Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 15


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1940 (வயது 71)

பிப்ரவரி 5-ஆம் தேதி வைசிராயைக் காந்திஜி பேட்டி கண்டார். அதன் இறுதியில், ''சமாதான பூர்வமான, கெளரவமான உடன்பாடு காண்பதற் குரிய சாத்தியம் எதுவும் எனக்குத் தென்படவில்லை'' என்று காந்திஜி தெரிவித்தார்.

பிப்ரவரி 17-இல் காந்திஜியும், கஸ்தூரிபாய் காந்தியும் சாந்தி நிகேதனுக்கு விஜயம் செய்தார்கள். மறுநாள் ஒரு மாந்தோப்பில் கவி டாகுர் அவர்களுக்கு வரவேற்பு உபசாரம் நடத்தினார். விஸ்வபாரதி கலாசாலையைக் காந்திஜி தமது பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று டாகுர் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 21-இல் வங்காளத்திலுள்ள மால்கநந்தாவில் காந்தி சேவா சங்க வருஷாந்தர மகாநாட்டில் பேசிய காந்திஜி, அந்த ஸ்தாபனத்தைக் கலைத்துவிட ஆலோசனை கூறியதுடன், தொடர்ந்து வேலை செய்வதற்கு 9 பேர் அடங்கிய ஒரு கமிட்டியையும் நியமித்தார்.

மார்ச்சு 5-இல் சேகான் என்று வழங்கப்பட்ட கிராமத்துக்குச் சேவா கிராமம் என்று பெயர் மாற்றப்பட்டது.

மார்ச்சு மாதத்தில் மௌலானா ஆஸாத் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 29, 30 தேதிகளில் நடந்த ராம்கார் காங்கிரஸ், காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸின் கருத்துகளைக் கொண்டவர்களும், யுத்தத்துக்கு ஆட்கள், பணம், சாமான்கள் ஆகியவை கொடுத்து உதவ முடியாது என்று அறிவித்தது. விஷயாலோசனைக் கமிட்டியில் பேசிய காந்திஜி, “ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டியும் சக்தியாக்கிரகக் கமிட்டியாக ஆகவேண்டும்” என்றார்.

ஏப்ரல் 5-ஆம் தேதி காந்திஜியின் நெருங்கிய நண்பரான ஸ்ரீ சி. எப். ஆண்ட்ரூஸ் கல்கத்தாவில் காலமானார்.

ஜூன் மாதத்தில் பிரான்ஸ் வீழ்ச்சியுற்றது. ஜின் 17-இலிருந்து 20 வரை வார்தாவில் கூடிய காரியக் கமிட்டிக் கூட்டத்தின் தீர்மானம் புதியதோர் அம்சம் உடையதாக இருந்தது:

"தூரத்தில் இருந்த பிரச்னைகளெல்லாம் இப்போது கைக்கெட்டினாற்போல் அருகில் வந்துவிட்டன. விரைவில் இவற்றைத் தீர்க்கவேண்டிய நிலைமை ஏற்படலாம். தேச சுதந்திரத்தைப் பெறும் பிரச்னையோடு, சுதந்திரத்தை வைத்துக் காப்பாற்றும் பிரச்னையையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும், உள்நாட்டுக் குழப்பத்திலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதையும் சேர்த்து இப்போது ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. விளைவுகள் பலாத்காரமானவையாக இருக்குமா, அகிம்சாபூர்வமாக இருக்குமா என்பதைப் பற்றிச் சிந்திக்கும் அவசியமின்றி அரசியல் முடிவுகள் செய்யக் காரியக்கமிட்டிக்கு வார்தாத் தீர்மானம் சுதந்திரம் கொடுத்துவிட்டது. பிரிட்டன், இந்தியாவின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதற்கும், உடனடியாக இடைக்கால தேசீய சர்க்கார் அமைப்பதற்குமான யோசனையை அது சமர்ப்பித்திருக்கிறது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் குழப்பம் ஆகியவை சம்பந்தமாகக் காங்கிரஸ் மேற்கொள்ளும் திட்டத்துக்கும், நடவடிக்கைக்குமான பொறுப்பிலிருந்து காந்திஜியை க் காரியக் கமிட்டி விடுவித்திருக்கிறது.''

