காந்திஜி தனது பதினெட்டாவது வயதில் 10-வது பாஸ் செய்தார்.
அதற்குப்பின், சட்டப்
படிப்பிற்காக அவர் லண்டனுக்குச் சென்றார். அங்கு, இன்னர் டெம்பிள் கல்லூரியில் சேர்ந்ததும் சட்டப்
பரீட்சைகளில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடலாம் என்பதை அவர் உணர்ந்தார்.
புத்தகங்களின் குறிப்புகளை (நோட்ஸ்) இரண்டு மாதங்களுக்கு மட்டுமே படித்து, பலரும் பரீட்சைகளில் தேர்ச்சி
பெற்று வந்தனர். இப்படிக் குறிப்புகளைப் படித்து பரீட்சையில் தேர்ச்சி அடைவதில்
காந்திஜிக்கு உடன்பாடு இல்லை, ஏமாற்று
வேலையை அவர் அறவே வெறுத்தார். பாடப் புத்தகங்களை பணம் செலவழித்து வாங்கி, நிறைய நேரத்தை
அப்புத்தகங்களைப் படிப்பதில் செலவழித்து வந்தார். பொதுவான சட்டம் பற்றிய தடித்த
புத்தகங்களை அவர் ஒன்பது மாதங்கள்வரை ஊக்கமாகப் படித்தார். ரோமன் சட்டங்களைச்
சரியாகப் புரிந்துகொள்வதற்காக அவர் ரோமன் மொழியைக் கற்றார். அக்காலத்திய பாரிஸ்டர்கள்
“டின்னர் பாரிஸ்டர்கள்''
என்று
அழைக்கப்பட்டார்கள். ஏனெனில்
மூன்றாண்டுகளில் அவர்களுக்கு மொத்தம் 12 தேர்வு நிலைகள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் ஆறு 'டின்னர்' (விருந்து சாப்பாடு) வீகம்
மொத்தம் 72
டின்னர்களில் அவர்கள் ஆஜராக வேண்டி இருந்தது. செலவு அதிகமாகப் பிடிக்கும் இந்த
டின்னர்களுக்கான தொகையை மாணவர்கள்தான் கட்டவேண்டும்.
காந்திஜிக்கு இதுபோன்ற விருந்துகளில் கலந்துகொள்ளும்
அனுபவம் கிடையாது. மேலும் விருந்து சாப்பிட்டு ஒயின் அருந்துவதன் மூலம் ஒரு மனிதன்
எப்படி சிறந்த பாரிஸ்டர் ஆகிவிட முடியும் என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார்.
அவர் சிந்தனை எப்படி இருப்பினும் அந்த 'டின்னர்'களில்
கலந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருந்தது. அவர் சுத்த சைவம். மதுபானப்
பழக்கம் இல்லாதவர். அந்த டின்னர்களில் வழங்கப்படும் பல உணவு வகைகளை, அவர் தொடுவதில்லை. மதுவையும்
அவர் அருந்துவதில்லை. இதன் காரணமாகவே (அவர் பங்கையும் சேர்த்து உள்ளே
தள்ளுவதற்காக) பல சட்டப்படிப்பு மாணவர்கள் 'டின்னரில்' அவரது சகாவாக இருக்க விரும்பினர்.
இந்த விருந்துகளினாலும், படிப்புகளினாலும் காந்திஜியின் மனதில்
குடிகொண்டிருந்த தயக்கமும் பயமும் அகலவில்லை. ஒரு வழக்கை நடத்துவதற்குத் தனது
புத்தக அறிவை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி அவர் சிந்திக்கத் தொடங்கினார்.
ஒரு ஆங்கிலேய வக்கீல் அவரை ஊக்குவிக்கும் விதத்தில் "நேர்மையும் உழைப்பும்
ஒருவரை நல்ல வக்கீலாக்கி நன்கு பொருளீட்டுவதற்கு வழி செய்யும்" என்று கூறினார்.
“வழக்கின் அடிப்படை
விபரங்கள் சட்டத்தின் முக்கால் பங்கு; கால் பங்கை சட்டம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்"
என்று கூறி, சரித்திரம்
மற்றும் பொது அறிவு சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிக்கும்படி காந்திஜியை அவர்
தூண்டினார். காந்திஜி அவரது அறிவுரையைப் பின்பற்றினார்.
