Henri Cartier-Bresson/Magnum Photos Delhi. Birla House. 1948. GANDHI, just after breaking his fast. |
(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)
1942 (வயது 73)
ஜனவரி 13, 14 தேதிகளில் வார்தாவில் காரியக் கமிட்டி கூடியது. 15, 16, தேதிகளில் அ. இ. கா. க. கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸை அதன் நிபந்தனைகளின்படியே தலைமை தாங்கி நடத்தக் காந்திஜி இசைந்தார். அந்த அந்த ஸ்தலத்திலுள்ள ஸ்தாபனங்களைப் பலப்படுத்த வேண்டுமென்றும், தொண்டர்களைத் திரட்ட வேண்டுமென்றும், மக்களுடன் இன்னும் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் காங்கிரஸ்காரர்களுக்குக் காந்திஜி தெரிவித்தார். "ஒவ்வொரு கிராமத்துக்கும் காங்கிரஸின் செய்தி கிடைக்க வேண்டும்; ஏற்படக் கூடிய கஷ்டங்களைச் சமாளிக்க ஒவ்வொரு கிராமமும் தயாராக இருக்கவேண்டும்'' என்றார் காந்திஜி.
ஜனவரி 18-இல், 15 மாதங்களுக்குப் பிறகு, ஹரிஜனையும், அதைச் சேர்ந்த வாரப் பத்திரிகைகளையும் காந்திஜி திரும்பவும் ஆரம்பித்தார்.
ஜனவரி 21-ஆம் தேதி காசி சர்வகலாசாலையின் வெள்ளி விழாப் பட்டமளிப்பு வைபவத்தில் மாணவர் கூட்டத்தில் பேசிய காந்திஜி, ஆசிரியர்களும், மாணவர்களும் பாட மொழியாக ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுப்பதைக் கண்டித்தார்.
பிப்ரவரி 11-இல் ஸ்ரீ ஜம்னாலால் பஜாஜ் காலமானார்.
பிப்ரவரி 18-இல் காந்திஜியை, மார்ஷல் சியாங்கே ஷேக், ஸ்ரீமதி சியாங்கே ஷேக் ஆகியவர்கள் கல்கத்தாவில் சந்தித்தார்கள். டில்லியில் மார்ஷல் சியாங்கே ஷேக்கைச் சந்திக்கக் காந்திஜிக்கு வைசிராய் அழைப்பு அனுப்பவில்லை. கல்கத்தாவில் சந்திப்பும் பேச்சும் நாலரை மணி நேரம் நீடித்தன. ஸ்ரீமதி சியாங்கே ஷேக் கதர்ப் புடைவை உடுத்தி, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு காந்திஜிக்கும் சியாங்கே ஷேக்குக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
மார்ச்சு 7-ஆம் தேதி ரங்கூன் வீழ்ச்சியடைந்தது.
மார்ச்சு 11-ஆம் தேதியன்று, கிரிப்ஸ் தூது கோஷ்டி வரப்போவதை அறிவித்த சர்ச்சில், சர்க்கார் பின் கண்டவாறு கூறியது: ''ஜப்பானியர் முன்னேறி வருவதன் மூலம் இந்திய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால், படையெடுப்பாளனின் அபாயத்திலிருந்து தங்கள் நாட்டைக் காத்துக்கொள்ளுவதற்கு இந்தியர்களின் சகல சக்திகளையும் திரட்ட வேண்டுமென்று பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது.''
மார்ச்சு 17, 18 தேதிகளில் வார்தாவில் காரியக் கமிட்டி கூட்டப்பட்டது. ''பிரிட்டிஷ் சர்க்காரின் அறிக்கையைப்பற்றித் தீர ஆலோசிக்காமல் நாம் எந்தவித முடிவும் செய்துவிட விரும்பவில்லை'' என்று மெளலானா ஆஸாத் ஒரே வரி கொண்ட அறிக்கை விடுத்தார்.
மார்ச்சு 22-ஆம் தேதி ஸர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் கராச்சியில் வந்திறங்கினார். 23-ஆம் தேதி டில்லிக்கு வந்து, 25-ஆம் தேதியிலிருந்து கட்சித் தலைவர்களைப் பேட்டி காணத் தொடங்கினார்.
