Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 19


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1947 (வயது 78)

ஜனவரி 2-ஆம் தேதி காலை 7 மணிக்குக் காந்திஜி ஸ்ரீராம்பூரிலிருந்து புறப்பட்டு, மூங்கில் கழியை ஊன்றிக்கொண்டு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தமது யாத்திரையைத் தொடங்கினார். அப்போது அவருடன் சென்றவர்கள் பேராசிரியர் நிர்மல் குமார் போஸ், மனு, பரசுராம், ராமச்சந்திரன் ஆகியோர். செல்லும் வழியில் முஸ்லிம்களும் ஹிந்துக்களும் வந்து காந்திஜிக்குத் தங்கள் மரியாதையைத் தெரிவித்தனர். ஒன்பது மணிக்குச் சண்டிபூர் போய்ச் சேர்ந்தார். அங்கே தாம் மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்கப் போவதாகவும் அதன் பிறகுதான் தமது யாத்திரை ஆரம்பமாகும் என்றும் காந்திஜி சொன்னார்.

ஜனவரி 4-ஆம் தேதியன்று, சண்டிபூரிலிருந்து ஒரு மைல் தூரத்திலுள்ள சங்கிர்காவன் கிராமத்தில் காந்திஜி ஒரு பாட சாலையைத் திறந்து வைத்தார்.

ஜனவரி 7-ஆம் தேதி, நாளொன்றுக்கு ஒரு கிராமம் வீதம் செல்லும் யாத்திரையைக் காந்திஜி மேற்கொண்டார். சண்டிபூரிலிருந்து காலை 7.25-க்குப் புறப்பட்டு இரண்டரை மைல் தூரம் நடந்து 9 மணிக்கு மாஸிம்பூருக்குப் போய்ச் சேர்ந்தார். அப்பொழுது காந்திஜி, தமது காலில் ஒரு வெடிப்பு இருந்துங்கூடச் செருப்புப் போடாமல் வெறும் கால்களுடனேயே நடந்து சென்றார். மாலை 4 மணிக்கு அங்கே வழக்கம்போலப் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. அக் கூட்டத்திற்கு 2,000 பேர் வந்திருந்தனர். அதுவே தமது பாதயாத்திரையின் முதல் நாள் என்பதைக் காந்திஜி கூட்டத்தில் தெரிவித்தார்.

கிராம சேவா சங்கத்தார் தயாரித்த ஓர் அறிக்கை காந்திஜியிடம் கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ராம்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 669 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன என்றும், அவற்றில் 334 வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன என்றும், சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் என்றும், மைனாரிடி வகுப்பினருக்கு உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருந்ததற்குக் காரணம் அவர்கள் மதம் மாற்றப்பட்டதுதான் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஜனவரி 8-ஆம் தேதி மாஸிம்பூரிலிருந்து காலை 7.40 மணிக்குக் காந்திஜி புறப்பட்டு வெறும் காலுடனேயே நடந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பத்தேபூருக்குப் போய்ச் சேர்ந்தார். போகும் வழியில் முஸ்லிம்கள் அவரைச் சலாம் செய்து வரவேற்றார்கள்.

திட்டப்படி யாத்திரை தொடர்ந்து நடைபெற்றது. தஸ்பாரா, ஜகத்பூர், லம்சார், கர்பாரா, ஷஹாபூர், பாட்டியால்பூர் நாராயண்பூர், தஸ்காரியா முதலிய கிராமங்களில் ஒவ்வொரு நாள் தங்கிப் பிரார்த்தனைக் கூட்டங்களில் நல்லுரை பகர்ந்துவிட்டு, ஜனவரி 19-ஆம் தேதி அதகோராவுக்குச் சென்று தங்கினார். அது அவரது பாத யாத்திரையில் பதின்மூன்றாவது கிராமமாகும். மறுநாள் ஷிராண்டி என்ற கிராமத்துக்குச் சென்றார். ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகக் கடந்த 24 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அம்துஸ் சலாம் என்ற முஸ்லிம் பெண்மணியைப் போய்ப் பார்த்தார். அப் பெண்மணி, காந்திஜியின் ஆசிரமத்தைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் சமாதானத்தை நிலைநாட்டுவதாகச் சில முஸ்லிம் பிரமுகர்கள் எழுத்து மூலம் உறுதிமொழியளித்தபின், காந்திஜியின் ஆலோசனைப்படி அம்துஸ் சலாம் தமது உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

ஜனவரி 21-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஷிராண்டியிலிருந்து புறப்பட்டு, கெத்தூரி, பானியாலா, டால்ட்டா , முரைம், ஹீராபூர், பன்ஸா , பல்லா, சத்கில், ஜோயாக், அம்கி, நவகிராம் ஆகிய ஊர்களுக்கு யாத்திரை செய்து பிப்ரவரி முதல் தேதி அமிஷபாராவுக்குப் போய்ச் சேர்ந்தார். அநேக ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகளிலேயே தங்கியிருந்தார். 2-ஆம் தேதி சத்கரியாவுக்கும், 3-ஆம் தேதி சதுர்கில்லுக்கும் போனார்.