சிறிது காலத்திற்கு இங்கிலாந்தில் தானும் ஒரு
கெட்டிக்கார ஆங்கிலேய 'ஜென்டில்மேனாக'
மாற முயற்சித்தார்.
ஆங்கிலத்தை சரியான முறையில் உச்சரிக்கவும், அதில் உரையாற்றவும், நாட்டியம் ஆடவும், வயலின் வாசிக்கவும், 'லேட்டஸ்ட் ஃபாஷன்'படி உடையணியவும் முயற்சிகளை மேற்கொண்டார். லண்டனிலிருந்த
மிகவும் பிரசித்தி பெற்ற கடையிலிருந்து விலையுயர்ந்த சூட்டையும் கோட்டையும் வாங்கி
அணிந்தார். கூடவே இரட்டை தங்கச் செயினுடன் கூடிய கைக்கடிகாரத்தையும் அவர் வாங்கி
அணிந்துகொண்டார். விலை உயர்ந்த தொப்பிகளையும் 'டை'களையும்
அவர் அணிந்தார். இளம் பெண்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். படிப்படியாக
மேம்போக்கான டாம்பீக வாழ்க்கைப் பாதையில் அவர் செல்லத் தொடங்கினார். சில
மாதங்களுக்குப்பின் தனது முட்டாள்த்தனத்தை உணர்ந்தார். அவரது ஆடம்பர வாழ்க்கை
காரணமாக அவருடைய மூத்த சகோதரருக்கு பணக் கஷ்டம் ஏற்பட்டது. தான் இங்கிலாந்திற்கு
வந்திருப்பது படிப்பதற்குத் தானேயன்றி ஆங்கிலேயர்களைப் போல ஆடம்பர வாழ்க்கை
வாழ்வதற்கு அல்ல என்று உணர்ந்த காந்திஜி உடனடியாகத் தனது வாழ்க்கை முறையை
மாற்றிக்கொண்டார். குறைந்த வாடகையில் ஒரு அறையை ஏற்பாடு செய்துகொண்டு, ஒரு ஸ்டவ் அடுப்பையும் வாங்கி, தனது
காலை மற்றும் இரவு உணவைத் தானே சமைத்துக்கொள்ளத் தொடங்கினார். மதிய உணவிற்குக்
குறைந்த விலையில் சாப்பாடு போடும் சைவ உணவகங்களுக்குச் சென்றார். பஸ் அல்லது
டிராம் செலவை மிச்சம் பிடிப்பதற்காக தினந்தோறும் 10 மைல்கள் கால் நடையாகவே பயணம் செய்தார். காலம்
சுழன்றது. 32
மாதங்கள் இங்கிலாந்தில் வாழ்ந்தபின் அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இரண்டு
நாட்களுக்குப் பின் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு கப்பல் ஏறினார்.
இந்தியா திரும்பியதும் பம்பாய் நகரில் ஒரு வீட்டை
வாடகைக்குப் பிடித்து, ஒரு
சமையல்காரரையும் வேலைக்கு அமர்த்திக்கொண்டார். உயர் நீதிமன்றத்தில் தினந்தோறும்
ஆஜராகி, வழக்குகள்
எப்படி நடத்தப்படுகின்றன என்பதைக் கண்காணித்தார். நிறைய நேரத்தை கோர்ட்டின்
நூலகத்திலும் செலவழித்தார். குறிப்பாக, இந்தியச் சட்டங்களைப் பற்றி நிறையப் புத்தகங்களை அவர்
படித்தார்.
அவருடைய முதல் வழக்கு எளிமையானது. ரூ. 30 அவருக்குக் கட்டணமாக
நிர்ணயிக்கப்பட்டது. 22
வயதேயான இளம் வழக்கறிஞர், வாதம்
செய்வதற்கு எழுந்து நின்றபோது பயத்தில் பேச்சு வரவில்லை. தலை சுற்றியது. நா
வறண்டது. அவமான உணர்வுடன் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிவிட்டார். அதற்குப் பின்,
நீதிமன்றத்தில் எந்த
வழக்கையும் அவர் மேற்கொள்ளவில்லை.
