தின் நினைவு மக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் மனதில் பசுமையாகவே இருந்தது. 1947ம் ஆண்டில் மற்றொரு பஞ்சம் வந்துவிடுமோ என்ற அச்சம் அரசின் மனதில் தோன்றியபோது இந்தியாவின் கவர்னர் ஜெனரல் தனது உதவியாளரை காந்திஜியிடம் ஆலோசனை கேட்பதற்காக அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் தனி விமானத்தில் டில்லியிலிருந்து வார்தாவுக்கு வந்து காந்திஜியைச் சந்தித்தார். காந்திஜி சற்றும் பதட்டம் அடையாமல் இருந்தார். ஜனங்கள் அச்சமின்றி வரப்போகும் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டும். நம்மிடம் வளமான நிலத்திற்கோ, தண்ணீருக்கோ, உழைப்பாளிகளுக்கோ பஞ்சம் இல்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் உணவுப் பற்றாக்குறை எப்படி ஏற்பட்டுவிட முடியும்? ஜனங்களிடம் தன்னம்பிக்கையும் தற்சார்பு நிலையையும் வளர்க்க வேண்டும். ஒரு படி தானியங்களை உண்பவர்கள் இரண்டு படி தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும். வேறு சில சாப்பிடுவதற்குரிய பொருளையும் ஒவ்வொருவரும் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு மிகவும் சுலபமான வழி ஒன்றுள்ளது. சுத்தமான மண்ணைச் சேகரித்து ஒரு மண் தொட்டியிலோ, தகரத்திலோ போட்டு, கொஞ்சம் தொழு உரம் அல்லது உலர வைத்த சாணத்தைப் போட்டு ஏதோ ஒரு தானியம் அல்லது காய்கறியின் விதையைத் தூவி தினந்தோறும் தண்ணீர் ஊற்றிவர வேண்டும். எல்லா விதமான விழாக் கொண்டாட்டங்களையும் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். விதைகள் ஏற்றுமதி செய்யப்படுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மாவுச் சத்தினை நாம் காரட், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளிலிருந்தும் வாழைப்பழத்திலிருந்தும் பெற முடியும். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானியங்களையும் பருப்பு வகைகளையும் சேமித்து வைக்கலாம். காந்திஜியின் வழியில் சுயதேவைப் பூர்த்தியை அடைவதற்குக் கட்டுப்பாடும் எளிமையும், உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றமும் தேவையாக இருந்தன. இவற்றை நாம் கடைப்பிடித்தால் அயல் நாட்டினரிடம் கையேந்துவதைத் தவிர்க்க முடியும்.
உணவுக்கும் துணிக்கும் பங்கீடு முறை (ரேஷன்) அமுலில் இருந்தபோது காந்திஜிக்கு அப்பொருள்களை அரசிடமிருந்து பெறவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அரிசியையோ, கோதுமையையோ, பருப்பையோ, சர்க்கரையையோ உட்கொள்ளாமல் அவரால் வாழ முடிந்தது. தனக்குத் தேவையான துணியையும் அவர் தானே உற்பத்தி செய்துகொண்டார்.
ஹரிஜன் பத்திரிகையில் அவர் கம்போஸ்ட் உரம் தயாரிப்பதற்கான முறையை விவரித்திருந்தார். குறைந்த செலவிலோ அல்லது எவ்விதச் செலவும் இன்றியோ பசுமாட்டின் சாணம், மனிதக் கழிவுகள், சிறுநீர், காய்கறி வெட்டும் போது வீணாகும் தோல்கள், குளம் குட்டைகளில் பரவிக் கிடக்கும் ஆகாயத் தாமரை போன்றவற்றை பயன்படுத்தி கம்போஸ்ட் உரத்தைத் தயாரித்துவிடலாம். இதற்கு முதலீடு தேவையில்லை. அவரது ஆசிரமங்களில் மனிதக் கழிவுகளும், சிறுநீரும் ஆழம் குறைவான பள்ளங்களில் சேமித்து வைக்கப்பட்டன. பூமியின் மேற்பகுதியில் ஒரு அடி ஆழம் வரை எண்ணற்ற நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இவை கழிவுகளை உரமாக மாற்றுகின்றன. கழிவுகளை ஆழத்தில் புதைத்து வைத்தால் துர்நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியாகி காற்று மண்டலத்தை மாசுபடுத்துகின்றன. இப்படி ஒரே சமயத்தில் துப்புரவாளராகவும் விவசாயியாகவும் காந்திஜி பணியாற்றியது பரம்பரை விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. காந்திஜி ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்தவே விரும்பினார். விரைவாக அதிக மகசூல் பெறும் நோக்கத்துடன் ரசாயன உரங்களை பயன்படுத்துவது அபாயகரமானது என்று அவர் கருதினார். நல்ல மகசூல் கிடைத்தாலும்கூட ரசாயன உரங்கள் நிலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது அவரது வாதம்.
