Skip to main content

பூதான உதயம் - 1 | வினோபா பாவே


ஆந்திராவில் பார்வதி புரத்தில் 8-8-55-ல் பேசியது

பூதான யக்ஞத்தைப் பற்றி பாரத மக்களுக்கு உள்ள உற்சாகம் வேறு எதிலும் இல்லையென்று நமக்குத் தெரிந்ததே. லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் இவ்வியக்கத்தின் முன்னேற்றத்தைக் கவனித்து வருகிறார்கள். செய்தித்தாள்களோ ரயிலோ போகாத நாட்டின் பகுதிகளில் கூட இவ்வியக்கச் செய்தியைக் கேட்பதற்கு மக்களுக்கு மிகுந்த உற்சாகம் இருந்து வருவதை நான் கண்டிருக்கிறேன். கோராபுட்டைச் சேர்ந்த ஒரு கிராமக் கூட்டத்தில் பேசுகையில் நான் ரயில்வே டிக்கெட் ஆபீஸை ஒரு உதாரணமாகச் சொல்லத் தொடங்கியதும் எனக்கு, இவர்கள் ஒருக்கால் டிக்கெட் ஆபீசையோ ரயிலையோ பார்த்தேயிருக்க மாட்டார்களோ என்ற ஐயம் பிறந்தது. பிறகு விசாரித்ததில் ஆயிரம் பேர் இருந்த கூட்டத்தில் 13 பேரே ரயில் பார்த்திருந்தவர்கள் என்று தெரியவந்தது. எனவே மிகவும் பிற்பட்டுள்ள பகுதிகளில் கூட பூமிதானச் செய்தி பரவிவிட்டது. அதைப்பற்றித் தெரிந்து கொள்ள மக்கள் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளார்கள்.
ஆந்திர நாட்டிலும் உற்சாகத்திற்குக் குறைவில்லை என்பதைக் காண்பீர்கள். நான்காண்டுகளுக்கு முன் தெலுங்கானாவில் இது தொடங்கிய பொழுது எனக்கே ஒரு புதிய இயக்கம் தோன்றிக்கொண்டிருப்பது தெரியாது. சின்னஞ்சிறு கிராமமொன்றில் நான் நிலம் கேட்கவே, ஒரு மனிதர் எழுந்து நிலமளித்தார். ஆகவே என் மனதில் ஒரு கருத்து எழுந்தது. அன்றிரவு எனக்கு விரைவில் தூக்கம் வரவில்லை; ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்துபோனேன். ஹரிஜனங்கள் என்னிடம் 80 ஏக்கர் நிலம் வேண்டுமென்று கேட்க, நான் அக்கோரிக்கையை கிராம மக்களுக்குத் தெரிவித்தேன். எனக்கு 100 ஏக்கர் தானம் கிடைத்தது. அன்றிரவு இன்றைய நிகழ்ச்சிக்குப் பொருளேதேனுமுண்டா, இது ஒரு அசாதாரண நிகழ்ச்சி என்பதோடு சரியா என்று எண்ணலானேன். உலகில் மனிதன் தன் சொந்த எண்ணம் கொண்டே காரியம் செய்வதில்லை; அவனுக்காகக் கருத்துக்கள் சித்தமாகி வருகின்றன; அப்பொழுதே அவனும் அதை ஏற்கிறான் என்பது எனக்குத் தெரிந்திருந்ததுதான். நான், அன்று இந்த கிராமத்தில் தானமளித்தவர் உலகின் மனோநிலைக்கு ஒரு அறிகுறி; ஏதோ ஒரு புதிய கருத்து உலகில் பக்குவம் பெற்று வருகிறது என்று ஊகித்தேன். அந்த கிராமத்தில் நிலமில்லாதவர்கள் செய்து கொண்ட கோரிக்கையைப் போன்றே ஒவ்வொரு கிராமத்திலும் எழலாம்; மக்களுக்கு வாய் இருக்குமானால் ஒவ்வொரு கிராமத்திலும் இதே வகையில் கேட்கலாமென்று எண்ணினேன். எனவே, சிருஷ்டியின் அமைப்பை அல்லது ஆண்டவனின் வேலை முறையைப் பற்றி எண்ணலானேன். சிருஷ்டியில் அரைகுறையான திட்டமெதுவும் உருவாவதில்லை, எதுவும் பூரணமாய்த்தான் உருப்பெறும். குழந்தை பிறந்ததும் அதன் வயிற்றில் பசி தோன்றுகிறதென்றால், அதே சமயத்தில் தாயின் ஸ்தனத்திலும் பால் சுரக்கிறது. கடவுள் அரைகுறையான ஏற்பாடு எதையும் செய்வதில்லை. குழந்தையின் வயிற்றில் பசியை உண்டாக்கினால், தாய்க்குப் பாலைத் தந்து குழந்தைக்கு அதை அளிக்க வேண்டுமென்ற ஆவலையும் உடன் தருகிறார். எனவே உலகை ஆட்டிவைக்கும் மஹாசக்தியானது இப்பொழுது புதிய காரியமொன்றைச் செய்ய விரும்புகிறது என்று உணர்ந்தேன்.