மார்ச்சு 27-ஆம் தேதி புது டில்லியில் கிரிப்ஸைக் காந்திஜி சந்தித்தார். கிரிப்ஸ் தெரிவித்த யோசனைகளை, "பின் தேதியிடப்பட்ட செக்'' என்று காந்திஜி வர்ணித்தார். மார்ச்சு 29-ஆம் தேதி கிரிப்ஸ் தமது யோசனைகளை வெளியிட்டு விட்டு, "எல்லாக் கட்சிகளும் விரும்பினாலும், இந்தியாவின் பாதுகாப்புப் பொறுப்பு இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது'' என்றார்.
முதல் இரண்டு பத்திரிகையாளர் கூட்டங்களிலும் கிரிப்ஸ் பேசும்போது, திட்டத்தில் எந்த விதமான பெரிய அடிப்படை மாறுதல்களும் செய்யப்பட மாட்டாது என்று கூறினார்.
அவருடைய யோசனைகளை எல்லா இந்தியக் கட்சிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரித்துவிட்டன. ஏப்ரல் முதல் தேதியன்று காரியக் கமிட்டி தனது அபிப்பிராயத்தைக் கிரிப்ஸக்குத் தெரிவித்தது. பேச்சு வார்த்தைகளின்போது மெளலானா ஆஸாத்தும், ஜவாஹர்லால் நேருவும், ஜெனரல் வேவலையும், அமெரிக்க சர்க்காரின் விசேஷ இந்தியப் பிரதிநிதியான கர்னல் லூயி ஜான்ஸனையும் ஏப்ரல் 3-ஆம் தேதி சந்தித்துப் பேசினார்கள்.
ஏப்ரல் 5-ஆம் தேதி கொழும்பில் ஜப்பானிய விமானங்கள் குண்டு போட்டன. மறுநாள் இந்திய மண்ணில் விசாகப்பட்டணத்திலும், காகினாடாவிலும் முதல்முதலாக ஜப்பானியக் குண்டுகள் விழுந்தன.
ஏப்ரல் 10-ஆம் தேதி ஆண்டுரூஸ் ஞாபகார்த்த நிதி வசூலுக்காகக் காந்திஜி பம்பாய்க்குச் சென்றார், கிரிப்ஸ் யோசனைகளைக் காரியக் கமிட்டி இறுதியாக நிராகரித்துவிட்டது.
ஏப்ரல் 12-ஆம் தேதி கிரிப்ஸ் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் எங்கும் ஏமாற்றம் நிலவியது.
பிரிட்டிஷ் திட்டம் எடுத்த எடுப்பிலேயே கேலிக்கூத்தாக இருக்கிறதென்றும், எந்த இடத்திலுமே அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஹரிஜனில் காந்திஜி எழுதினார்.
ஏப்ரல் 23-ஆம் தேதி ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார், பெரும்பாலும் பழைய சட்டசபை ஆதரவாளர்களைக் கொண்ட ஒரு சிறு கூட்டத்தில் பேசினார். அப்போது இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார். முதல் தீர்மானம், காங்கிரஸுக்கும் முஸ்லிம் லீக்குக்குமிடையே சமரச உடன்பாடு காண்பதற்கு அடிப்படையாக, கொள்கையளவில் பாகிஸ்தான் கொடுக்கச் சம்மதிக்குமாறு சிபாரிசு செய்தது; மற்றொரு தீர்மானம், சென்னையில் மீண்டும் பொறுப்பாட்சியை அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கூறியது. அ. இ. கா. க. கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸ்காரர்களிடையே இத்தீர்மானங்களுக்கு ஆதரவில்லை. காரியக் கமிட்டியிலிருந்து ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் ராஜிநாமாச் செய்தார்.
