தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பல எழுத்தாளர்கள் தாமே தங்கள் நூல்களை நேரடியாக கிண்டிலில் வெளியிடுகின்றனர். சில எழுத்தாளர்களின் படைப்புகளில் பெரும்பாலானவை கிண்டில் மின்னூல்களாகவும் கிடைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வாசகப் பரப்பில் மின்னூல் வாசிப்பு குறிப்பிடத்தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது.
அழிசி நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அவற்றை அமேசானில் பதிவேற்றுகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல முக்கியமான நூல்கள் மின் புத்தகங்களாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கான வாசகர்களால் அவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகையை வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் விமர்சனக் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டியில் இரண்டாயிரத்துக்குப் பின் வந்த நாவலைப் பற்றிய விமர்சனக் கட்டுரையைக் கோரி போட்டி அறிவிக்கப்பட்டது. சிறந்த கட்டுரையை எழுதிய கட்டுரையாளருக்கு 12,000 ரூபாய் மதிப்பிலான கிண்டில் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மூன்று கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக 12,999 ரூபாய் மதிப்புள்ள கிண்டில் (10th Gen Kindle Paperwhite) வழங்கப்படும். இரண்டாம் பரிசாக (இரண்டு பேருக்கு) 7,999 ரூபாய் மதிப்புள்ள கிண்டில் (10th Gen All New Kindle) அளிக்கப்படும்.
போட்டிக்கான நிபந்தனைகள்
1. இரண்டாயிரம் அல்லது அதற்குப் பிறகான வருடங்களில் முதல் நூல் வெளியிட்ட, தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் ஏதேனும் ஒரு நூலைப் பற்றிய விமர்சனக் கட்டுரையாக இருக்க வேண்டும்.
2. மொழிபெயர்ப்பு தவிர, நாவல், சிறுகதை, கவிதை என எந்த வகை புனைவு நூலைப் பற்றியும் எழுதலாம்.
3. கட்டுரை குறைந்தபட்சம் 1000 வார்த்தைகள் கொண்டதாக இருக்க வேண்டும். அதிகபட்ச வரம்பு கிடையாது.
4. ஒரு போட்டியாளர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகாததாகவும் இருக்க வேண்டும்.
5. Unicode எழுத்துருவில் Word Document ஆக அனுப்பவும். கோப்பினுள் கட்டுரையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடக் கூடாது.
6. கட்டுரையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி azhisiebooks@gmail.com. (கட்டுரையுடன் பெயர், முகவரி, அலைபேசி எண் போன்ற விபரங்களையும் மின்னஞ்சலில் குறிப்பிடவும். அலைபேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். Subject-ல் 'கட்டுரைப் போட்டி 2019' என்று குறிப்பிடவும்.)
7. கட்டுரையாளர் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும் என்பதால் கட்டுரையாளர் தவறாமல் இந்திய முகவரி ஒன்றை குறிப்பிட வேண்டும்.
8. கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30.11.2019
Comments
Post a Comment