Skip to main content

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்



எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை. தமிழும் அதற்கு விலக்கல்ல. தமிழ்க் கவிதை கி. மு. ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால், கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று. தமிழ்க் கவிதை தோன்றியது கி. பி. மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால், வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும். நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன். எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும்.

உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை. உரை இருந்திருக்கிறது. தமிழர்கள் ஊமைகள் அல்ல, ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும். உண்மைக்குப் புறம்பானது. மோலியெர் என்கிற ஃபிரெஞ்சு நாடகாசிரியர் ஒரு பாத்திர வாயிலாகச் சொல்கிற மாதிரிநான் இதுவரை பேசியதெல்லாம் வசனமா?” என்று கேட்கிற கதைதான் இது. உரை இடையிட்ட செய்யுள் என்று சிலப்பதிகாரத்தைச் சொல்வதற்கும், நச்சினார்க்கினியரின் உரை வசனம்தான் என்று சொல்வதற்குமே வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டு உரைநடைகளுமே இன்று வசனம் என்று சொல்லப்படுவதற்குச் சரிசமானம்தான் என்று சொல்லவே முடியாது. இன்று வசன நடை என்று நாம் பல காரியங்களுக்குக் கையாளுகிற நடை அந்த உரைநடை அல்ல.

தமிழில் நவீனமான ஒரு கருத்துடன் வசனம் எப்படிக் கையாளப்பட்டது. எப்பொழுது தொடங்கிக் கையாளப்பட்டு வந்திருக்கிறது என்பதைக் கவனிப்போம். முதல் தடவையாக வசனத்தை ஒரு நவீனமான கருத்துடன் இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவ மதப் பிரசாரகர்தான் உபயோகித்தார்கள் என்று சொல்லலாம். இலக்கிய ரீதியாகச் செந்தமிழையும், உபயோக ரீதியாகக் கொடுந் தமிழையும் சொல்லி, கொடுந் தமிழ் இலக்கணம் என்று அவர்கள் கொண்ட கருத்துக்கிணங்க கிறிஸ்தவ தருமோபதேசம் செய்யப் பலர் உபயோகித்தார்கள். இவர்களில் சிறப்பாகத் தமிழ் வசனத்துக்கு உதவியவர் என்று ராபர்ட் டிநொபிலி என்பவரைச் சொல்லவேண்டும். அவர் எழுதிய வசனங்களில் எதுவும் இன்றுவரை நிலைக்கவில்லை.

அவரைப் பின் தொடர்ந்து அவரைப் போலவே தமிழராகி, கிறிஸ்தவ மதப்பிரசாரம் செய்த காண்ஸ்டாண்ஷியஸ் பெஷி என்பவர், வீரமாமுனிவர் என்கிற தமிழ்ப் பெயருடன், தன் கிறிஸ்தவ மதப்பிரசங்கங்கள் பலவற்றை வசன நூல்களாக வெளியிட்டார். அத்துடன் கொடுந் தமிழ் இலக்கணம் என்று ஒரு இலக்கணமும் வெளியிட்டார். பிறகு தமிழ் இலக்கிய சரித்திரத்தில் முதல் தடவையாக வசன நடையைத் தனியாக ஒரு பெரும் இலக்கிய முயற்சிக்கு உபயோகித்தார். தன் காலத்திய ஹிந்து மதக் குருமார்களையும், தலைவர்களையும் கிண்டல் செய்கிற உத்தேசத்துடன் அவர் 'பரமார்த்த குரு கதைகள்' என்று ஒருகதைத் தொகுப்பு வெளியிட்டார். இந்தக் கதைகளின் லேசான கிண்டலும், அநுதாபமும், பேச்சு வேக நடையும் தமிழ் இலக்கியத்தில் முதல் தடவையாக ஒரு இலக்கிய வசனதை நமக்குச் சமைத்துத் தந்தன. இந்தக் கதைகள் தமிழ் நாட்டில் வழக்கிலிருந்தவை என்றும் அவை வெகுவாக ஒரு நூறு வருஷங்களில் பரவின என்று சொல்லவேண்டும். தமிழ்நாட்டு அத்தைப் பாட்டி கதை இலக்கியத்தில் இவை சென்றுசேர்ந்தன. பெஷி எழுதிய உருவத்தில் இல்லாவிட்டாலும், இந்தக் கதைகள் ஒரு விசேஷத் தமிழ் வசன இலக்கியமாகத் தமிழர்கள் மனதைக் கவர்ந்தன. கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளிலும்கூடப் பரமார்த்த குரு கதைகள் இடம்பெற்றன என்பதே அவற்றின் இலக்கிய வெற்றிக்குச் சான்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே, இந்தக் கதைகள் ஆங்கிலத்தில்கூட மொழிபெயர்க்கப்பட்டன.