ஏப்ரல் 29-இலிருந்து மே 2-ஆம் தேதி வரையிலும் அகமதாபாத்தில் அ. இ. கா. க. கூடியது. ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் சென்னைத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். 200 பேர் கொண்ட கூட்டத்தில் அதற்கு ஆதரவாக 15 வோட்டுக்களே கிடைத்தன. அ. இ. கா. க. பின்வருமாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது: “படையெடுப்பு நிகழுமென்றால், அதை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த எதிர்ப்பு அகிம்சாபூர்வமான ஒத்துழையாமை வடிவத்தில்தான் இருக்க முடியும். ஏனென்றால், மக்கள் தேசப் பாதுகாப்புக்கு எந்த வகையில் ஏற்பாடு செய்வதையும் சர்க்கார் தடுத்துவிட்டது.” வேறு சில தீர்மானங்களைப் பிரசுரிக்கச் சர்க்கார் தடை விதித்துவிட்டது.
சாந்திநிகேதனில் ஆண்டுரூஸ் ஞாபகார்த்தச் சின்னம் கட்டுவதற்கு, மே 24-ஆம் தேதி வாக்கில் ஒரு வார காலத்துக்குள்ளாக, காந்திஜி ஐந்து லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டார்.
மே 26-ஆம் தேதி அலகாபாத்தில் அ. இ. கா. க. காரியாலயத்தைச் சர்க்கார் சோதனை போட்டு, காரியக் கமிட்டியின் விவாதக் குறிப்புகள் சிலவற்றைக் கைப்பற்றியது.
இப்போது காங்கிரஸைக் காந்திஜி தலைமை தாங்கி நடத்தினார். ஹரிஜனில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதிக் கொள்கையை விளக்கினார். சேவா கிராமத்தில் அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் அவரைப் பேட்டி கண்டார்கள். மே 24-ஆம் தேதி காந்திஜி கூறியதாவது: "இந்தியாவைக் கடவுளின் கையில் ஒப்படைத்துவிடுங்கள். நவீன பாஷையில் சொன்னால், அராஜக நிலையில் விட்டுவிடுங்கள். அதிலிருந்து ஓர் உண்மையான இந்தியா உருவெடுக்கும். இப்போது நாம் காணும் பொய்யான இந்தியா மறையும்.”
ஜூன் 3-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளரும் நூலாசிரியருமான லூயி பிஷர் சேவா கிராமத்தில் காந்திஜியோடு தங்கியிருந்தார். தம்முடைய அனுபவங்களையும் அபிப்பிராயங்களையும் ''காந்தியுடன் ஒரு வாரம்'' என்ற அவருடைய நூலில் தெரிவித்திருக்கிறார். அது 1942-இல் அமெரிக்காவில் வெளியாயிற்று. அதன்பின், லூயி பிஷரின் கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கு முன் தணிக்கை செய்ய வேண்டுமென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்தது.
ஜூலை 6-ஆம் தேதி வார்தாவில் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. காந்திஜி பிரசன்னமாக இருந்த அக்கூட்டத்தில், ''இந்தியாவைவிட்டு வெளியேறு'' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 14-இல் அது பிரசுரிக்கப்பட்டது. போராட்டம் தொடங்கினால் காந்திஜி தலைமை தாங்கி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம் லீக்கிடமோ, வேறு எந்தக் கட்சியினிடமுமோ பிரிட்டன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தாலும் - அது உண்மையான சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில் - தமக்கு ஆட்சேபம் இல்லை என்று ஆஸாத் கூறிய வாசகம் ஒன்றை அவருடைய சம்மதத்தைப் பெற்றுக் காந்திஜி மேற்கோள் காட்டி ஆகஸ்டு 2-ஆம் தேதியன்று எழுதினார்.
அ. இ. கா. க. கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்காக ஆகஸ்டு 5-ஆம் தேதியன்று காரியக் கமிட்டி ஒரு புதுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. சுதந்திர இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையின் நேச நாடாக இருக்கும் என்று அது கூறியது: "அதிகாரம் கிடைக்கும்போது, அது இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமாக இருக்கும்'' என்றும் அந்தத் தீர்மானம் தெரிவித்தது. இந்திய மக்கள் அபாய கட்டங்களில் தைரியமாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்ளுவதுடன், காந்திஜியின் தலைமையில் ஒன்று திரண்டு, இந்திய சுதந்திரப் படை வீரர்களைப்போல் அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.
