Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 14


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1938 (வயது 69)

ஜுஹுவில் ஒரு மாதம் தங்கியபின் ஜனவரி 8-இல் காந்திஜி சேவாகிராமத்துக்குத் திரும்பினார். இன்னும், ரத்தக் கொதிப்பு நோயால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோதிலும், அந்தமான் கைதிகள் பிரச்னைக்கும், வங்காளப் பாதுகாப்புக் கைதிகள் பிரச்னைக்கும் பரிகாரம் காணும் முயற்சியில் ஈடுபட்டார். கடிதங்கள் எழுதவோ, 'ஹரிஜன்' பத்திரிகையில் எழுதவோ டாக்டர்கள் அவரை அனுமதிக்கவில்லை.

ஜனவரியில், பம்பாய் சட்டசபை, ஹரிஜன ஆலயப் பிரவேச மசோதாவை நிறைவேற்றியது. மாகாணத்திலுள்ள யாருக்கும் மன்னரோ, வைசிராயோ எந்தப் பட்டத்தை வழங்கினாலும் அது சட்டசபையின் விருப்பத்துக்கு விரோதமானதாகும் என்று ஜனவரிக் கடைசி வாரத்தில் அது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மற்ற மாகாணங்களின் காங்கிரஸ் மந்திரி சபைகளும் இதைப் பின்பற்றின.

சேவாக் கிராமத்தில் லார்டு லோதியன் மகாத்மாவுடன் மூன்று நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பிப்ரவரியில் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஹரிபுரா காங்கிரஸ் நடைபெற்றது. ஐக்கிய மாகாணத்திலும், பீகாரிலும் மந்திரி சபைகளில் ஏற்பட்டிருந்த நெருக்கடி பற்றிப் பரிசீலனை செய்யப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விஷயத்தில் கவர்னர்கள் தலையிடுவதைக் காந்திஜி கண்டித்தார்.

மார்ச்சு 25-இலிருந்து 31 வரை பூரிக்கு அருகிலுள்ள தலாங் என்னும் இடத்தில் நடந்த காந்தி சேவா சங்கத்தின் நான்காவது மகாநாட்டில் பேசிய காந்திஜி, சுய பரிசோதனை செய்து கொள்ளுவதை வற்புறுத்தியதோடு, அகிம்சையின் ஆற்றலையும் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் காந்திஜிக்கு ஜவாஹர்லால் நேரு கடிதம் எழுதி, காங்கிரஸ் அரசியலில் நிலைமைகளும் சந்தர்ப்பங்களும் மாறிவிட்டன என்று கூறித் தமது மனக்கஷ்டத்தைத் தெரிவித்திருந்ததுடன், "பழைய முறைப்படியே நிர்வாகத்தை மாற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள்; அதற்கு நியாயம் கற்பிக்கவும் முயல்கிறார்கள். நமக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது என்ற பிரமையினால் தவறான பாதையில் சென்றுவிடக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம்'' என்றும் கூறியிருந்தார்.

ஏப்ரலில் காந்திஜி, மகாதேவ தேசாயை எல்லைப்புற மாகாணத்துக்கு அனுப்பினார். அங்கே கான் சகோதரர்களைச் சந்திக்கும் படியும், நிலைமைகளை ஆராய்ந்து வரும்படியும் அவரிடம் சொல்லி அனுப்பினார்.

மே இரண்டாவது வாரத்தில் கான் சாகிப்புடன் மகாத்மா பெஷாவர் மாகாணத்தில் சுற்றுப்பிரயாணம் செய்தார். கிராமங்களில் பட்டாணியர்கள் மன மகிழ்ச்சியோடு காந்திஜியை வரவேற்றார்கள். அவர்களிடம் மகாத்மா அகிம்சையை வற்புறுத்திக் கூறினார்.

