Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர்.
குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன.
கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள்.
இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையாகுமா?
வேகம் வேகமாக ஒருவன் ரெயில் வண்டிக்குள்ளே நுழைகிறான். செருப்புக் காலால் உனது கால் விரலை நன்றாக மிதித்துவிடுகிறான். வலி பொறுக்க முடியாமல் உனக்குக் கோபம் பொங்கி வருகிறது. வந்தவன் கன்னத்திலே அறையலாம் என்றுகூடத் தோன்றுகிறது. உடனே அடித்துவிடலாமா? அல்லது வாயில் வந்தபடியெல்லாம் அவனைப் பேசத்தான் செய்யலாமா?
ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஏதோ ஒரு தவறு செய்துவிடுகிறது. அதற்காக உடனே போர் தொடுத்துவிடலாமா?
காமம் குரோதம் பொறாமை இப்படி எத்தனையோ உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால் சமூக வாழ்க்கையே நிலைகுலைந்து போகும்.
மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் பலவற்றைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் விலங்குகளைப்போல நடக்க முடியாது. சில விலங்குகள்கூட ஓரளவு தமது உள்ளக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளுகின்றன என்று தோன்றுகிறது. மனிதன் அவற்றைவிடத் தாழ்வாக நடக்க முடியாது. அவனுடைய நாகரிகம், அவனுடைய பண்பாடு அவற்றின் பெருமையெல்லாம் அழியாதிருக்க வேண்டுமானால், சமூக வாழ்க்கை நிலைக்க வேண்டுமானால் மனிதன் தனது இழிந்த கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
இயல்பூக்கங்களை அடக்கி அழித்துவிட முடியாது என்று கண்டோம். இயல்பூக்கங்களுடன் சேர்ந்து பல உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுகின்றன. ஆகவே, உள்ளக் கிளர்ச்சிகளையும் அடியோடு அழித்துவிட முடியாது. அப்படி முயலும்போதுதான் மறைமனக் கோளாறுகள் பல உண்டாகின்றன என்று கூறுகிறார்கள். ஆனால், இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளையும் இயல் பூக்கங்களையும் வேறு நல்ல வகையில் திருப்பிவிட்டு உயர்மடைமாற்றம் செய்யலாம். காம இச்சையை மாற்ற முயலும் ஒருவன் அவன் பக்தனாக இருந்தால் அதைக் கடவுளிடத்தே உயர்ந்த பக்தியாக மாறச் செய்கிறான்; அல்லது பிராணிகளிடத்தே அளவு கடந்த அன்பாக மாற்றி அவற்றின் சேவையிலே ஈடுபடுகிறான். அவன் கலைஞனாக இருந்தால் அழகிய கலைப்படைப்பின் மூலம் அதை மாற்றுகிறான்.
இச்சைகள் நிறைவேறாத காலத்தில் இப்படிப்பட்ட மடைமாற்றமும் இல்லாவிட்டால்தான் மனக் கோளாறுகள் ஏற்பட அவை காரணமாகின்றன.
மறிவினையாக மனிதன் சில செயல்களைப் புரிகிறான். மறிவினை (Reflex action) என்பது ஒரு புதிய சொல். ஆனால் அதைப் புரிந்துகொள்வது எளிது. ரெயிலில் பயணம் செய்யும்போது கரித்தூளொன்று கண்ணிலே விழுகிறது. கண் உடனே மூடிக்கொள்கிறது; கண்ணிர் மளமளவென்று வருகிறது; அப்படி வந்து கண்ணுக்கு ஏற்பட்டுள்ள தொந்தரவைத் தவிர்க்க முயல்கிறது. கண் மூடுவதும், கண்ணீர் பெருகுவதும் நாம் நினைத்துப் பார்த்துச் செய்த செயல்கள் அல்ல. அவை தாமாகவே நிகழ்கின்றன. அப்படிப்பட்ட செயல்களுக்குத்தான் மறிவினைகள் என்று பெயர். தும்முதல், குறட்டை விடுதல் போன்ற செயல்களெல்லாம் மறிவினைகளே.
இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும் மனிதன் பல செயல்களில் ஈடுபடுகின்றான். அறிவைக்கொண்டு எண்ணித் துணிந்து பல செயல்கள் புரிகின்றான். பழக்கத்தின் வலிமையால் சில செயல்களைச் சிந்தனையின் துண்டுதலில்லாது இயல்பாகவே செய்யவும் கற்றுக்கொள்ளுகிறான். "காலையில் படுக்கையிலிருந்து எழுந்தது முதல் இரவில் படுக்கப்போகும் வரை செய்யும் பல செயல்கள் பழக்கத்தின் பயனாக இயல்பாகவே நடைபெறுகின்றன. உண்பது, ஆடை அணிவது, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது எல்லாம் பல நாட்களில் ஏற்பட்ட பழக்கத்தினால் மனத்தின் தூண்டுதலில்லாமல் ஒழுங்காக அமைகின்றன” என்று வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞர் கூறுகிறார்.
பழக்கத்தினால் செய்யும் வினைக்கும் மறிவினைக்கும் வேறுபாடு உண்டு. பழக்கத்தினால் செய்யும் வினையை முதலில் தொடங்கும்போது மனத்தின் தூண்டுதலால் அதன் துணிவுப்படி செய்தோம். பிறகு பல தடவை அவ்வாறே எண்ணிச் செய்ததால் அது இயல்பான பழக்கமாக நாளடைவில் ஆகிவிடுகிறது. அந்த நிலையில் மனத்தின் தூண்டுதல் தேவையில்லையென்றே கூறலாம். இவ்வாறு பல எளிய செயல்களைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்துவிடுவதால் மனத்திற்கு வேறு உயர்ந்த செயல்களைப் பற்றி எண்ணித் துணிய ஒழிவும் ஆற்றலும் கிடைக்கும்.
பழக்கத்தின் வலிமையாலே இயல்பாகவே பல செயல்களைச் செய்துவிடலாம் என்பதனால் பழக்கத்தை உண்டுபண்ணிக் கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். நல்ல பழக்கங்களைத் தொடக்கத்திலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் நமது பழக்கங்களே நமக்குத் தீமையாக முடிந்துவிடும். ஆகவே, மனிதன் இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும், பழக்கத்தாலும், எண்ணித் துணிவதாலும் மிகப் பல செயல்களைப் புரிகிறான் என்று ஏற்படுகிறது. மறிவினையாகவும் சிலவற்றைச் செய்கிறான். சில செயல்கள் பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே அமைந்துவிடுகின்றன. ஓடும்போது கால் இடறி ஒருவன் கீழே விழுகிறான். அவனுடைய மார்புக்கூடோ, தலையோ தரையில் மோதாதபடி கை முதலில் தரையில் ஊன்றித் தடுத்துக்கொள்ளுகிறது. கையைத் தரையில் ஊன்றி மற்ற உறுப்புக்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கையை நாம் ஊன்றுவதில்லை. இளம் வயதிலிருந்து ஏற்பட்ட பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே இது நடைபெறுகிறது. இதை ‘அரை மறிவினை’ என்று சிலர் சொல்வார்கள்.
மேலே கூறியவற்றிலிருந்து மனிதனுடைய செயல்களுக்கு அவனுடைய மனம், எந்த அளவுக்குக் காரணமாக இருக்கிறதென்று தெரிகிறது. மறிவினைச் செயல்களைக்கூட மனத்தின் சிந்தனை வலிமையால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். மனத்தின் வலிமையால் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். இயல்பூக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் உயர்மடைமாற்றம் பெற்றுச் சிறப்பாக அமையுமாறு செய்யலாம். அவ்வாறு செய்வதால் மனிதனுடைய வாழ்க்கை உயர்வடைகின்றது.

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...