அ. இ. கா. க. கூட்டத்திற்கு முதல் நாள் மார்ஷல் சியாங்கே ஷேக்குக்கு காந்திஜி எழுதிய கடிதத்தில், ''சுதந்திர இந்தியாவும், சுதந்திரச் சீனாவும் ஒத்துழைக்கும் நாளை நான் எதிர்நோக்குகிறேன்'' என்று குறிப்பிட்டார்.
ஆகஸ்டு 8-ஆம் தேதி பம்பாயில் கூடிய அ. இ. கா. க. வில், ''இந்தியாவைவிட்டு வெளியேறு'' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டவட்டமான நடவடிக்கையை எடுப்பதற்கு முன் வைசிராய்க்குத் தாம் கடிதம் எழுத உத்தேசித்திருப்புதாகக் காந்திஜி தமது பிரசங்கத்தில் கூறினார்.
''காங்கிரஸ் சவால் விடுத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய சர்க்கார் தனது கடமையை நிறைவேற்றும்'' என்று கவர்னர் ஜெனரலும் ஆலோசனைக் குழுவினரும் தீர்மானம் செய்தனர்.
ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று, பொழுது விடிவதற்கு முன்பாகவே காந்திஜியும், காரியக் கமிட்டி அங்கத்தினர்களும், நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்களும், ஊழியர்களும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்பட்டார்கள்.
ஆகஸ்டு 10-ஆம் தேதி காங்கிரஸ் கமிட்டிகள் சட்டவிரோதமாக்கப்பட்டன.
ஆகஸ்டு 14-இல் வைசிராய் லின்லித்கோவுக்கு எழுதிய முதல் கடிதத்தில் காந்திஜி கூறியதாவது: ''நெருக்கடியைத் துரிதப்படுத்திப் பெரிதாக்கியது இந்திய சர்க்காரின் தவறு. உங்கள் செயலை நான் எவ்வளவு அதிகமாக வெறுத்தபோதிலும், முன்போலவே நான் உங்கள் நண்பனாகத்தான் இருக்கிறேன். கடவுள் உங்களுக்கு வழிகாட்டுவாராக.'' ஆகஸ்டு 22-ஆம் தேதி வைசிராய் சுருக்கமாகப் பதில் அனுப்பினார்.
ஆகஸ்டு 15-ஆம் தேதி காந்திஜியின் காரியதரிசி மகாதேவ தேசாய், அவர் சிறை வைக்கப்பட்டிருந்த ஆகாகான் மாளிகையில் காலமானார். பத்திரிகைகளுக்குக் கடுமையான கட்டுத் திட்டங்கள் விதிக்கப்பட்டதால், அநேக பத்திரிகைகள் நிறுத்திவைக்கப்பட்டன.
செப்டம்பர் 10-ஆம் தேதியன்று பார்லிமென்டில் சர்ச்சில் கூறியதாவது: "ஸ்ரீ காந்தி மிக நீண்ட காலமாகக் கொள்கையளவில் வற்புறுத்தி வந்த அகிம்சையைக் காங்கிரஸ் கட்சி இப்போது கைவிட்டுவிட்டது. இப்போது அது பகிரங்கமாகப் புரட்சி இயக்கமாக வேலை செய்கிறது. அதிக அளவில் இந்தியாவுக்குப் படைகள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டிஷ் தொடர்பு ஏற்பட்ட பின் இந்த அளவுக்கு எந்தக் காலத்திலும் படைகள் அனுப்பப்பட்டதில்லை. இந்தியாவின் நிலை கண்டு இப்போது கவலையோ, பீதியோ அடைய வேண்டிய அவசியமில்லை.''
செப்டம்பர் 15-இலிருந்து 18 வரை நிலைமையைக் குறித்து மத்திய சட்டசபை விவாதித்தது. காந்திஜியையும் காங்கிரஸ் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கோரப்பட்டது. உள்நாட்டு அங்கத்தினர், காங்கிரஸின் மீது குற்றஞ்சாட்டினர்.
செப்டம்பர் 22, 23, 24-ஆம் தேதிகளில் ராஜாங்க சபையில் விவாதம் நடந்தது.