ஜவாஹர்லால் நேரு கூறியதாவது: "காந்திஜி உலகத்துக்கு அளிக்கும் தமது செய்தியை விட்டுக்கொடுக்கவோ, குறைத்துக்கொள்ளவோ இயலாதென்று கருதினால், அவர் கருதியது சரியாகவே இருக்கக்கூடும். இந்தச் செய்தியைத் தம் விருப்பப் பிரகாரம் அளிக்க அவருக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களால் அவரைக் கட்டுப்படுத்தி வைக்கக் கூடாது. அவர் ஒரு வழியிலும், காங்கிரஸ் காரியக் கமிட்டி மற்றொரு வழியிலுமாகச் சென்றிருப்பது இதுதான் முதல் தடவை."

மறுபடியும் காந்திஜியை வைசிராய் அழைத்தார். சிம்லாவில் நீண்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அகிம்சை முறையை ஏற்றுக்கொள்ளும்படி ஜூலை 2-ஆம் தேதியன்று ஒவ்வொரு பிரிட்டிஷ்காரருக்கும் கோரிக்கை விடுத்தார்.

ஜூலை 3-ஆம் தேதியிலிருந்து 7-ஆம் தேதி வரை டில்லியில் காரியக் கமிட்டி கூடியது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து அகிம்சை ஆயுதம் உபயோகிப்பதென்பது நிராகரிக்கப்பட்டது. தேசீய சர்க்கார் வேண்டுமென்று கோரப்பட்டது. காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் மாலை ஸ்ரீ சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டார். அகிம்சையை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றும் கொள்கை உடையவரான ஷேக் அப்துல் கபார்கான் காரியக் கமிட்டியிலிருந்து ராஜினாமாச் செய்தார்.

காந்திஜி கூறியதாவது: "ராஜாஜியின் தீர்மானம், ஆராய்ந்து முடிவு செய்த காங்கிரஸின் கொள்கைக்குப் பிரதிநிதியாக இருக்கிறது. என்னுடைய சமயத் தன்மையுள்ள சாயல் இல்லாமல், முழுக்க முழுக்க அரசியல் மனப்போக்கையே காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்த காங்கிரஸ்காரரல்லாதாரும் இத்தீர்மானத்தை வரவேற்று முழு மனத்துடன் ஆதரிக்க வேண்டும். அவ்வாறே முஸ்லிம் லீக்கும், தங்கள் சமஸ்தானங்களை விட இந்தியாவைப் பற்றி அதிகமாக நினைக்கும் மன்னர்களும் இதை வரவேற்று ஆதரவளிக்க வேண்டும்.''

ஜூலை 25, 26, 27-ஆம் தேதிகளில் நடந்த காரியக் கமிட்டியின் அடுத்த கூட்டத்துக்குக் காந்திஜி போகவில்லை. 27, 28-ஆம் தேதிகளில் நடந்த அ. இ. கா. க. கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. புனாவில் கூடிய அ. இ. கா. க. வார்தாவிலும், டில்லியிலும் நிறைவேறிய தீர்மானத்தை ஊர்ஜிதம் செய்தது.

"சர்க்காரின் விவேகம், ராஜாஜி என் விவேகத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டதைப்போல, மங்கியிருந்தாலொழியச் சுதந்திரத்தை அவர்கள் கொடுக்காமல் இருக்க முடியாது" என்று காந்திஜி கூறினார்.

ஆகஸ்டு 8-ஆம் தேதி வைசிராய் வெளியிட்ட அறிக்கையில், தமது நிர்வாகக் கவுன்சிலில் சேருமாறு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள இந்தியப் பிரதிநிதிகளை அழைக்கத் தாம் அதிகாரம் பெற்றிருப்பதாக அறிவித்தார். நிர்வாகக் கவுன்சிலில் சேரக் காங்கிரஸ் மறுத்துவிட்டது. தேசீய சர்க்கார் வேண்டுமென்ற காங்கிரஸின் கோரிக்கையைக் குறிப்பிட்டு, ''அது உண்மையில் முடிவு காணப்பெறாத அரசியல் அமைப்புப் பிரச்னையையே கிளப்பும் கோரிக்கையாகும்" என்று இந்தியா மந்திரி அமெரி சொன்னார்.

