நிறைய கேஸ் கட்டுகள் உள்ள அந்த வக்கீல் தனது
வாடிக்கையாளர்களிடம், “வழக்காடிப்
பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள். கோர்ட்டுக்கு அப்பால் பேச்சுவார்த்தை
நடத்தி ஒரு உடன்பாடு செய்துகொள்ளுங்கள்” என்று புத்திமதி சொன்னார். ஓய்வு நேரங்களில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பாரசீக, புத்த மதங்களைச் சார்ந்த நூல்களைப் படித்தார்.
சான்றோர்கள் எழுதிய வேறு சில புத்தகங்களையும் படித்தார். இப்படிப்பட்ட நூல்களைப்
படித்து சிந்தித்தபின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சிறிதளவாவது உடல்
உழைப்பில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். மூளைக்கு வேலை கொடுத்தால்
மட்டும் போதாது. படித்தவர்கள், படிக்காதவர்கள்
மருத்துவர்கள், வக்கீல்கள்,
நாவிதர்கள், துப்புறவுத் தொழிலாளர்கள்,
எல்லோருடைய பணிகளுக்கும்
சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
தனது வாழ்க்கை முறையைப் படிப்படியாக மாற்றிக்கொண்ட
அவர், தன்னால் இயன்ற பணிகளை
எல்லாம் செய்யத் தொடங்கினார். ஒரு ஆசிரமத்தைத் துவங்கி அதில் தனது நண்பர்கள்
மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து எளிமையான ஒரு சமூக வாழ்க்கை வாழவேண்டும் என்று
அவர் முடிவு செய்தார். அவருடைய ஐரோப்பிய நண்பர்களும் ஆசிரம வாழ்க்கையில் பங்கேற்க
விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் எல்லோருமே கடும் உழைப்பாளிகளாகவும் சுயதேவைப்
பூர்த்தி விவசாயிகளாகவும் மாறி நிலங்களை உழுது பயிர்களைப் பராமரித்தனர்.
கூலிவேலைக்கு என்று யாரையுமே வைத்துக்கொள்ளவில்லை. அந்தப் பண்ணையில், இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், பாரசீகர்களும், பிராமணர்களும், பிராமணர் அல்லாதவர்களும்,
உழைப்பாளிகளும், வக்கீல்களும், வெள்ளையர்களும், “கருப்பர்களும்” ஒரு பெரிய குடும்பத்தின்
அங்கத்தினர்களாக வாழ்ந்தனர். எல்லோருக்கும் பொதுவாகத் தயாரிக்கப்பட்ட உணவை,
ஒன்றாக ஒரே அறையில்
அமர்ந்து உண்டனர். குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் மாதம் ரூ. 40 செலவுக்காக வழங்கப்பட்டது.
பாரிஸ்டரின் (வக்கீலின்) மாத வருமானம் ரூ. 4000க்கும் அதிகமாக இருந்தும்கூட அவருக்கும் மாதச்
செலவுக்கு ரூ. 40தான்
அனுமதிக்கப்பட்டது. ஒரு கால அட்டவணையைத் தயாரித்து அதில் நாள் ஒன்றுக்கு ஆறு மணி
நேரம் மட்டுமே ஒய்வுக்கு இடம் ஒதுக்கி, ஒரு கடினமான வாழ்க்கை முறையைத் தனதாக்கிக்கொண்டார் அவர்.
பண்ணையில் சிறிய வீடு ஒன்று கட்டப்பட்டபோது கூரை மீது
ஏறிய முதல் நபர் அவர்தான். முரட்டுத் துணியில் தைக்கப்பட்ட நீல நிறத்தில், நிறையப் பைகளுடன் கூடிய ஒரு
பெரிய சட்டையை அவர் அணிந்திருந்தார். அப்பைகளில் பல்வேறு வலைகளில் சிறிதும்
பெரிதுமான ஆணிகளும் 'ஸ்க்ரூக்'களும் நிறைந்திருந்தன. ஒரு
பையிலிருந்து ஒரு சுத்தியல் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு சிறிய ரம்பமும்
துளைபோடும் கருவியும் அவரது பெல்ட்டில் தொங்கின. ஒவ்வொரு நாளும் கடும் வெயிலில்
அவர் சுத்தியல் மற்றும் ரம்பத்துடன் உழைத்து வந்தார்.
