Skip to main content

பல ரூபங்களில் காந்தி: நெசவாளர் | அனு பந்தோபாத்யாயா


காந்திஜி ஒரு தடவை கைது செய்யப்பட்டு நீதிபதியின் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, நீதிபதி அவரிடம் ''நீங்கள் என்ன தொழில் (வேலை) செய்து வருகிறீர்கள்?'' என்று கேட்டார். காந்திஜி ''நான் நூல் நூற்கிறேன். நெசவு செய்கிறேன். ஒரு விவசாயியும்கூட" என்று பதில் சொன்னார். அப்போது அவருடைய வயது 64. அதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் "இந்திய சுயராஜ்யம்" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருந்தார். அப்புத்தகத்தில் சுதேசி இயக்கம் பற்றி வலியுறுத்தி இருந்தார். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை பயன்படுத்துவதன் மூலமே நாட்டிற்கு விடுதலை கிடைக்கும். மேலும், இந்திய மக்கள் இந்தியாவிலேயே சுரண்டப்படுவதையும் வெளிநாட்டினர் மூலம் சுரண்டப்படுவதையும் தவிர்க்க இயலும் என்றார். அந்த காலகட்டத்தில் அவர் ஒரு கைத்தறியைப் பார்த்தது கிடையாது. அவருக்குச் சர்க்காவுக்கும் தறிக்கும் இடையே உள்ள வேறுபாடும் தெரியாது. ஆனால், இங்கிலாந்திலிருந்து துணி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக நெசவாளர்களின் வாழ்க்கை பாழாகிவிட்டது என்பது தெரியும். வெளிநாட்டுப் பொருள்களுக்கு ஆதரவு தருவதன் மூலமே இந்தியர்கள் அந்நியர் ஆட்சி இந்தியாவில் நிலை நாட்டப்படுவதற்கு உதவியுள்ளனர். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் டாக்காவில் மஸ்லின் நெசவு செய்து வந்த நெசவாளர்களின் கட்டை விரலைத் துண்டித்து நெசவுத் தொழில் அற்றுப்போகும்படி செய்திருந்த விபரங்களை அவர் புத்தகத்தில் படித்திருந்தார்.
200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா ஆண்டுதோறும் ரூ. 30 லட்சம் பெறுமான கைத்தறித் துணிகளை ஏற்றுமதி செய்து வந்தது. வெள்ளையர்கள் இந்தியாவை ஆளத்தொடங்கி 40 ஆண்டுகளுக்குள் இந்த ஏற்றுமதி நின்றுவிட்டது. 100 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்தின் மொத்த உற்பத்தியில் கால்பகுதி துணி ஆண்டுதோறும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.60 கோடி. இவ்வாறாக, உலகம் முழுவதிலும் ஒப்பற்றதாகக் கருதப்பட்ட இந்தியாவின் கைத்தறி நெசவுத் தொழில் பாழடிக்கப்பட்டது. நெசவாளர்கள் விவசாயக் கூலிகளாக மாறினர். போதிய வேலை கிடைக்காததால் பலர் பட்டினியால் இறந்தனர். இதுபற்றி ஒரு ஆங்கிலேய கவர்னர் ஜெனரலே இவ்வாறு கூறியுள்ளார்: "கைத்தறி நெசவாளர்களின் எலும்புகள் இந்நாட்டின் உரக்குழிகளில் புதையுண்டுவிட்டன. இப்படிப்பட்டதோர் சோக நிகழ்ச்சியை வாணிப சரித்திரத்தில் நாம் காண முடியாது.''
பனித்துளிகள்என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாகி இருந்த துணிகளை வங்காளத்தில் சில முஸ்லீம் நெசவாளர்கள் நெய்து வந்தனர். அவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் வேலையின்றி இருந்தனர். பஞ்சாபிலும் பிரசித்தி பெற்ற நெசவாளர்கள் பலர் வேலையின்மை காரணமாக ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவை அடிமையாக வைக்கும் பணியில் அரசுக்கு உதவினர். ஒரு காலத்தில் கௌரவத்திற்குரியதாகக் கருதப்பட்ட நெசவுத் தொழில் அப்போது கேவலமானதாகிவிட்டது. குஜராத்திலிருந்து வேலை இழந்த நெசவாளர்கள் வேலை தேடி கிராமங்களை விட்டுச்சென்றனர். பம்பாய் போன்ற பெரும் நகரங்களில் துப்புரவுப் பணியாளர்களாக மாறினர். அவர்களது உடல் ஆரோக்கியம் கெட்டது. குடி, சூதாட்டம் போன்ற தீய பழக்கங்களுக்கு அவர்கள் ஆளாயினர். நிறையக் குடும்பங்கள் சீரழிந்து போயின; திறமை மிக்க தொழில் வல்லுநர்கள் கூலியாட்களாக மாறும் நிலை ஏற்பட்டது. நூற்பாலைகளோ, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கிக்கொண்டிருந்தன.