அவரது செலவுகள் கூடின. வருமானம் எதுவும் இல்லை.
அவரால் விண்ணப்பங்களைச் சிறந்த முறையில் எழுத முடிந்தது. ஆனால், அது வக்கீல் செய்யவேண்டிய பணி
அல்லவே! அதிலிருந்து வருமானமும் வரவில்லை. சோதனையான ஆறு மாதங்களுக்குப் பின் அவர்
ராஜ்கோட்டுக்குத் திரும்பி, தனது
மூத்த சகோதரர் மற்றும் அவரது குடும்பத்துடன் இணைந்துகொண்டார். அவருடைய அண்ணனுக்கு
இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்த தனது தம்பியின் வெற்றி மீதான
எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் இருந்தன. ஆனாலும், அவருக்கு ஏமாற்றமே கிட்டியது.
காந்திஜி மிகவும் மனம் வருந்தினார்.
ராஜ்கோட்டில் வேறொரு பிரச்சினையும் எழுந்தது.
தன்னிடம் வழக்குகளைக் கொண்டுவரும் ஏஜெண்டுகளுக்குக் கமிஷன் தரவேண்டிய வழக்கம்
அங்கு இருந்தது. அது தவறானது என்று கருதிய காந்திஜி, ஏஜெண்டுகளுக்குக் கமிஷன் தர மறுத்தார். அவருடைய அண்ணன் இது
தவிர்க்க முடியாதது என்று அவருக்கு போதனை செய்து அவரை சம்மதிக்க வைத்தார். அப்போது,
காந்திஜி மாதம் ரூ. 300 வரை சம்பாதித்தார். அவருக்கு
அந்த வேலையும் அங்கு நிலவிய பொய்யும் புரட்டும்
அறவே பிடிக்கவில்லை.
அதிர்ஷ்டவசமாக அப்போது அவருக்கு தென் ஆப்பிரிக்காவில்
இருந்த ஒரு பணக்கார முஸ்லிம் வியாபாரியிடமிருந்து அழைப்பு வந்தது. அவருக்கு ரூ. 1575 ரொக்கமும் தென் ஆப்பிரிக்கா
சென்று திரும்புவதற்கான கப்பல் பயண முதல் வகுப்புக் கட்டணமும் வழங்கப்பட்டது.
அழைப்பை ஏற்று அவர் கப்பலில் ஏறினார். தென் ஆப்பிரிக்காவில் மக்களின் வாழ்க்கை
பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஸான்ஸிபார் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது
இறங்கிச் சென்று அங்கு நீதிமன்றம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்தார்.
அங்கு ஆவணங்கள் எப்படி சமர்ப்பிக்கப்படுகின்றன என்பதை அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை.
அவர் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்டதே, கணக்கு (அக்கவுண்ட்) சம்பந்தப்பட்ட வழக்குக்காகத்தான்.
அக்கவுண்ட் பற்றிய புத்தகம் ஒன்றை வாங்கி அவர் படிக்கத் தொடங்கினார்.
டர்பனுக்கு வந்த மூன்றாவது நாள் அவர் நீதிமன்றத்தில்
ஆஜர் ஆனார். நீதிபதி, காந்திஜி
அணிந்திருந்த தலைப்பாகையை அகற்றும்படி கூறினார். அந்த உத்தரவிற்குக் கீழ்படிய
மறுத்த காந்திஜி, நீதிமன்றத்தை
விட்டு வெளியேறினார். தென் ஆப்பிரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தது முதற்கொண்டே
அங்கு இந்தியர்கள் எப்படி வெள்ளையர்களால் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை அவர்
கவனித்து வந்தார். அவர் மீது “அழையா
விருந்தாளி" மற்றும் “கூலி
பாரிஸ்டர்” ஆகிய
முத்திரைகள் குத்தப்பட்டன. அவமானத்தால் அவர் மனம் வெதும்பினார்.
