Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 11


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1932 (வயது 63)

காந்திஜிக்கும் வைசிராய்க்கும் இடையே 6 நாட்கள் கடிதப் போக்குவரத்து நடந்தது. ஜனவரி 3-ஆம் தேதி காந்திஜி கடைசித் தந்தி கொடுத்தார். காரியக் கமிட்டி கடுமையான சட்ட திட்டங்களின் கீழ்ச் சட்ட மறுப்பை மீண்டும் தொடங்குமாறு தேசத்துக்கு அழைப்பு விடுத்தது. அத்துடன், இயக்கத்தின் முன்னேற்றத்தைக் கவனிக்குமாறு உலகின் சுதந்திர மக்களையும் அவர்களுடைய சர்க்கார்களையும் கேட்டுக்கொண்டது.

ஜனவரி 4-ஆம் தேதி சர்க்காரின் தாக்குதல் ஆரம்பித்தது. காங்கிரஸ் ஸ்தாபனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது; அநேக காங்கிரஸ்காரர்கள் கைது செய்யப்பட்டார்கள். காந்திஜி, ஜனவரி 4-ஆம் தேதியன்று பம்பாயில் கைது செய்யப்பட்டு எராவ்டா சிறையில் பாதுகாவலில் வைக்கப்பட்டார்.

சுபாஷ் சந்திரபோஸ் , வல்லபபாய் பட்டேல், டாக்டர் அன்ஸாரி முதலிய தலைவர்களும் பாதுகாவலில் வைக்கப்பட்டார்கள். அடுத்த சில தினங்களுக்குள் ஆசிரமங்களும், தேசீயப் பாடசாலைகளும், பிற தேசீய ஸ்தாபனங்களும் சட்டவிரோதமானவை என்று பிரகடனம் செய்யப்பட்டு, அவற்றின் சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன. அநேக பிரதான காங்கிரஸ்காரர்கள் சிறையில் வைக்கப்பட்டார்கள். பல இடங்களில் வரி கொடுக்க மறுத்தது, சட்ட மறுப்பு இயக்கத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. உப்புச் சட்டங்கள் மீறப்பட்டன. சட்ட விரோதமான பிரசுரங்கள் பெருவாரியாகப் பரவின. பிரிட்டிஷ் சாமான்கள் அதிக அளவில் பகிஷ்கரிக்கப்பட்டன. அரசியல் கைதிகள் மீது தடியடிப் பிரயோகம் செய்யப்பட்டது. தண்ட வரிகளும், கூட்டு அபராதங்களும் கடுமையாக விதிக்கப்பட்டன. துப்பாக்கிப் பிரயோகம் சர்வசகஜமான காரியம் ஆகிவிட்டது. எல்லைப்புற மாகாணம் அதிகக் கஷ்டத்துக்கு உள்ளாயிற்று.

வகுப்புப் பிரச்னை சம்பந்தமாக பிரிட்டிஷ் சர்க்காரின் முடிவு வெளியாகப்போகிறது என்று தெரிந்த சமயத்தில் மார்ச்சு 11-ஆம் தேதி ஸர் சாமுவேல் ஹோருக்குக் காந்திஜி கடிதம் எழுதி, “தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தேர்தல்களில் தனித்தொகுதி அளிக்கச் சர்க்கார் தீர்மானித்துவிட்டால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்என்று அறிவித்தார். இதை ஏற்கனவே லண்டனிலும் காந்திஜி அறிவித்திருந்தார்.

ஏப்ரல் மாதத்தில் டில்லியில், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தும், காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்துக்கு 500 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். இதற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பண்டித மாளவியா வரும் வழியில் கைது செய்யப்பட்டார். மகாசபைக் கூட்டம் சாந்தினி சௌக்கில் உள்ள மணிக்கூண்டின் கீழ் நடைபெற்றது. இங்கே கூட்டம் நடைபெறப்போவதாக அறிவித்தது ஒரு தந்திரமே ஒழிய உண்மையல்ல என்று போலீஸார் நினைத்துக்கொண்டு, வேறிடத்தில் பிரதிநிதிகளை எதிர்பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

ஆகஸ்டு 17-இல் மெக்டானல்டின் வகுப்புத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு 18-இல் காந்திஜி உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தார். செப்டம்பர் 20-ஆம் தேதி மத்தியானத்திலிருந்து தாம் உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக அவர் பிரதமருக்கு அறிவித்தார். காந்திஜி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் பாதகமான நோக்கத்தைக் கொண்டுள்ளார் என்று செப்டம்பர் 8-ஆம் தேதி மெக்டானல்டு பதில் எழுதினார்.

