மனம் மிகப் பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டாக அதன் மாயச் செய்கை ஒன்றை இங்குக் கூற விரும்புகிறேன். ஒருவனுக்கு ஏதாவது ஒன்றின்மேல் விருப்பம் இருக்கும். ஆனால் அவன் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதைப் பிறர் உணர்ந்தால் அவனைப் பற்றிக் குறைவாக எண்ணுவார்கள். சமூகம் அவனைப் பழிக்கும். இது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அந்த ஆசை மட்டும் விடாது. அந்த நிலையிலே அவன் தன்னை அறியாமலேயே தனது செய்கையைப் பிறர் ஆமோதிக்க வேண்டுமென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு காரணம் கற்பிக்கத் தொடங்குவான். அவனுடைய மனம் இந்த வேலையைச் செய்கிறது. அவன் தெரிந்தே காரணம் கண்டுபிடிக்கலாம். அல்லது அவனறியாமலேயே இந்தக் காரணம் கண்டுபிடிக்கும் வேலை நடக்கும். அவனுக்கே இந்த மர்மம் தெரியாது. மனம் தந்திரமாக இதைச் செய்துவிடும். அவனும் அது சரியான காரணந்தான் என்றும், அதனாலேயே அதை விரும்புவதாகவும் நிச்சயமாக நம்புவான்.
மது அருந்தும் பழக்கமுள்ள ஒருவனை எனக்குத் தெரியும். அவன் கள் குடிப்பதற்குத் தனக்குள்ள ஒரு நோய்தான் காரணம் என்று பிறர் அறியும்படி கூறுவான். கள்ளைக் குடிக்காவிட்டால் வயிற்றுவலி நீங்குவதில்லையாம். எத்தனையோ மருந்துகளையெல்லாம் சாப்பிட்டும் இந்த நோய் குணமடையவில்லை. இறுதியாக இந்த மருந்துதான் குணம் கொடுத்ததாம். கள்ளைக் குடித்துக்கொண்டிருந்தால் வயிற்று வலியே அவனுக்கு வருவதில்லை.
குடிகாரனைச் சமூகம் தாழ்வாக மதிக்கும் என்று அவன் அறிந்திருக்கிறான். இருந்தாலும் கள்ளின் மேலுள்ள ஆசை மட்டும் அவனை விடுவதாகக் காணோம். அதனால் அவனுடைய மனம் இது போன்ற ஒரு காரணத்தை அவனறியாமலேயே கற்பித்துக் கொடுத்திருக்கிறது. அந்தக் காரணம் முற்றிலும் சரியென்று அவனே நம்புகிறான்.
இவ்வாறு நிகழ்வதில் அவன் தன் காரணத்தைச் சரியானதென்று நம்புவதோடு இன்னும் ஒரு ஆச்சரியமென்னவென்றால் உடல் நிலையும் பல சமயங்களில் அதற்கேற்றவாறு அமைந்துவிடுகிறது. கள் குடிக்காவிட்டால் வயிற்றுவலி உண்மையாகவே அவனுக்கு வந்துவிடுகிறது.
ஒரு சங்கீத வித்வான் தமது இசையரங்கிற்குக் கூட்டம் வராததற்குக் கீழ்வருமாறு காரணம் சொன்னார். “இன்றைக்குக் குதிரைப் பந்தயமல்லவா? அதனால் எல்லாரும் அங்கே போயிருப்பார்கள்” என்றார் அவர். உண்மையில் அவருடைய இசையரங்கு மக்களுக்குப் பிடிக்கவில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியும். அதை மறைப்பதற்காக அவர் தெரிந்தே இந்தக் காரணத்தைக் கற்பித்திருக்கிறார்.