அடுத்தபடியாகச் சொல்லவேண்டிய பெயர் ஆனந்தரங்கம் பிள்ளையினுடையது. ஆனால் பெஷியின் எழுத்தைப் போல ஆனந்தரங்கம் பிள்ளையின் தமிழ் டையரிக்கு இலக்கிய ரீதியிலே ஒருவிதமான பயனும் இல்லாமல் போய்விட் டது. ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் தினமும் குறிப்புகள் தமிழில், பழகும் பேச்சுத் தமிழிலேயே எழுதினார். ஆனால் அதை அவர் இலக்கியமாகவோ, ஒரு நூலாகவோ கருதவேயில்லை. தமிழ் வாசகர்களையும் அந்நூல் எட்டவேயில்லை. இன்று வரையிலும்கூட அந்நூல் வசன இலக்கியமாக ஒரு விதப் பயனும் தரவில்லை என்பது பற்றித் தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கில்லை. ஆனந்தரங்கம் பிள்ளையின் வசனம், நேரான, பேச்சுத் தமிழ் வசனம், பலவிதமான வர்ணங்கள், ஜால வித்தைகள் செய்கிற வசனம், உற்சாகமாகப் படித்து அநுபவிக்கக்கூடிய வசனம். இலக்கிய ரீதியிலே அதைப் பூரணமாக உணர்ந்து ரஸித்தநுபவிக்கத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

வசன நடை சிருஷ்டியாகக்கூடிய ஒரு நிலைமையைப் பதினெட்டாம் நூற்றாண்டிலே நாம் சமைத்துக்கொள்ளத் தவறிவிட்டோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே பெயர் இன்று தெரியாத பல ஆசிரியர்கள் பல பண்டைய இந்திய இதிஹாஸ புராணங்களைத் தமிழ் வசனத்திலே எழுத முற்பட்டார்கள். சிறப்பாக ராமாயண வசனம், மகாபாரத வசனம், பாகவத வசனம் என்றும் தரும நூல் என்று இந்து மதப் பிரசாரம் செய்ய அடி கோலிய வசன நூலும் தோன்றின. வசனம் படிக்கும் பழக்கம் ஏற்படத் தொடங்கியது. சென்னையில் ஸ்தாபிதமான கல்விச் சங்கம் நாட்டிலே வழக்கிலிருந்த பல சரித்திரக் கதைகளை மக்கள் வாய்மொழியாகவே கேட்டு பண்டிதர்களைக் கொண்டு எழுதச் செய்தது. ரிச்சர்டு கிளார்க்கு என்கிற கல்விச் சங்கத் தலைவர் விருப்பத்துக் கிணங்க, மஹராஷ்டிர மொழியில் வழக்கிலிருந்த பஞ்சதந் திரத்தை வித்துவான் கா. தாண்டவராய முதலியார் 1826-ல் எழுதினார். இந்தப் பஞ்சதந்திரத்தில் முதல் தந்திரம் எளிய தமிழிலும், ஐந்தாவது தந்திரம் வேண்டுமென்றே நெரடான தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. தாண்டவராய முதலியாருடைய வசனத்துடன், தமிழ் வசன நடைமேஜராகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