பிப்ரவரி 5-ஆம் தேதி காலையில் காந்திஜியின் யாத்திரையில் இரண்டாவது கட்டம் ஆரம்பமாயிற்று. நோவாகாலி கிராமங்களில் யாத்திரை செய்வதற்குக் காலை 7.30மணிக்குச் சதுர்கில்லிலிருந்து புறப்பட்டார். சுமார் 2 மைல் தூரத்திலுள்ள ஸ்ரீநகருக்கு ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றார். பிப்ரவரி 6-ஆம் தேதி தரம்பூரை அடைந்தார். தாம் செருப்பில்லாமல் நடப்பதைப் பற்றிப் பத்திரிகையாளர்களிடம் காந்திஜி கூறியதாவது: "வெறும் காலுடன் நான் நடப்பது பரபரப்பையோ ஆச்சரியத்தையோ உண்டுபண்ண வேண்டியதில்லை. எனக்கு அது கஷ்டமாக இல்லை. நோவாகாலியன் மண் வெல்வெட் மாதிரி இருக்கிறது. பசும்புல்லும் பிரமாதமான கம்பளத்தைப்போல இருக்கிறது. இந்த மண்ணிலும் புல்லிலும் நடக்கச் செருப்பே தேவையில்லை. குஜராத்தில் இப்படி நடந்திருக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். வெறும் காலுடன்தான் புனித யாத்திரை செய்வது வழக்கம். இந்தப் பிரயாணமும் எனக்குப் புனித யாத்திரைதான்.''

பிரசாத்பூர், நந்திகிராமம், விஜயநகர், ஹம்சாடி, கபீலாதலி, கிழக்குக் கெரோவா, ராய்ப்பூர், தேவிப்பூர் ஆகிய கிராமங்களுக்கு யாத்திரை செய்துவிட்டு, பிப்ரவரி 18-ஆம் தேதியன்று நோவாகாலி ஜில்லாவைவிட்டு, திப்பேரா ஜில்லாவுக்குள் பிரவேசித்து அலூனியா என்ற ஊருக்குச் சென்றார். ஒவ்வோர் ஊரிலும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. ஒற்றுமை, அகிம்சை ஆகியவற்றை வற்புறுத்திக் காந்திஜி பேசியதுடன், கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார்.

சார் டூகியா, சார்லாருவா, கமலாப்பூர், சார்கிருஷ்ணப்பூர், சார்ஸோலாடி ஆகிய ஊர்களுக்குச் சென்று பிப்ரவரி 24-ஆம் தேதி ஹைம்சாரை அடைந்தார். அந்தச் சமயத்தில் காந்திஜி பீகாரில் இருக்க வேண்டியது அவசியம் என்று பீகார் மந்திரி டாக்டர் சையத் முகமதுவிடமிருந்து காந்திஜிக்குக் கடிதம் கிடைத்தது. தாம் பீகாருக்குப் போகத் தீர்மானித்திருப்பதை பிப்ரவரி 28-ஆம் தேதி காந்திஜி வெளியிட்டார். அங்கே அப்போது முஸ்லிம்களை ஹிந்துக்கள் கொடுமைப்படுத்தி வந்தார்கள்.

காந்திஜி ஒரு ஜீப்பில் ஏறிச் சாந்த்பூருக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து மார்ச்சு 2-ஆம் தேதி பீகாருக்குப் புறப்பட்டார்.

நோவாகாலிப் பகுதியில் மொத்தம் 7 வார யாத்திரையில் காந்திஜி வெறுங்கால்களோடு 116 மைல்கள் நடந்து 47 கிராமங்களுக்குச் சென்றார். நோவாகாலி யாத்திரையை முடித்துச் செல்லும்போது, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டுமென நல்லுரை பகர்ந்துவிட்டு விடை பெற்றார்.

பாட்னாவுக்குச் செல்லும் வழியில் கல்கத்தாவின் ஒரு பகுதியான ஸோடேப்பூரில் காந்திஜி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது, நோவாகாலியில் தமது பணி முடிவடைந்துவிடவில்லை என்றும், ஆனாலும் பீகாரிலிருந்து வந்த அழைப்பைப் புறக்கணித்துவிடுவதற்கில்லை என்றும் தெரிவித்தார்.

மார்ச்சு 5-ஆம் தேதி காலையில் காந்திஜி பாட்னா போய்ச் சேர்ந்தார்.

நோவாகாலியில் ஹிந்துக்கள் எடுத்துக்கூறியவை போன்ற கொடுமைகளையே பீகாரில் முஸ்லிம்கள் கூறக் காந்திஜி கேட்டார். பயத்தையெல்லாம் உதறிவிட்டு ஆண்டவனிடம் நம்பிக்கை வைக்கும்படி நோவாகாலி ஹிந்துக்களிடம் கூறியதுபோல, பீகார் முஸ்லிம்களிடமும் காந்திஜி கூறினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காகக் காந்திஜி கஷ்ட நிவாரண நிதி வசூலிக்கத் தொடங்கினார்.

