கீதையை அருளிய கண்ணனாகக் காந்தியடிகளை நாம் கற்பனை செய்து கொண்டோமானால், அர்ஜுனன் வடிவமாக ஜவஹர் நமது மனக்கண் முன்னர் உடனே தோன்றிவிடுகிறார். வெண்ணெய் திருடி ஆய்ச்சியரை வேடிக்கை காட்டிய கிருஷ்ணனையோ, கள்ள மணம் புரிந்த பார்த்தனையோ நாம் இங்குக் குறிப்பிடுகிறோமில்லை. சில காலம் வரை, அதாவது நமது தேசம் சுதந்திரம் அடையும் வரை, இவர்களை மறந்துவிட்டால்கூட நல்லதுதான். நாடு கொள்ள வேண்டும்மென்ற ஆசை நோய் பற்றி, சுயநலப் புழுவினால் அரிக்கப்பெற்று, ஆங்காங்கு ரத்தக் கறை படிந்திருந்த பாரத சமுதாயத்தைச் சத்தியத்தினாலும், தர்மத்தினாலும், தியாக சிந்தனையினாலும் தட்டி எழுப்பிய கர்ம வீரர்களல்லவா கிருஷ்ணார்ஜுனர்கள்? கிருஷ்ணனுடைய சங்க நாதத்தையும் அர்ஜுனனுடைய காண்டீபத்தின் நாணொலியையும் நாம் கேட்க மறந்துவிட்டோம். அதற்குப் பதிலாக அவர்களைப் படத்திலே, கற்சிலையிலே ஏற்றி தூபதீபங்காட்டித் திருப்தியடைந்துவிடுகிறோம். அவர்களுடைய வீர உணர்ச்சியை நமது ரத்தத்திலே பாய்ச்ச முற்படுகிறோமில்லை. வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டதில் என்ன ஆச்சரிய மிருக்கிறது?
கடைசி வரை சமாதானத்தை நாடுவோம், ஒத்துழைத்துப் பார்ப்போம் என்ற கருத்துக்கொண்டே கெளரவரிடம் தூது நடந்தான் கண்ணபிரான், முணு முணுத்தான் பாண்டவ வீரன். காந்தி - இர்வின் ஒப்பந்த காலத்தில் இந்தக் காட்சியை அப்படியே கண்டோமில்லையா? காந்தி - இர்வின் சம்பாஷணையைக் கேட்ட செவிகள் ஜவஹரின் முணுமுணுப்பையும் கேட்டன. கண்ணபிரானின் அருள்வலி முன்னர், அர்ஜுனனின் புயவலி பணிந்து நின்றது. காந்தியடிகளின் ஆன்ம சக்தி முன்னர் ஜவஹரின் வீரம் வணக்கம் செலுத்தியது; ஆனால் முணுமுணுப்புடன்தான். கண்ணனின் இனிய தோழன் காண்டீபன். காந்தியடிகளின் கண்ணிலும் இனியவன் ஜவஹர்.
இருவருக்குமுள்ள தொடர்பு சொல்ல முடியாதது, ஆனால், கண்டனுபவிக்கக் கூடியது. கருத்தொருமித்த காதலரிடையே சில சமயங்களில் ஊடல் நிகழ்ந்த போதிலும், இருவர் மனமும் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறதல்லவா? இந்தச் சம்பாஷணையை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர, பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாது. அது போன்றதுதான் காந்தி - ஜவஹர் உறவும்.
காந்தியடிகள் எங்கே செல்கிறார். எந்த லட்சியத்தை நாடிச் செல்கிறார் என்பது ஜவஹருக்குச் சில சமயங்களில் தெரிவதில்லை. ஆனால் அவரைப் பின்பற்றிச் செல்வதிலே அபார நம்பிக்கை இருக்கிறது. லட்சியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல். அந்த ஆவலைப் பூர்த்திசெய்து கொள்ளாமலே அந்த லட்சியத்தை நாடிச் செல்லுதல். இதற்கு எத்தகைய மனோ உறுதியும், தியாக புத்தியும் வேண்டும் தெரியுமா? ''பதினான்கு வருஷங்களாக நான் தங்களிடம் நெருங்கிப் பழகிக்கொண்டுவந்த போதிலும், என்னால் அறியக்கூடாத ஒரு தன்மை அல்லது சக்தி தங்களிடம் மறைந்திருக்கிறது. அதை நினைக்க எனக்கு அச்சமாயிருக்கிறது'' என்று காந்தியை பார்த்து ஜவஹர் ஓரிடத்திலே குறிப்பிடுகிறார். ''காந்தியின் தத்துவங்கள் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அவரைப் பின்பற்றுதல் எல்லோராலும் முடியும்'' என்று பிறிதோரிடத்தில் கூறுகிறார். கிருஷ்ணன் - அர்ஜுனன் சம்பாஷணைகளில் இந்தக் கருத்துக்கள் தொனிக்கவில்லையா?