செப்டம்பர் 9-ஆம் தேதியன்று காந்திஜி தமது இறுதி முடிவைப் பிரதமருக்குத் தெரிவித்தார்.

செப்டம்பர் 12-இல் காந்தி - ஹோர் - மெக்டானல்டு கடிதப் போக்குவரத்து வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 15-இல் பம்பாய் சர்க்காருக்குக் காந்திஜி கடிதம் எழுதினார்.

செப்டம்பர் 19-இல் நாடெங்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. ஹிந்து சமூகத்திலிருந்து தீண்டாதாரைத் தனியாகப் பிரிக்கும் தேர்தல் திட்டத்தை வாபஸ் பெறும்படி அக்கூட்டங்களில் கோரப்பட்டது.

செப்டம்பர் 20-ஆம் தேதி உபவாசமும், பிரார்த்தனையும் அனுஷ்டிக்கப்பட்டன.

உப்புக் கலந்த அல்லது கலக்காத தண்ணீரைத் தவிர வேறு எவ்வித உணவையும் உட்கொள்ளாத உண்ணாவிரதத்தைச் சாகும் வரை அனுஷ்டிக்கப்போவதாகக் காந்திஜி அறிவித்தார்.

செப்டம்பர் 19-இலிருந்து 24 வரை ஐந்து நாட்கள் சர்வ சமூகத் தலைவர்களும் பரஸ்பரம் கலந்து பேசினார்கள். காந்திஜியுடனும் கலந்து பேசினார்கள்.

கோவில்கள், கிணறுகள் முதலிய பொது இடங்களில் தினந்தோறும் ஹரி ஜனங்கள் அனுமதிக்கப்பட்டுவந்தனர். ''ஹரிஜனங்கள்'' (கடவுளின் சொந்த ஜனங்கள்) என்ற பெயரும் அப்பொழுதிலிருந்து வழங்கலாயிற்று.

செப்டம்பர் 23-இல் காந்திஜியின் உடல் நிலை மோசமாகிவிட்டது. அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று ஷௌகத் அலி கோரிக்கை விடுத்தார்.

செப்டம்பர் 24-இல் காந்திஜியின் முன்னிலையில் எராவ்டா உடன்படிக்கையில் ஹரிஜனத் தலைவர்களும், ஹிந்துத் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் கையெழுத்திட்டார்கள். இது அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கார், எம். சி. ராஜா, மாளவியா, ராஜகோபாலாச்சாரியார், தக்கர் பாபா ஆகியோர் இந்த உடன்படிக்கை சம்பந்தமாகப் பங்கெடுத்துக்கொண்டார்கள். உடன்படிக்கையின்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தனித்தொகுதித் தேர்தல்களைக் கைவிட்டுவிட வேண்டும்; அதே சமயத்தில் அவர்களுக்கு ஜாதி ஹிந்துக்கள் முக்கியமான பாதுகாப்புகள் அளிக்கவேண்டும்.