மார்ச்சு 11-ஆம் தேதிப் பிராத்தனைக் கூட்டத்தில் பேசிய போது, மறுநாள் தமது பிரயாணத்தைத் தொடங்கப் போவதாகவும், கிராமங்களில் பிரயாணம் செய்தாலும் அடுத்த சில தினங்களுக்குப் பாட்னா நகரிலேயே தமது ஜாகையை வைத்துக்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.

மார்ச்சு 12-ம் தேதி பாட்னா நகரில் மங்களேஸ் டலாவோவுக்கு அருகில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்திவிட்டுத் திரும்பியபோது, கும்ரஹார் என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கே செயலாக வாழ்ந்து வந்து ஒரு முஸ்லிம் வீடு சூறையாடப்பட்டிருந்ததைப் போய்ப் பார்த்தார். புத்தகங்கள், மேஜை, நாற்காலிகள் போன்ற சகல உடைமைகளும் நாசம் செய்யப்பட்டிருந்தன. பக்கத்திலுள்ள மசூதி இடிக்கப்பட்டிருந்தது. இதேபோலப் பாழாக்கப்பட்ட முஸ்லிம் வீடுகளைக் கண்டு காந்திஜி கண்ணீர் சொரிந்தார்.

மறுநாள் கான் அப்துல் கபார்கானுடன் காந்திஜி பாஸாவிலுள்ள முஸ்லிம் வீடுகளுக்குச் சென்றார். அன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசுகையில் காந்திஜி கூறியதாவது: ''நோவாகாலியில் நடந்தவற்றிற்காகப் பீகார் பழி வாங்குகிறது என்று யாராவது நினைத்தால், அவர்களுக்கு நான் கூறுகிறேன்: பழி வாங்கும் முறை இதுவல்ல. இந்தியர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை விரோதிகள் என்று நினைப்பது தற்கொலைச் செயலாகும்; அது அடிமை நிலையை நிரந்தரமாக்கத்தான் செய்யும்.''

பஞ்சாப்புக்கு வந்து அங்கே சமாதானம் நிலவச் செய்ய வேண்டும் என்று காந்திஜிக்குப் பல அழைப்புக்கள் வந்தன. ஆனால், பீகாரிலும், வங்காளத்திலும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நட்புக்கொள்ளும் வரையிலும், தமது சேவையை எதிர்பார்க்கும் வரையிலும் தம்மால் வேறெங்கும் செல்ல முடியாது என்று காந்திஜி தெரிவித்தார். ''என்னால் பஞ்சாப்புக்குப் போக இயலாவிட்டாலும், என் குரல் அந்த மாகாணத்திலுள்ள ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் கேட்கும் என்றே நம்புகிறேன். அர்த்தமற்ற காட்டுமிராண்டிச் செயல்களை அவர்கள் நிறுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்'' என்றார் காந்திஜி.

“பீகாரில் நவம்பர் மாதத்தில் பெண்களும், குழந்தைகளும்கூட ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர். இதோடு ஒப்பிடும்போது நோவாகாலியில் நடந்த அக்கிரமங்கள் குறைவு என்னும் படி இருக்கின்றன.” இவ்வாறு காந்திஜி கூறிவிட்டு, பீகார் ஹிந்துக்கள் உண்மையிலேயே தங்கள் தவறுக்கு வருந்துவதுடன், கஷ்ட நிவாரண நிதிக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்.

பீகாரில் திரும்பவும் இப்படி அக்கிரமங்கள் நிகழுமானால், தாம் நெருப்பில் வெந்து சாக விரும்புவதாகவும், இப்படிப்பட்ட கொடூரமான, மானக்கேடான காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கத் தம்மை உயிரோடு வைத்திருக்கக் கூடாது என்பதே தாம் கடவுளை நோக்கிச் செய்யும் பிரார்த்தனையாகும் என்றும் முஸ்லிம் நண்பர்களிடம் காந்திஜி கூறினார்.

நோவாகாலியில் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது என்றும், ஆகவே அங்கே வரவேண்டும் என்றும் காந்திஜிக்கு அழைப்பு வந்தது.

ஆனால், தாம் பீகாரைவிட்டு இப்பொழுது புறப்பட முடியாது என்றும், பீகாரில் தமது முயற்சி வெற்றி பெற்றால் அதன் மூலம் வங்காளத்திலும் நற்பலன் விளையும் என்றும் காந்திஜி பதில் அளித்தார். முஸ்லிம்களுக்காக காந்திஜி வசூலித்த கஷ்ட நிவாரண நிதிக்குப் பணம் மட்டுமன்றி நகைகளும் வந்து குவிந்தன. அநேக இடங்களில் நிலைமை திருந்தி, அக்கிரமச் செயல்கள் நின்றுவிட்டன என்று முஸ்லிம்களே காந்திஜியிடம் வந்து கூறினார்கள்.

