(மொப்பஸான் கதையின் தழுவு)
அன்று கப்பலில் வெகு கூட்டம். நான் சிங்கப்பூருக்குப் புறப்பட்டிருந்தேன். கப்பலும் ஏக கோஷம், இரைச்சலுடன் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. நான் கப்பலின் மேல்தட்டிலிருந்து கப்பல் கடலுக்குள் செல்லுவதை கவனித்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று என்னை யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தேன். எனது பழைய நண்பன் ஹரிஹரன்.
இருவரும் கை குலுக்கினோம். நண்பன் சீமையில் வக்கீல் பரிட்சை கொடுத்துவிட்டு, இலங்கையில் இருக்கிறான் என்று மட்டும் தெரியும். பார்த்து வெகு நாளாகிவிட்டது.
இருவரும் கை குலுக்கினோம்.
'எங்கு பார்த்தாலும் இந்த வெள்ளைக்காரக் கூட்டம்தானா. என்ன வெறுப்பாக இருக்கிறது!' என்றான் என் நண்பன்.
'ஏன் இப்படி அவர்களை வெறுக்கிறாய்?' என்றேன்.
'நீதான் பார். சமுத்திரத்தையே தங்களுக்குப் பட்டா எழுதிவைத்த மாதிரி பார்க்கிறதை; அதில் என்ன மமதை. என்னமோ பெரிய சண்டைக் கப்பல்கள் இருந்துவிட்டால் பக்கத்தில் இருப்பவன் மனிதன் என்றுகூடத் தெரியாது போலிருக்கிறது. இவர்கள் இங்கே வராமல் விரட்டுவதற்கு வழியில்லையா?'
'ஏன்? அவர்களைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை' என்றேன்.
'உனக்கென்ன கவலை. எனக்குத் தெரியும். அந்த ஜாதியில் ஒருத்தியை நான் கலியாணம் செய்துகொண்டேன்' என்றான் வெறுப்புடன்.
நான் திடுக்கிட்டேன்.... பிறகு....
'அதைப் பற்றி நன்றாகக் கூறு. ஏன்? அவள் என்ன, தொந்தரவு கொடுக்கிறாளா?'
'தொந்தரவு கொடுக்கவில்லை.'
'பின்.... அவள் என்ன... நடத்தை...'
'அதை ஏன் கேட்கிறாய். அவள் கற்புடையவளாகவே இருக்கிறாள். அப்படி ஏதாவது இருந்தால்தான் விவாகரத்திற்காவது வழியுண்டே ?'
'பிறகு என்னதான் சொல்லேன். எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லையே.'
'கஷ்டம் என்னவென்றால் அவள் தமிழ் பேசப் படித்துக்கொண்டாள். சொல்லுகிறேன் கேள். கொஞ்ச நாட்களுக்கு முன் சீமைக்குப் போயிருந்தேனே அப்பொழுது அவளைச் சந்தித்தேன். நல்ல அழகி.... அவள் அழகில் ஈடுபட்டேன். நல்ல குடும்பத்துப் பெண். அவர்களும் இங்கு இருந்தவர்களாம். அவளைப் பார்த்ததும் எனது இலக்ஷியம் கனவு என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். இன்னொன்று உனக்குத் தெரிய வேண்டும். நம்முடைய ஆட்களுக்கு அன்னிய நாட்டுப் பெண்ணென்றால் அவ்வளவுதான். அவள் வெள்ளைக்காரியாக இருக்கட்டும், அல்லது மலையாளத்துப் பெண்ணாக இருக்கட்டும். அவள் நமது பாஷையில் ஒரு வார்த்தை குளறிவிட்டால் அவ்வளவுதான்.’
'நான் அவளைச் சந்தித்த பொழுது அவளும் தமிழ் பேசினாள். எனக்கு அர்த்தமாகவில்லை. நானும் தமிழ் பேசினேன். அவளுக்கு அர்த்தமாகவில்லை. ஆனால் அதுதான் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால் அவளைக் கலியாணம் செய்துகொண்டேன். பிறகு இங்கு வந்த பிறகு, தமிழ் வாத்தியார் ஒருவரை வைத்தேன். இத்தனை நாள் அவள் இலக்கணத்தைக் கிழித்து அகராதியைச் சிதைத்தாள். அது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சுவாரஸ்யமாக இருந்தது. கேட்பதற்கு இன்பமாக இருந்தது. இப்பொழுதோ... ஐயோ கடவுளே.... "நீவிர் வருக'' என்கிறாள் என்னைப் பார்த்து. நடமாடுகிற தமிழ் இலக்கணம்தான். இப்பொழுது அவள் பாஷை சீனத்துச் சரக்காக இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை . நான் ஒரு கிளியைக் கலியாணம் பண்ணிக்கொண்டேன். இந்தத் தப்பிதத்திற்கு எந்தக் குட்டிச் சுவற்றில் முட்டிக் கொள்ளுவது.'
சற்று மெளனம்.
'இப்பொழுது உமது மனைவி எங்கிருக்கிறாள்?'
'அவளை சென்னையில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.'
'பிறகு நீ...?'
'சிங்கப்பூருக்கு ‘ரெஸ்ட்’ எடுக்க(களைப்பாற)ப் போகிறேன்.'
'பெண்கள் எவ்வளவு தூரம் முட்டாளாக இருப்பார்கள் சில சமயங்களில் என்று தெரிகிறதா?' என்றேன்.
'ஏன்? ஆண்களை ஏன் மறந்துவிட்டாய்?' என்றான் எனது நண்பன்.
மணிக்கொடி, 7 அக்டோபர் 1934
Comments
Post a Comment