இரண்டடுக்கு மாடி வீடு ஒன்று. தரை மட்டத்திலிருக்கிறது ஓரடுக்கு. மற்றொன்று
தரை மட்டத்திற்குக் கீழே பூமிக்குள் மறைந்திருக்கிறது. மேலேயுள்ள மாடியில் வசிப்பவர்கள்
பொதுவாகப் பண்புள்ள பொறுக்கி எடுத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். கீழ்ப் பகுதியிலே கூட்டம்
அதிகம். அதிலுள்ளவர் அனைவரும் காட்டுமிராண்டிகள்; சுயநலக்காரர்கள்; தங்கள் சுகமே பெரிதென
மதிப்பவர்கள்; பிறரைப் பற்றிய கவலையே இல்லாதவர்கள்; மானம் மரியாதை என்ற பேச்செல்லாம்
அவர்களுக்குப் பொருளற்றது. ஆனால் அவர்கள் வலிமைக்கும் வேகத்திற்கும் பேர் போனவர்கள்:
அவர்கள் திடீரென்று மேல் மாடிக்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள்.
இப்படிப்பட்ட ஒரு வீட்டைப் போலத்தான் நமது மனம் இருக்கிறதென்று சிக்மண்ட் பிராய்டு
போன்ற உளவியலறிஞர்கள் கருதுகிறார்கள். மனத்தின் ஒரு பெரும் பகுதி மறைந்திருக்கிறதாம்.
அதில் பதுங்கிக்கொண்டிருக்கிற ஆசைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் திடீரென்று மேலே கிளம்பி
ஆர்ப்பாட்டம் செய்யுமாம். இவைகளெல்லாம் கட்டுக்கடங்காமல் மேல் வருவதைத் தடுப்பதற்குப்
பாராக்காரனைப்போல் ஒரு சக்தி இருக்கிறதாம்.
மேலே சொன்னவாறு மறைந்திருக்கும் மனப் பகுதியைத்தான் மறை மனம், நனவிலி மனம்
(Unconscious Mind) என்கிறார்கள். மறை மனம் என்பது தனியானதொன்று அல்ல என்பதை உணர வேண்டும்.
மனத்தில் மறைந்து நிற்கும் பகுதிதான் அது. கடலின் விரிந்த மேற்பரப்பை மனம் என்று சொன்னால்
அப்பரப்பின் கீழ் ஆழ்ந்து மறைந்து நிற்கும் நீர்ப்பரப்பை மறை மனம் எனலாம். இரண்டும்
வேறல்ல: ஒன்றேதான்.
கடலின் ஆழத்திலுள்ள தண்ணிர் சதா மேலே வந்து மேற்பரப்பின் வெப்பத்தை மாற்றுகிறது.
அது போலவே மறை மனமும் நமது எண்ணம், செய்கை முதலியவைகளை மாற்ற முயலுகிறது.
மறை மன ஆராய்ச்சியைக் கொண்டு ஒருவனுடைய நடத்தைக்குக் காரணம் கண்டுபிடிக்கிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் அடக்கி வைக்கப்பட்ட பல ஆசைகளும் உணர்ச்சிகளும் மறை மனத்தில் பதிந்து
பிற்காலத்தில் பல வகையான செய்கைகளுக்குக் காரணமாகின்றன. அவைகளே ஒருவனுடைய தன்மையையும்
அமைக்கின்றன. ஆதலினாலேதான் மறை மனத்தைப் பற்றி முதன் முதலில் விரிவான ஆராய்ச்சி செய்த
சிக்மண்ட் பிராய்டு என்ற வியன்னா நகரத்து உளவியலறிஞர் குழந்தைப் பருவத்திலேயே ஒருவனுடைய
பிற்கால வாழ்க்கை அமைப்பு நிருணயமாகி விடுகிறதென்று சொல்லுகிறார்.
மனப்போக்கு விருப்பம் போல மாறிமாறி அமைவதொன்றல்ல. அது பழைய உணர்ச்சிகளையும்
அனுபவங்களேயும் இரு கரைகளாக உடைய ஒடை போன்றது. அவற்றிற்கு அடங்கித்தான் அது பொதுவாகச்
செல்லுகின்றது. மனத்தின் இரு கூறுகளான வெளி மனமும் மறை மனமும் ஒன்றையொன்று வாழ்க்கை
முழுதும் பாதிக்கின்றன. அதன் பயனக ஒருவனுடைய நடத்தையும் பண்பும் அமைகின்றன.
மறை மனத்தில் மனித இனத்தின் அனுபவத்தால் வந்த சில உணர்ச்சிகளும் தனிமனிதனுடைய
அனுபவத்தால் வந்த சில உணர்ச்சிகளும் இருப்பதாக டாக்டர் யுங் என்ற புகழ்பெற்ற உளவியலறிஞர்
கருதுகிறார். முதல் வகையில் இயல்பூக்கங்களும் மனித இனத்துக்கே பொதுவான ஆசைகளும் அடங்கி
இருக்கின்றன. விலங்கு முதலிய பிறவிகளுக்கும் பொதுவானவை சிலவும் உண்டு. காதல் உணர்ச்சி
இயல்பாக உள்ளது. அதுபோலவே அச்ச உணர்ச்சியும். இவையெல்லாம் பொதுவாக எல்லாருக்கும் ஏற்பட்டவை.