வசன நடையை எந்தெந்த விதங்களில் உபயோகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து பார்க்கிற பரிசோதனைக் கட்டம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஏற்பட்டுவிட்டது. விநோத ரஸமஞ்சரியின் ஆசிரியரும், மதனகாமராஜன் கதைகளின் ஆசிரியரும், பிரதாப முதலியார் சரித்திரத்தின் ஆசிரியரும், விக்கிரமாதித்தன் கதைகளின் ஆசிரியரும் பல வகைப்பட்ட வசன நடையைக் கதை சொல்ல உபயோகித்துப் பயன் கண்டார்கள். ஆறுமுக நாவலர் பல கவிதை நூல்களைக் கதாகாலக்ஷேப பாணியிலேயே தமிழ் வசனத்தில் ஆக்கித் தந்தார். தமிழ்ப் பண்டிதர்கள் பலரும் பாடுபட்டு, கொடுந் தமிழையும் செந்தமிழையும் இணைக்கும் காரியத்திலே ஈடுபட்டு, பலதிறப்பட்ட வசனநடையை கண சுத்தமாகக் கையாண்டார்கள். பண்டைய இலக்கியங்களின் உரைகள் இலக்கியங்களுடன் அச்சேறின. இதெல்லாமாகச் சேர்ந்து ஒரு புதிய சூழ்நிலையைச் சிருஷ்டித்துத் தந்தன. தமிழில் வசன நடை விரிந்து பரவத் தொடங்கிற்று. மாதாந்திரக் கல்விப் பத்திரிகைகள், செய்தித்தாள்கள் முதலியன தோன்றின. தமிழில் முதல் மொழிபெயர்ப்புகளும் தலைகாட்டின. ஆங்கிலத்தில் போலவே தமிழிலும் வசன காவியங்கள் என்கிற நாவல்கள் எழுதப்பட வேண்டும் என்கிற வேதநாயகம் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவதற்கே போல பி. ஆர். ராஜமையரும், . மாதவையாவும் தோன்றினார்கள். ஆங்கிலத்திலும், பிற மேல்நாட்டு மொழிகளிலும் போலவே தமிழிலும் வசன நடையை பிரமாத வளத்துடன், ஒரு இலக்கிய விஸ்தாரத்துடன் கையாள முடியும் என்பதைப் பலரும் செய்துகாட்டினார்கள். வசன நாடகங்கள் (பாட்டுக்கள் மலிந்திருந்தாலும்கூட) ஏராளமாகத் தோன்றின, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியிலே.

இந்த வசன வளத்துக்கெல்லாம் வாரிசாகத் தோன்றியவர் சுப்பிரமணிய பாரதி. பெஷி தந்தகொடுந் தமிழ்வசனம், பாரதியுடன் தன்னுடைய புதுத்தன்மையின் முழு மலர்ச்சியையும் எட்டிவிட்டது. வாழ்விலே கையாளுகிற பேச்சுச் சந்தங்களைக் கவிதையிலேயே கையாள முடியும் என்று செய்து காட்டிய கவி பாரதியார், வசனத்திலும் பேச்சுச் சந்தத்தை ஒட்டி எழுதிப் புரட்சி செய்தார். பாரதியார் தந்த வேகத்தால் தமிழ் வசனம் பல தலைமுறைகள் முன்னேறிற்று என்று சொல்லவேண்டும். பண்டிதர் படை சற்றே பின்னிட்டது. தமிழ் இலக்கணம் வசனத்தில் ஆட்சி செலுத்துவது ஓரளவுக்குப் பாரதியின் வசனத்தால் குறைந்தது.

பாரதியாருக்கு முந்தியே பண்டிதர் பரம்பரை தமிழ் வசனத்தை ஒரு குறுகிய, பயனற்ற பாதையில் திருப்ப முற்பட்டது என்பது வெளிப்படை. பாரதியாரின் வசனம் தந்த வேகத்தால் இந்தக் குறுகிய பாதை அகண்டு நீண்டு பயனுள்ளதாயிற்று. திரு. வி. கல்யாணசுந்தரனாரும், மறைமலையடிகளும் .வே. சாமிநாதையரும் பண்டிதர் பாணியை விட்டுவிடாமல், பாரதியாரின் சர்வஜன ரஞ்சக பாணிக்கும் முயற்சி செய்தார்கள். இதில் திரு. வி. .வும், . வே. சாமிநாதையரும் ஓரளவு வெற்றி பெற்றார்கள். திரு. வி. .வின் வசனத்திலுள்ள குறைகள் விஷய அடிப்படை போதாததால் ஏற்பட்ட குறைகளே தவிர இலக்கண சுத்தத்தாலோ, பண்டித பரம்பரையினாலோ ஏற்பட்ட குறைகள் அல்ல. மறைமலை அடிகள் தூய தமிழ் என்று ஒரு இல்லாத பொருளை நினைத்து அதற்காக நல்ல வசனத்தைத் தியாகம் செய்துவிட்டவர். சாமிநாதையரின் பிந்தைய வசனம் அவர் எழுதியதல்ல என்று சொல்கிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம்.