தனது வாடிக்கையாளராகிய தாதா அப்துல்லாவிடமிருந்து
அவரது வழக்கு பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார். அது பற்றிய சட்டத்தையும் நன்கு
படித்தறிந்தார். வாதி, பிரதிவாதி
இருவரும் தொடர்ந்து வக்கீல்களுக்கு பில் (கட்டணம்) கொடுத்துக்கொண்டிருந்தால்
ஓட்டாண்டிகளாகிவிடுவார்கள் என்று அவருக்குப் பட்டது.
தனது வாடிக்கையாளரின் செலவில் பணம் பண்ணவோ சமூகத்தில் அந்தஸ்து ஏற்படுத்திக்கொள்ளவோ
அவர் விரும்பவில்லை. வாதி பிரதிவாதி இருவரையும் சமரசம் செய்து இணைத்து வைப்பதுதான் ஒரு வழக்கறிஞரின் தலையாய கடமை என்று அவர் நம்பினார்.
அதனால் அவர் பிரதிவாதியைச் சந்தித்துப் பேச விரும்பினார். தாதா அப்துல்லா சற்று
தயக்கம் காட்டியபோது “இந்த
விஷயம் ரகசியமாகவே இருக்கும். யாருக்கும் தெரியவராது. அந்த ஆசாமியை சமரசம் செய்து
கொள்ளும்படி நான் அறிவுறுத்துவேன்" என்று காந்திஜி கூறினார்.
காந்திஜியின் சமரச முயற்சிக்குப் பின்பும் வழக்கு ஓர் ஆண்டு வரை
தொடர்ந்தது. ஒரு சிக்கலான வழக்கை வழக்கறிஞர்கள் எப்படி எல்லாம்
இழுத்தடிக்கிறார்கள் என்பதை அறிவதற்கு காந்திஜிக்கு இது ஒரு சந்தர்ப்பமாக
அமைந்தது. அவர் சாட்சியங்களைத் தயார் செய்தார். வழக்கு இரு தரப்பாருக்கும் திருப்தி ஏற்படும்
விதத்தில் முடிந்துவிட்டது. இருப்பினும் இரு தரப்பிலும் சட்டச் சிக்கல்கள் பற்றிய
வினாக்கள் எழுப்பப்பட்டு செலவு கூடியதை எண்ணும்போது காந்திஜிக்கு வெறுப்புதான்
ஏற்பட்டது.
இதற்குப்பின், அவர் டர்பனில் தொடர்ந்து வழக்கறிஞராகப் பணி செய்தார்.
ஒரு நாள், பாலசுந்தரம்
என்கிற ஒரு அடிமைத் தொழிலாளி கிழிந்த உடைகளுடனும் உடைந்த பற்களுடனும் அவரது
அலுவலகத்திற்கு வந்தார். ஒரு வெள்ளைக்கார முதலாளி பாலசுந்தரத்தை அப்படி அடித்து
உதைத்திருந்தார். காந்திஜி அவரை அமைதிப்படுத்தி, ஒரு வெள்ளைக்கார டாக்டரிடம் சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்து, அவரது
காயங்கள் பற்றிய மருத்துவச் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார். பாலசுந்தரத்திற்காக
நீதிமன்றத்தில் வாதாடி, வெற்றி
பெற்று, அவருக்கு
வேறொரு இடத்தில் வேலையும் வாங்கித் தந்தார் காந்திஜி. இந்தியத் தொழிலாளர்களிடையே
காந்திஜி மிகவும் பிரபலமாகிவிட்டார். “ஏழைப் பங்காளர்" என்று அவரது புகழ் இந்தியாவிலும்
பரவியது. அதற்குப்பின் திக்கற்றவர்களுக்கு அவர் துணையாக விளங்கினார்.