மே மாதத்தில் மத்திய மாகாண மந்திரி சபையில் அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டு, அதன் பலனாக நான்கு மந்திரிகள் பிரதமர் டாக்டர் கரேக்கு ராஜினாமாக் கடிதங்களை அனுப்பினார்கள். டாக்டர் கரே, காரியக் கமிட்டியின் கட்டளைக்கு விரோதமாக நடந்துகொண்டார். ஜூலை 18-இல் அவர் ராஜினாமாச் செய்தார். மத்திய மாகாணக் கவர்னரின் நடவடிக்கையைக் காந்திஜி கண்டித்தார்.

செப்டம்பரில் சில ஹரிஜனங்கள் சேவா கிராமத்தில் 'சத்தியாக்கிரகம்' செய்ய ஆரம்பித்தார்கள். மத்திய மாகாணத்தில் ஒரு ஹரிஜன மந்திரியை நியமிக்க வேண்டுமென்பது அவர்களுடைய கோரிக்கை. இவ்வாறு நியமிப்பது தமது அதிகாரத்தில் அல்ல என்று காந்திஜி சொன்னார். அவர்கள் கஸ்தூரிபாய் குடிசையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகப் பிடிவாக மாகக் கூறினார்கள். காந்திஜி அதை அனுமதித்தார்.

அக்டோபர் 2, 3-ஆம் தேதிகளில் டில்லியில் மாகாண மந்திரிகளின் கூட்டம் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. தேசீயத் திட்டக் கமிட்டி நிறுவப்பட்டது.

செக்கஸ்லோவேகிய மக்கள் ஜெர்மனியரிடம் சரண் அடைந்ததைப் பற்றிக் காந்திஜி பின் வருமாறு கூறினார்: ''ஆயுதங்கள் இல்லாமலும், மனத்தில் விரோத உணர்ச்சி இல்லாமலும், ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும் அகிம்சை முறையில் எதிர்த்துப் போராடுவது அவர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும். நான் டாக்டர் பெனேசுக்கு, தைரியசாலிகளின் ஆயுதத்தையே பரிசளிக்கிறேனே ஒழிய, பலவீனர்களின் ஆயுதத்தை அல்ல.''

மூனிச் ஒப்பந்தம் பற்றிக் காந்திஜி எழுதியதாவது: "மூனிச்சில் ஐரோப்பா அடைந்துள்ள சமாதானம், பலாத்காரத்தின் வெற்றி. அதுவே அதனுடைய தோல்வியுமாகும். கடைசி மனிதன் வரை போராடும் தைரியம் அதற்கு இப்போது இருப்பதுபோலவே இருக்குமென்றால், போராட மறுத்து, அதே சமயத்தில் அந்நியர்களுக்குச் சரணடையவும் மறுப்பது இன்னும் பெரிய தைரியமாகும் என்று நான் கூறுகிறேன்.''

நவம்பர் 26-ஆம் தேதி 'ஹரிஜனி'ல் காந்திஜி பின்வருமாறு எழுதினார்: "என் அனுதாபங்களெல்லாம் யூதர்கள் பக்கமே. நான் ஜெர்மனியில் ஒரு யூதனாகப் பிறந்து, அங்கேயே ஜீவனத்தையும் தேடிக்கொண்டவனாக இருந்தால், யூதன் அல்லாத ஜெர்மானியனைப்போல நானும் ஜெர்மனி எனது தாயகம் என்று உரிமை கொண்டாடுவேன். என்னைச் சுடுமாறு அல்லது சிறையில் தள்ளுமாறு சவால் விடுவேன். நாடு கடத்தப்படுவதற்கோ, பாரபட்சமாக நடத்தப்படுவதற்கோ சம்மதிக்கமாட்டேன்.''

டிசம்பர் 3-ஆம் தேதி காந்திஜி எழுதியதாவது: "மக்களின் நலனே தங்கள் நலன் என்று சமஸ்தானாதிபதிகள் கருதினால், அவர்கள் காங்கிரஸின் உதவியை நன்றியறிதலோடு கோரி ஏற்றுக்கொள்ள வேண்டும். சமீப எதிர்காலத்திலேயே, தலைமை அதிகாரப் பீடத்தை அடையப்போகும் ஒரு ஸ்தாபனத்துடன், அவர்கள் தங்கள் சொந்த நலனைக் கருதி, நட்புறவுகள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.''