ஆகஸ்டு 18-இலிருந்து 23 வரை வார்தாவில் கூடிய காரியக் கமிட்டி, ''இந்தியாவை வாள் பலத்தைக் கொண்டு அடக்க வைத்திருக்க வேண்டும் என்பதே பிரிட்டிஷ் சர்க்காரின் கருத்தாகும்" என்று அறிவித்தது. காந்திஜியின் தலைமையில் நடவடிக்கையில் ஈடுபடக் காரியக் கமிட்டி உறுதி பூண்டதோடு, காங்கிரஸுக்கு வழிகாட்டிச் செல்லுமாறும் அவரைக் கேட்டுக் கொண்டது. காந்திஜி கூறியதாவது: "இங்கிலாந்து, தோற்கடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இங்கிலாந்து தாழ்மைப்படுவதை நான் விரும்பவில்லை. தாங்களே அபாயத்தில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள், மற்றவர்களைக் காப்பாற்ற முடியாது. ஆனால், பொறுமை என்ற உயர் குணத்தை, தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் எல்லை வரையில் காங்கிரஸ்காரர்களிடையிலோ, காங்கிரஸ்காரல்லாதரிடையிலோ, எங்கெல்லாம் தேசீய உணர்ச்சி இருக்கிறதோ அங்கெல்லாம் கொண்டு செலுத்த முடியாது. பேச்சு, அதை ஒட்டிய செயல் ஆகியவற்றின் சுதந்திரம் ஜனநாயக வாழ்க்கையின் சுவாசமாகும். போர் புரியும் நாடுகள் இழிந்த காட்டுமிராண்டிச் செயலைச் செய்யும்போது, யுத்தத்துக்குப் பதிலாக அகிம்சையைக் கைக்கொள்ள வேண்டுமென்று பிரசாரம் செய்யும் சுதந்திரம், முற்றும் நியாயமானதேயாகும்.''

செப்டம்பர் 27-ஆம் தேதி சிம்லாவில் வைசிராயைக் காந்திஜி சந்தித்தார். அதன் பின் காந்திஜி அறிவித்ததாவது: ''உடனடியான பிரச்னை உயிர்வாழும் உரிமையாகும். விரிவான பொருளில், அதற்குப் பேச்சுச் சுதந்திரம் என்று அர்த்தம். காங்கிரஸ் அழியவேண்டிய நிலை ஏற்பட்டால், தனது கொள்கையைப் பிரகடனம் செய்யும் செயலில் அது அழிய வேண்டும்.”

அக்டோபர் 11-இலிருந்து 13 வரை கூடிய காரியக் கமிட்டியின் அங்கீகாரத்தின்பேரில் தனிநபர் சத்தியாக்கிரகத்தைக் காந்திஜி தொடங்கினார். முதல் சத்தியாக்கிரகியாக வினோபா பாவே தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 17-ஆம் தேதியன்று வார்தாவுக்கு 7 மைல் தூரத்தில் கிராமவாசிகள் கூட்டத்தில் யுத்த எதிர்ப்புச் சொற்பொழிவாற்றி அவர் தார்மிக எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். அக்டோபர் 21-ஆம் தேதி தியோலியில் அவர் கைது செய்யப்பட்டார். வார்தாவில் விசாரணை நடந்தபின் அவருக்கு மூன்று மாதச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டது. சத்தியாக்கிரகிகள், தினந்தோறும் யுத்த எதிர்ப்புச் சுலோகங்களைக் கோஷித்துக்கொண்டு சென்றனர். அதன் பலனாகக் கைது செய்யப்பட்டனர்.

அக்டோபர் 31-ஆம் தேதியன்று மாலை ஸ்ரீ ஜவாஹர்லால் நேரு கைதுசெய்யப்பட்டு, நான்கு வருடச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டார்.

அக்டோபர் 31-இல் 'ஹரிஜன்', 'ஹரிஜன பந்து', 'ஹரிஜன சேவக்' ஆகிய பத்திரிகைகளைக் காந்திஜி நிறுத்தி வைத்தார். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் செய்திகளை வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளை அரசாங்கம் தடுத்தது.

டிசம்பர் 30-ஆம் தேதி அலகாபாத்தில் கைதான மெளலானா அபுல் கலாம் ஆஸாத்துக்கு 18 மாதச் சிறை த் தண்டனை விதிக்கப்பட்டது.

1940 டிசம்பர் 25-ஆம் தேதியிலிருந்து, 1941 ஜனவரி 4-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் நல்லெண்ண அடையாளமாகச் சத்தியாக்கிரகத்தைக் காந்திஜி நிறுத்தி வைத்தார்.