ஒரு ஆண்டு அனுபவத்தில் காந்திஜியின் தன்னம்பிக்கை
கூடியது. கொஞ்ச வாத விவாதங்களுக்குப் பின்பு இந்த "கூலி பாரிஸ்டர்"
நேட்டால் நகர சுப்ரீம் கோர்ட்டில் வாதாட அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த
வெள்ளைக்கார உதவியாளர்கள் அவருக்கு வழக்குகளைத் தர மறுத்தார்கள். அவருடைய
மனப்போக்கும் அவருக்குத் தடையாக அமைந்தது. வழக்கறிஞர்கள் பொய் பேசக் கூடாது என்ற
கொள்கை காரணமாகவும் அவரிடம் வழக்குகள் வரவில்லை. எக்காரணம் கொண்டும் வழக்கின்
வெற்றிக்காக பொய் பேசுவதில்லை. சாட்சிக்களுக்குப் "பாடம்" (பொய்
சாட்சியப் பயிற்சி) சொல்வதும் இல்லை. ஒரு வழக்கு தோற்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி,
அவர் ஒரே மாதிரியான
கட்டணம்தான் வசூலித்தார். நிலுவையாக இருந்த கட்டணத்திற்காக வாடிக்கையாளர்களுக்கு
அவர் நினைவூட்டுக் கடிதம் அனுப்புவதில்லை, தனது சொந்த, மான
அவமானம் பற்றிய விஷயங்களுக்காக அவர் யார் மீதும் வழக்குத்
தொடரவில்லை. நான்கு தடவைகள் தென் ஆப்பிரிக்காவில் அவர் தாக்கப்பட்டார். தன்னைத்
தாக்கியவர்களை அவர் நீதிமன்றத்திற்கு இழுக்கவில்லை. இருபது ஆண்டுகள் தென்
ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் நூற்றுக்கணக்கான
வழக்குகளை கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து வைத்தார்.
ஒரு தடவை ஒரு வழக்கை நடத்தும்போது தனது வாடிக்கையாளர்
நாணயமற்றவர் என்பதை உணர்ந்தார். வழக்கைத் தள்ளுபடி செய்ய நீதிபதியிடம் அவர் வேண்டினார்.
தனது வாடிக்கையாளரையும் பொய் வழக்குப் போட்டதற்காகக் கண்டித்தார். காந்திஜி,
ஒரு சந்தர்ப்பத்தில்
இவ்வாறு கூறினார். “நான்
ஒரு இரண்டாம்தர வழக்கறிஞராகத்தான் எனது சட்டப் பணியைத் தொடங்கினேன். எந்தச்
சந்தர்ப்பத்திலும் நான் சத்தியப் பாதையிலிருந்து விலகமாட்டேன் என்பதை
வாடிக்கையாளர்கள் உணர்ந்தபோது அவர்கள் என்னிடமே ஒட்டிக்கொண்டார்கள்." அவருடைய
வாடிக்கையாளர்கள் அவரது நண்பர்களாகவும் சக ஊழியர்களாகவும் மாறினர். நேர்மைக்கு ஓர் ஒப்பற்ற உதாரணமாக விளங்கியதன்
காரணமாக ஒரு தடவை ஒரு வாடிக்கையாளரை அவர் சிறை செல்வதிலிருந்து காப்பாற்றினார்.
அந்த வாடிக்கையாளர் பல பொருள்களை வரிக் கட்டாமல் கடத்தல் செய்து வந்தார். அவரது
கெளரவத்திற்கு சவால் வந்தபோது, காந்திஜியிடம்
அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்திலும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு
தண்டனையை ஏற்றுக்கொள்ளும்படி அவருக்கு காந்திஜி அறிவுரை வழங்கினார். கூடவே,
அட்டார்னி ஜெனரலையும்
சுங்கத்துறை அதிகாரியையும் சந்தித்து வழக்கு பற்றிய உண்மையான விபரங்களைக்
கூறினார். காந்திஜி கொடுத்த தகவல்களை அப்படியே ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அந்த
வாடிக்கையாளருக்கு அபராதம் மட்டுமே விதித்தனர். சிறைத் தண்டனை வழங்கவில்லை. இந்த
விவரம் அனைத்தையும் அச்சிட்டு அந்த வாடிக்கையாளர் தனது அலுவலகத்தில் எல்லோரது
பார்வைக்கும் வைத்துவிட்டார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், காந்திஜியின் வாடிக்கையாளருடைய கணக்குப்
புத்தகங்களில் சில தவறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி காந்திஜியே
எதிர்த் தரப்பினருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, வழக்கைத் தொடர்ந்து வாதாடினார். வழக்கை முறையாக
வாதாடவில்லை என்று காந்திஜியை முதலில் கண்டித்த நீதிபதி, பிற்பாடு காந்திஜி பக்கமே தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதியே எதிர்த் தரப்பினரிடம் “இப்படி
காந்திஜி தனது பக்கம் இருந்த தவறை ஒப்புக்கொண்டிராவிட்டால் என்ன செய்து
இருப்பீர்கள்?" என்ற
கேள்வியையும் கேட்டார்.