காந்தி ஒரு வித்து. அதிலிருந்து தோன்றிய முளை ஜவஹர். காந்தியின் மேல் ஜவஹர் எங்கே? ஜவஹர் தோன்றாவிட்டால், காந்திக்குத்தான் என்ன பெருமை? வித்து, மண்ணிலே இருக்கிறது, அதில் வாழ்க்கையையும் காண்கிறது; தன்னினின்றும் பிறந்த மரத்துக்கும் வாழ்வை நல்கி இன்பம் நுகர்கிறது. வித்தினின்று உண்டான முளையோ, அதனின்று வேறுபடாததாய், ஆனால் அதைக் காட்டிலும் பெரிதாய் வானுற ஓங்கி வளர்ந்து, இருக்க நிழலும், உண்பதற்குப் பழங்களும் அளிக்கிறது. வித்து பெரிதா? மரம் பெரிதா? இந்தக் கேள்வியே தவறு. காந்தியடிகள் மண்ணில் வேலை செய்யும் விவசாயியாக, ஏழை மக்களிலே ஒருவராக இருக்கிறார். அவர்களுடைய ஆசாபாசங்களின் பிரதி பிம்பமாக, சுக துக்கங்களின் வடிவமாக, வாழ்வு தாழ்வுகளின் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார். தம்மை ஒரு விவசாயி என்று அவர் சொல்லிக்கொள்வதன் ரகசியமும் இதுதான். காந்தி வேறு. இந்தியா வேறு என்று பிரிக்க முடியாது. காந்தியின் அபிலாஷை இந்தியாவின் அபிலாஷை. காந்தியின் உணர்ச்சி இந்தியாவின் உணர்ச்சி. பொதுவாகச் சொல்லும்போது, காந்தி, இந்தியாவின் கண்ணாடி; இந்தியாவின் நாடி ஓட்டத்தை அளந்து கூறும் கருவி.
காந்தி வித்தினின்று தோன்றி விருட்சமாக வளர்ந்த ஜவஹர், பாமர ஜனங்களிடத்திலிருந்து வேறுபட்டவராயிருந்துகொண்டு அவர்களிடத்தில் அன்பு காட்டுகிறார்; அவர்களுக்கு இடமும் உணவும் வழங்க முயல்கிறார்; அதிலே பெருமையும் கொள்கிறார். பாமர ஜனங்களின் உள்ளத்திலே ஒரு சக்தி பொருந்திய மூர்த்தியாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
காந்தி, நீறுபூத்த நெருப்பு. அதிலே கொழுந்து விட்டெரியும் ஜ்வாலை ஜவஹர். காந்தியடிகளின் எஃகு போன்ற மனோ உறுதியை, ஆளை மயக்கும் ஒரு வித புன்சிரிப்பு கவிந்துகொண்டிருக்கிறது. அவருடைய அன்பான வார்த்தைகளிலே அதிகார தோரணை அடங்கியிருக்கிறது. அவருடைய அடக்கத்திலே எதற்கும் அஞ்சாத வீரம் அடைக்கலம் புகுந்துகொண்டிருக்கிறது. சத்துருக்களின் கோபாவேசமெல்லாம், அவருடைய பணிவிலே கரைந்துவிடுவதை எத்தனை முறை நாம் பார்த்திருக்கிறோம்? இந்த நீறுபூத்த நெருப்புத்தன்மையே இந்தியாவின் நாகரிகம். இதனாலேயே காந்தியடிகள் இந்தியாவாகப் பிரதிபலிக்கிறார். உலகம் அவரை இந்தியாவாகக் கருதுகிறது.
ஜவஹர் ஜ்வாலை, எட்டி நின்றோர்க்கு வெளிச்சம் கொடுக்கிறது; கிட்டச்சென்று தட்டிப் பார்ப்போரைச் சுட்டு விடுகிறது. இந்த ஜ்வாலையின் வெளிச்சத்தினால் நமக்குத் தெரியாத வழிகளெல்லாம் தெரியகின்றன. அவைகளுடே செல்ல வேண்டுமென்ற தைரியம் நமக்கு உண்டாகிறது. நமது தேசத்தின் தாழ்ந்த நிலையை இந்த ஜ்வாலை கொண்டு பார்க்கிறோம். நம்மிடத்திலே ஊறிக் கிடக்கும் கோழைத்தனத்தை இந்த ஜ்வாலை சுட்டெரிக்கிறது. உலகம் இப்பொழுது இந்த ஜ்வாலையின் பிரகாசத்தைக் கொண்டு இந்தியாவைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. நெருப்பினின்று பிறந்த ஜ்வாலைக்குப் பெருமையா? ஜ்வாலையை உண்டாக்கிய நெருப்புக்குப் பெருமையா?
பண்டித மோதிலால் நேரு திரட்டி வைத்த ஏக புத்திரனான தங்கக் கட்டியை, காந்தி என்னும் பொற்கொல்லன், தியாகம் என்னும் தீயிலே வைத்து உருக்கி, ஜவஹர் என்னும் ஆபரணமாகச் செய்து பாரத மாதாவுக்குச் சூட்டிவிட்டான். தாய்க்கு அணி பூட்டிய பொற்கொல்லனுக்குப் பெருமையா? அல்லது அணியாக அமைந்த பொன்னுக்குப் பெருமையா? காந்தி வாழ்க! ஏன்? ஜவஹரை வாழ்விக்க இருவரும் வாழ்க! ஏன்? இந்தியா வாழவேண்டுமல்லவா?
(காந்தியும் ஜவஹரும் நூலிலிருந்து)
Comments
Post a Comment