ஒரு நாள் சாப்பாட்டிற்குப்பின் ஒரு புத்தக அலமாரியைத்
தயாரிக்கத் தொடங்கினார். ஏழு மணி நேர கடுமையான உழைப்பிற்குப்பின் அறையின் கூரையைத்
தொடும் அளவிற்கு உயரமான புத்தக அலமாரி தயார் ஆகிவிட்டது. தெருப் பக்கத்திலிருந்து
ஆசிரமம் வரையிலான பாதையை சரளைக்கல் பரப்பி அமைக்க அவர் விரும்பினார். அதற்கு நிறைய
செலவாகுமே என்று யோசித்தார். தினமும் காலை நேரத்தில் உலாவச் சென்று திரும்பும்
சமயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கற்களைச் சேமிக்கத் தொடங்கினார். மற்ற ஆசிரமவாசிகளும்
அவருடைய உதாரணத்தைப் பின்பற்றி கற்களைக் கொண்டுவந்து குவித்தனர். குறுகிய
காலத்திற்குள்ளாகவே சரளைக் கற்களினாலான பாதை தயாராகிவிட்டது. இப்படித்தான் அவர் மற்றவர்களை
உடல் உழைப்பில் ஈடுபடுத்தினார். ஆசிரமத்தில் இருந்த சிறுவர் சிறுமியரும் தோட்டவேலை,
சமையல், துப்புறவுப் பணி, தச்சுவேலை, தோல்பொருள்கள் பணி மற்றும்
அச்சுக் கோர்த்தல் ஆகிய பணிகளில் பங்காற்றினர்.
கட்டிடத் தொழிலாளர்களையும், செருப்புத் தைப்பவர்களையும், தச்சர்களையும், கொல்லர்களையும், நாவிதர்களையும் நாம் தாழ்ந்தவர்களாகக்
கருதிவருவதினால்தான் நமக்கு இப்படி ஒரு இழிநிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்
கூறிவந்தார். "இப்படி அவர்களைத் தாழ்ந்தவர்களாக நடத்துவதன் மூலம் அவர்களது
பணிகளின் சிறப்பையும், மேன்மையையும்,
கலாச்சாரத்தையும்
அவமதித்துவிட்டோம். தொழில் வல்லுநர்களைத் தாழ்ந்தவர்களாகவும், பேனா பிடித்தவர்களை
உயர்ந்தவர்களாகவும் கருதி நம்மிடம் நாமே அடிமைத்தனத்தை
வளர்த்துக்கொண்டுவிட்டோம்" என்றும் அவர் கூறிவந்தார்.
அதிகாலையில் எழுந்ததும் அவர் செய்த முதல் பணி,
திரிகையில் கோதுமை மாவு
அரைத்ததுதான். பிறகு, உடையணிந்து
ஐந்து மைல்களுக்கு அப்பால் இருந்த தனது அலுவலகத்திற்குக் கால் நடையாகச் சென்றார்.
அவர் தனது தலை முடியைத் தானே திருத்திக்கொண்டார். தனது துணிகளைத் தானே துவைத்து உலர்த்தி
இஸ்திரி போட்டு வைப்பார். ஆப்பிரிக்க கனிமச் சுரங்கங்களில் பணியாற்றிய சிலர் கொடிய
உயிர்க்கொல்லி மற்றும் தொற்று நோயான பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.