குறுக்கு விசாரணையிலும் அவர் கை தேர்ந்தவர்.
நீதிபதிகளும் ஏனைய வழக்கறிஞர்களும் காந்திஜிக்கு மரியாதை செலுத்தினர். நிறைய
வெள்ளைக்கார வாடிக்கையாளர்களும் காந்திஜியிடம் வந்தனர். இந்தியாவிலும் சரி,
தென் ஆப்பிரிக்காவிலும்
சரி, ஐரோப்பியர்களுக்கும்
இந்தியர்களுக்கும் இடையே நடக்கும் வழக்குகளில் 99 சதவீதம் வழக்குகளில் இந்தியர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை
என்பதை காந்திஜி உணர்ந்திருந்தார். ''கொடூரமான கொலைகளுக்காக எந்த ஆங்கிலேயனுக்காவது கடுமையான
தண்டனை இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளதா?" என்ற கேள்வியை காந்திஜி பல தடவை கேட்டு வந்தார். தென்
ஆப்பிரிக்காவிலும் கறுப்பர்களிடம் வன்முறையைப் பிரயோகித்து துன்புறுத்திய
வெள்ளையர்களுக்கு மிகவும் குறைவான தண்டனையே வழங்கப்பட்டது.
இவ்வாறு, கடுமையான நிபந்தனைகளுக்குட்பட்டுப் பணி செய்து சட்டத்தைப்
பற்றி இழிவாகப் பேசியும்கூட காந்திஜிக்கு வழக்கறிஞர் பணியில் நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது.
தென் ஆப்பிரிக்காவில் அவர் 20
ஆண்டுகளுக்கு மேலாக பாரிஸ்டராகப் பணிபுரிந்தார். தொடக்க காலத்தில் நகரின் மையமான
இடத்தில் வசதியான ஒரு வீட்டில் தங்கிப் பணியாற்றினார். அந்த வீடு, ஐரோப்பியப் பாணியில் வசதிகள்
செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் அவர் வீட்டில்
பலருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. நண்பர்களுக்கும் உடன் பணியாற்றுபவர்களுக்கும்
அவர் வீட்டில் இடம் அளிக்கப்பட்டு அது ஒரு சத்திரமாக விளங்கியது. அவருடைய அலுவலகம்
அவர் வசித்த வீட்டிலிருந்து ஆறு மைல் தூரத்தில்
இருந்தது. சில மாதங்கள் வரை அவர் சைக்கிளில் அலுவலகம் சென்று வந்தார். பிறகு,
கால்நடையாகவே சென்றார்.
டிராம் வண்டிகளின் முன்வரிசைகளில் அக்காலகட்டத்தில் இந்தியர்கள் உட்கார
அனுமதிக்கப்படாத காரணத்தால் அவர், டிராம் வண்டிகளில் ஏறுவதில்லை. அவர்
முயற்சித்திருந்தால் அவருக்கு விசேஷ அனுமதி கிடைத்திருக்கும். அவர் தன்னை ஒரு
ஏழைப் பங்காளனாகப் பாவித்து அங்கு வாழ்ந்து வந்த ஏழை இந்தியத் தொழிலாளர்களைப் போல
எளிய வாழ்க்கை முறையையும் படிப்படியாக மேற்கொண்டார். அவரது 40வது வயதில் அவரது மாத வருமானம்
சராசரியாக ரூ. 4000
ஆக இருந்தது. அந்தக் கட்டத்தில் அவர் தனது வழக்கறிஞர் பணியைத் துறந்தார். தன்
வாழ்க்கையை பொதுஜன சேவைக்காக அர்ப்பணித்துக்கொண்டார். அவரிடம் இருந்த எல்லாப் பொருள்களும்
சமுதாயத்திற்கு வழங்கப்பட்டன. அவர் ஒரு விவசாயப் பண்ணையைத் தொடங்கி உடல் உழைப்பின்
மூலம் வாழத் தொடங்கினார்.