காந்திஜி நாம் வெளி நாட்டைச் சார்ந்திருக்கும் நிலையை அகற்றி துணிகள் இறக்குமதி செய்யப்படுவதை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட எண்ணினார். அவரைப் பொருத்தவரை சுயராஜ்யத்தின் ஆதாரமே சுதேசி இயக்கம்தான். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். அவரது வாழ்க்கை லட்சியம் இந்தியர்களை சுயசார்புடையவர்களாகவும் சுயதேவை பூர்த்தியாளர்களாகவும் செய்வதுதான். இதற்காக அவர் சில நிபந்தனைகளை விதித்தார். சுதேசித் துணியைத் தயாரிப்பதற்காக இந்தியாவில் மில்கள் நிறுவப்படுவதை அவர் ஆதரிக்கவில்லை. மில் ஒரு முதலாளிக்குச் சொந்தமானது. அதற்கான எந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இந்தியாவில் நிறைய பேர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடுகிறது. மில்களில் பணியாற்றும் சில தொழிலாளர்களின் உழைப்பின் பலனும் முதலாளியைத்தான் சென்றடைகிறது. அத்தொழிலாளர்கள் தங்களது கிராமங்களைத் துறந்து நகரங்களுக்கு வேலை தேடி வந்தவர்கள். அவர்களது வாழ்க்கையும் ஒரு எந்திரம் போலவே ஆகிவிடுகிறது. காந்திஜி கூறுவார்: "நமது உணர்வுகள் மரத்து, சீர்கேடுற்றுப் போய்விட்டன. அதனால்தான், நாம் கதரின் மேன்மையை உணராமல் கஞ்சிப் பசையுடன் கூடிய மில் துணியை விரும்புகிறோம். பெரும் அளவில் எந்திரங்களின் வாயிலாகப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும்போது மனிதனின் அறிவும் கைத்திறனும் பயனற்றுப் போய்விடுகின்றன.'' அந்தக் காலகட்டத்திலும்கூட அஸ்ஸாமில் சில மாதர்கள் துணியிலேயே கவிதைகளை நெய்வது கண்டு காந்திஜி மிகவும் மகிழ்ச்சியுற்றார்.
கைத்தறி நெசவை எப்படியாவது மீண்டும் வழக்கத்தில் கொண்டுவர காந்திஜி விரும்பினார். ''ஒரு வக்கீல், தன் தொழிலைத் துறந்து கைத்தறியில் நெசவு செய்ய முன்வர வேண்டும்; ஒரு டாக்டர் தன் தொழிலைத் துறந்து தறியில் அமர முன்வர வேண்டும்; அப்படிச் செய்தால் கைத்தறி வழக்கத்தில் வந்துவிடும்" என்று அவர் கூறிவந்தார். அவர் நெசவாளர்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு கைத்தறி பற்றிய தகவல்களைச் சேகரித்தார். காந்திஜி, இந்தியாவில் முதலாவதாக அகமதாபாத்தில் தனது ஆசிரமத்தை அமைக்கத் தீர்மானித்தார். ஏனெனில், ஆங்கிலேய ஆட்சிக்கு முன்பு அது ஒரு கைத்தறி நெசவிற்கு பிரபலமான நகரமாக விளங்கியது. சபர்மதி ஆசிரமத்தில் கைத்தறிகள் நிறுவப்பட்டன. ஆசிரமவாசிகள் அனைவருமே சுதேசிப் பொருள்களைத்தான் பயன்படுத்துவோம் என்று சபதம் எடுத்திருந்தனர். தங்களது தறிகளில் நெய்த துணிகளை மட்டுமே அவர்கள் பயன்படுத்தினர். அவர்களது தாரகமந்திரம்: நமக்குத் தேவையானதை நாமே நெய்துகொள்வோம்; நம்மால் நெய்ய முடியாத ரகங்களை நாம் தவிர்ப்போம்என்பதுதான். ஒரு தேர்ந்த நெசவாளர் தினந்தோறும் ஆசிரமவாசிகளுக்கு வகுப்புகள் எடுத்துப் பயிற்சி அளித்தார். ஆசிரமவாசிகளில் சிலர் நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் வரை நெசவு செய்தனர். 