Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மனமே பொய்யா? | பெ. தூரன்


நுணுகி ஆராய்கின்றபோதுதான் பல ஐயங்கள் பிறக்கின்றன. மேற்போக்காகப் பார்க்கின்றபோது எளிதாகத் தோன்றியவை ஆழ்ந்து நோக்கும்போது மயக்கத்தைத் தருகின்றன; பலவகையான முரண்பட்ட கருத்துகளுக்குக் காரணமாகின்றன. மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இதே தொல்லைதான். மனம் என்பது என்ன என்று ஆராயப் புகுந்த சிலர் மனம் என்பதே இல்லை என்று முடிவு கட்டியுள்ளார்கள். இவர்கள் கூறுவதை ஒத்துக்கொள்ள முடியாது என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
நடத்தைக் கொள்கையர் கூறுவதுபோலப் புலன்களின் வழியாக மூளைக்குச் சென்ற புலன் உணர்வு (Sensation) களுக்குத் தக்கவாறு செயல் நிகழ்கின்றதென்றும் அச்செயலுக்குக் காரணமாக மனம் என்பதொன்று தேவையில்லை என்றும் கொள்வதிலேயும் பல ஐயங்கள் கிளம்புகின்றன. புலனுணர்வானது நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றது; அதற்குப் பொருத்தமான செயலுணர்வு வேறு சில நரம்புகளின் வழியாக உறுப்புகளுக்குச் செல்கின்றது. புலன் உணர்வைக்கொண்டு செல்லும் நரம்புகளுக்கும் செயல் உணர்வைக்கொண்டு செல்லும் நரம்புகளுக்குமிடையே தொடர்பை மூளையானது எந்திரம்போல உண்டாக்குகிறது என்று சொல்லும்போது எல்லாம் எளிதாகத்தான் காண்கிறது. இதைச் செய்ய மனமே தேவையில்லையென்றும் தோன்றுகிறது. ஆனால் இந்த ஆராய்ச்சி அவ்வளவு எளிதானதல்ல. மனத்தை அவ்வளவு எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. புலன் உணர்வால் மட்டும் செயல் நிகழ்கிறதென்றால் புலனுணர்விற்குக் காரணமாக ஏதாவதொன்று முன்னாலிருக்க வேண்டும். எதிர்காலத்திலே தோன்றக்கூடிய ஒன்று இன்று புலன் உணர்விற்குக் காரணமாக இருக்க முடியாது. எதிரில் ஒரு பழம் இருந்தால் அதைப் பற்றிய உணர்வு கண்களின் வழியாக மூளைக்குச் செல்லும். மூளையின் செய்கையால் அப்பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற செயல் உணர்வு கைகளுக்கு வரும். அதனால், பழத்தை எடுத்துக்கொள்ளும் செயல் நிகழும். மெய்தான். ஆனால் பழம் எதிரிலே இல்லாவிட்டால் அந்தச் செயல் நிகழ முடியாது.
உயிர்ப் பிராணிகள் இதுபோன்ற புலன் உணர்வின் விளைவாகவே செயல் புரிகிறதில்லை. பின்னால் ஏற்படப்போகும் ஒரு நிலைமையை எண்ணிப் பார்த்தும் அவைகள் செயல் புரிகின்றன. இனப் பெருக்கத்தை எடுத்துக்கொள்வோம். முட்டை இடுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே காக்கைகள் கூடு கட்டத் தொடங்குகின்றன. குயில்கள் கூடு கட்டாவிடினும், தாமிட்ட முட்டைகளைத் தந்திரமாகக் காக்கைக் கூடுகளிலே சேர்க்கின்றன. இதுபோன்ற செய்கைகள் எல்லாம் புலன் உணர்வால் ஏற்பட்டவையல்ல. இவை இயல்பூக்கமாகச் (Instinct) செய்தவையாகும்.
எதிர் காலத்தில் விளைவனவற்றை எண்ணிப் பார்த்து மனிதன் பல செயல்களைப் புரிகிறான், அவன் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து பட்டம் பெற முயல்கிறான். அப்படிப் பட்டம் பெறுவதால் விளையப் போகும் நன்மையை எண்ணியே அவன் பெரு முயற்சி எடுத்துக்கொள்ளுகிறான். பின்னால் வரப்போவதை முன்னலேயே எதிர்பார்க்கும் தன்மையானது புலன் உணர்வால் ஏற்படும் செயலாகாது. அவ்வாறு எதிர் பார்க்கக்கூடிய திறமைக்கு மனமே காரணமாக இருக்க வேண்டுமென்று ஏற்படுகிறது.
இனிமேல் வரப்போவதை எதிர்பார்த்துச் செயல் புரிவது போலவே இறந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு செயல் புரிவதும் மனத்தின் தன்மையாகும். மனம் என்பதொன்றில்லா விட்டால் நினைவு ஆற்றல் எவ்வாறு உண்டாகிறதென்பதை எளிதாக விளக்க முடியாது. நடத்தைக் கொள்கையர் அதற்கும் ஒரு வகையான விளக்கம் கூறுகிறார்கள். ஆனால், அது முற்றிலும் பொருத்தமானதாகத் தோன்றவில்லை.