டிசம்பர் 17-இல் தேசீயத் திட்டக் கமிட்டியின் முதல் மகாநாடு நடந்தது. கமிட்டியின் தலைவர் ஸ்ரீ ஜவாஹர்லால் நேரு.

டிசம்பர் 24-இல் காந்திஜி, 'ஹரிஜன்' பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்: ''எந்த உணர்ச்சியோடு மதுவிலக்கை அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கருதப்பட்டதோ, அந்த உணர்ச்சியோடு இப்போது காங்கிரஸ் மாகாணங்களில் அது அமலாகவில்லை. குடிக்கும், லாகிரிப் பழக்கத்துக்கும் நாம் அடிமைகளாக இருக்கும் வரை, நமது சுதந்திரம் அடிமைகளின் சுதந்திரமாகவே இருக்கும்.''

ஜப்பானியப் பார்லிமென்டின் அங்கத்தினர் டகாவோகா, சேவா கிராமத்துக்கு விஜயம் செய்தார். அவரிடம் காந்திஜி கூறியதாவது: ''ஆசியா ஆசியர்களுக்கே என்ற சித்தாந்தம், ஐரோப்பிய எதிர்ப்பு உறவாக இருக்குமென்றால், அது எனக்கு உடன்பாடல்ல. ஜப்பான், புத் தருடைய உபதேசத்தை மீண்டும் கற்று அதை உலகுக்கு அளிக்க வேண்டும். நீங்கள் உங்கள் புராதனப் பிதுரார்ஜிதத்தின்படி ஒழுக வேண்டும் என்பதைத் தவிர, உங்களுக்கு நான் வேறு செய்தி எதையும் அளிப்பதற்கில்லை.''

சேவா கிராமத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. ''இந்தியாவுக்கு உலகம் முழுவதன் அனுதாபமும் கிடைக்கும் என்றால், சத்தியாக்கிரகம் என்ற இந்த அபூர்வப் பரிசோதனையைச் செய்துகொண்டிருக்கும்போதே அது கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்றார் காந்திஜி.
1939 (வயது 70)

ஜனவரி 4-ஆம் தேதி மெளலானா ஷௌகத் அலி காலமானார். காந்திஜி துக்கத்துடன் கண்ணீர் வடித்தார்.

ஜனவரியில் டாக்டர் ககாவா என்ற ஜப்பானியக் காந்தி பக்தர் சேவா கிராமத்துக்கு வந்தார். காந்திஜியும் அவரும் கூட்டுறவு இயக்கம் பற்றி விவாதித்தனர்.

ஜனவரி 28-ஆம் தேதி ஹரிஜனில், ''சமஸ்தானங்களுக்குள் உரிமை இயக்கம் ஒரு புதிய கட்டத்தில் பிரவேசித்துக் கொண்டிருக்கிறது'' என்று காந்திஜி எழுதினார்.

பிப்ரவரி 4-ஆம் தேதி ராஜ்கோட்டைப் பற்றிய ஒரு தலையங்கத்தில், "ராஜ்கோட்டில் உள்ள பிரிட்டிஷ் ரெஸிடெண்டினுடைய தூண்டுதலின்பேரில் மக்களின் உரிமைச் சாஸனத்தைச் சமஸ்தானாதிபதி மீறியது தவறு. இந்தத் தவறை வெகு சீக்கிரத்தில் சரிபண்ணியாக வேண்டும்'' என்று காந்திஜி எழுதினார். கைது செய்யப்படுவதை எதிர்பார்த்துக் கஸ்தூரிபாய் காந்தி ராஜ்கோட்டுக்குள் பிரவேசித்தார்.

சுபாஷ் சந்திரபோஸ் மீண்டும் காங்கிரஸுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பிப்ரவரி 4-ஆம் தேதி 'ஹரிஜனி'ல் காந்திஜி எழுதியதாவது: ''காங்கிரஸுக்குள் இருப்பது யாருக்கு அசௌகரியமாகத் தோன்றுகிறதோ, அவர்கள் வெளியே வந்துவிடலாம். ஆனால் துவேஷத்துடன் வெளியே வராமல், மேலும் அதிகப் பணியாற்றும் நோக்கத்துடனேயே வெளியே வரவேண்டும்.''