45 வயதாகி இருந்த காந்திஜி தறியில் தினமும் நான்கு முதல் ஐந்து மணிநேரம் வரை உட்காருவார். ஒவ்வொரு நெசவாளருக்கும் நாள் ஒன்றுக்கு 12 அணா (75 பைசா) கூலியாகக் கிடைத்தது. ஆரம்ப காலத்தில் 30 அங்குல அகலம் கொண்ட துணிகள் மட்டுமே நெய்யப்பட்டன. பெண்களின் புடவைகளுக்கு அந்த அகலம் போதாமல் இருந்ததால் அவர்கள் இரண்டு துண்டுகளை (பீஸ்) ஒட்டுப்போட்டு புடவையாக அணிந்தனர். ஒரு பெண்மணிக்கு இது பிடிக்கவில்லை. அவர் இதுபற்றி புகார் செய்தார். சரியான அகலத்தில் புடவைத்துணி கிடைக்காததால் மில் துணியை வாங்க விரும்புவதாகவும் கூறினார். அவரது கணவர் காந்திஜியை அணுகியபோது காந்திஜி ''நாம் உடனே தறியின் அகலத்தை மாற்றி அமைப்போம்" என்று கூறினார்.
அதற்குப்பின், புடவைகள் மற்றும் வேஷ்டிகளின் அகலத்திற்கேற்ப துணிகள் ஆசிரமத்தில் நெய்யப்பட்டன. வேறுபல நெசவாளர்களும் கைத்தறியில் கதர் நெசவு செய்ய முன்வந்தனர். ஆனால், அவர்கள் கூலி அதிகம் கேட்டனர். மில் நூலைப் பயன்படுத்தி நெசவு செய்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது. கதர் நூல் அடிக்கடி அறுந்துவிடும்.
நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பு ஒரு கதர் ஊழியர் காந்திஜியிடம் நூற்போருக்கு நிதி உதவி செய்யப்பட வேண்டும் என்று யோசனை கூறினார். மற்றொரு ஊழியர் நெசவாளர்கள் குறிப்பிட்ட அளவு கதர் நூலை நெசவு செய்தாலொழிய அவர்களுக்கு மில் நூல் கொடுக்கக்கூடாது என்ற யோசனையை முன்வைத்தார். காந்திஜி, இந்த யோசனையை நிராகரித்துவிட்டார். ஏனெனில் கதரை நெய்யச் சொல்லி நாம் நெசவாளர்களைக் கட்டாயப்படுத்தினால் அவர்கள் கதர்த்துணியை வெறுக்கத் தொடங்குவார்கள். மாறாக நாம் நூலின் தரத்தை உயர்த்தினால் நெசவாளர்களுக்குக் கதரை நெய்வது சற்று எளிதாகிவிடும் என்று அவர் கூறினார். அதேசமயத்தில் எல்லா சமயங்களிலும் மில் நூலையே நம்பி இருப்பது அவர்களுக்கு நல்லதல்ல என்று நெசவாளர்களை எச்சரித்தார் காந்திஜி. மில் உரிமையாளர்கள் தர்மபிரபுக்கள் அல்ல. கைத்தறி நெசவினால் மில் துணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால், நூல் வழங்குவதை நிறுத்தி, நெசவாளர்களை நெருக்கிவிடுவார்கள். ஆனால், நாம் எல்லோருமே நெசவுத் தொழிலைப் பழகி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிராது. எல்லோரையும் நூற்றுப் பழகவேண்டும்என்று வற்புறுத்திய நான், நெசவையும் பழகவேண்டும் என்று வற்புறுத்தாமல் விட்டது என்னுடைய தவறுதான்,” என்றார் காந்திஜி.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...