திடீரென்று ஒரு புலி எதிர்ப்பட்டால் அச்சமெனும் உள்ளக் கிளர்ச்சி (Emotion) உண்டாகிறது. அந்த உள்ளக் கிளர்ச்சிக்கு, எதிரே தோன்றும் புலியே காரணம். நடத்தைக் கொள்கையர் கொள்கைப்படி மனமென்பதொன்றில்லாமலேயே இதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அச்சக் கிளர்ச்சிக்குக் காரணமாக எதிரிலே ஒன்றுமில்லாதபோதும் பல சமயங்களில் அச்சம் உண்டாகிறது. சிறந்த பண்டிதர்கள் அடங்கிய சபையிலே அடுத்த வாரம் நான் பேச ஏற்பாடாகியுள்ளது என்று வைத்துக்கொள்வோம்; எனக்கு இப்பொழுதே அச்சம் உண்டாகிறது. கவலை பிறக்கிறது. அந்தச் சபையிலே பண்டிதர்களில்லாமல் இளம் மாணவர்கள் மட்டும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். எனக்கு அச்சக் கிளர்ச்சியே தோன்றுவதில்லை. மகிழ்ச்சியே பிறக்கிறது. பின்னும் வரப்போகும் இந்த நிலைமை இப்பொழுதே எனக்கு அச்சத் தையோ மகிழ்ச்சியையோ அளிக்கின்றது. மனம் என்பதொன்றில்லாவிட்டால் இது இயலாதென்று நிச்சயமாகக் கூறலாம்.
மெக்டூகல் (McDougall) என்ற உளவியலறிஞர் மனம் என்பதொன்றுண்டு என்பதை விளக்க ஒரு அழகான சான்று காட்டுகிறார்: ஒருவருக்கு, ‘உமது மகன் இறந்துவிட்டான்' என்று தந்தி வருகிறது. உடனே அவர் மூர்ச்சித்து விழுகிறார். பிறகு ஒருவாறு தன் உணர்வு பெற்று எழுந்திருந்தாலும் அவருடைய பிற்கால வாழ்க்கையே மாறுபட்டுவிடுகிறது. ஆனால் அதே வேளையில் அருகிலிருந்து அந்தத் தந்தியைப் படித்த மற்றொருவருக்கு இவ்வித மாறுதல்கள் ஏற்படுவதில்லை. முன்னவரிடம் சிறிது பரிவு காட்டுவதோடு அவர் உள்ளக் கிளர்ச்சி நின்றுவிடுகிறது. ஒரே தந்தி வேறுவேறான உள்ளக் கிளர்ச்சிக்குக் காரணமாக இருக்க வேண்டுமானால் அத்தந்தியில் கண்டுள்ள சொற்களில் பொருளை வேறுவேறாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆற்றல் இருக்கவேண்டும். அந்த ஆற்றலுக்கு நிலைக்களனாக இருப்பதுதான் மனம்.
எதிரிலே ஒரு திரையும் பல வண்ணங்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவைகள் ஒரு வகையான உணர்ச்சியை நமக்குத் தருகின்றன. ஆனால் திரையிலே வண்ணங்களை ஏற்றவாறு தீட்டிவிட்ட பிறகு வண்ணங்கள் என்றும் திரை என்றும் தனித்தனி உணர்ச்சி மறைந்து ஒரு அழகிய நங்கையின் உருவம் தென்படுகிறது. அவளுடைய உணர்ச்சிகளும் தோன்றுகின்றன.
முன்பு கண்ட வண்ணங்களே அந்த ஒவியத்தில் இருக்கின்றன. இவ்வாறு வண்ணங்களை ஒருங்கு சேர்த்து ஒரே பொருளாகப் பார்க்கும் ஆற்றல் நமக்கிருக்கின்றது. அந்த ஆற்றலைப் பற்றி எண்ணும் பொழுது மனம் என்பதொன்று இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
மேலே கூறியவற்றிலிருந்து உடலும் மூளையும் அல்லாமல் சூக்குமமாக மனம் ஒன்று இருக்கிறதென்று தெளிவாகும். மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். விமானத்தின் சாரதி எவ்வாறு அதன் எந்திரங்களைத் தன் விருப்பப்படி இயக்குவானோ அது போலவே உடலிலுள்ள உறுப்புகளைப் பெரியதோர் அளவிற்கு மனம் இயக்குகின்றது. மனம் வேகம் நிறைந்தது; ஒன்றாக இணைத்து நோக்கவல்லது எதிரே உள்ள நிலைமையால் ஏற்பட்ட உணர்விற்கேற்பச் செயல் புரிவதோடு எதிர் காலத்தையும் இறந்த காலத்தையும் எண்ணிச் செயல் புரியக்கூடியது. மனம் கற்பனை செய்யும் ஆற்றலும் வாய்ந்தது. இம்மனமே மனிதனுக்குத் தனிச் சிறப்பை அளிக்கின்றது.

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...