Skip to main content

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

ழிசி மின்புத்தக வெளியீட்டகம் இலக்கிய விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த மாதம் ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அமேசான் தளத்தில் வலையேற்றப்படும்  பொதுத்தள நூல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை வாசகர்களுக்கே திருப்பியளிக்க அழிசி விழைந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற இப்போட்டியில் மொத்தம் 24 கட்டுரைகள் வந்தன. 2 கட்டுரைகள் காலதமாதம் காரணமாக போட்டிக்கு பரிசீலிக்கவில்லை. 2 கட்டுரைகள் தமிழ் அல்லாது வேற்று மொழி நாவல் மற்றும் மொழியாக்க நாவல் குறித்தான விமர்சன கட்டுரையாக இருந்ததால் அவையும் பரிசீலிக்கப்படவில்லை. எனினும் விதிவிலக்காக ரமேஷ் கல்யாண் அவர்கள் எழுதிய 'When the river sleeps' எனும் ஆங்கில நாவலைப் பற்றிய கட்டுரை மிகச் சிறந்தது என்பதில் நடுவர் குழுவிற்கு ஒருமித்த கருத்து இருந்தது. ஆகவே அவ்வகையில் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு சிறப்பு பரிசை நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அழிசி அளிக்கிறது.

வந்திருந்த கட்டுரைகளில் பொதுவாக விமர்சன நோக்கு என்பது மிகக் குறைவாகவே புலப்பட்டது. வெவ்வேறு வகையான வாசிப்புகளே பெரும்பாலும் விமர்சனத்தின் பேரால் முன்வைக்கப்பட்டன. விமர்சன நோக்கு என்பதன் பொருள் ஆசிரியரையோ ஆக்கத்தையோ பூரணமாக நிராகரித்து தூற்றுவதும் அல்ல. தேர்ந்த விமர்சன கட்டுரை என்பது ஒரு படைப்பின் தனித்தன்மை என்ன? பேசுபொருள் என்ன? தவறவிட்டவை எவை? தமிழ் இலக்கிய வெளியில் அதன் இடம் என்ன? எந்த ஆக்கங்களுடன் ஒப்பிடத்தக்கது? ஆசிரியரின் முந்தைய ஆக்கங்களுடன் உள்ள தொடர்ச்சி என்ன? என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். புத்தக அறிமுகம் அல்லது வாசிப்பு என்ற நிலையில் கட்டுரைகள் நின்றுவிட்டன. எனினும் அவ்வகையில் சிறந்த வாசிப்புக் கோணங்களை முன்வைத்த கட்டுரைகள் பலவும் வாசிக்கக் கிடைத்தன. பரீசீலனைக்கு உட்பட்ட 20 கட்டுரைகளில் இருந்து பத்து கட்டுரைகளை கொண்ட நீள் பட்டியல் இடப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. வெள்ளையானை - சிவ மணியன்
3. நிழலின் தனிமை- ஜெயன் கோபாலகிருஷ்ணன்
4. கொற்றவை- கமல தேவி
5. மெனிஞ்சியோமா - அழகுநிலா
6. வெள்ளை யானை - ஜினுராஜ்
7. இமைக்கணம்- அகிலன்
8. நிழலின் தனிமை - கமலக்கண்ணன்
9. யாமம் - மகேந்திரன்
10. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

இந்த பத்து கட்டுரைகளும் பதாகை இணைய இதழில் அதன் ஆசிரியர்களின் விருப்பின் பேரில் பிரசுரிக்கப்படும். விவாதத்தின் ஊடாக இதிலிருந்து ஐந்து கட்டுரைகள் கொண்ட குறும்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. நிழலின் தனிமை - ஜெயன் கோபாலகிருஷ்ணன்
3. வெள்ளை யானை - சிவ மணியன்
4. யாமம் - மகேந்திரன்
5. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

தீவிர பரீசீலனைக்கு பின் ஐந்து நடுவர்களில் நால்வர் ரஞ்சனி பாசு எழுதிய காவல் கோட்டம் பற்றிய விமர்சனத்தை பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்தார்கள். எழுத்தாளர் தூயன் சரளா முருகையன் அவர்களின் ஆப்பிளுக்கு முன் பற்றிய விமர்சன கட்டுரையை தேர்வு செய்தார். பெரும்பான்மையினரின் முடிவையொட்டி, போட்டிக்கு வந்ததிலேயே சிறந்த கட்டுரையாக ரஞ்சனி பாசு அவர்களின் காவல் கோட்டம் பற்றிய விமர்சனம் தேர்வு செய்யப்படுகிறது. விமர்சன நோக்கு குறைவாக வெளிப்பட்டாலும், மதுரையின் வரலாற்றுடன் நாவலை இணை வைத்து வாசிக்கும் செறிவான கட்டுரை.

பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. போட்டியை வழிநடத்தி முடிவு அறிவுப்பு வரை துணை நின்ற சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், தூயன், ரியாஸ், மதியழகன் அடங்கிய நடுவர் குழுவுக்கு நன்றி. இப்போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள் இணையதளங்களில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி. கிண்டில் பரிசு பெறும் ரஞ்சனி பாசு மற்றும் சிறப்பு பரிசு பெறும் ரமேஷ் கல்யாண் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அழிசி

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...