செப்டம்பர் 24-ஆம் தேதி காலையில் காந்திஜி அபாய கட்டத்துக்கு வந்துவிட்டார். மாலை 4.15க்கு அவரிடம் கொடுக்கப்பட்ட சர்க்கார் அறிக்கையொன்று அவருக்குத் திருப்தியை அளித்தது. பிரார்த்தனைகளுக்கும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கும் இடையே மாலை 5.15 மணிக்கு உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. ஹரிஜனங்களுக்கு இருந்துவரும் சமூகத் தடைகள், சமயத் தடைகள் முதலியவற்றைப் பரிபூரணமாகவும், குறிப்பிட்ட காலத்துக்கு உள்ளாகவும் ஒழிக்காவிட்டால், திரும்பவும் தாம் உண்ணாவிரதம் இருப்பது நிச்சயம் என்று ஹிந்துக்களைக் காந்திஜி எச்சரித்தார். காந்திஜியை ரவீந்திர நாத டாகுர் வந்து பார்த்தார். உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு, இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஏக காலத்தில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஹிந்து சீர்திருத்த இயக்கத்துக்கு ரூ. 5000 கொடுக்க முன்வருவதாகப் போபால் நவாப் அறிவித்தார்.

ஹரிஜனப் பணி சம்பந்தமாகக் காந்திஜிக்கு அளிக்கப்பட்டிருந்த எல்லாச் சலுகைகளும் செப்டம்பர் 30-ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டன. அவரைப் பார்க்க ஜெயகர் அனுமதிக்கப்படவில்லை. ஹரிஜனங்களுக்குச் சேவை செய்வதற்கான சகல சந்தர்ப்பங்களையும் திடீரென்று பறித்துக்கொண்டதைக் காந்திஜி ஆட்சேபித்தார். சர்க்காருடன் நீண்ட கடிதப் போக்குவரத்து நடத்திய பின் நவம்பர் 7-ஆம் தேதி எல்லாக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

குருவாயூர் ஆலயப் பிரவேசப் பிரச்னை மீது மற்றொரு உண்ணாவிரதம் தொடங்கச் சாத்தியம் உண்டு என்று காந்திஜி முதல்முதலாக அறிவித்தார்.

சிறைச்சாலையில் தோட்டி வேலை செய்ய அப்பா சாகிப் பட்டவர்த்தன் அனுமதி கேட்டதற்கு அதிகாரிகள் மறுத்துவிடவே அவர் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு அனுதாபம் தெரிவித்துக் காந்திஜியும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் அதிகாரிகள் அனுமதிப்பதாக உறுதியளிக்கவே, உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது.

மூன்றாவது வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதிகளில் சாஸ்திரியார், பிரோஸ் சேத்னா, ஜின்னா ஆகியவர்கள் சேர்க்கப்படவில்லை.

1933 (வயது 64)

குருவாயூர்க் கோவிலை ஹரிஜனங்களுக்குத் திறந்து விடுவதற்காக உண்ணாவிரதம் இருந்த கேளப்பனுக்கு அனுதாபம் தெரிவித்து, தாம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜனவரி முதல் தேதியன்று காந்திதி ஜி அறிவித்தார். ஆனால், மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தியதில் ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாக அபரிமிதமான வாக்குகள் கிடைக்கவே, உண்ணாவிரதம் தவிர்க்கப்பட்டது.

பிப்ரவரியில் ஹரிஜன சேவா சங்கம் அமைக்கப்பட்டது. "ஹரி ஜன்" வாரப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.

தடையுத்தரவின் கீழ் மார்ச்சு மாதத்தில் கல்கத்தா காங்கிரஸ் நடைபெற்றது.

காந்திஜி ஆன்ம பரிசுத்திக்காக மே மாதம் 8-ஆம் தேதியிலிருந்து 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். ஹரிஜனங்களின் நலனுக்காக இன்னும் அதிக விழிப்புடனும், கவனத்துடனும் வேலை செய்வதற்காகத் தாமும், தம் சகாக்களும் ஆன்ம பரிசுத்தி அடைவதற்குச் செய்யும் பிரார்த்தனை என்று உண்ணாவிரதத்துக்குக் காந்திஜி விளக்கம் கொடுத்தார். அதே தினத்தில் காந்திஜியைச் சர்க்கார் விடுதலை செய்தது. உண்ணாவிரத காலத்தைச் சட்ட மறுப்பு வேலைக்காகப் பயன்படுத்தப்போவதில்லை என்று காந்திஜி அறிக்கை விட்டார். அவருடைய ஆலோசனையின் பேரில், தாற்காலிகத் தலைவர் ஆனே மே மாதம் 3-ஆம் தேதியிலிருந்து 6 வார காலத்துக்குச் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைத்தார். சட்ட மறுப்பை வாபஸ் பெறுவதற்காகவோ, கைதிகளை விடுதலை செய்வது பற்றியோ காங்கிரஸுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் உத்தேசம் அல்ல என்றுமே 9-ஆம் தேதி சர்க்கார் அறிவித்தது.