வேதநாயகம் பிள்ளையும், ராஜமையரும், மாதவையாவும், பாரதியாரும், .வெ.ஸு. ஐயரும், தமிழ் வசன நடையை இலக்கிய ரீதியிலே பயன்பட உபயோகப்படுத்தினார்கள். இந்த இலக்கிய வேகம் தமிழில் 1920-க்குப் பிறகு பரிமளித்தது. எல்லோருக்கும் புரிகிற நடையிலே, அரும்பத அகராதியைத் தேடாமல் அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடிய நூல்களை எழுதியவர்கள் இவர்கள். இவர்களை ஒட்டியே , ஆனால் ஒரு அதிகப்படியான ஜிலுஜிலுப்புடன், ஆரணி குப்புசாமி முதலியாரும், வடுவூர் துரைசாமி ஐயங்காரும், அந்தப் பரம்பரையிலே வந்த கல்கியும் தமிழ் வசனத்தை உபயோகித்தார்கள். செல்வகேசவராய முதலியாரும், மறைமலையடிகளும், திரு. வி. .வும், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரும், . வே. சாமிநாதையரும் பண்டித நடையை விசேஷமாகக் கையாண்டார்கள். இந்தப் பண்டிதர்கள் தங்கள் வசனத்தில் பெரும் பகுதியை இலக்கியம் என்று அவர்கள் கருதிய விஷயங்களைப்பற்றி எழுதவே உபயோகித்தார்கள். எனினும், அவர்கள் நடை சிருஷ்டி இலக்கிய ரீதியில் ஒரு விஸ்தீரணத்தையும், பயனையும் தருவதாக இல்லை.

இந்த நிலையில் பாரதியார் காலத்திலேயே ஏற்பட்டு விட்ட அரசியல் விழிப்பும், பொது ஜனங்களின் அறிவுத் தாகமும் வசனத்தில் புதுச் சோதனைகளுக்கு அடிகோலின. தமிழ் வசனத்தை இந்தத் துறையில் வளமுள்ளதாக்கப் பாடுபட்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. 'பிரஜாநுகூலன்' பத்திராதிபர் முதல், இரண்டே வருஷம் இலக்கிய சமூக சேவை செய்துவிட்டு ஓய்ந்த வாரப் பத்திரிகையின் ஆசிரியர் வரையில் பலருடைய பெயரையும் இந்தப் பகுதியிலே குறிப்பிட வேண்டும். அப்படிப் பலரைக் குறிப்பிட்டுவிட்டாலும்கூடப் பட்டியல் பூர்த்தியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் அளவில் சிறப்பாகத் தமிழ் வசனத்துக்குச் சேவை செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் செய்த முயற்சிகளினால்தான் தமிழ் வசனம் இன்று அடைந்துள்ள நிலையை எட்டியிருக்கிறது.

தமிழில் வசன நடை 1930 சமயத்திலே பல கிளை நதிகள் வந்து பாயும் ஒரு பெரிய ஆற்றுப் பெருக்காகிவிட்டது. இருந்தும் தமிழில் வசன வளம் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த இருபது முப்பது வருஷங்களில் குறிப்பாக மறுமலர்ச்சித் தமிழினால் இலக்கிய நயம் அதிகரித்திருக்கிறது என்றும், பாரதியார் தந்த வேகத்தினால் தமிழில் பேச்சுச் சந்தம் அதிகரித்திருக்கிறது என்றும், பண்டிதர்கள் முயற்சியால் தமிழ் வசனம் போதுமான அளவுக்கு வளராமல் தேங்கிக் கிடந்திருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். சமீப காலத்திய தூய தமிழ் முயற்சிகள் தமிழ் இலக்கியத்தில் வசன வளத்துக்கு மிகவும் பெரிய அளவில் குந்தகம் விளைவித்திருக்கின்றன என்று சொல்லுகிற அதே மூச்சிலே சொல்ல வேண்டியது வேறு ஒன்றும் உண்டு. திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழரசுக் கழகம் முதலிய அரசியல் கிளர்ச்சிச் சாதனங்களினால் தமிழ் வசனம் சாதாரண மக்களை அதிகமாகவே எட்டித் தொட்டது என்றும் சொல்ல வேண்டும். இந்தக் கழகங்களுடன், அரசியல் எழுச்சிக்கே காரணமான காங்கிரஸ் முதலிய ஸ்தாபனங்களின் முயற்சிகளையும், பேச்சுக்களையும் பத்திரிகைகளையும் சொல்ல வேண்டும். மறுமலர்ச்சித் தமிழ், பண்டிதர் தமிழ் என்கிற இரண்டுக்கும் வழிநெடுகப் போராட்டம் இருந்தே வந்திருக்கிறது. இலக்கண சுத்தங்களையே லக்ஷியமாகக்கொண்டு பண்டிதர் தமிழும் இலக்கிய லக்ஷியத்தையே முடிவாகக் கொண்டு மறுமலர்ச்சித் தமிழும் இயங்குகின்றன. இலக்கிய ரீதியாகப் பார்த்தால் மறுமலர்ச்சித் தமிழுக்கேதான் வெற்றிகிட்டும் என்று சொல்லத் தேவையில்லை. தூய தமிழ் முயற்சி தோல்விதான் அடைய முடியும்; ஏனென்றால் அது தமிழ் வளர வழி வகுக்காது. தமிழ்மொழி வளருவதே அதன் தூய தனித்தன்மையை மறந்துவிட்டுத்தான் முடியும்.