மார்ச்சு 29-ஆம் தேதி காந்திஜி பேசுகையில், தாம் மறுநாள் டில்லிக்குப் போகப் போவதாகவும், நாலைந்து நாட்களுக்குள் திரும்பி வந்துவிடலாம் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

டில்லியில் ஏப்ரல் முதல் தேதியன்று ஆசிய நாடுகள் மகாநாட்டில் காந்திஜி கலந்துகொண்டார். அன்று சில கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மறுநாள் மகாநாட்டின் கடைசி நாள். பார்வையாளர்களும் பிரதிநிதிகளுமாக 20,000 பேர் அமர்ந்திருந்த கூட்டத் தி ல் காந்திஜி பேசினார். பெரிய நகரங்களில் காண்பது உண்மையான இந்தியா அல்ல என்றும், உண்மையான இந்தியாவைக் கிராமங்களில்தான் காண முடியும் என்றும் காந்திஜி தமது சொற்பொழிவில் கூறினார். வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த அநேக பிரதிநிதிகள் தங்கள் நாடுகளுக்குக் காந்திஜியிடமிருந்து செய்தி பெற்றுச் சென்றார்கள்.

ஏப்ரல் 12-ஆம் தேதி காந்திஜி திரும்பவும் பீகாருக்குச் சென்றார்.

ஏப்ரல் 14-ஆம் தேதி பாட்னா பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி பேசியபோது, நோவாகாலியில் நிலைமை மோசமாகிக்கொண்டு வருவதாகத் தாம் கேள்விப்படுவதாகவும், அங்கே நடக்கும் அக்கிரமங்கள் நிற்பதற்காகப் தாம் உண்ணாவிரதம் இருக்கும்படி நேரிடலாம் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கங்களைச் சாதித்துக்கொள்ளப் பலாத்காரச் செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்தும் பலாத்காரத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் காந்திஜியும், ஜின்னாவும் கையெழுத்திட்டிருந்தனர்.

ஏப்ரல் 30-ஆம் தேதி நேருஜியின் அழைப்புக்கு இணங்கக் காந்திஜி மீண்டும் டில்லிக்குச் சென்றார்.

மே 8-ஆம் தேதி பாட்னாவுக்குத் திரும்பினார். பிரயாணம் செய்யும்போது வைசிராய் மவுண்ட்பேட்டனுக்குக் காந்திஜி எழுதிய ஒரு கடிதத்தில், தேசப் பிரிவினையோ , மாகாணப் பிரிவினையோ கூடாது என்றும், அவ்வாறு செய்ய உடந்தையாக இருந்தால் அது பிரிட்டனின் பெரிய தவறு என்றும் கூறினார்.

மே 9-ஆம் தேதி ஸோடேப்பூரில் காந்திஜி பேசினார்.

மே 12-ஆம் தேதி வங்கப் பிரமுகர் சுஹ்ரவர்த்தி, ஸோடேப்பூருக்கு வந்து காந்திஜியைச் சந்தித்தார்.

மே 15-ஆம் தேதி பாட்னாவுக்குத் திரும்பி, சில ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, 25-ஆம் தேதி டில்லிக்குப் போய்ச் சேர்ந்தார்.

ஜூன் 2-ஆம் தேதியன்று அதிகார மாற்றத்திற்கான அறிக்கையை வைசிராய் வெளியிட்டதும், கலகங்கள் நடைபெறும் என்று பலமான வதந்தி பரவியது. பீகாரில் என்றும் காணாதவாறு படுகொலைகள் நடக்கும் என்றும் ஒரு செய்தி அங்கிருந்தே வந்தது. மேலும், லண்டனிலிருந்து வைசிராய் என்ன கொண்டுவருவார், அவருடைய அறிக்கையில் என்ன என்ன கூறப்பட்டிருக்கும் என்பவற்றை அறிய எல்லோரும் ஆவலோடு இருந்தார்கள். இந்த மனப்பான்மையைக் காந்திஜி கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். மக்கள் தங்களுடைய எதிர்கால நலனுக்கு லண்டனை எதிர்பார்ப்பதற்காகத் தாம் வருந்துவதாகக் காந்திஜி கூறினார். ''நமக்குச் சுதந்திரம் கொடுப்பது அவர்கள் வேலை அல்ல; நம்முடைய முதுகிலிருந்து கீழே இறங்குவது ஒன்றைத் தான் அவர்கள் செய்ய முடியும். இதைச் செய்வதாக அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்'' என்று தமது அறிக்கையில் காந்திஜி கூறியிருந்ததோடு, கலகங்கள் நடந்தாலும் நடக்காவிட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சி குறிப்பிட்ட தேதியில் முடிவடையப்போவது நிச்சயம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கலகங்கள் நடக்குமோ என்ற பயம் தற்போது நிலவுவதற்கு ஆதாரமே இல்லை என்று தாம் நம்புவதாகக் காந்திஜி சொன்னார்.

