பாரதி, வ. வெ. சு. அய்யர் மறைவுக்குப் பின் தமிழ் மறுமலர்ச்சி இலக்கிய இயக்கம் நீண்ட இடைவெளி விட்டுப் போய்விடாமல், ஒரு தொடர்ச்சி கொடுத்த, பாரதியின் முதல் சீடன் வ.ரா. மறைந்து போய் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. பாரதியின் சீடனாக மட்டும் இருந்த்தோடு நின்றுவிடவில்லை வ.ரா. பாரதி புகழ் பரப்பினவர். தேசிய பாட்டுகளுக்காக மட்டும் தேசிய கவியாகவே கருதப்பட்டிருந்த பாரதியை இலக்கிய ரீதியாக கவிஞன் என்று தமிழகம் எங்கும் சுற்றி அவனது இலக்கிய சாதனையை எடுத்துச் சொன்னவர். வ.ரா. அதோடு பாரதியை மகாவி என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. இன்று பாரதிக்கு மண்டபம் கட்டி கவுரவித்து, மகாகவி என்று வாய்க்கு வாய் கூறுகிறது. ஆனால் முப்பதுகளில் இதைச் சொல்ல மதிப்பீட்டு சக்தியும் எதிர்காலப் பார்வையும் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. அந்த வ.ரா.வை தமிழகம் ஒரு கணம் நினைத்துக்கொள்ளத் தயங்குகிறது. மறுக்கிறதா மறக்க விரும்புகிறதா தெரியவில்லை.
பாரதி மீது காட்டிய இலக்கிய அக்கறைக்காக மட்டும் எழுத்து அவரைப் 'பெரியவன்' என்று பாராட்டிவிடாது. பாரதி வழியிலே குட்டி பதினாறடியாக பாய்ந்து தமிழ் இலக்கியத்தைத் தானும் வளப்படுத்தி ஒரு படைதிரட்டி வலுப்படுத்தச் செய்ததுக்காகவே வ.ரா. 'பெரிய எழுத்தாளன்'. பாரதியின் சீடன் மணிக்கொடித் தலைவன் ஆனான். அவர் பேனாவிலே வளர்ந்த மணிக்கொடி ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லை. ஸ்தாபனமாக மட்டும் இல்லை. ஒரு இயக்கமாகவே இருந்தது. தமிழ் இலக்கியம் அதுவரை காணாத சில இலக்கிய உருவங்கள் பிறக்க, வளர பின்னாலும் உண்டாக ஏற்பட வகை செய்த ஒரு இலக்கியத் தலைவன் வ.ரா. 'தமிழ்நாட்டில் ஆழ்ந்த கருத்துக்களோடு எழுதுகிற முதல் தரமான எழுத்தாளர் வ.ரா.' என்பது அவரது தோழர் டி. எஸ். சொக்கலிங்கம் கருத்து. ந. பிச்சமூர்த்தி 'கொள்கைகளுடன் பழகியவர் வ.ரா.' என்று கூறி இருக்கிறார். எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கல்கியே குறிப்பிட்டிருக்கிறார். பாரதிக்குப் பின் தமிழனுக்காக சிந்தித்தவர் வ.ரா. இன்னும் தமிழ் உரைநடையை புதுப்பித்தவர் வ.ரா. அந்த வ.ரா.வை தமிழகம் நினைக்கிறதா?
மணிக்கொடி கோஷ்டி, மணிக்கொடி பரப்பரை, மணிக்கொழி வழி பத்திரிகை என்பதுக்கெல்லாம் மூலவறான அந்த இலக்கியத் தலைவனுக்கு அவன் காட்டிய வழியில் செல்லும் 'எழுத்து' தன் இலக்கிய வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது.
- ‘எழுத்து’ (ஆகஸ்ட், செப்டம்பர் 66) இதழில் வெளியான தலையங்கம்
விரைவில் வெளிவரும் 'சிந்தனை முதல்வன்: வ.ரா. நினைவோடை' மின் நூலிலிருந்து
விரைவில் வெளிவரும் 'சிந்தனை முதல்வன்: வ.ரா. நினைவோடை' மின் நூலிலிருந்து
Comments
Post a Comment