ஏர் உழவுக்கு பதிலாக டிராக்டரைப் பயன்படுத்தி உழுவதை அவர் எதிர்த்தார். சபர்மதி ஆசிரமத்தில் அவர் பலவித கலப்பைகளை பயன்படுத்திப் பார்த்தார். தொன்மையான கலப்பையே சரியானது என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதன் மூலம் நிலம் பாதுகாக்கப்படுகிறது. பயிருக்குத் தேவையான ஆழத்திற்கு அக்கலப்பை செல்லும், ஆனால், நிலத்திற்கு குந்தகம் விளைவிக்காது. நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பைப் பயனற்றதாக்கிவிடும் டிராக்டரை அவர் ஆதரிக்கவில்லை. மனிதர்களைப் பயனுள்ள ஆக்கப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். எந்திரங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக விவசாயிகளின் திறமையும் பாதிக்கப்படும் என்று அவர் எண்ணினார். நிலத்தைச் சின்னஞ்சிறு வயல்களாகப் பாகுபாடு செய்து உழவு செய்வதை அவர் ஆதரிக்கவில்லை. "நூறு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குப் பொதுவான நிலத்தில் ஒன்றாக விவசாயம் செய்து விளையும் தானியங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக ஒரு ஜோடி மாடுகளையும் வண்டியையும் வைத்துப் பராமரிப்பது தேவையற்றது.'' மாட்டுப் பண்ணையையும் கூட்டுறவு முறையில் நடத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார். அப்படிச் செய்வதன் மூலம் மாடுகளின் நலனைப் பாதுகாக்க கால்நடை மருத்துவத்துக்கு ஏற்பாடு செய்யலாம், பொதுவான மேய்ச்சல் நிலம், பொதுவான பொலி காளை போன்ற ஏற்பாடுகளையும் செய்துகொள்ளலாம். தனிப்பட்ட ஒரு விவசாயியால் இவ்வசதிகளைச் செய்துகொள்ள இயலாது. மாட்டுத்தீவனத்தின் விலை மாடுகளிடமிருந்து நாம் அடையும் பயன்களின் மதிப்பைவிடக் கூடுதலாக உள்ளது. அவனிடம் உள்ள மாடுகளின் எண்ணிக்கை பெருகும்போது வறுமை காரணமாக விவசாயி கடேரிக் கன்றுகளை விற்றுவிடுகிறான், காளைக் கன்றுகளை விரட்டிவிடுகிறான். பெரும்பாலும் அவை பட்டினியால் இறந்துபோகும். தனது கால்நடைகளுக்கு அவன் சரியாகத் தீவனம் தருவதில்லை. ஆனால், அவற்றைச் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குகிறான்.
பசுமாடுகளின் பாதுகாப்பு பற்றி காந்திஜிக்கு கவலை இருந்தது. பசுக்கள் பண்ணை சார்ந்த பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கருதினார். இந்தியாவைப் பல தடவைகள் சுற்றிவந்த அவர், விவசாயிகளின் ஒளி இழந்த கண்களையும், கால்நடைகளின் பரிதாப நிலையையும் கண்டு மிகவும் வருந்தினார். "பசுவை கோமாதா என்று பூஜிக்கும் வழக்கம் உள்ள இந்த நாட்டில்தான், பசுக்கள் கொடூரமாக நடத்தப்படுகின்றன. பசுக்கள் இப்படி சித்தரவதைக்குள்ளாவதை உலகில் வேறு எங்கிலும் காணமுடியாது. இந்த பூஜிக்கும் வழக்கம்கூட முஸ்லீம்களுடன் பசுவதை பற்றிச் சண்டை போடுவதிலும் பசுமாட்டைத் தொட்டுக் கும்பிடுவதிலும் மட்டுமே அடங்கியுள்ளது. நமது மாட்டுத் தொழுவங்களும், கோசாலைகளும் (பசுக்களின் புகலிடம்) நரகம்போல் உள்ளன.'' நமது கோசாலைகளில் பால் மரத்துவிட்ட மற்றும் நோயுற்ற மாடுகளை பராமரிக்கும் ஏற்பாடுகள் செய்து வீரியமுள்ள கால்நடைகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். அவர் பசும்பால் எருமைப் பாலைக் காட்டிலும் மேலானது என்று கருதி அதையே பயன்படுத்தினார். மேலும் பசுமாடு இறந்தபின் அதன் தோல், எலும்பு, குடல் மற்றும் சதையை உரிய முறையில் பயன்படுத்த முடியும்.