இது போன்று அறிந்தோ அறியாமலோ காரணம் கற்பிக்கும் செயலுக்கு அறிவுப் பொருத்தந் தேடல் (Rationalisation) என்று பெயர். ஆனால் மேலே கூறியது போல அறிவுப் பொருந்தந் தேடல் என்பது அவ்வளவு எளிமையானதுமல்ல. அது இன்னும் சிக்கலானது. மனத்திலே ஆழ்ந்து பதிந்து கிடக்கும் ஏதோ ஒரு உணர்ச்சியாலும் இது ஏற்படலாம். வீட்டின் உட்புறச் சுவரில் ஒட்டுவதற்காக ஒருத்தி சிவப்பு நிறக் காகிதம் வாங்க விரும்பியதை அவள் கணவன் தடை செய்தானாம், “சிவப்பு நிறமான சுவர்க் காகிதம் கண்ணுக்குத் தொந்தரவு கொடுக்கிறது” என்று அவன் காரணம் கூறினான். அவன் கூறிய காரணத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தபோது அவன் சிவப்பு நிறத்தை வெறுத்ததற்கு உண்மையான காரணம் தெரிந்தது. சிறு வயதிலே அவன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு சமயம் தண்டனை பெறுவதற்காகத் தலைமையாசிரியரின் அறைக்குச் செல்லவேண்டியிருந்தது. அப்போது அந்த அறைக்குச் சிவப்பு நிறச் சுவர்க் காகிதம் ஒட்டியிருந்தது. அந்த நிறம் அவன் சிறு வயதிலே பெற்ற தண்டனையின் வேதனை உணர்ச்சியை மேலோங்கித் தோன்றும்படி செய்ததே அவன் அதை வெறுத்ததற்கு உண்மையான காரணம் என்றும், கண்ணுக்குத் தொந்தரவு கொடுக்கின்றது என்பது அறிவுப் பொருத்தந் தேடல் என்றும் பிராய்டு என்ற உளவியலறிஞர் கூறுகிறார்.
இந்த உணர்ச்சி இதுவரையில் எங்கிருந்தது? அவனுக்கு இதைப் பற்றி நல்ல நினைவுகூட இல்லையே? அவ்வாறிருக்க அந்த உணர்ச்சி எங்கே பதுங்கிக் கிடந்தது? இப்பொழுது அது எப்படி மேலே வந்தது? இவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முதலில் மனத்தின் அமைப்பைப் பற்றி இன்னும் சற்று விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
அறிவுப் பொருத்தந் தேடுவதிலே மற்றொரு வகையுமுண்டு.
அண்ணாமலை கணக்குத் தேர்விலே வெற்றி பெறவில்லை. “ஏண்டா இப்படி ஆயிற்று?” என்று கேட்டால், "அது என் குற்றமல்ல. கணக்காசிரியர் சரியாகக் கற்றுக்கொடுக்கவில்லை” என்று அவன் பதில் சொல்லுகிறான். தான் சொல்லுவது சரியான காரணம் என்று கூட அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான்.
எனக்குத் தெரிந்த இளங்கவிஞர் ஒருவர் தமது பாடல்களைப் பத்திரிகையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு அடிக்கடி ஒரு காரணம் சொல்லுவார். “இந்த ஆசிரியர்களுக்கு உண்மையான கவிதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளத் தெரியவே தெரியாது. எல்லாரும் சுவை உணர்ச்சியே இல்லாதவர்கள்” என்று அவர் சினம் பொங்கப் பேசுவார்.
இவ்வாறு குற்றத்தைப் பிறர்மேல் ஏற்றிச் சொல்லுவதற்கு உளவியலிலே விட்சேபம் என்று பெயர் வழங்குகிறது. விட்சேபத்திற்கும் அறிவுப் பொருத்தம் தேடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல சமயங்களிலே இரண்டையும் பிரித்துப் பார்ப்பதுகூட இயலாமற்போகும்.
இந்த இரண்டு தன்மைகளுக்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். தன்னைப்பற்றிப் பிறர் இழிவாகக் கருதக்கூடாது என்ற எண்ணமே இங்கே வேலை செய்கிறது. மனத்தின் மாயச் செயல்களில் இதுவும் ஒன்று. ஆதலால் அந்த மனத்தைப் பற்றி இன்னும் சற்று விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதன் மாயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். இதை அடுத்த பகுதியில் காண்போம்.

Comments
Post a Comment