தமக்கு உருவச்சிலையொன்றை எழுப்பப்போவதாகக் கேள்விப்பட்டதும், ''இந்தக் காட்சிப் பொருள்களை வைப்பதை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன். என்னிடத்தில் நம்பிக்கை உடையவர்கள், நான் எதற்காகப் பாடுபடுகிறேனோ அதை நிறைவேற்றுவதற்கு உழைத்தால் அதையே எனக்குச் செய்த பெரிய கெளரவமாகக் கருதுவேன்'' என்று காந்திஜி எழுதினார்.

காந்திஜி அறிவித்த பிரகாரம் ராஜ்கோட் சட்டமறுப்பை பிப்ரவரி 25-ஆம் தேதி வல்லபபாய் பட்டேல் நிறுத்திவைத்தார். பிப்ரவரி 27-ஆம் தேதி காந்திஜி சமாதானத் தூதராக ராஜ்கோட்டுக்குச் சென்றார்.

மார்ச்சு 2-ஆம் தேதி ராஜ்கோட் மன்னருக்குக் காந்திஜி கடிதம் எழுதி, மறுநாளிலிருந்து சாகும்வரை தாம் உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்திருப்பதை அறிவித்தார். மக்களோடு செய்துகொண்ட புனித உடன்படிக்கையை மீறிவிட்டதாக ராஜ்கோட் மன்னரைக் காந்திஜி குற்றஞ்சாட்டினார்.

மார்ச்சு 3-ஆம் தேதி மத்தியான்னத்திலிருந்து உண்ணாவிரதம் ஆரம்பமாயிற்று. ராஜ்கோட் விவகாரத்தில் தலையிடும்படி கோரி மறுநாள் வைசிராய்க்குக் காந்திஜி கடிதம் எழுதினார்.

விவகாரத்தை இந்தியாவின் தலைமை நீதிபதி ஸர் மாரிஸ் குவையர் தீர்ப்புக்கு விட்டுவிடலாம் என்று மன்னரின் சம்மதத்துடன் வைசிராய் யோசனை கூறினார். மார்ச் 7-ஆம் தேதி உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது.

மார்ச் மாதத்தில் திரிபுரா காங்கிரஸ் நடைபெற்றது. நெருக்கடியான சூழ்நிலை நிலவியது. தலைவர் ஸ்ரீ சுபாஷ் சந்திரபோஸ் நோய்வாய்ப்பட்டிருந்தார். தேசிய சுதந்திர கோரிக்கையை மீண்டும் வற்புறுத்தும் தீர்மானமும், சமஸ்தான மக்களின் இயக்கத்துக்குக் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. காந்திஜியிடமும், காரியக் கமிட்டியிலிருந்து ராஜினாமாச் செய்த அங்கத்தினர்களிடமும் நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேறியது.

மார்ச்சு 15-இலிருந்து ஏப்ரல் 7 வரை காந்திஜி டில்லியில் தங்கினார். வைசிராயைப் பேட்டி கண்டார். ஏப்ரல் 3-ஆம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதி, ராஜ்கோட் விவகாரத்தில் வல்லபபாய் பட்டேலுக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறினார். தீர்ப்பைத் தியாகம் செய்துவிடக் காந்திஜி தீர்மானித்தார். ஏப்ரல் 9-ஆம் தேதி ராஜ்கோட்டுக்குத் திரும்பவும் சென்றார்.

மே மாதத்தில் கல்கத்தாவில் அ. இ. கா. க. கூடியது. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமைப் பதவியை ராஜிநாமாச் செய்தார். 1939-40-க்கு பாபு ராஜேந்திரப் பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜ்கோட் விவகாரத்தில் தாம் வைசிராயின் உதவியை நாடியது, அகிம்சை வழிக்கு மாறுபட்டதென்றும், தாம் குற்றம் புரிந்துவிட்டதாகவும் கூறி நீதிபதியின் தீர்ப்பைத் தியாகம் செய்ததுடன், வைசிராயிடமும், ராஜ்கோட் சமஸ்தான நீதிபதியிடமும், சம்பந்தப்பட்ட மற்றவர்களிடமும் காந்திஜி மன்னிப்புக் கோரினார்.