காந்திஜி, சட்ட மறுப்பை நிறுத்தி வைத்தது, தோல்வியை ஒப்புக்கொள்ளும் காரியமாகும். ......தீவிர சக்திகளைக் கொண்டே புதியதொரு கட்சியைக் காங்கிரஸுக்குள் ஆரம்பிக்க வேண்டும்என்று விட்டல்பாய் பட்டேலும், சுபாஷ் சந்திர போஸும் வியன்னாவிலிருந்து அறிவித்தார்கள்.

காந்திஜியோடு நிலைமையை ஆராய்வதற்கு ஊழியர்கள் மகாநாடு ஒன்று கூட்டுவதற்காகச் சட்ட மறுப்பு இயக்கம் மேலும் ஆறு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

மே 29-ஆம் தேதி புனா, "பர்ணகுடி''யில் காந்தி ஜி உண்ணாவிரதத்தை முடித்தார்.

ஜூலை 12-இல் புனாவில் காங்கிரஸ்காரர்களின் பூர்வாங்க மகாநாடு நடைபெற்றது. வைசிராயிடம் பேட்டி கோருவதற்குக் காந்திஜிக்கு மகாநாடு அதிகாரம் அளித்தது. 15-ஆம் தேதி வைசிராய்க்குத் தந்தி கொடுக்கப்பட்டது. அவர் பேட்டியளிக்க மறுத்துவிட்டார். பொதுஜனச் சட்ட மறுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுத் தனிநபர் சட்ட மறுப்பு அனுமதிக்கப்பட்டது.

ஜூலை 26-இல், சட்ட மறுப்பு இயக்கத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதன் அடையாளமாகச் சாபர்மதி ஆசிரமத்தைக் கலைத்து தனிநபர் சத்தியாக்கிரகத்தைக் காந்திஜி தொடங்கினார். ஆசிரமவாசிகளைத் தங்கள் நடவடிக்கைகளைக் கைவிட்டுப் போராட்டத்தில் இறங்கும்படி கூறினார். ஆசிரமத்தின் பொருள்களை பொதுஜன உபயோகத்துக்குக் கொடுத்துவிட்டு, நிலம், கட்டடம், பயிர் முதலியவற்றைச் சர்க்காருக்குக் கொடுக்க முன்வந்தார். அவற்றைச் சர்க்கார் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடவே, ஹரிஜன இயக்கத்துக்குக் கொடுத்துவிட்டார்.

ஆகஸ்டு முதல் தேதியன்று ராஸ் கிராமத்துக்கு யாத்திரை தொடங்கக் காந்திஜி உத்தேசித்திருந்தார். ஆனால், முதல் நாள் இரவு அவரும், ஆசிரமவாசிகள் 34 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்டு 4-ஆம் தேதி காலையில் காந்திஜி விடுதலை செய்யப்பட்டார். எராவ்டா கிராமத்தை விட்டுப் போய்ப் புனாவில் வசிக்க வேண்டுமென்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதைக் காந்திஜி மீறினார். ஆகவே, விடுதலையான அரைமணி நேரத்துக்குள் திரும்பவும் கைது செய்யப்பட்டு ஒரு வருடச் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டார்.

எல்லா மாகாணங்களிலும் தனிநபர்ச் சட்ட மறுப்பு ஆரம்பமாயிற்று. முதல் வாரத்திலேயே நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சிறை சென்றார்கள். அகோலாவிலிருந்து புறப்பட்ட ஆனேயும், அவரைச் சேர்ந்த 13 பேரும் கைதாயினர். 1933 ஆகஸ்டிலிருந்து 1934 மார்ச்சு வரை எல்லா இடங்களிலும் காங்கிரஸ் ஊழியர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்ட வண்ணமாக இருந்தார்கள்.