இரவெல்லாம் கண்விழித்து பிளேக் நோயாளிகளை அவர் கவனித்து வந்தார். குஷ்ட
நோயாளிகளின் காயங்களைக் கழுவி வந்தார். கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது பற்றி அவர்
வெட்கப்படவில்லை. சோம்பல், பயம்,
வெறுப்பு ஆகிய குணங்களை
அவரிடம் காண முடியாது. தனது பத்திரிகைக்கான கட்டுரைகளை எழுதி தாமே தட்டச்சு
எந்திரத்தில் டைப் செய்து, அச்சகம்
சென்று அச்சுக் கோர்த்து, சமயத்தில்
அச்சடிப்பவருடனும் சேர்ந்து அச்சடித்தும் வந்தார் அவர்! புத்தகங்களை பைண்டிங்
செய்வது அவருக்கு கைவந்த கலை. கற்பனைத் திறன் படைத்த அந்தக் கைகள் ஆசிரியர்
பக்கத்தை ஆர்வம் தூண்டும் விதத்தில் எழுதும்; கடிதங்களும் எழுதும்; ராட்டையில் நூல் நூற்கும்; தறியில் துணியை நெய்யும்; புதிய உணவுகளைத் தயாரிக்கும்; ஊசி, நூல்
கொண்டு துணிகளைத் தைக்கும்; பழங்களையும்
காய்கறிகளையும் பயிரிட்டு வளர்க்கும், வயலில் ஏர் உழும்; கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சும்; ரம்பத்தைக் கையில் பிடித்து மர வேலைகள் செய்யும்;
வண்டியிலிருந்து பாரத்தை
இறக்கி வைக்கும்.
சிறையில் இருந்தபோது கடினமான தரையைக்கூட பிக்காசியைக்
கொண்டு அவர் தோண்டி இருக்கிறார். ஒரு நாளில் ஒன்பது மணி நேரம் வரை கிழிந்த
போர்வைகளைத் தைப்பார். சோர்வு வரும் போதெல்லாம், தனக்குப் பலத்தைத் தரும்படி அவர் கடவுளை வேண்டுவார்.
தனக்குத் தரப்பட்ட பணியைத் தன்னால் செய்ய இயலாமல் போகும் என்பது அவரால் நினைத்துப்
பார்க்க முடியாத ஒன்று.
தனது வாழ்வின் மேலான நிலையில் இருந்த சமயத்தில்,
கடைகளில் ஏதாவது
சாமான்கள் வாங்குவதற்காக தினமும் 40
மைல்கள் அவர் நடந்திருக்கிறார். ஒரு தடவை 55 மைல்களும் அவர் நடந்துள்ளார். அவர் சுயசேவை செய்து
வந்த காலத்தில் காயமுற்ற போராளிகளை 30, 40 மைல்கள் தூரத்திற்கு ஸ்ட்ரெச்சரில் சுமந்து
சென்றிருக்கிறார். தனது 78வது
வயதில்கூட வாரக் கணக்கில் தினந்தோறும் 18 மணி நேரத்திற்கு, சில நாட்களில் 21 மணி நேரத்திற்கும்கூட அவர் பணிசெய்து வந்தார். அந்த வயதில்
உடல் உழைப்பு அவருக்கு சற்று சிரமமாக இருந்தது. இருப்பினும் நூற்புப் பணியை அவர்
தொடர்ந்து வந்தார். குளிர் காலத்தில்கூட பனி படர்ந்த கிராமச் சாலைகளில்
வெறுங்காலுடன் மூன்று முதல் ஐந்து மைல்கள் வரை அவர் நடப்பது உண்டு. பணிகளைச்
செய்வதில் அவருக்கிருந்த வியக்கத்தகு ஈடுபாடு மற்றும் திறமையைப் பாராட்டிய தென்
ஆப்பிரிக்க நண்பர்கள் அவருக்குக் “கர்மவீரர்"
என்ற பட்டத்தை அளித்தனர்.
கர்மவீரர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தார்.
Comments
Post a Comment