மே 7-ஆம் தேதி பிருந்தாவனத்தில் காந்தி சேவா சங்கக் கூட்டம் நடைபெற்றது. அங்கத்தினர்கள் தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி உபதேசித்தார்.

மே 21-ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ் ‘பார்வர்டு பிளாக் கட்சி’யை ஸ்தாபித்தார்.

ஜூன் மாதத்தில் தேசியத் திட்டக் கமிட்டியின் இரண்டாவது மகாநாடு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவுக்கு அரசியல் திட்டம் தயாரிக்க வேண்டும் என்று ஜவாஹர்லால் நேரு தெரிவித்தார்.

ஜூலை 13-இல் பம்பாயில் மதுவிலக்கைக் கொண்டுவர நடந்த முயற்சிகளை எதிர்க்க வேண்டாமென்று சுபாஷ் சந்திர போஸைக் காந்திஜி கேட்டுக்கொண்டார். எல்லைப்புற மாகாணத் தில் இரண்டு வாரங்கள் சுற்றுப் பிரயாணம் செய்தார்.

உலகத்தை யுத்தத்தில் மூழ்கடிக்க வேண்டாம் என்று கூறி ஜூலை மாதத்தில் ஹிட்லருக்குக் காந்திஜி பகிரங்கக் கடிதம் எழுதினார்.

ஆகஸ்டு முதல் தேதியன்று பம்பாய் மாகாணம் முழுவதிலும் மதுவிலக்கு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆகஸ்டு 9-இலிருந்து 12 வரை வார்தாவில் நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டம் பின்வருமாறு அறிவித்தது: ''இந்த உலக நெருக்கடியில், காரியக் கமிட்டியின் அனுதாபங்கள் முழுக்க முழுக்க ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்கும் பாடுபடும் மக்களின் பக்கமே இருக்கின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவின் தூரக் கிழக்குப் பகுதி ஆகியவற்றில் பாஸிஸ்டு ஆக்கிரமிப்பைக் காங்கிரஸ் திரும்பத் திரும்பக் கண்டனம் செய்திருக்கிறது. யுத்தம் மூண்டுவிட்டால், இந்தியாவின்மீது யுத்தத்தைச் சுமத்துவதற்குச் செய்யும் சகல முயற்சிகளையும் எதிர்க்கத் தீர்மானித்திருப்பதையும் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.'' முதல் நடவடிக்கையாக, மத்திய சட்ட சபையில் அடுத்த கூட்டத்தில் காங்கிரஸ் அங்கத்தினர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று காரியக் கமிட்டி கட்டளையிட்டது. மேலும், பிரிட்டிஷ் சர்க்காரின் யுத்த முயற்சிகளுக்கு எந்த வகையிலும் உதவி புரியக்கூடாது என்றும் மாகாண சர்க்கார்களைக் கேட்டுக்கொண்டது.

அ. இ. கா. க. தீர்மானங்களை எதிர்த்து ஆட்சேபக் கூட்டங்கள் நடத்திக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதற்காக ஸ்ரீ சுபாஷ் சந்திர போஸ், மூன்று வருட காலத்துக்குக் காங்கிரஸில் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யோக்கியதாம்சம் இல்லாதவராக்கப்பட்டார். இந்தத் தீர்மானத்தின் வாசகத்தை காந்திஜி தயாரித்தார்.