சிறையில் இருந்துகொண்டு ஹரிஜன முன்னேற்றப் பணியைச் செய்துவரக் காந்திஜிக்கு வசதிகள் அளிக்கப்படவில்லை. இதை ஆட்சேபித்து, ஆகஸ்டு 16-ஆம் தேதி காந்திஜி உண்ணாவிரதம் தொடங்கினார். சீக்கிரத்திலேயே நிலைமை மோசமாகிவிட்டது. ஆகஸ்டு 20-இல் அவரை ஸாஸ்ஸன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றார்கள். அப்போதும் அவர் கைதியாகவே இருந்தார். 23ஆம் தேதி அவரது நிலை இன்னும் மோசமாகிவிடவே, நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார். தண்டனைக் காலம் முடியும் வரை- 1934, ஆகஸ்டு 3-ஆம் தேதிவரை - சட்ட மறுப்பு இயக்கத்தில் இறங்குவதற்கான சுதந்திரம் தமக்கு இருப்பதாகத் தாம் கருதவில்லை என்று காந்திஜி தெளிவாக அறிவித்தார். ஆகவே, இடைக்காலத்தை ஹரிஜனப் பணிக்காகப் பயன்படுத்தத் தீர்மானித்தார்.

செப்டம்பர் 20-இல் டாக்டர் அன்னிபெஸன்ட் காலமானார்.

செப்டம்பர் 23-இல் விட்டல்பாய் பட்டேல் காலமானார்.

நவம்பர் 7-ஆம் தேதி வார்தா சத்தியாக்கிரக ஆசிரமத்திலிருந்து காந்திஜி ஹரிஜன நலனுக்காகச் சுற்றுப் பிரயாணத்தைத் தொடங்கினார்.

மத்திய மாகாணத்தில் சுற்றுப் பிரயாணம் செய்த பின் டில்லிக்குச் சென்று, அங்கிருந்து ஆந்திராவுக்குத் திரும்பினார். ஆந்திராவில் சுற்றுப் பிரயாணம் செய்யும்போது சென்னைக்கு டிசம்பர் 20-ஆம் தேதி விஜயம் செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு திரும்பவும் ஆந்திராவுக்குச் சென்றார். 1934, ஜனவரி 4-ஆம் தேதி மைசூர் சமஸ்தானத்துக்கு விஜயம் செய்தார். அங்கே சுற்றுப் பிரயாணம் முடிந்த பின் மலபாருக்குப் புறப்பட்டார். ஜனவரி 10-ஆம் தேதி பாலக்காட்டில் பேசினார். திருவனந்தபுரத்துக்கு அவர் விஜயம் செய்ததற்கு முந்திய தினத்தில், - ஜனவரி 20-ஆம் தேதியன்று - ரோடுகள், கிணறுகள், சத்திரங்கள் முதலியவற்றை எல்லா வகுப்பு மக்களுக்கும் சமஸ்தான சர்க்கார் திறந்துவிட்டது. இதைக் காந்திஜி பாராட்டினார். பின்பு நாகர்கோவிலுக்குச் சென்றார். அவ்வூர் நகரசபை, சர்க்கார் உத்தரவை மீறிக் காந்திஜிக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்தது. கன்னியாகுமரிக்கு விஜயம் செய்தபின், திருநெல்வேலிக்கு வந்து 24-ஆம் தேதியன்று ஒரு கூட்டத்தில் பேசினார். அதன் பின் தமிழ்நாட்டில் காந்திஜி விஜயம் செய்த முக்கியமான ஊர்கள் தூத்துக்குடி, மதுரை, தேவகோட்டை, நீலகிரி, கோயமுத்தூர், கும்பகோணம், வேலூர், சென்னை முதலியன.

தென்னாட்டுச் சுற்றுப் பிரயாணத்தைக் குறைத்துக்கொண்டு மார்ச்சு 29-ஆம் தேதி இரவு பாட்னாவுக்குப் புறப்பட்டார். 
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...