காந்திஜியின் ஆசிரமத்தில் அமைந்திருந்த கோசாலையில் பொலிகாளைகள் இருந்தன. மாட்டுக் கொட்டில் ஒரு முன்உதாரணத்திற்குரியதாகவும் அதேசமயம் எளிமையாகவும் இருந்தது. அவர் கோசாலையில் நன்கு கவனம் செலுத்தினார். புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு இளங்கன்றையும் பிரியமாகத் தனது கையினால் தடவிக் கொடுப்பார். ஒரு கன்றுக்குட்டி ஒரு தடவை தீராத நோயினால் அவதியுற்றது. எவ்வித வைத்தியமும் பயன் அளிக்கவில்லை. காந்திஜி தாமே அதன் வாழ்வை முடித்திட முன்வந்தார். அவர், அதன் கால்களை இறுக்கிப் பிடித்துக்கொண்ட நிலையில் மருத்துவர் ஊசி மூலம் அக்கன்றினை மீளா நித்திரையில் ஆழ்த்தினார். அஹிம்சா மூர்த்தியான காந்திஜியே இப்படிச் செய்யலாமா என்று பெரும் கண்டனம் எழுந்தது. ஒரு ஜைனர், இந்தப் பாவச் செயலை காந்திஜியின் ரத்தத்தைக் கொண்டுதான் கழுவ முடியும் என்று கூறினார். காந்திஜி இந்தப் புயலை அமைதியாக எதிர்கொண்டார்.
ஆசிரமத்தின் பண்ணையில் வளர்க்கப்பட்ட தானியங்களையும், காய்களையும், பழங்களையும் குரங்குகள் அழிக்க முற்பட்டபோது காந்திஜி குரங்குகளைக் கொன்றுவிடும்படி கூறினார். அஹிம்சையின் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். "ஒரு விவசாயியாக மாறிவிட்ட நான், எனது பயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. குறைந்த அளவு ஹிம்சை இதற்கு அவசியமாகிறது. குரங்குகளின் தொல்லை தாங்க முடியவில்லை. அவைகள் துப்பாக்கி சப்தத்திற்கு பயப்படாமல் ஊளையிடுகின்றன. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அக்குரங்குகளை நான் கொல்லவும் தயாராகிவிட்டேன்.'' உண்மையில் ஒரு குரங்குகூட ஆசிரமத்தில் கொல்லப்படவில்லை.
ஏழை விவசாயியின் வருமானத்தை எப்படிக் கூட்டமுடியும் என்பது பற்றியே அவர் சிந்தித்து வந்தார். வருடத்தில் நான்கு முதல் ஆறுமாத காலங்கள் அவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். விவசாயத்தை மட்டுமே நம்பி அவர்களால் வாழமுடியாது. முப்பது கோடி விவசாயிகளின் இந்தக் கட்டாய ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்குவதற்காகவே அவர் பெண்களுக்குச் சர்க்காவையும் ஆண்களுக்குக் கைத்தறியையும் அளித்தார். படிப்பறிவற்ற, உடுத்துவதற்குப் போதிய உடைகள் இல்லாத, உண்பதற்குப் போதிய உணவு இல்லாத ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு சரியான உணவும், வசிப்பதற்கு வீடும், உடுத்துவதற்குப் போதிய உடைகளும், நல்ல ஆரோக்கியமும் கல்வியும் கிடைப்பதற்கு அவர் பாடுபட்டார். அவர்களுக்கு இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபாவமும் இருக்க வேண்டும் என்பார் அவர். விவசாயிகள் தொழிலாளிகள் பிரஜைகளின் அரசாங்கம் ஏற்படவேண்டும் என்று விரும்பிய அவர், "விவசாயிகளுக்குத் தமது இழிவான நிலைக்குத் தலைவிதி காரணம் அல்ல என்ற விழிப்புணர்வு ஏற்படும் போது, விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அவன் சட்டத்திற்குட்பட்ட மற்றும் சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களின் வேறுபாட்டை மறந்துவிடுவான். சுயராஜ்யம் என்றால் என்ன என்பதை விவசாயிகள் புரிந்துகொண்டுவிட்ட நிலையில் அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது,'' என்று எச்சரித்தார்.
காந்திஜியின் தலைமையை ஏற்று விவசாயிகள் ஒத்துழை யாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி உப்பு தயாரித்தனர். பொதுக்கூட்டங்களில் சுதந்திரப் பிரமாணமும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் வரிகொடா இயக்கத்தில் ஈடுபட்டபோது அவர்களது சொத்துக்களும் நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தங்களது பொருளை இழந்தாலும்கூட அவர்களது கௌரவம் உயர்ந்து நின்றது.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...