செப்டம்பர் 23-இல் உள்நாட்டு இலாகாக் காரியதரிசிக்குக் காந்திஜி எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்: "நேர்மாறாக எவ்வளவோ கூறப்பட்டிருந்தபோதிலும், காங்கிரஸ் கொள்கை சந்தேகத்துக்கு இடமின்றி, இன்னும் அகிம்சைக் கொள்கையாகவே இருக்கிறது என்று நான் சொல்லுவேன். ஏற்பட்டுள்ள நாசத்துக்குக் காரணம் சர்க்காரே ஒழியக் காங்கிரஸ் அல்ல என்று நான் கருதுகிறேன். அடக்குமுறைக் கொடுமை அதிருப்தியையும் கசப்பையும் தான் வளர்க்கும்.'' இந்தக் கடிதம் கிடைத்ததாகச் சம்பிரதாய பூர்வமான பதிலைச் சர்க்கார் அனுப்பிவைத்தது.
நாட்டில் போலீஸும், ராணுவமும் அத்துமீறிய காரியங்கள் செய்திருப்பதாகக் கூறப்படுவனவற்றை விசாரிக்க ஒரு கமிட்டியை நியமிக்க வேண்டுமென்று சிபாரிசு செய்யும் தீர்மானம் ஒன்றைச் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று மத்திய சட்ட சபையில் ஸ்ரீ கே. சி. நியோகி கொண்டுவந்தார். அடுத்த வருடம் பிப்ரவரி 12-இல் இருந்து 18 வரை மீண்டும் விவாதம் நடந்தது. தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
அக்டோபர் 10-ஆம் தேதியன்று சிந்து மாகாணப் பிரதமர் அல்லாபக்ஷ், ''சர்க்காரின் கெளரவப் பட்டங்களை உதறியதற்காக'' கவர்னரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தேசீய சர்க்கார் அமைக்கவேண்டுமென்று அல்லாபக்ஷ் கோரினார்.
சிமூரில் நடந்த அக்கிரமங்களை ஆட்சேபித்து நவம்பர் 11-ஆம் தேதியன்று வைசிராய் கவுன்சிலின் அங்கத்தினர் ஸ்ரீ ஆனேயின் வீட்டில் ஸ்ரீ பன்ஸாலி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.
காந்திஜியைச் சந்திக்க வேண்டுமென்று ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் விடுத்த வேண்டுகோளை நவம்பர் 12-ஆம் தேதி வைசிராய் மறுத்துவிட்டார்.
நவம்பர் 16-ஆம் தேதியன்று மத்திய சர்க்காரின் கொள்கையை ஆட்சேபித்து வங்காளத்தின் நிதிமந்திரி டாக்டர் சியாமப் பிரசாத் முக்கர்ஜி தமது பதவியை ராஜிநாமாச் செய்தார். காந்திஜியையும், மற்றக் காங்கிரஸ் தலைவர்களையும் பேட்டி காண வேண்டுமென்ற அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
1943 (வயது 74)
பத்திரிகைகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை ஆட்சேபித்து, ஜனவரி 6-ஆம் தேதியன்று எல்லா இந்தியப் பத்திரிகைகளும் ஹர்த்தால் அனுஷ்டித்தன.
பிப்ரவரி 10-ஆம் தேதி மத்தியானம், ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்த காந்திஜி, சர்க்காரிலிருந்து கடவுள் வரை நீதி கோரி மூன்று வார உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
குழப்பங்களுக்கு யார் பொறுப்பாளி என்பது பற்றிக் காந்திஜிக்கும் லின்லித்கோவுக்கும், காந்திஜிக்கும் உள்நாட்டுக் காரியதரிசிக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துக்கள் இந்திய சர்க்காரால் வெளியிடப்பட்டன. சர்க்கார்தான் பொறுப்பாளி என்பதைக் காந்திஜி தம் கடிதங்களில் வற்புறுத்திக் கூறியிருந்தார். வைசிராய் இதை மறுத்துக் காங்கிரஸையும் அதன் தலைவர்களையுமே குற்றம் சாட்டினார். உண்ணாவிரதத்தின் முதல் நாள் அன்று காந்திஜி உற்சாகமாக இருப்பதாகவே செய்தி வந்தது.