பல ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவில் வழக்கறிஞர்கள்
நிறையக் கட்டணம் வசூலிப்பதை அவர் கண்டனம் செய்தார். கோர்ட் செலவுகளும் அளவுக்கு
அதிகமாக இருப்பதாக அவர் கருதினார். ஜனங்களின் ஏழ்மை நிலைக்கும் நீதிமன்றத்திற்கும்
இடையே தூரம் அதிகமாக உள்ளது பற்றி அவர் வருந்தினார். “ஒரு வழக்கறிஞர் மாதம் ரூ. 50,000 முதல் ரூ. 1,00,000 வரை சம்பாதிக்க முடிகிறது.
ஆனால் சட்டத் தொழில் பணி சூதாட்டம் அல்ல. கோர்ட்டுகளும் வழக்கறிஞர்களும்
இல்லாவிட்டால் நமது வாழ்க்கையில் நிம்மதி அதிகமாகவே இருக்கும். வழக்கறிஞரின் தொழிலே
நெறியற்றது. பொய் சாட்சிகள் இரு தரப்பிலும் தயாரிக்கப்படுகின்றன. இவர்கள் பணத்திற்காக
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்." என்றெல்லாம் காந்திஜி கூறிவந்தார்.
ஜனங்களுக்கு அதிகச் செலவில்லாமல் நியாயம் கிடைக்க வேண்டுமானால் சட்டங்களில்
அடிப்படை மாற்றங்கள் தேவை என்று காந்திஜி கூறிவந்தார். ஏழைகளுக்காக அவர் இலவசமாக
வாதாடி வந்தார். பொது நலத்திற்கான வழக்குகளில் தனது அடிப்படைத் தேவைக்கான குறைந்த
கட்டணத்தை மட்டுமே அவர் வசூலித்து வந்தார். நகராட்சிகள், ஏழை மக்களை அவர்களது குடியிருப்புகளிலிருந்து
வெளியேற்றியபோது அவர் அந்த ஏழைகளுக்காக வாதாடி வந்தார். ஒவ்வொரு வழக்கையும்
மிகவும் உழைத்துப் போராடியும்கூட கட்டணமாக ரூ. 150 மட்டுமே வசூலித்து வந்தார். அவர் எடுத்துக் கொண்ட 70 வழக்குகளில் ஒன்றில் மட்டுமே
அவர் தோல்வியைச் சந்தித்தார். அந்த வருமானத்திலும் பாதியை அவர் ஒரு அறக்கட்டளைக்கு
நன்கொடையாக வழங்கிவிட்டார்.
தனது நாட்டு மக்கள் மனித உரிமைகளைப் பெற வேண்டும்
என்பதற்காக அவர் அரசுக்கெதிரான ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். அவர் தென்
ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பல தடவைகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவைப் பொருத்தவரை, எந்த
நீதிமன்றத்தில் அவர் பத்தாண்டுகள் பாரிஸ்டராக வழக்காடினாரோ அதே நீதிமன்றத்தில்
கைகளில் விலங்குடன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். இந்தியாவில் சிறைத்
தண்டனைக்குப்பின் வழக்கறிஞர்களுக்கான ரிஜிஸ்டரிலிருந்து அவரது பெயர்
நீக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நீதிமன்றங்களைப்
புறக்கணித்து. பஞ்சாயத்து முறையை அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்திவந்தார்.
அவரது அறைகூவலுக்கு இணங்கி பல பிரசித்தி பெற்ற வழக்கறிஞர்கள்
தங்களது பணியைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருமுறை, அவர் ஒரு வழக்கறிஞர் சங்கத்தில் உரையாற்றிய போது தனது பெயர்
வழக்கறிஞர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, தான் சட்டத்தை மறந்துவிட்டதாகக் கூறினார். அவர்
பெரும்பாலும் சட்டத்தை விளக்கும் பணிக்கு பதிலாக சட்டத்தை உடைக்கும் பணியில்
ஈடுபட்டிருப்பதையும் வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைத்தார்.
Comments
Post a Comment