பிறகு நான் என் மனத்திலேயே இரண்டாவது விஷயமொன்றைப்பற்றி சிந்தித்தேன். அதாவது, "இக்காரியத்தைச் செய்வதற்கு எனக்குச் சக்தியுண்டா?" என்பது. என் உள்ளம் என் இந்தக் கேள்விக்கு "சக்தியில்லை, நான் சக்தி சூன்யன்" என்று விடையளித்தது. பிறகு நான் நான் சக்தி சூன்யன்தான். ஆனால் எனக்குக் கடவுள் பக்தியும் நம்பிக்கையும் இல்லையா?” என்று கேட்டுக்கொண்டேன். அப்பொழுது என் உள்ளத்திலிருந்து, “பக்திக்கு, நம்பிக்கைக்குக் குறைவில்லை. அது பூர்ணமாயிருக்கிறதுஎன்ற உத்தரம் வந்தது. அப்பொழுது என் கையிலிருந்தது 100 ஏக்கர் நிலம்தான். எனக்குக் கணித சாஸ்திரத்தில் ஓரளவு பயிற்சியுண்டாகையால் இந்தியாவின் தேவை எவ்வளவாயிருக்குமென்று மனதிலேயே கணக்கிட்டுப் பார்த்தேன். அப்பொழுது நீ கணக்குப் போடுவதைப் பார்த்தால் நீ பெரிய முட்டாளாயிருப்பாய் போல் தோன்றுகிறதே! இந்தக் கணக்கு அல்பசொல்பமானதா?” என்று என் உள்ளம் என்னிடம் கூறிற்று. ஆனால் எனது வெகுநாளைய புள்ளிப் பழக்கம் என்னை விடவில்லை. நான் கணக்குப் போட்டதில், ஐந்து கோடி ஏக்கர் நிலமிருந்தால் இவ்வேலை நிறைவேறும் என்று தெரிந்தது.
பிறகு நான் இன்றைய நிகழ்ச்சியின் பொருளைப் புரிந்துகொள்ளாது போட்டப் புள்ளியைக் கண்டு அஞ்சுவதென்றால், நான் அஹிம்சையில் எனக்குள்ள நம்பிக்கையைத் துறந்து ஹிம்சையை ஏற்றாக வேண்டும், அல்லது நம்பிக்கையை அறவே துறந்துவிட வேண்டுமென்று எண்ணினேன். நான் நம்பிக்கையை இழப்பதற்கோ ஹிம்சையை ஏற்பதற்கோ சித்தமாயில்லாமையால் ராமனை நினைத்துக்கொண்டு உறங்கிவிட்டேன். மறுநாள் போகவேண்டிய கிராமத்திற்குப் போய் பூமிதானத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நான் அங்கே சென்றது தெலுங்கானாவின் நிலையைக் காண்பதற்கே. பூமிதானத்தைப் பற்றி எனக்கு அப்பொழுது ஒன்றும் தெரியாது. ஆனால் அஹிம்சை அனுஷ்டானத்திற்கு வரவேண்டுமானால் அப்பொழுது எனக்குக் கிடைத்திருந்த சமிக்ஞையை விடாது பற்றிக்கொள்ள வேண்டுமென்று உறுதி கொண்டேன். ராமாவதாரத்தில் குரங்குகளைக் கொண்டே காரியம் நடந்துவிட்டதென்றால் நான் குரங்கல்லவே, மனிதனாயிற்றே, அஹிம்சையில் உறுதியுள்ள மனிதனாயிற்றே. மேலும் நான் அந்தக் குரங்குகளிடமும் எவ்வளவோ பக்தி புரிந்திருக்கிறேனே. ஆகையால் அந்தக் குரங்குகள் தாமென்ற, ஆணவ உணர்ச்சி அறவே அற்றிருந்ததைப் போல் நானும் ஆணவத்தைத் துறந்து சூனிய நிலையை எய்திவிடுவேனாயின் அந்தக் குரங்குகளிடம் பணிகொண்ட இராமன் என்னையும் இயக்கி வேலை செய்விப்பானென்று எண்ணினேன்.