ஆகஸ்டு 20-இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் என்ற அவசரச் சட்டம் மத்திய சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 3-ஆம் தேதி யுத்தப் பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காந்திஜியைச் சிம்லாவுக்கு வரும்படி வைசிராய் அழைப்பு விடுத்தார். வைசிராயைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த காந்திஜி, தாம் வெறுங்கையோடு திரும்பியிருப்பதாகவும், இரு சாராரிடையிலும் உடன்பாடு ஏற்பட வேண்டுமானால், அது காங்கிரஸுக்கும் சர்க்காருக்கும் இடையில்தான் ஏற்பட வேண்டுமென்றும், தம் சொந்த அனுதாபங்கள் இங்கிலாந்தின் பக்கமே இருப்பதாக வைசிராயிடம் தெரிவித்திருப்பதாகவும் காந்திஜி கூறினார்.

செப்டம்பர் 8- இலிருந்து 15 வரை வார்தாவில் காரியக் கமிட்டி கூடியது. இதில் கலந்துகொள்ளுமாறு ஸ்ரீ ஜின்னா அழைக்கப்பட்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். விசேஷ அழைப்பின் பேரில் சுபாஷ், ஆனே, நரேந்திர தேவ், ஜயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் வந்திருந்தனர். காரியக் கமிட்டி பின்வருமாறு அறிவித்தது: ''இந்தியா சம்பந்தப்பட்ட மட்டில் யுத்தம், சமாதானம் என்ற விஷயங்களைப் பற்றி இந்திய மக்களே முடிவு செய்ய வேண்டும். ஜனநாயக சுதந்திரத்துக்காகவும், மக்கள் சுதந்திரத்திற்காகவும் நடைபெறுவதாகச் சொல்லப்படும் இந்த யுத்தத்தில் இந்தியா பங்கெடுத்துக்கொள்ளுவதற்கில்லை. ஏனென்றால், அதே சுதந்திரம் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், நெருக்கடியான நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவான தீர்மானம் செய்துவிட வேண்டாம் என்று கமிட்டி விரும்புகிறது."

நிலைமையைப் பரிசீலனை செய்வதற்காக ஜவாஹர்லால் நேரு, மெளலானா ஆஸாத், வல்லபபாய் பட்டேல் ஆகியோர் அடங்கிய உப கமிட்டி ஒன்றைக் காரியக் கமிட்டி நியமித்தது.

காங்கிரஸ் அறிக்கையைப் பற்றிச் செப்டம்பர் 15-இல் சேவா கிராமத்திலிருந்து காந்திஜி பின்வருமாறு அபிப்பிராயம் தெரிவித்தார்: "பிரிட்டனுக்கு எப்படிப்பட்ட ஆதரவு கொடுத்தாலும் அதை நிபந்தனையின்றிக் கொடுக்க வேண்டுமென்று நினைப்பவன் நான் ஒருவனே. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஆனால், காரியக் கமிட்டியின் அறிக்கைக்குக் காங்கிரஸ்காரர்களிடையே, எல்லாப் பிரிவினரிடமிருந்தும், ஏகமனதான ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். பிரிட்டிஷ் ராஜ தந்திரிகளிடம் மனப் புரட்சி ஏற்பட வேண்டும். இதுதான் இப்போது தேவைப்படுவதாகும்.''

செப்டம்பர் 17-ஆம் தேதி மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குக் காங்கிரஸின் யுத்த உப கமிட்டி அனுப்பிய சுற்றறிக்கையில், காங்கிரஸ் மாகாணங்களில் உள்ள பிரதமர்கள் தங்கள் அபிப்பிராயங்களை மாகாணச் சட்டசபைகளின் முன்னிலையிலும் கவர்னர்களின் முன்னிலையிலும் எடுத்துக்கூற வேண்டுமென்று தெரிவித்தது. வைசிராயுடன் காந்திஜி கடிதப் போக்குவரத்து நடத்திக்கொண்டிருந்ததால், காங்கிரஸ் எந்தக் காரியத்தையும் செய்யாமல் இருந்தது. தேசீயக் கோரிக்கைத் தீர்மானத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளுவதை நிறுத்திவைக்குமாறு காங்கிரஸ் பிரதமர்களுக்கு உப கமிட்டி அறிவித்தது. இதற்கிடையே, மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுவதற்குக் காங்கிரஸ் பிரதமர்கள் தீர்மானித்தார்கள்.

