முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப்
படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு
ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக்
கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன்.
இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி
முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம்
எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும்
பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி
அடைந்தேன்.
நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு
நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன்
நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும்
நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன், ராமாயி,
கெட்டியப்பன் எல்லோரும்
தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும்
உயிர்பெற்று உலவுகிறார்கள்.
கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக்
கைத்தொழில்கள் மறுபடி உயிர்பெற வேண்டுமென்கிறோம். அவற்றிற்கெல்லாம் முன்பு கிராம
வாழ்வே புத்துயிர் பெற வேண்டும்; அதாவது
குடியான வாழ்வின் அழகிய அம்சங்கள் மக்கள் மனதைக் கவரும்படியான முறையில்
சித்திரங்கள் உற்பத்தியாக வேண்டும். கிராம பாஷையின் மூர்ச்சனை ஸ்தானங்கள் எல்லாம்
எல்லோருக்கும் அறிமுகமாக வேண்டும். ஹார்டியினுடைய வெஸ்ஸெக்ஸ் நாவல்களைப் போன்ற
அழியாத எழுத்துக்கள் தமிழ்நாடெங்கும் தோன்றி கிராம வாழ்க்கையின் விரிவையும்
மேன்மையையும் தூய்மையையும் படம் பிடிக்க வேண்டுமென்று எனக்கு வெகுநாளைய அவா.
ஷண்முகசுந்தரத்தின் நவீனம் அந்த வகையில் முதல் நூல்
என்றே சொல்லவேண்டும். வெங்கமேடு ஹார்டியின் எக்டன் பொட்டலை நினைப்பூட்டுகிறது.
பெரியவருக்கு உற்சாகம் அதிகரித்தது. ஒருதரம்
கனைத்துக் கொண்டு, “கேளடா
ராஜா, மலைபோலே மண்டிக் கிடந்த
கள்ளிகளெல்லாம் மாயமாய் மறஞ்சது பாத்தாயா? நாம் எத்தனை நாள் கத்தியிலும் அரிவாளிலும் வெட்டித்
தள்ளியும் வெட்டவெட்டக் கொழுத்தது? எப்படிப்
பூண்டற்றுப் போச்சுது, பாத்தாயா?
கள்ளியை நாசம் பண்ணின
வெள்ளைப்பூச்சியையும் பார்த்திருப்பாய்... இண்ணைக்கு ஒரு ஆனையைக்கூட
தூக்கியடிக்கலாமென்று உனக்குத் தோணுது... ஆனா இந்த நல்ல ரத்தம் நொடியிலே
மறைஞ்சுடுமப்பா!...'
இதில் ஷண்முகசுந்தரத்தின் தமிழ் நடையிலுள்ள
மேன்மையும் குறையும் நன்றாகத் தெரிகிறது. குடியானப் பேச்சை வெகு நுட்பமாக
கிரகித்திருக்கிறார்; ஆனால்
நடுவில் சில இலக்கணப் பதங்கள் சேர்ந்து கொச்சையின் வேகத்தைக் குறைக்கின்றன.
ஆனால் முதல் முதலாக எழுதிய நூலில் எல்லா
எழுத்தாளர்களுக்கும் இருக்கும் கொச்சை இலக்கணத் தொல்லையை இவ்வளவுதூரம்
சமாளித்திருப்பதே பெரிய விஷயம்.
இன்னும் சில குறைகள் இருக்கலாம், இருக்கின்றன. ஆனால் என்ன?
இந்தமாதிரி குடியான
வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நவீனம் இதுதான்.
ஆசிரியர் இளைஞர்; கவியுள்ளத்துடன் குடியான வாழ்க்கையை அனுபவித்து
நுட்பமாகக் கவனித்து மனதில் பதித்துக்கொண்டவர். தெளிவாக எழுதும் சக்தியும்
பெற்றிருக்கிறார். அவர் மேலும் குடியான வாழ்க்கையை இன்னும் பல சித்திரங்களில் நமக்கு
அளிக்கவேண்டும்.
ஏனெனில் அந்த வாழ்க்கையில்தான் எளிமையும் நம் குணமும்
இருக்கிறது; அதில்தான்
சிக்கனமும் பெருந்தன்மையும் இருக்கிறது; அதில்தான் பரோபகாரமும் ஆத்மீகப் பற்றும் இருக்கிறது.
அதுதான் உயர்விற்கு ஆதாரம்; அது
புனருத்தாரமானால் கிராமப் புனருத்தாரணம் நிறைவேறும்.
கு. ப. ராஜகோபாலன்
கும்பகோணம்
1.6.42
Comments
Post a Comment