அடுத்த நாள்
எனவே அடுத்தநாள் காலையில் நாங்கள் போய்ச் சேர்ந்த கிராமத்தில் பிள்ளை தன் தந்தையிடம் கேட்பதைப் போல மிகுந்த நம்பிக்கையுடன் கைநீட்டிப் பூமிதானம் கேட்டேன். அப்பொழுது இந்த மனிதன் பூமியை தானம் கேட்க வந்திருப்பவனென்று எவருக்கும் தெரியாது. அவர்கள் பாவம், பூமாலைகள் முதலியவை வாங்கிக்கொண்டு என்னை வரவேற்க வந்திருந்தார்கள். நான் அவர்களிடம், “இந்தப் புஷ்பங்கள் வெகு அழகாயிருக்கின்றன. ஆனால் இவைகளின் தாய் இவற்றிலும் அழகானது. எனக்குப் பூக்கள் தேவையில்லை. அவை ஆண்டவனுக்கு உரியவை. எனக்கு வேண்டியது மண்ணே. எனக்கு அதைக் கொடுங்கள் நான் உங்கள் குழந்தை, நீங்கள் என் தந்தையர். உங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகளிருந்தால் நான் ஐந்தாமவன். எனக்கு ஐந்தில் ஒரு பகுதி ஒதுக்கிக்கொடுத்துவிடுங்கள்என்று சொன்னேன். அப்பொழுது அங்கே வந்திருந்தவர்களுக்கு நான் இம்மாதிரி ஏதோ கேட்கப்போகிறேனென்றே தெரியாது. அதனால் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த பொழுது ஏற்பட்டது போன்ற விளைவு எனது இந்தப் பேச்சினால் ஏற்பட்டது. எனக்கு அங்கே 25 ஏக்கர் நிலம் கிடைத்துவிட்டது. எனவே இரண்டு புள்ளிகள் அமைந்துவிட்டால் இரண்டையும் இணைக்கும் கோடொன்று ஏற்பட்டுவிடுமென்று சொல்லிக்கொடுத்திருந்த சூத்திரத்தை நினைத்துக்கொண்டேன். நேற்று மாலைக் கூட்டத்தில் 100 ஏக்கர் நிலம் கிடைத்தது. இன்று காலையில் 25 ஏக்கர் கிடைத்துவிட்டால் இரண்டு புள்ளிகள் அமைந்துவிட ஒரு கோடுநான் செல்வதற்குரிய வழி திட்டமாய்விட்டதென்று எண்ணிக்கொண்டேன்.
இதெல்லாம் நடந்து இப்பொழுது நான்காண்டுகள் கடந்துவிட்டன. நூறு ஏக்கர் என்றிருந்தது ஆயிரம் ஏக்கராக, பிறகு ஆயிரம் லட்சமாகி இப்பொழுது சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலமாகியுள்ளது. 4 லட்சம் பேர் தானமளித்துள்ளார்கள். கேட்க வந்த 100 பேர்களில் ஒருவர் தானமளித்திருப்பதாய் உத்தேசக் கணக்கு போட்டாலும் 41 கோடி மக்களுக்கு பூமிதானச் செய்தி எட்டியிருப்பதாய்க் கொள்ளலாம். பீஹாரில் நமக்கேற்பட்ட அனுபவங்களைக் கண்ணால் கண்டவர்களுக்கு கலியுகம் கழிந்து சத்தியயுகம் பிறந்துவிட்டதாய்த் தோன்றிற்று. இறுதியில் அங்கே இருந்த நிலைமையைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கும். ஒரு ஜில்லாவில் நடந்த கூட்டத்தில் மக்கள் என்னிடம் வந்து, "எங்கள் ஊருக்கு நிலம் பெற யாருமே வரவில்லை. நாங்கள் அனைவரும் கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறோம்என்று புகார் செய்தார்கள். எனவே மக்களின் மனம் இந்த அளவுக்குப் பக்குவம் அடைந்துள்ளது. ஆனால் இவ்வாறு பக்குவம் செய்தது நாமா? 