ஜூன் மாதம் முதல் தேதியன்று வைசிராய், டில்லிக்குத் திரும்பினார்.

ஜூன் 3-ஆம் தேதி, வைசிராய், நேரு, ஜின்னா, பல்தேவ் சிங் ஆகியோர் ரேடியோவில் பேசினர். வைசிராய் தமது பேச்சில், பிரிட்டிஷ் சர்க்காரின் திட்டத்தை வெளியிட்டார். அதைக் கேட்டு ஹிந்துக்கள் வருந்தினார்கள். ஆனால், நேரு பேசும்போது, இந்தியா பிரிவினை செய்யப்படுவதைத் தாம் விரும்பாவிட்டாலும், இந்தியா தொடர்ந்து ரத்தம் சிந்திக்கொண்டிருக்கும்படி விடக்கூடாது என்றும், இப்போதுள்ள நிலையில் சஸ்திர சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்றும் கூறினார். பிரிட்டிஷ் சர்க்காரின் திட்டம், பாகிஸ்தான் கொடுக்கச் சம்மதித்தது. இதற்குக் காங்கிரஸும் இசைந்தது. பலாத்காரத்துக்குப் பணிந்து காங்கிரஸ் இவ்வாறு இசையவில்லை என்றும், ஆனால் சந்தர்ப்பங்களின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்தே இசைந்தது என்றும் ஜூன் 4-ஆம் தேதி காந்திஜி கூறினார்.

ஆகஸ்டு 15-ஆம் தேதி பிரிட்டிஷார் இந்தியர் கையில் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கும்போது, திருவாங்கூர், சுதந்திரத் தனியரசாகப் பிரகடனம் செய்துகொள்ளும் என்று திருவாங்கூர் திவான் ஸர் சி. பி. ராமசாமி ஐயர் அறிவித்ததை, ஜூன் 13-ஆம் தேதி காந்திஜி பிரஸ்தாபித்துப் பின்வருவாறு கூறினார்: “பிரிட்டிஷ் மன்னர் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்த வரையில் திருவாங்கூர் இந்தியாவில் இருந்துவருவது ஸர் சி. பி. ராமசாமி ஐயருக்குத் திருப்தியாக இருந்தது. ஆனால் அதிகாரம் இந்தியர் கைக்கு மாறியதும், திருவாங்கூர் இந்திய யூனியனில் சேரக்கூடாது என்று நினைக்கிறார். இது ஆச் சரியத்தை அளிக்கும் செய்தியாகும்.''

ஜூன் 14, 15-ஆம் தேதிகளில் நடந்த அ. இ. கா. க. கூட்டத்தில் காந்திஜி பேசும்போது கூறியதாவது: ''இந்தியா இப்போது சுதந்திரத்தின் தலைவாசலில் நிற்கிறது. ஹைதராபாத்தும், திருவாங்கூரும் சுதந்திரத் தனியரசுகள் ஆவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றன. இது வீண் பேச்சு. சமஸ்தானாதிபதிகள் சுதந்திரத் தனியரசர்களாக ஆவதென்றால், சமஸ்தான மக்களின் சுதந்திரத்தைப் பறித்துத்தான் ஆக முடியும். எனக்குத் தெரிந்த வரையில் இந்தியா இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.''

"இந்திய யூனியனிலிருந்து விலகி எந்தச் சமஸ்தானமும் சுதந்திரத் தனியரசாகப் பிரகடனம் செய்து கொள்ளும் உரிமையை அ. இ. கா. க. ஒப்புக்கொள்ள முடியாது'' என்று அ. இ. கா. க. கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான் கொடுக்கும் பிரிட்டிஷ் திட்டத்தை ஒப்புக்கொண்டு ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதை ஆதரித்து 153 வோட்டுக்களும், எதிர்த்து 29 வோட்டுக்களும் கிடைத்தன. சிலர் வோட்டளிக்கவில்லை.

"1947, ஆகஸ்டு 15-ஆம் தேதியிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு சுதந்திர டொமினியன்கள் உதயமாகும் " என்று ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டிஷ் பார்லிமென்டில் இந்திய சுதந்திர மசோதா கொண்டுவரப்பட்டது.

ஜூலை 18-ஆம் தேதி இந்திய சுதந்திர மசோதாவுக்கு மன்னர் சம்மதம் அளித்திருக்கும் செய்தி பிரிட்டிஷ் பார்லிமென்டின் லார்டுகள் சபையில் அறிவிக்கப்பட்டது.

ஜூலை 22-ஆம் தேதி, அசோக சக்கரத்துடன் கூடிய தேசீயக் கொடி அமைப்புப் பற்றிய தீர்மானத்தை அரசியல் நிர்ணய சபையில் நேருஜி கொண்டுவந்தார்.

