Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | நமக்குப் பெருமை | பெ. தூரன்


ண்மையிலே நான் ஒரு திரைப்படக் காட்சியைப் பார்த்தேன். மறைமனத்திலே ஏற்பட்டுள்ள சிக்கலை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் படம் உருவாகியிருக்கிறது. உள்ளத்தைக் கவரும் கதை அது. அதிலே ஓரிடத்திலே ஒன்றுக்குப் பின் ஒன்றாக எத்தனையோ கதவுகள் திறக்கப் படுவது போல ஒரு காட்சியைக் கற்பனை செய்திருக்கிறார்கள். முதலில் ஒரே கதவுதான் முன்னால் தோன்றுகிறது; அது திறக்கவில்லை. உள்ளே மற்றொரு கதவு. அது திறந்ததும் மற்றொரு கதவு. இப்படியே கதவுகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன. அவற்றிற்கு முடிவே இல்லை போலக் காண்கிறது.
மனத்தின் பல நிலைகளையும், ஆழத்தையும் இவ்வாறு உருவப்படுத்தி அந்தக் காட்சியிலே காட்டியிருக்கிறார்கள். மனம் அத்தனை மாயமானது. அதன் விந்தைச் செயல்களையெல்லாம் பொதுப்படையாக இதுவரை ஆராய்ந்தோம். மனம் என்றால் என்ன என்று திட்டமாக எடுத்துச் சொல்ல முடியாவிட்டாலும் அதன் செயல்களை ஒருவாறு தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் முக்கிய பகுதிகளாகிய நனவு மனம், நனவிலி மனம், நனவடி மனம் (வெளி மனம், மறை மனம், இடை மனம்) எவ்வாறு வேலை செய்கின்றன என்றும் பார்த்தோம். பகுதிகள் என்று கூறும்போது உண்மையில் இப்படிப் பகுதிகள் இல்லை என்றும் மனம் முழுமையானது என்றும் கண்டோம்.
இந்த மனத்தின் பெருமையைப் பற்றியும், மாயத்தைப் பற்றியும் எடுத்து விளக்கிக் கவிஞர்கள் கவிதை புனைந்திருக்கிறார்கள்; அடியார்கள் பாடியிருக்கிறார்கள். மனக்குரங்கு என்றுகூடப் பழித்துக் கூறியிருக்கிறார்கள். தத்துவப் பெரியார்களும் மனத்தை அடக்க முடியவில்லையே என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
மனத்தினலேயே மனிதனுக்குத் தனிப்பட்ட பெருமை ஏற்பட்டிருக்கிறது. மனம் என்பதொன்றில்லாவிட்டால் அவனுக்குப் பெருமையே இல்லையென்று கூறலாம். அதன் உதவியாலேயே அவன் எத்தனையோ வியப்புக்குரிய செயல்களையெல்லாம் சாதித்திருக்கிறான். ஆனால், அது அவனைக் குழியில் தள்ளிவிடவும் செய்யும். மறை மனத்திலே மறைந்து கிடக்கும் இச்சைகள் பகுத்தறிவையும், மனச் சான்றையும் ஏமாற்றிவிட்டு மேலெழுந்து ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடலாம். அதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நமது செயல்களையும், நோக்கங்களையும் அடிக்கடி அலசி ஆராய்ந்து மதிப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும். இது எளிதன்று; ஏனெனில் அதற்கும் அந்த மனத்தையே நம்ப வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் மனத்தைப் பற்றிய அறிவு தேவைப்படுகின்றது.
மனத்தின் தன்மைகளை உணர்ந்துகொண்டு அதைச் சரிவரப் பயன்படுத்தி நடந்தால் வாழ்க்கையிலே வெற்றியடையலாம். கனவும், பகற்கனவும் மனத்தின் தன்மைகளை அறிய உதவுகின்றன. இயல் பூக்கங்கள், உள்ளக் கிளர்ச்சிகள், நினைவாற்றல், கற்பனை ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகள், பயன்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வதாலும் மனத்தின் தன்மைகள் தெளிவாகின்றன.
மனத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ விரிவான ஆராய்ச்சிகள் செய்யலாம். அவற்றிற்கெல்லாம் இங்கு இடமில்லை. பொதுப்படையாக எல்லாருக்கும் தெரிய வேண்டிய அடிப்படையான சில முக்கிய விஷயங்களையே இங்கு எடுத்துக்கூற விரும்பினேன்.
