என் பணி சமமாக்குவதே ஒரு விஷயம் நினைவிலிருக்க வேண்டும். நாம் ஏற்றுள்ள பணி எவரையும் எதிர்ப்பதற்காகவல்ல. ‘ சர்வேஷாம் அபி ரோதேன பிர்ம கர்ம ஸமாரபே ’ ( பிர்ம்மகர்மம் அல்லது கடவுளின் பணி எவரையும் எதிர்த்துத் தோன்றாது). நாம் ஏற்றுள்ளது கடவுள் பணியாகையால் இதில் எவரையும் நாம் எதிர்க்கவில்லை. இதில் அனைவரின் நன்மையும் பொருந்தியிருக்கிறது. இதில் ஒவ்வொருவர் மனத்தையும் மற்றவர் மனங்களுடன் இணைக்கும் முயற்சியுள்ளது. ஆகையால் இதில் எல்லா அரசியல் கட்சியினரும் கலந்துகொள்வார்களென்பது என் நம்பிக்கை. மக்களனைவரின் நன்மைக்காகவே இவ்வேலை நடக்கிறதென்று எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் கம்யூனிஸ்டுகள் பாபா செய்யும் இந்த வேலை பணக்காரர்களின் நன்மைக்காக நடக்கிறதென்று சொன்னார்கள். இது நடந்தது மூன்று வருஷங்களுக்கு முன்பாகும். இப்பொழுதோ கம்யூனிஸ்டுகளின் மனமும் நமக்குச் சாதகமாய் மாறியுள்ளது. நாம் ஏழைகளுக்காக வேலை செய்வதால் அனைவரின் மனமும் நமக்கு அனுகூலமாயிருக்குமென்று நான் முதலிலிருந்தே சொல்லிவந்தவன். ஆனால் பாபா பணக்காரர்களின் ஏஜெண்ட் என்ற இந்தப் புதிய குற்றச்சாட்டு என் காதில் விழவே எனக்குப் பெருமகிழ்ச...