1941 (வயது 72)

1941-ஆம் வருடம் முழுவதிலும் இயக்கம் தொடர்ந்து நடந்ததுடன், இந்தியாவின் தூரப் பகுதிகளிலெல்லாம் சாவதானமாகப் பரவியது. ஜனவரி 5-ஆம் தேதி சத்தியாக்கிரகிகளின் ஜாபிதாவை ஸ்தல காங்கிரஸ் கமிட்டிகள் தயாரித்தன. அநேகர் சிறை சென்றனர்.

ஆகஸ்டு 7-ஆம் தேதி ரவீந்திரநாத டாகுர் காலமானார்.

இந்தியா முழுவதிலும் சத்தியாக்கிரகிகளை விடுதலை செய்யத் தீர்மானித்திருப்பதை டிசம்பர் 2-ஆம் தேதியன்று சர்க்கார் அறிவித்தது. ஏறக்குறைய 25,000 பேர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருந்தனர்; மொத்தம் சுமார் 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதே தினத்தில், ''என்னைப் பொறுத்த வரையில், இந்திய சர்க்காரின் இந்தத் தீர்மானம் சிறிதளவு பாராட்டைக்கூடப் பெற முடியாது'' என்று காந்திஜி கூறினார். எல்லைப்புற மாகாணத்திலும், வங்காளத்தில் சில பகுதிகளிலும் சத்தியாக்கிரகிகள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

டிசம்பர் 7-ஆம் தேதி பேர்ள் ஹார்பரை ஜப்பான் தாக்கியது.

டிசம்பர் 8-ஆம் தேதியிலிருந்து ஒரு மாத காலம் காந்திஜி பர்டோலியில் வல்லபபாய் பட்டேலின் ஆசிரமத்தில் தங்கினார்.

டிசம்பர் 23-ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை காங்கிரஸ் காரியக் கமிட்டி பர்டோலியில் கூடியது. காந்திஜியின் வேண்டுகோளின்படி அவர் காங்கிரஸ் தலைமையிலிருந்து விலகிக்கொள்ளக் கமிட்டி சம்மதித்தது. அகிம்சையை வியாக்கியானம் செய்வதில் அடிப்படை வித்தியாசம் இருந்ததே இதற்குக் காரணம். அகிம்சையைச் சகல சந்தர்ப்பங்களிலுமே கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் காந்திஜியின் கருத்து. ஆனால், கமிட்டியோ, பின் கண்டவாறு முடிவு செய்தது: ''தேசீய அடிப்படையிலேயே இந்தியா தன் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். யுத்தப் புயலினால் ஏற்படும் பெரிய பணிகளைச் செய்வதில் உதவியாக இருக்க முடியும்.'' பர்மாவில், குறிப்பாக ரங்கூன் நகரில் சமீபத்தில் நிகழ்ந்த ''அசாதாரணமான நிகழ்ச்சிகள்" சம்பந்தமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தைப் பிரசுரிப்பதைச் சர்க்கார் தடை செய்துவிட்டது. மலாயா, பர்மா, கிழக்கு இந்தியத் தீவுகள் ஆகியவற்றின் மக்களுக்குக் கமிட்டி அனுதாபம் தெரிவித்தது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வாழ்த்துக்கள் அனுப்பியது. உணவுப் பயிர்களை அதிகமாகச் சாகுபடி செய்யுமாறு கிராமவாசிகளுக்குச் சிபாரிசு செய்தது. சரக்குகளைப் பதுக்கிக் கொள்ளை லாபம் அடிக்கக்கூடாது என்று வியாபாரிகளை எச்சரித்தது. அபாயத்தின் முன்னிலையில் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டுமென்று மக்களுக்குக் கோரிக்கை விடுத்தது. தற்காப்பு, கஷ்ட நிவாரணம் ஆகிய துறைகளில் பயிற்சி பெறுவதற்கும் மக்களுக்கு உதவுவதற்கும் தொண்டர் ஸ்தாபனங்களைத் தொடங்கி நடத்தத் தீர்மானித்தது. 1940 செப்டம்பருக்குப் பிறகு நடைபெற்ற காரியக் கமிட்டியின் முதல் கூட்டம் இதுதான்.

  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...