மூன்றாவது நாள், அவர் காலை நேரங்களில் வழக்கமாக நடப்பதையும், மாலை நேரங்களில் மகாதேவ தேசாயின் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்குப் போய்வருவதையும் நிறுத்தினார்.
பிப்ரவரி 13-ஆம் தேதி உள்நாட்டு இலாகாவின் அடிஷனல் காரியதரிசி ஸர் ரிச்சர்டு டாட்டன்ஹாம், ''குழப்பங்களுக்குக் காங்கிரஸ் பொறுப்பாளி'' என்ற புத்தகத்தை வெளியிட்டார். 1942-43-ல் நடந்த குழப்பங்களுக்குக் காந்திஜியும் காங்கிரஸ் மேலிடமுமே காரணகர்த்தாக்கள் என்று அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.
பிப்ரவரி 15-இல் டாக்டர் பி.சி.ராய் புனாவுக்கு வந்து காந்திஜியின் உண்ணாவிரதம் முடியும் வரையில் கூடவே இருந்தார். அவருடைய உடல் நிலை பற்றிய அறிக்கைகள் நாளுக்குநாள் அதிகக் கவலையை அளிப்பனவாக இருந்தன. மத்திய சட்டசபை உண்ணாவிரதம் பற்றி விவாதித்தது.
காந்திஜியின் உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டதாக பிப்ரவரி 16-ஆம் தேதியன்று ஆறு டாக்டர்கள் அறிவித்தார்கள்.
அடிப்படைப் பிரச்னையின்பேரில் - காந்திஜியின் உண்ணா விரதத்தின் பேரில் - ஸர் எச்.பி. மோடி, என். ஆர். சர்க்கார், ஆனே ஆகியவர்கள் வைசிராய் நிர்வாகக் கவுன்சில் அங்கத்தினர் பதவியிலிருந்து பிப்ரவரி 17-ஆம் தேதி ராஜிநாமாச் செய்தார்கள்.
பிப்ரவரி 18-இல் காந்திஜியின் உடல் நிலை அதிகக் கவலையளித்தது. காலையிலிருந்து அவர் பேசக்கூடிய நிலையில் இல்லை. அன்று 30 பேர் தான் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள்.
பிப்ரவரி 19, 20 தேதிகளில் டில்லியில் அகில இந்தியத் தலைவர்களின் மகாநாடு நடைபெற்றது. அதில் 200-க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். காந்திஜியை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்று மகாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வேண்டுகோளைப் பிப்ரவரி 26-இல் வைசிராய் நிராகரித்துவிட்டார்.
காந்திஜியை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி நாடெங்கும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
பிப்ரவரி 21- இல் நிலைமை முற்றிவிட்டது. உண்ணாவிரதத்தை உடனடியாக நிறுத்தாவிடில், உயிரைக் காப்பாற்றுவது காலம் கடந்த செயல் ஆகிவிடக் கூடும் என்று டாக்டர்கள் கூறினார்கள். எலுமிச்சம்பழச் சாற்றுக்குப் பதிலாக ஆரஞ்சு ரசத்தைச் சாப்பிடும்படி காந்திஜியை டாக்டர்கள் கேட்டுக்கொண்டார்கள். உண்ணாவிரதத்தின்போது தண்ணீர் சற்றுச் சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றின் சாற்றைச் சிறிது சேர்த்துக்கொள்ளுவது காந்திஜியின் கொள்கைக்கு உடன்பாடே. ஆகவே, அவர் ஆரஞ்சு ரசத்தைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஒப்புக்கொண்டார். இதைப்பற்றிப் பிரிட்டிஷ் பத்திரிகை நிருபர்கள் விஷமத்தனமான செய்திகளைப் பரப்பினார்கள். உண்ணாவிரதம் மரணத்தில் முடிந்தாலும், அதற்கும் சர்க்கார் தயாராகவே இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. போலீஸ், ராணுவ முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் அந்தரங்கப் பிரதிநிதி வில்லியம் பிலிப்ஸ் பத்திரிகை நிருபர்களிடம், இந்திய நிலையைச் சமாளிக்கும் வேலையை அமெரிக்க, பிரிட்டிஷ் சர்க்கார்களின் உயர்தர உத்தியோகஸ்தர்கள் ஒன்று சேர்ந்து செய்துவருகிறார்கள் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
பிப்ரவரி 23-ஆம் தேதியன்று காந்திஜி மனத்தெளிவு பெற்றவராகக் காணப்பட்டார். ''நண்பர்கள் ஆம்புலன்ஸ் யூனிட்'' சார்பில் ஹொரேஸ் அலெக்ஸாண்டர் சமரசம் செய்து வைப்பதற்கு முயன்றார். இந்த மத்தியஸ்தத்தைச் சர்க்கார் உடனே நிராகரித்துவிட்டது.
