"கவலை துறந்திங்கு வாழ்வதே வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்” என்று பாரதியார் பாடுகிறார். உலக வாழ்க்கையிலே எத்தனையோ விதமான
கவலைகள் மனிதனை வாட்டுகின்றன. அவையெல்லாம் தாக்காதவாறு வாழக் கற்றுக்கொண்டவன் உண்மையான
இன்பத்தைப் பெறுவான் என்பதில் ஐயமில்லை.
கவலையை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதற்கு
அடிப்படையாக இருப்பது பயம் என்று காணலாம்.
பயத்திற்கு அடிப்படை என்னவென்று ஆராய்வது
சுவையான காரியம். பிறந்த குழந்தைக்கு மேலேயிருந்து கீழே திடீரென விழுவது போன்ற நிகழ்ச்சியிலே
பயமுண்டாம். அந்த பயம் பிறவியிலேயே வந்திருக்கிறது என்று கூறுவார்கள். மரக்கிளைகளிலே
இரவு நேரத்தைக் கழித்த ஆதி மனிதர்கள் தூக்க நிலையிலே தவறிக் கீழே விழுந்திருக்கலாம்.
இப்படிப் பல தடவைகளிலே பல பேர் விழுந்து விழுந்து துன்பப்பட்டதால் ஏற்பட்ட பயம் அப்படியே
தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறதாம். அதனால்தான் உயரத்திலிருந்து கீழே விழுவது போல்
வேகமாக வருவதிலே குழந்தை பயமடைகிறது. இதேபோலக் குழந்தை பெரிய சப்தத்தைக் கேட்டும் பயமடைகிறது.
இடி முழக்கம் கேட்ட குழந்தை வீரிட்டு அழுகிறது. இந்த பயமும் ஆதி காலத்திலிருந்து வருகின்றதாம்.
இவை தவிர வேறு வகையான பயங்களெல்லாம் பின்னால் ஏற்படுகின்றன வென்றும், நல்ல முறையிலே
குழந்தையை வளர்த்தால் கூடிய வரை பயங்களைக் குறைத்துவிடலாம் என்றும் கூறுவார்கள்.
இருட்டைக் கண்டாலும் குழந்தைக்கு இயல்பாகவே
பயம் உண்டென்றும், இந்த பயமும் பரம்பரையாக வந்தது என்றும் சிலர் கூறுவார்கள். ஆதி மனிதர்
பகலை விட இரவு நேரங்களிலேதான் அதிகமான துன்பங்களை அடைந்திருக்க வேண்டும்.
இருட்டைப் பற்றிய பயம் குழந்தைக்கு இயல்பாகவே
கிடையாதென்று வாதிப்பவர்கள் உண்டு. குழந்தையை இருட்டறையிலேயே தூங்கவைத்துப் பழக்கப்படுத்துவதால்
இந்த இருட்டுப் பயத்தை இல்லாமலேயே செய்துவிடலாம் என்பார்கள்.
பிறந்த குழந்தைக்கு எவ்விதமான பயமும் கிடையாதென்றும்
பயங்களெல்லாம் பின்னால் ஏற்படுகின்றவையே என்றும் கூறுபவர்கள் உண்டு.
மேலே குறிப்பிட்ட பயங்களெல்லாம் வெளியுலகத்தால்
ஏற்படக்கூடியவைகள். இவை போன்ற பயங்களல்லாமல் வேறு விதமான பயங்களும் உண்டு.
இத் என்ற மனப்பகுதியிலே பல வகையான தீய
உந்தல்களும் இச்சைகளும் இருக்கின்றன வல்லவா? அவற்றின் துண்டலால் ஏதாவது தவறு செய்துவிடுவோமோ
என்கிற பயம் உண்டாகிறது. அதீத அகம் உயர்ந்த நெறிமுறையை வகுக்கின்றது. அந்த நெறிமுறைக்கு
மாறாக நடந்துவிட்டபோது அதனால் அவமானமும் பயமும் தோன்றுகின்றன.
பொதுவாகப் பார்த்தால் மனத்திற்குள்ளே உண்டாகின்ற
மேலே கூறிய இரண்டு வகையான பயங்களையும் தோன்றாமல் தடுக்க வழியுண்டு என்று தெரியவரும்.
எண்ணத்திலும் செயலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறவன் பயப்பட வேண்டியதில்லை. பொய் தீர்ந்தால்
பயம் தீரும் என்று பாரதியார் எழுகியிருக்கிறார். நேர்மையுள்ளவன் பொய்யுரைக்க வேண்டியதில்லை.
மனத்திற்குள்ளே ஏற்படுகின்ற பயங்களைப் போக்க வல்லவனுக்கு வெளியுலக பயம் பெரிதல்ல. அதையும்
அவன் தன் விவேகத்தால் ஒழித்து விடமுடியும்.
இவ்வாறு பயம் தீர்ந்தவன் கவலையின்றி வாழலாம்.
ஆகவே அவன் மேலான இன்பம் அடைகின்றான். இதைக் கருத்திற்கொண்டுதான் வாழ்க்கை நெறியைப்
பற்றிக் கூறுகின்றபோது இராமலிங்க வள்ளலார் பயம் பூச்சியமாகப் பெறவேண்டும் என்று குறிப்பாகக்
காட்டியிருக்கிறார்.