காந்திஜி ஜூலை 29-ஆம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்தில், தாம் மறுநாள் காஷ்மீருக்குப் போகப்போவதாகவும், ஜவாஹர்லால் நேருவுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியே இந்தக் காஷ்மீர் விஐயத்திற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

ஆகஸ்டு முதல் தேதியன்று காந்திஜி ஸ்ரீநகருக்குப் போய்ச் சேர்ந்தார். 4-ஆம் தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டார். அன்று காந்திஜி ஜம்முவுக்குப் போய்ச் சேர்ந்தார். ஆகஸ்டு 15- இல் இந்தியா சுதந்திரம் பெறும்போது, காஷ்மீரின் நிலை என்ன என்று காந்திஜியிடம் கேட்டபோது, அது காஷ்மீர் மக்களைப் பொறுத்த விஷயம் என்று அவர் பதில் அளித்தார். காஷ்மீரில் காந்திஜி சொற்பொழிவுகள் நிகழ்த்தவில்லை. தமது பிரயாணம் அரசியல் கலப்பு இல்லாததாக இருக்கவேண்டுமென்று காந்திஜி விரும்பினார்.

ஜம்முவிலிருந்து பஞ்சாப்புக்குப் புறப்பட்டார். வரும் வழியில் பிண்டியில் அகதிகள் முகாமைப் பார்த்தார். மேற்குப் பஞ்சாப்பைச் சேர்ந்த அகதிகள் அதில் 9,000 பேர் இருந்தனர்.

ஆகஸ்டு 6-ஆம் தேதி லாகூரில் காந்திஜி கூறியதாவது: ''என் உள்ளம் எப்போதும் பஞ்சாப்பிலேயே இருக்கிறது. பஞ்சாப்பின் துன்பங்களை நான் நன்கு அறிந்திருக்கிறேன். என்னுடைய தற்போதைய இடம் நோவாகாலிதான். உயிரை இழக்க நேர்ந்தாலும், அங்கே நான் போவேன். நோவாகாலி வேலை முடிந்ததும் நான் பஞ்சாப்புக்கு வருவேன். வெகு சீக்கிரத்தில் நோவாகாலி வேலையிலிருந்து விடுதலை பெற்றுவிடுவேன் என்று நம்புகிறேன்.''

ஆகஸ்டு 7-ஆம் தேதி காந்திஜி கல்கத்தாவை நோக்கிப் பிரயாணம் செய்தார். கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்ததும் அவருடைய உடம்பை டாக்டர் சுனில் போஸ் பரிசோதித்து, சரீரம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஆகஸ்டு 9-ஆம் தேதி ஸோடேப்பூரில் பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி பேசியபோது, தாம் போகவேண்டிய இடம் நோவாகாலி என்றும், ஆனால் நாள் முழுவதும் கல்கத்தாவில் நடைபெறும் கலகங்களைப் பற்றிய செய்திகளைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் கூறினார்.

ஆகஸ்டு 11-ஆம் தேதி சுஹ்ரவர்த்தி வந்து காந்திஜியைப் பார்த்து, வகுப்புக் கலகங்கள் நடக்கும் கல்கத்தாவில் அமைதி நிலவும் வரை தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டார். கலகங்களால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியில், தாமும் சுஹ்ரவர்த்தியும் ஒரே வீட்டில் தங்கியிருக்க வேண்டுமென்று காந்திஜி தெரிவித்தார். அதற்குச் சுஹ்ரவர்த்தியும் இணங்கினார். 

கல்கத்தா நகரில், கலகத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பெலியகத்தா பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் வீடு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்டு 13-ஆம் தேதியன்று காந்திஜி அங்கே சென்றார். அவருடன் கல்கத்தா ஜில்லா முஸ்லிம் லீக் காரியதரிசியும், மேற்கு வங்காளப் பிரதமரின் ராஜீயக் காரியதரிசியும் குமாரி மனு காந்தியும், ஸ்ரீமதி அவா காந்தியும் (காந்திஜியின் பேத்திகள்) சென்றார்கள்.

காந்திஜி போய்ச் சேர்ந்த சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கே பல இளைஞர்கள் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ''சுஹ்ரவர்த்தியே, திரும்பிப் போ'' என்று கோஷித்தார்கள். சென்ற வருஷம் ஹிந்துக்கள் துன்பத்துக்கு உள்ளான போது காந்திஜி ஏன் வரவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டார்கள்.

காந்திஜி, தாம் ஹிந்துக்களுக்கு விரோதியல்ல என்றும், ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபோலவே தாம் கருதுவதாகவும் சொன்னார்.