இந்த இயல்பூக்கங்களைப் பற்றி வேறு பகுதியில் தனியே ஆராய்வோம்.
இவற்றுடன் பிறப்பிலிருந்து ஏற்பட்ட அனுபவங்களும் உணர்ச்சிகளும் மறை மனத்தில்
நின்று ஒவ்வொரு மனிதனையும் தனித்தனிப் பண்புடையனாக அமைக்கின்றது. அவ்வுணர்ச்சிகளைப்
பற்றி இன்று நமக்கு நினைவு இராது. என்றாலும் அவையே நம்மை ஆட்டி வைக்கின்றன. நாம் பல
பல எண்ணுகிறோம்; ஆசைப்படுகிறோம். ஆனால் அவற்றையெல்லாம் செயலில் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறதில்லை.
சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய ஆற்றல் இராது. சிலவற்றை நிறைவேற்ற சமூகம் இடம் கொடுக்காது.
சமூக விதிகள் ஒரு பக்கம்; நீதி நெறிகள் ஒரு பக்கம்; மதம் ஒரு பக்கம் - இவையனைத்தும்
சேர்ந்து நமது ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள இடம் தருவதில்லை. அதனால் பல எண்ணங்களையும்
ஆசைகளையும் நாம் கைவிட வேண்டியிருக்கிறது. சிலவற்றை அடக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படி அடக்கப்பட்ட எண்ணங்களும் ஆசைகளும் மறை மனத்தில் பதிந்து வெவ்வேறு வகைகளில்
நமக்கே தெரியாமல் வெளியாகின்றன. விநோதமாக நடந்து கொள்ளுதல், பெயர்களையும் ஊர்களையும்
மறந்துவிடுதல், காரணமில்லாமல் அச்சமடைதல் முதலானவைகள் இதனால் ஏற்படுகின்றன.
பிறருடைய குற்றங்களையே எப்பொழுதும் பேசுவது சிலருடைய இயல்பாக இருக்கின்றது.
சிலர் மற்றவர்கள் சாதித்த நல்ல செயல்கள் அவ்வளவு பாராட்டிற்கு உரியனவல்ல என்று பேசுவார்கள்.
சிலர் தாம் மேற்கொண்ட பணிகள் நிறைவேறாதபோது பிறர் மேல் பழி சுமத்துவார்கள். இவைகளெல்லாம்
மறை மனக் கோளாறுகள்.
சிலரிடம் ஏதாவது ஒருவகைக் குறைபாடிருக்கலாம். உடல் தோற்றம், அறிவுத் திறமை,
ஒழுக்கம் இவை போன்றவற்றில் குறையுள்ளவர்கள் சமூக சேவை போன்ற ஏதாவது ஒரு துறையில் ஈடுபட்டு
அதில் உயர்வடைய முயல்வார்கள். காதல் வாழ்க்கை கை கூடாத பலர் இலக்கியம், ஒவியம், இசை,
விஞ்ஞானம், மதம் முதலிய துறைகளில் சிறந்தோங்கியிருக்கிறார்களென்று சிக்மண்ட் பிராய்டு
எடுத்துக் காண்பிக்கிறார்.
தானே பெரியவன் என்று நிலைநாட்ட வேண்டும் என ஒவ்வொருவனுக்கும் ஆசையுண்டாகிறது.
ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் பலருடைய மனத்தில் அடங்கிக் கிடக்கிறது. மறை மனத்தில் அதனால்
பல கோளாறுகள் உண்டாகின்றன. பொறாமை, கொடுமை உணர்வு, தூற்றுதல், வீணாகச் சண்டையிடல்,
சிடுசிடுப்பு முதலியவை இதன் விளைவாகப் பிறக்கின்றன.
நன்கு படிக்காத மாணவனுக்குத் தேர்வு நாளன்று கொடிய தலைவலி வந்துவிடுகிறது. பொய்த்
தலைவலியல்ல; உண்மையாகவே தலைவலி; அம்மாணவனுக்கே அதன் காரணம் தெரியாது.
மேற்கூறியவையெல்லாம் அந்தப் பொல்லாத மறை மனத்தின் வேலை. இதை நன்கறிந்து கொண்டால்
அதனால் பெரிய நன்மையுண்டாகும், ஆசைகளை அடக்கி நசுக்க முடியாமல் அவற்றை உயர் மடை மாற்றம்
செய்துவிட்டோமானால் அப்பொழுது இவை போன்ற விரும்பத்தகாத கோளாறுகள் ஏற்படா. ஆசைகள் எல்லாவற்றையும்
அடைய முடியாது. சிலவற்றை அடைய முயல்வதும் சமூகத்திற்குத் தீங்காக முடியலாம். ஆதலால்
அவைகளை வேறு வழியில் திருப்பித் தனக்கும் சமூகத்திற்கும் நன்மையாகச் செய்துகொள்வதே
அறிவுடைமையாகும். இவ்வாறு உணர்ச்சிகளை வேறு நல்ல வழியில் திருப்புவதற்குத்தான் உயர்
மடை மாற்றம் செய்தல் என்று பெயர்.
இதற்கு மறை மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் அறிவும் பெரிதும் உதவி புரிகின்றன.
மறை மனத்தைப் பற்றி மாறுபட்ட பல கருத்துகளிருக்கின்றன. அவைகளை அடுத்த பகுதியில் கவனிப்போம்.
Comments
Post a Comment