பிப்ரவரி 27-இல் காந்திஜியை ஆனே பார்த்தார். பிப்ரவரி 28-இல் காந்திஜி உற்சாகத்துடன் காணப்பட்டார்.
மார்ச்சு 3-ஆம் தேதி உண்ணாவிரதம் முடிவடைந்தது. சிறையில் காந்திஜியுடன் இருந்தவர்கள் காந்திஜிக்குப் பிரீதியான "வைஷ்ண ஜனதோ'' கீதத்தையும், டாகுரின் கீதாஞ்சலியிலிருந்து 2 பாடல்களையும், ''ஒளியே, கருணையோடு வழிகாட்டு" என்ற பாட்டையும் பாடினார்கள். ''என்னுடைய இறைவனைச் சந்திக்க எனது பிரார்த்தனை'' என்ற டாகுரின் பாட்டை ஸ்ரீமதி சரோஜினி நாயுடு பாடினார். காலை மணி 9.34-க்குக் கஸ்தூரிபாய் தண்ணீரில் கலக்கப்பட்ட ஆறு அவுன்ஸ் ஆரஞ்சுப்பழச் சாற்றைக் காந்திஜிக்குக் கொடுத்தார். காந்திஜி அதைக் குடிக்க இருபது நிமிஷ நேரம் ஆயிற்று.
உண்ணாவிரதத்தின் கடைசி நாளன்று காந்திஜியைப் பார்ப்பதற்காவது, அவர் உண்ணாவிரதத்தை நிறுத்தும்போது அங்கே இருப்பதற்காவது அனுமதி வேண்டுமென்று இந்தியப்பத்திரிகை நிருபர்களும், அந்நிய நாட்டு நிருபர்களும் அனுமதி கேட்டார்கள். ஆனால், சர்க்கார் மறுத்து விட்டது. மாதம் முடியும்போது தம்மை டாக்டர் பி. சி. ராய் கடைசி முறையாக வந்து வைத்தியப் பரிசோதனை செய்வதை காந்திஜி விரும்பினார். ஆனால் சர்க்கார் அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
உண்ணாவிரதத்தை முடித்த தினத்தன்று காலையில், மகாதேவ தேசாயின் அஸ்தி இந்திராயணி நதியில் கரைக்கப்பட்டது .
மார்ச்சு 6-ஆம் தேதி தண்ணீர் கலந்த ஆட்டுப்பாலையும் பழச் சாற்றையும், சில பழத் துண்டங்களையும் காந்திஜி சாப்பிட்டார். அப்புறம் உடல்நிலை குறித்து அறிக்கைகள் வரவில்லை.
காந்திஜியை விடுதலை செய்ய வேண்டுமென்றும், நிலைமையைப் புனராலோசனை செய்ய வேண்டுமென்றும் கோரி மார்ச்சு 10-ஆம் தேதியன்று 35 முக்கியஸ்தர்கள் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
உத்தேசிக்கப்பட்ட சப்ரூ மகாநாட்டின் தூது கோஷ்டி, வைசிராய் விதித்த கட்டுத் திட்டங்களின் காரணமாக அவரிடம் செல்லுவதைக் கைவிட்டு விட்டது. தலைவர்கள் காந்திஜியைச் சந்திப்பதற்கு வைசிராய் அனுமதிக்கவில்லை.