ஆகஸ்டு 14-ஆம் தேதியன்று கல்கத்தாவில் யாதொரு அசம்பாவிதமும் நிகழவில்லை. கல்கத்தராவில் பாதிக்கப்பட்டிருந்த பல பகுதிகளில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நட்புடன் பழகத் தொடங்கினார்கள். அன்று பெலியகத்தாவில் ஒரு மாபெரும் கூட்டத்தில் காந்திஜி பேசினார். மறுநாள் சுதந்திர தினமாதலால் அனைவரும் உண்ணாவிரதம் இருந்து நூல் நூற்க வேண்டுமெனக் காந்திஜி கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்டு 14-ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெறும் வைபவம் டில்லி அரசியல் நிர்ணய சபையில் சிறப்பாக நடைபெற்றது. தலைவர்கள் காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஆகஸ்டு 15-ஆம் தேதியிலிருந்து மவுண்ட்பேட்டன் சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜவாஹர்லால் நேரு நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், ''இந்த நாளில் நமது சிந்தனைகள் சுதந்திரச் சிற்பியான தேசபிதாவிடம் செல்கின்றன. அவர் இந்தியாவின் பழம்பெரும் ஆன்ம உணர்வின் சொரூபமாக விளங்கி, சுதந்திர தீபத்தை ஏற்றிப் பிடித்து, சூழ்ந்து பரவியிருந்த இருளை நீக்கி ஒளியைப் பாய்ச்சினார் '' என்று கூறினார்.

ஆகஸ்டு 15-ஆம் தேதி நாடெங்கும் சுதந்திரத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ''மகாத்மா காந்திக்கு ஜே!'' என்ற முழக்கம் நாள் முழுவதும், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கேட்டுக்கொண்டிருந்தது.

காந்திஜி மட்டும் கோலாகல வைபவங்களில் கலந்துகொள்ளவில்லை. அன்று நாட்டுக்கோ, உலகத்துக்கோ அவர் செய்தி விடுக்கவும் மறுத்துவிட்டார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு எண்ணற்ற மக்கள் யாத்திரை செய்வதுபோல வரவும், அஞ்சலி செலுத்தவுமாக இருந்தார்கள்.

காந்திஜி, சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருந்தார்; நூல் நூற்றார். அன்று மகாதேவ தேசாய் தினமாதலால் அதிகாலையில் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது, கல்கத்தாவின் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நேச முறையில் பழகுவதைக் கண்டு தாம் மகிழ்வதாகக் கூறினார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. பிரார்த்தனைக்குப் பிறகு தமது உண்ணாவிரதத்தை முடித்தார். கல்கத்தா நகரையும் அன்று சுற்றிப் பார்த்தார்.

ஆகஸ்டு 17-ஆம் தேதி "இந்தியக் கவர்னர்'' என் ற தலைப்பில் காந்திஜி எழுதிய ஒரு கட்டுரையில், சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு கவர்னரும் நூல் நூற்க வேண்டும் என்றும், யாரும் தாராளமாகப் போய்வரக்கூடிய ஒரு குடிசையில் வசிக்க வேண்டுமென்றும், தமது தாய்மொழியையும் ஹிந்துஸ்தானியையும் பேச வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

ஆகஸ்டு 18-ஆம் தேதி ஈத் தினம். அன்று முஸ்லிம்கள் காந்திஜியின் இருப்பிடத்துக்கு வந்து வாழ்த்துக் கூறினார்கள்.

ஆகஸ்டு 24-ஆம் தேதி காந்திஜிக்குக் கல்கத்தா நகர சபை வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்தது. இதற்குமுன் அந்த நகரசபை அவருக்கு இரண்டு முறை வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்திருக்கிறது.

ஆகஸ்டு 31-ஆம் தேதி காந்திஜியின் சமாதானப் பணிக்கு விரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்று அவருடைய ஜாகையிலேயே நடைபெற்றது. அநேக இளைஞர்கள் கூச்சல் போட்டு அவரைத் தூங்கவிடாமல் செய்ததுடன் அவரை நோக்கிக் கல்லும் வீசினார்கள். கதவுகளை உடைத்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தினால், செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் காந்திஜி நோவாகாலிக்குப் போக இருந்தது தடைப்பட்டது. அமைதி நிலவிய கல்கத்தாவில் திடீரென்று பலாத்காரச் செயல்களும், கொலைகளும் நடக்கத் தொடங்கிவிட்டன.

வகுப்பு ஒற்றுமைக்காகச் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து காந்திஜி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். மீண்டும் கல்கத்தாவில் அமைதி நிலவும் வரையில் தாம் உண்ணாவிரதத்தை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்தார்.

மூன்று தினங்களுக்குள்ளாகக் கல்கத்தாவில் நிலைமை சீர்ப்பட்டுவிட்டது. காந்திஜி 73 மணி நேரத்திற்குப் பின், அதாவது, செப்டம்பர் 4-ஆம் தேதியன்று உண்ணாவிரதத்தை நிறுத்தினார். வகுப்புக் கலகத்தை நிறுத்திய காந்திஜியின் இந்த அரிய சாதனையை லண்டன் ''டைம்ஸ்'' பத்திரிகை விபத்து பாராட்டியது.

செப்டம்பர் 7-ஆம் தேதியன்று காந்திஜி டில்லிக்குப் புறப்பட்டார்.

