உள்ளக் கிளர்ச்சிகள் எத்தனை என்பது பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னலெல்லாம்
பெரிய பெரிய பட்டியல்கள் வெளியிடுவதுண்டு. ஒவ்வொரு கிளர்ச்சியின் தன்மையென்ன, அதனோடு
தொடர்புள்ள இயல்பூக்கம் என்ன, அது பிறப்பிலிருந்தே உண்டானதா அல்லது சூழ்நிலையால் தோன்றியதா
என்று இப்படியெல்லாம் ஆராய்ச்சிகள் நடைபெறும்.
நடத்தைக் கொள்கை உளவியலைத் தோற்றுவித்த வாட்ஸன் என்பவர் பச்சைக் குழந்தைகளைக்
கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தியதன் பயனாக மனிதனுக்கு அச்சம், இனம், அன்பு என்ற மூன்று
உள்ளக் கிளர்ச்சிகள்தான் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்று கூறினார். இவர் கூறியதைப்
பொதுவாக எல்லாரும் ஆமோதித்தார்கள்.
ஆனால் அண்மையிலே சில உளவியலறிஞர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக மேலே கூறியவாறு
குழந்தைகளின் உள்ளக் கிளர்ச்சிகள் தெளிவாகவும் தனித்தனியாகவும் இருக்கின்றனவா என்பதில்
ஐயம் தோன்றியிருக்கிறது.
குழந்தைப் பருவத்திலேயே உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம்
தெரிந்து கொண்டால் போதும். அதற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகளை உளவியல் அறிஞர்களுக்கு விட்டுவிடலாம்.
உள்ளக் கிளர்ச்சியைப் பற்றி இன்னும் ஒரு வேடிக்கையான விவாதம் உண்டு. உள்ளக்
கிளர்ச்சி முதலில் தோன்றி அதன் விளைவாகச் செயல் நடைபெறுகிறதா அல்லது செயல் நடைபெற்று
அதன் விளைவாக உள்ளக் கிளர்ச்சி தோன்றுகிறதா என் பதிலே பெரிய விவாதம் ஏற்பட்டுவிட்டது.
மனத்திலே துயரம் உண்டாகிறது; அதனால் ஒருவன் அழுகிறான் என்று நாம் சொல்லுகிறோம்.
அதுதான் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞரும்,
கார்ல் லாங் என்ற உடலியல் வல்லுநரும் நமது நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தைப்
புதிதாக வெளியிட்டார்கள். “முதலில் மனிதன் அழுகிறான்; பிறகுதான் துயரம் என்ற உள்ளக்
கிளர்ச்சி தோன்றுகிறது” என்று அவர்கள் கூறினார்கள். அதாவது உடலிலே மாறுதல்கள் ஏற்பட்ட
பிறகே அவற்றிற்கேற்ற உள்ளக் கிளர்ச்சிகள் எழுகின்றன என்று அவர்கள் வாதித்தார்கள்.
இந்தக் கொள்கை உண்மையென்றும் உண்மையன்று என்றும் நிலைநாட்ட எத்தனையோ சோதனைகள்
நடந்திருக்கின்றன. “நீ முதலில் ஒட்டம் பிடிக்கிறாய்; பிறகுதான் அச்சம் தோன்றுகிறது"
என்று கூறினால் சிரிக்கத்தான் தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதாக இக்கொள்கையை ஒதுக்கித்தள்ளிவிட
இதுவரையிலும் முடியவில்லை.
ஷெரிங்டன், கானன் என்ற இருவர் தாங்கள் செய்த ஆராய்ச்சிகளைக் கொண்டு இக்கொள்கை
தவறானது என்று காட்ட சில ஆண்டுகளுக்கு முன்னே முயன்றார்கள். ஆனால் இவர்களுடைய ஆராய்ச்சிகளைக்
கொண்டு இக்கொள்கையை முடிவாக மறுக்க முடியாது என்று ஆங்கெல் என்ற மற்றொரு அறிஞர் தக்க
காரணங்களுடன் விளக்கியிருக்கிறார்.
இந்த விவாதத்தின் முடிவு எப்படியானலும் உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றிப் பொதுவாக
நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அது பெரிதும் மாற்றிவிடாது.
நமது உடம்பின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான சுரப்பிகள் (Glands) இருக்கின்றன.
வாயில் உமிழ்நீர் சுரப்பது ஒருவகைச் சுரப்பியால் தான். வளர்ச்சிக்கு உதவ ஒருவகைச் சுரப்பி
இருக்கிறது. இப்படிப் பல சுரப்பிகள் இருந்து பல வேலைகளைச் செய்கின்றன.
சுரப்பிகளிலே நாளமில்லாத சுரப்பிகள் சில உண்டு. அவை தம்மிடத்துச் சுரக்கும்
சுரப்புப் பொருளை நேராக இரத்தத்தில் கலக்கும்படி செய்கின்றன. அவைகள் உள்ளக் கிளர்ச்சிகளால்
உடம்பிலும் செயலிலும் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக இருக்கின்றனவென்று கண்டிருக்கிறார்கள்.
ஆட்ரீனல் என்ற சுரப்பி சிறுநீர்ப் பைக்கு மேலே இருக்கிறது. வலி, அச்சம், சினம் ஆகிய
கிளர்ச்சிகளால் அந்தச் சுரப்பி பாதிக்கப்படுகிறது என்றும் செயற்கை முறையிலே அச்சுரப்பி
நீரை ஒருவனுடைய இரத்தத்தில் சேரும்படி செய்தால் அச்சத்தால் ஏற்படும் உடல் மாறுபாடுகளெல்லாம்
உண்டாகிறதென்றும் கானன் என்பார் ஆராய்ந்து கண்டிருக்கிறார். இவ்வாறே மற்றச் சுரப்பிகளின்
தன்மைகளையும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்.
சுரப்பிகள் அல்லது மற்ற உடல் உறுப்புகளின் செய்கைகளால் உள்ளக் கிளர்ச்சிகள்
தோன்றுவதானாலும் அல்லது உள்ளக் கிளர்ச்சிகளால் உறுப்புகளின் செய்கைகள் மாறுபாடடைவதானாலும்
மனிதனுடைய வாழ்க்கையிலே ஏற்படும் விளைவு ஒன்றுதான். இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளுக்கு
ஆட்பட்ட மனிதன் வீழ்ச்சியடைகிறான். அவற்றிற்கு ஆட்படாமல் அவற்றை உயர்மடைமாற்றம் செய்துகொண்டவன்
உயர்வடைகிறான். இந்த உண்மையைத்தான் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறிவு, பகுத்தறிவு என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஆனால் உள்ளக் கிளர்ச்சிகளே ஒருவனுடைய செயல்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. நல்ல பழக்கங்களையும், பற்றுதல்களையும், குறிக்கோள்களையும் உண்டாக்கிக் கொள்வதாலும், மனத்திட்பத்தாலும் ஒருவன் தனது உள்ளக் கிளர்ச்சிகளை நல்வழிப்படுத்திக்கொள்ள முடியுமானால் அவன் மேம்பாடடையலாம். மனச்சான்றும் அறிவும் இம்முயற்சியிலே அவனுக்குத் துணையாக நிற்க வேண்டும்.
Comments
Post a Comment