பிறக்கும்போது மனம் என்று ஒன்று தனிப்பட இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். சில மறிவினைகளை மட்டும் உடையவனாக மனிதன் உலகத்திலே தோன்றுகிறான்; அனுபவங்களின் மூலமாக மனம் சிறிது சிறிதாக உருவாகிறது என்பது அவர்களுடைய வாதம்.
இக் கொள்கைக்கு எதிராக வேறொரு கொள்கையுண்டு. மனம் என்பது பல வகையான திறமைகளுடன் பிறப்பிலே இருக்கிறது என்றும் அது அனுபவத்தால் மலர்ச்சியடைகிறது என்றும் அக்கொள்கையினர் கூறுகின்றனர்.
ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கட்டி ஒரு கட்டடம் உருவானது போல மனம் உருவாகிறது என்பது ஒரு கொள்கை.
ஆலமரத்தின் சிறு விதைக்குள்ளேயே அந்தப் பெரிய மரம் முழுவதும் மறைந்திருந்து பின்னால் வெளிப்படுவதுபோல மனம் மலர்ச்சியடைகிறது என்பது வேறொரு கொள்கை.
ஏதாவதொரு உயிரினத்தின் மறிவினைகளெல்லாம் ஒரே தன்மையில் அமைந்திருக்கின்றன என்று கண்டோம். மனித இடத்து மறிவினைகளும் அவ்வாறுதானிருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது ஒரே விதமான சூழ்நிலையில் ஒரே விதமான அனுபவங்களைப் பெறும் குழந்தைகள் வெவ்வேறு விதமாகச் செயல் புரிவதற்கும், மனப்போக்குக் கொண்டிருப்பதற்கும் காரணம் என்ன? வெவ்வேறு வகையான இயல்புகளுடன் மனம் அமைந்திராவிடில் வேறுவேறான செயல்கள் நிகழ முடியாதென்பது இக்கொள்கையாரின் முடிபாகும். பெற்றோர்களின் வழியாக வரும் பாரம்பரிய அமைப்பினால் வெவ்வேறான இயல்புகள் காணப்படுகின்றன என்றும், இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக முற்பிறவி வினைகள் நிற்கின்றன என்ற தத்துவக் கருத்தும் கூறப்படுகின்றன. பல பிறப்புகள் உண்டு என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு.
இவ்வாறு அடிப்படைக் கருத்துகளில் மாறுபாடுகள் இருந்தாலும் குழந்தையின் ஐந்து அல்லது ஏழு வயதிற்குள்ளாகவே அதன் பிற்கால வாழ்க்கையின் போக்கிற்கு வேண்டிய பொதுவான மன அமைப்பு ஏற்பட்டு விடுகிறது என்பதில் பெரும்பாலும் கருத்தொருமை காணப்படுகிறது. மனம் எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை முடிவாக அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமையிலும் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் தடையொன்றுமில்லை. அனுபவங்களின் மூலமும் சூழ்நிலையின் மூலமும் மனம் என்பது சிறிது சிறிதாகச் சேர்ந்து புதிதாக உருவெடுத்தாலும் அல்லது அவற்றின் மூலமாக மனம் மலர்ச்சியடைந்தாலும் விளைவொன்றுதான். ஆதலால் மனத்தின் தோற்றத்தைப் பற்றிய விவாதங்களில் தலையிடாமல் அதன் தன்மைகளை அறிந்துகொள்ள முயல்வது இன்றியமையாததாகும்.
மனம் நமக்குத் தனிப்பெருமை என்று மீண்டும் கூறுகிறேன். மற்ற உயிரினங்களுக்கு மனம் உண்டு என்று வைத்துக்கொண்டாலும் அது மனிதனுக்குள்ள மனத்தைப்போல அத்தனை நுட்பமாகத் தொழில் செய்வதில்லை. மனிதனுடைய மனம் அத்தனை நுட்பமானது; பரிணாம ஏணியிலே ஏறி ஏறி, நுண்மை பெற்றுப் பெற்று அது விரிவடைந்திருக்கிறது என்று கூறலாம். மனிதனுடைய மனம் ஒரு பெரிய விந்தை. அதை முற்றிலும் அறிந்துகொள்வது மிகவும் அரிது. அறிந்துகொண்ட அளவிற்கு நல்லது.


Click On the image to buy the ebook
மின் நூலாக...

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...