9-ஆம் தேதி டில்லிக்கு வந்து சேர்ந்ததும் அங்கே நடைபெற்ற கலகங்களைப் பற்றிய செய்தியறிந்து காந்திஜி அதிர்ச்சியடைந்தார். டில்லியில் நிலைமை மகாமோசமாக இருந்தது.

10-ஆம் தேதி காந்திஜி 40 மைல் தூரம் சுற்றி டில்லியிலும். ஒக்லாவிலும் அகதிகளின் முகாம்களைப் பார்வையிட்டார். பல்லாயிரக்கணக்கான அகதிகள் டில்லியின் பல பகுதிகளிலும் நிரம்பியிருந்தார்கள். புராண கிலா என்ற கோட்டையில் மட்டும் 50,000 முஸ்லிம் அகதிகள் இருந்தார்கள். இதேபோல, ஹிந்துக்களும் வெவ்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கில் இருந்தார்கள். மேற்குப் பஞ்சாப்பிலிருந்து முஸ்லிம் அல்லாதார் மொத்தம் 8 லட்சம் பேர் கால்நடையாகக் கிழக்குப் பஞ்சாப்புக்குக் குடிபெயர்ந்து வந்தார்கள். இவ்வளவு அதிகமான பேர் பய பீதியோடு ஒரே சமயத்தில் குடிபெயர்ந்து கால்நடையாக வேறிடத்துக்குப் போனது இதற்கு முன் உலகில் எங்குமே நடைபெறாத சம்பவமாகும் என்று கூறப்படுகிறது.

டில்லியில் ஹிந்துக்களிடமும், சீக்கியர்களிடமும் முஸ்லிம்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், எல்லைப் புற மாகாணத்தில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படுவதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பாகிஸ்தானின் மைனாரிடிகளைக் காப்பாற்றுவது ஜின்னாவின் கடமை என்று காந்திஜி பல முறையும் நினைவுபடுத்தினார். தினந்தோறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் வகுப்பு ஒற்றுமையை வற்புறுத்திவந்தார்.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜியின் 78-ஆவது பிறந்த தினம். வெளிநாடுகளின் ஸ்தானீகர்கள், ஸ்ரீமதி மவுண்ட்பேட்டன் உட்பட எண்ணிறந்தவர்கள் வந்து காந்திஜிக்கு வாழ்த்துக் கூறிச் சென்றார்கள், தந்திகளும் வந்து குவிந்தன. அகதிகள் மலர்களை அனுப்பினார்கள். அன்று டில்லி காங்கிரஸ் கமிட்டி கூட்டிய பொதுக்கூட்டத்தில் பேசிய ஜவாஹர்லால் நேரு, ஸர்தார் பட்டேல், கிருபளானி ஆகியோர், காந்திஜி காட்டும் வழியில் செல்லுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டனர். ''மகாத்மா காந்திக்கு ஜே!'' என்று முழங்கிக்கொண்டே, சொந்தச் சகோதரர்கள் விஷயத்தில் துவேஷக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது என்றார் நேரு.

டில்லியில் அடிக்கடி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுவந்தனர். பாகிஸ்தானில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதற்காக, இந்தியாவிலுள்ள ஒரு பாவமும் அறியாத முஸ்லிம்களைக் கொலை செய்வது தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொள்ளும் செயலாகும் என்று காந்திஜி கண்டித்தார்.

அக்டோபர் 27-ஆம் தேதி காஷ்மீர், இந்திய யூனியனில் சேர்ந்தது. உடனடியாக ஷேக் அப்துல்லா தலைமையில் ஒரு மந்திரி சபையை நியமிப்பதாகக் காஷ்மீர் மன்னர் வாக்களித்தார். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுவதற்காக இந்திய சர்க்கார் படைகளை அனுப்பியது. பாகிஸ்தான் சர்க்காருடைய தூண்டுதல் இல்லாமல் ஆப்ரிதிகள் போன்றவர்கள் காஷ்மீருக்குள் படையெடுத்திருக்க முடியாது என்று காந்திஜி அபிப்பிராயப்பட்டார். இந்திய சர்க்கார் படைகள் அனுப்பியதை ஆதரித்தார்.

ஜூனாகட் சமஸ்தான மன்னர், மக்கள் ஆகியோரின் முழு அங்கீகாரத்தின் பேரில் அதன் திவான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்தச் சமஸ்தானத்தின் நிர்வாகத்தை நவம்பர் 9-ஆம் தேதி இந்திய சர்க்கார் ஏற்றுக்கொண்டது. இது பாகிஸ்தான் பிரதேசத்துக்குள் பலவந்தமாகப் பிரவேசித்ததாக ஆகும் என்றும், சர்வதேச சட்டத்துக்கு விரோதமானது என்றும் பாகிஸ்தான் சர்க்கார் கூறியது. இது சட்டவிரோதமான செயல் அல்ல என்று காந்திஜி கூறினார்.

  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...