லார்டுகள் சபையில் நடந்த இந்தியாவைப் பற்றிய விவாதத்தின் பிரதி ஒன்று முன்கூட்டியே காந்திஜிக்கு அனுப்பப்பட்டது. அதற்குப் பதில் கூறும் முறையில், செப்டம்பர் 28-இல் சேவா கிராமத்திலிருந்து காந்திஜி எழுதியதாவது: "பிரிட்டனின் நண்பன் என்ற முறையில், பிரிட்டிஷ் ராஜ தந்திரிகளுக்கு இந்தக் கோரிக்கையை விடுக்கிறேன். அவர்கள் பழைய ஏகாதிபத்தியவாதிகளின் பாஷையை மறந்துவிட்டு, புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும்.''

அக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜியின் 70-ஆவது பிறந்த தின நூல் வெளி வந்தது. அதன் பதிப்பாசிரியர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.

அக்டோபர் 3-ஆம் தேதி ராஜேந்திரப் பிரசாத்துடனும், நேருவுடனும் வைசிராய் பேசினார். அக்டோபர் 9, 10 தேதிகளில் வார்தாவில் நடந்த அ. இ. கா. க. கூட்டம் காரியக் கமிட்டியின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது. 17-ஆம் தேதி வைசிராயின் அறிக்கை வெளிவந்தது. ''யுத்த முடிவில், மாட்சிமை தங்கிய மன்னர் சர்க்கார், இந்தியாவைக் கலந்து ஆலோசிப்பதற்கு மிகவும் தயாராக இருக்கும்'' என்பதுதான் அந்த அறிக்கையின் சாரம்.

அக்டோபர் 18-ஆம் தேதி காந்திஜி கூறினார்: "வைசிராயின் அறிக்கை பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாகக இருக்கிறது. காங்கிரஸ் ரொட்டி கேட்டதற்குக் கல் கிடைத்திருக்கிறது,''

அக்டோபர் 22, 23 தேதிகளில் வார்தாவில் காரியக் கமிட்டி கூடி, காங்கிரஸ், மந்திரிகளை ராஜிநாமாச் செய்யும்படி அறிவித்தது. நவம்பர் முதல் தேதியில் காந்திஜி, ராஜேந்திரப் பிரசாத், ஜின்னா ஆகியோர் வைசராயை ஒன்றாகச் சந்தித்தார்கள். பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறவில்லை என்று நவம்பர் 6-ஆம் தேதியன்று வைசிராய் அறிவித்தார்.

நவம்பர் 8-இல் எல்லாக் காங்கிரஸ் மந்திரி சபைகளும் ராஜிநாமாச் செய்துவிட்டன. இவற்றின் ஸ்தானத்தில் வேறு மந்திரி சபைகளை அமைக்கச் சர்க்கார் அரைகுறை மனத்துடன் முயற்சி செய்தது. ஆனால் இறுதியில் இந்திய சர்க்கார் சட்டத்தின் 93-ஆவது பிரிவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

நவம்பர் 19-இலிருந்து 23 வரை அலகாபாத்தில் கூடிய காரியக் கமிட்டி, "எதிர்காலத்துக்கான காங்கிரஸ் திட்டத்தையும், கொள்கையையும் பொதுமக்களுக்குக் காங்கிரஸ் விளக்கிக் கூறவேண்டும்'' என்று அறிவித்தது. அரசியல் நிர்ணய சபை அமைக்க வேண்டும் என்ற யோசனையை நவம்பர் 25-ஆம் தேதி ஹரிஜனில் காந்திஜி ஆதரித்தார்.

டிசம்பர் 18-இலிருந்து 22 வரை வார்தாவில் காரியக் கமிட்டி கூடியது. நிர்மாண வேலையைத் தீவிரமாகச் செய்துவர வேண்டுமென்றும், அழைப்பு வரும்போது தயாராக இருக்க வேண்டுமென்றும், காங்கிரஸ் கமிட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. 1940, ஜனவரி 26-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்பது சகல காங்கிரஸ் கமிட்டிகளின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...