நான்கு வருஷத்திற்குப் பிறகு
இவ்வாறு நான்காண்டுகளில் மக்கள் மனம் இவ்வேலைக்குப் பூர்ண பக்குவம் அடைந்துவிட்டது. இந்தியாவில் நாம் நம் முழு சக்தியையும் செலுத்திப் பாடுபடுவோமாயின் இரண்டாண்டுகளுக்குள் அமைதியான முறையில் இந்தியாவின் நிலப் பிரச்சினை தீர்ந்துபோகுமென்ற என் நம்பிக்கையை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். இது மட்டுமல்ல, இந்தியா இதற்காகப் பாடுபட்டால் இந்தியாவின் பெரிய பிரச்சினை தீருவதன்றி உலகெங்கும் அமைதியை நிலைநாட்டலாம் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. இதை உலக மக்களும் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். உலகின் பல்வேறு சிந்தனையாளர்களும் இச்சிறு இயக்கத்தை கவனிக்கிறார்கள். தொலைவிலுள்ள தேசத்தவர் பலர் யாத்திரை கோஷ்டியில் சேர்ந்து எங்களுடன் சுற்ற வருகிறார்கள். அவர்கள் பூமிதான வேலையைத் தம் கண்ணால் காண்பதால் அவர்களுக்கும் தன்னம்பிக்கை பிறக்க, "பாபாவின் இப்பணி இங்கே நிறைவேறினால் இதன்மூலம் உலகிலும் அமைதியை நிலவச்செய்ய முடியும்" என்று சொல்லுகிறார்கள். அவர்கள் என்னை, "இங்கே இது நடப்பதுபோல் எங்கள் நாடுகளிலும் ஐரோப்பாவிலும் நடக்கவியலுமா?" என்று கேட்கிறார்கள். நான், ''ஒவ்வொரு இடத்திலும் பிரத்யேகமான பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மக்களின் உள்ளம் உலகெங்கும் ஒரே தன்மையதாகையால் நாங்கள் பின்பற்றும் முறை எங்குமே பயன் அளிக்கும்" என்று அவர்களுக்குச் சொல்லுகிறேன்.
சம்பூர்ண கிராமம்
நீங்கள் இப்பணியை சம்பூர்ண, சமநோக்குடன் பார்க்க வேண்டும். சர்வோதயக் கருத்து ஒரு சம்பூர்ணக் கருத்து. பூமிதான யக்ஞம் அதற்கு அடிப்படை. சர்வோதயத்தில் அனைவரும் சரிநிகர் சமானம். எல்லோரும் சகோதரர்கள். அதைச் சேர்ந்தவர்களிடையே உயர்வு தாழ்வு என்பதற்கே இடமில்லை. வைஷ்ணவர்கள் தம்மையெல்லாம் பக்தரென்று, அடியாரென்று எண்ணுவதைப்போல சர்வோதய பக்தரும் தம்மை அடியாரென்றும் பிறர் அனைவரையும் தம்மிலும் மேலானவரென்றும் எண்ணுகிறார்கள். சர்வோதயமென்றால், எல்லோரும் இன்பமடையட்டும், பிறகு எனக்குக் கிடைத்தால் போதும், எல்லோருக்கும் உணவு கிடைத்தான பிறகு எனக்கும் கிடைத்தால் போதும் என்று எண்ணுவதாகும். சர்வோதயத்தின் நிதரிசனமான உரு, உதாரணம் நம் வீடுகளிலுள்ள நம் தாயார் ஆகும். சிலர் சர்வோதய தத்துவப் பயிற்சி அளிப்பதற்கு முகாம்கள் நடத்த வேண்டும், கல்லூரிகளில் அதை போதிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். நான், “இது அவசியம் வேண்டியதே. ஆனால் சர்வோதயப் பயிற்சிக்கான பெருத்த திட்டமொன்று ஏற்கெனவே அமைந்துள்ளது. சர்வோதயப் பயிற்சியை வினோபா அளித்துப் பெறவேண்டியதில்லை. அதை ஒவ்வொரு தாயும் தம் வீடுகளில் தம் குழந்தைகளுக்கு அளித்து வருகிறார்என்று சொல்லுகிறேன். தாய் தம் குழந்தைகளுக்குப் புகட்டும் பாலுடன் சர்வோதயமும் புகட்டுகிறார். தாய் வீட்டிலுள்ள அனைவருக்கும் உணவருத்திய பின் தாம் உணவருந்துகிறார். தாயின் இந்த நடைமுறையில் சர்வோதயம் பொதிந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் சர்வோதயத்தின் பிரதிநிதி, சர்வோதயத்தின் குரு இருந்து வருகையில் அதில் நமக்குப் புரிந்துகொள்ளவியலாத சூக்ஷ்மம் என்ன இருக்கிறது?

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...