மேலே விவரித்த மூன்று வகைப் பயங்களாலும்
மனிதனுக்குக் கவலை பிறக்கிறது; மனப் போராட்டங்கள் தோன்றுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து
அவனுடைய மனிதப் பண்பாகிய ஆளுமையை (Personality) பாதிக்கின்றன.
ஆளுமை என்ற சொல் விரிவான பொருளுடையது.
அது ஆளின் தன்மைகளில் ஒன்று விடாமல் முழுவதையும் குறிக்கின்றது. அவனுடைய மனத்தின் தன்மைகளை
மட்டுமல்ல; தோற்றம், பேச்சு, நடத்தை, பண்பு எல்லாவற்றாலும் ஒருவனுக்கு ஏற்படுகின்ற
முழுத்தன்மையை அது காட்டுகின்றது. அப்படிப்பட்ட ஆளுமையை உருவாக்குவதில் பாரம்பரியமும்,
சூழ்நிலையும், வாழ்க்கை அநுபவங்களும், கல்வியும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றன. கவலை,
மனப்போராட்டம் முதலியவைகளுக்கும் அதில் பெரும் பங்குண்டு.
ஆகவே ஆளுமை என்பது நிலையாக ஒரே மாதிரி
இருக்குமென்று கூற முடியாது. அது மாறி அமைந்துகொண்டே இருக்கிறது. முக்கியமாக ஒருவனுடைய
வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகள் ஆளுமையை ஒருவாறு நிரந்தரமாக அமைப்பதற்குப் பெரிதும்
காரணமாக இருக்கின்றன. குழந்தைப் பருவத்திலும், குமரப் பருவத்திலும் அதன் வளர்ச்சி அதிகம்.
பிறகு முதிர்ந்த பருவத்தில் ஓரளவிற்கு மாறுதலின்றி நிலைபெற்றுவிடுகிறது.
இந்த ஆளுமையைப் பிரதானமாகக் கருதி பிராய்டு
தமது உளப்பகுப்பியல் கொள்கையை வகுக்கிறார். ஆளுமை எவ்வாறு அமைகின்றதோ அதற்கேற்றவாறுதான்
ஒருவனுடைய வாழ்க்கையின் சிறப்பும், தாழ்வும், வெற்றியும், தோல்வியும் ஏற்படுகின்றன.
ஒருவனுடைய இத் என்ற மனப்பகுதியின் வேகங்கள்
சமூகச் சூழ்நிலையின் சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்கள், கட்டுபாடுகள் முதலியவற்றோடு மோதுகின்றன.
மோதி அவற்றால் பல வகையாக மாறியமைகின்றன. இதன் விளைவாகவே ஆளுமை அமைகிறது என்றும் இத்தின்
வேகங்களில் பால் உந்தலே அடிப்படையானதும் பிரதானமானதும் என்றும் பிராய்டு கருதுகிறார்.
ஆனால் அவரோடு தொடக்கத்தில் ஒத்துழைத்துப்
பிறகு கருத்து மாறுபட்ட ஆட்லரும் யுங்கும் இந்த ஆளுமையின் அமைப்பைப் பற்றி வேறு வேறு
விதமான எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.
மனிதன் பிறந்து குழந்தையாக இருக்கும் பருவத்தில்
தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியில்லாதவனாக இருக்கிறான். சூழ்நிலையிலிருப்போரைச்
சார்ந்து நின்று அவர்களுடைய உதவியை எதிர்பார்ப்பவனாகவே அவன் தனது வாழ்க்கையைத் தொடங்குகிறான்.
அதன் காரணமாக அவன் மனத்திலே தான் மற்றவர்களைவிடத் தாழ்ந்தவன் என்கிற தாழ்வுணர்ச்சி
தோன்றுகிறது. இதைப் போக்க அவன் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களைவிடத் தான் உயர்ந்தவன்
என்று காட்ட வேண்டுமென்ற உயர்வுந்தல் பிறக்கிறது. அதை அடிப்படையாகக்கொண்டே அவன் வாழ்க்கை
அமைகிறது; அதுவே அவனுடைய ஆளுமையை உருவாக்குகிறது என்று ஆட்லர் கூறுகிறார்.
நனவிலி மனத்தின் அம்சமாக ஒருவனுடைய மூதாதையர்களின்
இச்சைகளும் உணர்ச்சிகளும் இருக்கின்றனவென்றும், மனித இனத்தின் நனவிலி உணர்ச்சிகளும்
ஒருவனுடைய நனவிலி மனத்தில் புதைந்திருக்கின்றனவென்றும் யுங் கருதுகிறார். நனவிலி மனத்தின்
அடிப்படைச் சக்தி ஆன்மா சம்பந்தப்பட்டதாக இருக்கிறதென்பது இவருடைய ஆராய்ச்சியின் முடிவு.
இந்த சக்தி சமூகத்திலே எவ்வாறு பயனடைகின்றதோ அதற்கேற்றவாறு ஒருவனுடைய ஆளுமை அமைகின்றதென்று
யுங் கூறுகிறார்.
Comments
Post a Comment