தமிழ் வசன நடை இலக்கிய ரீதியிலே எல்லா விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற லக்ஷியத்தை உடையது மறுமலர்ச்சி இயக்கம்; இதை மனசில் கொண்டுதான் வேதநாயகம் பிள்ளையும், சுப்பிரமணிய பாரதியாரும் வசனம் எழுதினார்கள். பெஷி ஆரம்பித்து வைத்து இன்று வரை வளர்ந்து வந்துள்ள தமிழ் வசனம் வன்மையான ஒரு இலக்கிய சாதனம் என்பதை மறுமலர்ச்சிக்காரர்கள் தங்கள் எழுத்திலே சிறப்பாகக் செய்துகாட்டியிருக்கிறார்கள். இருந்தும் தமிழ் வசனத்துக்கு வளம் போதாது என்பது கலைக்களஞ்சியத்தின் எந்தப் பாகத்தை எடுத்துப் பார்த்தாலுமே நமக்குத் தெளிவாகத் தெரியும். அதன் தமிழ் இலக்கியப் பகுதிகள் பண்டிதர்களிடமும், ஸெமி பண்டிதர்களிடமும் சிக்கித் தவிக்கிறது. விஞ்ஞானப் பகுதிகள் ஆங்கில வார்த்தைகள் உடன் வராவிட்டால் அர்த்தமே ஆவதில்லை என்றுதான் தெரிகிறது. மற்ற அறிவியல் பகுதிகளில், ஓரளவுக்குத் தமிழ் பயன்பட்டாலும், பூரணமாகத் பயன்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மறுமலர்ச்சிக்காரர்கள் இந்த இருபது முப்பது வருஷங்களில் தமிழ் வசனத்தில் சிறுகதைத் துறையையும், நாவல் துறையையும் வளர்த்துவிட்டார்கள். ஓரளவுக்கு மொழிபெயர்ப்புத் துறையையும் வளர்த்திருக்கிறார்கள். இலக்கிய விமரிசனம், கட்டுரை முதலிய துறைகளிலே ஏதோ கொஞ்சம் செய்துபார்க்க முயன்றிருக்கிறார்கள். மற்றபடி இன்னும் பல துறைகளை அவர்கள் தொடவேயில்லை. தொட்டு, அத்துறைகளிலும் தமிழ் இலக்கியத்தையும் வசனத்தையும் அவர்கள் வளப்படுத்தும் காலம் கூடிய சீக்கிரமே வரும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

புதுமைப்பித்தன், கு. . ராஜகோபாலன் போன்றவர்கள் தங்கள் சிறுகதைகளில் கையாண்ட வசன நடை தமிழ் மறுமலர்ச்சியின் பலம் பூராவும் பெற்றது. உயிருடன் இன்று நம்மிடையே இருக்கிற சிறுகதாசிரியர்களிலே . பிச்சமூர்த்தியும், லா. . ராமாமிருதமும், கு. அழகிரிசாமியும் தமிழ் வசனத்தை வெகு அழகாகக் கையாளுகிறார்கள். அதேபோலத் தமிழ் நாவலில் ஆர். சண்முகசுந்தரம் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் - கோவை ஜில்லா வாசிகளின் - தமிழை நன்றாகக் கையாளுகிறார். மற்றும் பல நாவலாசிரியர்களின் வசனம் அவர்கள் எடுத்துக்கொள்கிற விஷயங்களைச் சொல்லப் போதுமானதாகவே இருக்கிறது. விஷயத் தெளிவும் ஆழமும் அதிகமில்லாவிட்டாலும், அகிலனும், ஆர்.வி.யும், மு.வரதராஜனாரும் தமிழ் வசனத்தைச் சிறப்பாகக் கையாளுகிறார்கள் என்று சொல்லலாம். அதே அளவில் வேறு ஒரு காரியத்துக்காக, இலக்கியத்தை ஒரு பிரசாரக் கருவியாக, பத்திரிகாசிரியர்கள் பலர் நன்கு கையாளுகிறார்கள். ரகுநாதனின் வசனத்தில் ஒரு வேகம் காணக் கிடக்கிறது.

தமிழ் வசனம் நன்கு வளர்ந்து வருகிறது. இன்னும் வளரட்டும். வசன வளந்தான் இன்றைய, நாளைய இலக்கியத்துக்கெல்லாம் ஆதாரம் - அஸ்திவாரம்.

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...