(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)
1924 (வயது 55)
குடல் அனுபந்த நோயினால் காந்திஜி ஜனவரி 12-இல் திடீரென்று பீடிக்கப்பட்டார். இது நாடெங்கும் கவலையை உண்டு பண்ணியது. கர்னல் மாடோக், ஆபரேஷன் செய்தார். இந்த டாக்டர் அப்போது உபயோகித்த மின்சார விளக்கு, ஆபரேஷன் பாதி முடிந்துகொண்டிருந்தபோது திடீரென்று நின்றுவிட்டது. ஆபரேஷன் முடியும் வரையில் நர்ஸ், அரிக்கன் லாந்தரைப் பிடித்துக்கொண்டு நின்றார். பிப்ரவரி 5-இல் காந்திஜி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார். தேகாரோக்கியம் பெறுவதற்காக அவர் ஜூஹவுக்குச் சென்றார். தேசபந்து தாஸும், மோதிலால் நேருவும் காங்கிரஸ் கொள்கைக்குப் புது அமைப்பைக் கொடுத்தனர். 1923-இல் சட்டசபைகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியார் பெரும் வெற்றி பெற்றனர்.
மார்ச்சு 22-ஆம் தேதி ரொமேன் ரோலாந்துக்குக் காந்திஜி முதல் கடிதம் எழுதினார். இதுவே அவர்கள் நட்பிற்குப் பூர்வாங்கமாகும்.
ஏப்ரல் முதல் வாரத்தில் ''எங் இந்தியா'' , "நவ ஜீவன்'' ஆகியவற்றின் ஆசிரியர் பதவியைக் காந்திஜி திரும்பவும் ஏற்றுக்கொண்டார். சிறைச்சாலை நாட்குறிப்பும், சுயசரிதையும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.
தேசபந்து தாஸும் மோதிலாலும் ஜூஹுவுக்குச் சென்று, புதிய நிலைமையைக் காந்திஜிக்குத் தெரிவித்தனர். ஆனால், அவர்களுடைய கருத்துடன் ஒன்றுபடக் காந்திஜி மறுத்துவிட்டார். அவர் மே மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: "சுயராஜ்யக் கட்சியார் என்ன செய்கிறார்கள் அல்லது என்ன சொல்லுகிறார்கள் என்பது பற்றி மாறுதல் வேண்டாதார் கவலைப்படவேண்டாம் என்றும், தங்கள் முழு ஆற்றலையும் கவனத்தையும் செலுத்தி நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கவேண்டும் என்றும் நான் ஆலோசனை கூறுகிறேன்.''
ஜூன் 27, 28-இல் அகமதாபாத்தில் கூடிய அ. இ. கா. க. கூட்டத்தின் தீர்மானத்திற்கு இது வழி செய்து கொடுத்தது. காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் எல்லோரும், ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி நூலாக 2,000 கெஜம் அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டது. அந்நியத் துணி, கோர்ட்டுகள், பாடசாலைகள், கல்லூரிகள், பட்டங்கள், சட்டசபைகள் ஆகியவற்றைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்பது மீண்டும் அழுத்தமாக வற்புறுத்தப்பட்டது. அரசாங்கத்தின் இரட்டைக் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. ஏர்னஸ்ட் டேயை கோபிநாத் சஹா கொலை செய்ததைக் கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. இத்தீர்மானத்தை எதிர்த்துச் சில சகபாடிகள் வோட்டளித்ததைக் கண்டு காந்திஜி ஏமாற்றம் அடைந்தார். பகிரங்கமாக அழுதார்.
டில்லி, குல்பர்கா, நாகபுரி, லட்சுமணபுரி, ஷாஜஹான்பூர், அலகாபாத், ஜபல்பூர், கோஹட் ஆகிய இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. கலவரங்கள் பற்றிக் காந்திஜியும் மெளலானா ஷௌகத் அலியும் அறிக்கை தயாரித்தனர்.
கோஹட் சம்பவங்களின் பலனாக காந்திஜி 21 நாள் உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தார். அவர், ''நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை; என்னையே குற்றஞ்சாட்டிக்கொள்ளுகிறேன்'' என்றார். செப்டம்பர் 18-ஆம் தேதி முகம்மது அலியின் வீட்டில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். செப்டம்பர் 26-இல் எல்லாச் சமூகங்களின் தலைவர்களும் டில்லிக்கு விரைந்தனர். ஏழு நாள் மகாநாடு நடத்தி, காந்திஜியின் தீர்மானங்களை அமல் செய்வதற்கும், அவற்றை மீறி நடப்பவர்களைக் கடுமையாகக் கண்டனம் செய்வதற்கும் உத்தரவாதம் அளிக்கத் தம்மால் இயன்றதை எல்லாம் செய்வதென்று பிரதிக்ஞை செய்து கொண்டார்கள்.
நவம்பர் 23, 24- இல் கூடிய அ. இ. கா. க. கூட்டத்தில், சட்டசபைப் பிரவேசம் சம்பந்தமாக தாஸ், மோதிலால் ஆகியோர் கருத்துக்குக் காந்திஜி இணங்கினார்.
டிசம்பரில் நடைபெற்ற பெல்காம் காங்கிரஸுக்குக் காந்திஜி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மகாநாடுகளின் தலைமை உரைகளில் இதுவே மிகவும் சுருக்கமானது. இதன் சுருக்கமே பகிரங்கக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. கதர் அணிவதையும் அந்நியத் துணியைப் பகிஷ்கரிப்பதையும் காந்திஜி வற்புறுத்தினார். சட்டசபைப் பிரவேசத்தைக் காங்கிரஸ் அனுமதித்தது.
காந்திஜியின் யோசனைப்படி காங்கிரஸின் காரியதரிசியாக ஜவாஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கூடுவதற்குச் சற்று முன்னதாகத் தாஸ் தம்முடைய சொத்துக்கள் அனைத்தையும் தேசத்துக்குக் கொடுத்துவிட்டார்.
- (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)
Comments
Post a Comment