ஏப்ரல் 25-ஆம் தேதி அமெரிக்காவுக்குப் புறப்பட்ட பிலிப்ஸ், பத்திரிகை நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பின்வருமாறு தெரிவித்தார்: ''ஸ்ரீ காந்தியைச் சந்தித்துப் பேச விரும்பினேன். அதற்கு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அவசியமான வசதிகளைச் செய்துகொடுக்கத் தங்களால் இயலவில்லை என்று அவர்களிடமிருந்து பதில் வந்தது.''
மே 24-ஆம் தேதியன்று கட்சிப் பற்றற்ற தலைவர்கள், பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், காந்திஜியும் பிற காங்கிரஸ் தலைவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும் கோரினார்கள்.
மே 26-ஆம் தேதியன்று டில்லியிலிருந்து சர்க்கார், பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் கூறியதாவது: "இந்திய சர்க்காருக்கு ஸ்ரீ காந்தியிடமிருந்து வந்த ஒரு வேண்டுகோளில், அவர் ஜின்னாவுக்கு எழுதியிருக்கும் ஒரு சிறு கடிதத்தை அவருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார். ஸ்ரீ ஜின்னாவைச் சந்திக்க விரும்புவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்தை அவ்வாறு அனுப்பிவைக்க இயலாது என்று இந்திய சர்க்கார் தீர்மானித்தது. இந்த விவரத்தை ஸ்ரீ காந்திக்கும், ஸ்ரீ ஜின்னாவுக்கும் அறிவித்திருக்கிறது.''
மே 28- ஆம் தேதி ஸ்ரீ ஜின்னா ஓர் அறிக்கையில் கூறியதாவது: ''முஸ்லிம் லீக்கைப் பிரிட்டிஷ் சர்க்காருடன் மோதிக்கொள்ளச் செய்து, அதன் மூலம் தமது விடுதலைக்கு வழி செய்துகொள்ளுவதற்காகவே ஸ்ரீ காந்தி இந்தக் கடிதத்தை எழுதினார் என்று கருத வேண்டும்.''
ஜூன் 18-ஆம் தேதி வேவல் வைசிராயாக நியமிக்கப்பட்டார். "இந்தப் புதிய வைசிராயின் நியமனத்துக்கு, மன்னர் சர்க்காரின் நிலையான கொள்கையில் மாறுதல் எதுவும் ஏற்பட்டிருப்பதாக அர்த்தமல்ல'' என்று ஜூன் 24-ஆம் தேதியன்று காமன்ஸ் சபையில் இந்தியா மந்திரி அமெரி அறிவித்தார்.
டிசம்பர் 4-ஆம் தேதி சர்க்கார் வெளியிட்ட ஓர் அறிக்கை, ''ஸ்ரீமதி காந்திக்கு ஒரே வாரத்தில் மேற்கொண்டு இரண்டு முறை இருதயக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது'' என்று கூறியது. கஸ்தூரிபாய் காந்தியின் வேண்டுகோளின்படி, அவருடைய புதல்வர்களும், பேரன்மாரும், அவரைப் பாதுகாவலில் வைத்திருந்த சிறை முகாமில் சந்திக்க இந்திய சர்க்கார் சம்மதம் அளித்தது.
டிசம்பர் 15-ஆம் தேதி லார்டுகள் சபையில் கஸ்தூரிபாயின் உடல் நிலை பற்றிய விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. "ஸ்ரீமதி காந்தி தற்சமயம் இருக்கும் இடத்திலேயே இருப்பது அவருடைய நலனுக்கு உகந்ததாகும்'' என்று உதவி இந்தியா மந்திரி பதில் அளித்தார்.
டிசம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, மற்றொரு முறை இருதயக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறியது.
டிசம்பர் 24-ஆம் தேதியன்று சர்க்கார், பத்திரிகைகளுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கூறியதாவது: ''அவரை (கஸ்தூரி பாயை) விடுதலை செய்வதால், அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருடைய கணவரிடமிருந்து பிரியும்படி நேரும். ஆகாகான் மாளிகையிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது இரக்க மற்ற செயலாகும்.''
- (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)
Comments
Post a Comment