Skip to main content

அடிமை வாழ்வு - மயிலை சீனி. வேங்கடசாமி


அடிமை வாழ்க்கை இரண்டு விதம். ஒன்று தனிப்பட்ட மனிதன், தனிப்பட்ட மற்றொருவனுக்கு அடிமைப்படுவது, மற்றொன்று, ஒரு அரசாட்சிக்கு மற்றொரு நாடு அடிமைப் படுவது. இந்தக் காலத்தில் மனிதனுக்கு மனிதன் அடிமைப் படுவது சட்டப்படி செல்லாது. ஆனால், ஒரு அன்னிய ஆட்சியின் கீழ் இன்னொரு நாடு அரசியல் அடிமையாக இருப்பதை இன்றும் காண்கிறோம். சமீப காலத்தில் பல நாடுகள், குறிப்பாகக் கிழக்கு தேசத்து நாடுகள் அயல் நாட்டு ஆட்சியினின்று விடுதலை பெற்றுள்ளன. அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல நாடுகள், இப்போது அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார அடிமை நாடுகளாகிக் கொண்டு வருகின்றன. அதாவது, அரசியல் விடுதலை பெற்றுப் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் இங்கு எழுதப் புகுந்தது அரசியல் அடிமைத்தனத்தைப் பற்றியும் அல்ல, பொருளாதார அடிமைத்தனத்தைப் பற்றியும், அல்ல. தனிமனிதன் தனிமனிதனுக்கு ஆட்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்த பழஞ்செய்தியைப் பற்றித்தான் இங்கு நாம் ஆராய்வது.

எகிப்து, கிரேக்கம், உரோமாபுரி முதலிய பழைய நாகரிக நாடுகளில் அடிமைகள் இருந்தார்கள் என்பதைச் சரித்திரத்தில் படிக்கிறோம். இடைக்காலத்திலும் உலகம் முழுவதிலும் அடிமைகள் இருந்ததையும், ஆடு மாடுகளைப் போல் மனிதர்கள் விற்கப்பட்டதையும் பற்றிப் படிக்கிறோம். ஆனால் பாரத தேசத்திலும் தமிழ்நாட்டிலும் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பதே நம்மவரில் பெரும்பாலருக்குத் தெரியாது. பாரத தேசத்தில் ஆதிகாலம் முதல் அடிமைகளே கிடையாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பலர் இருக்கிறார்கள். ஏன்? இந்திய சரித்திரம் எழுதியவர்கள்கூட, இந்தியாவில் பண்டைக் காலத்தில் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பது பற்றி எழுதவே இல்லை.

பண்டைக் காலத்தில் பாரத நாட்டிலும் தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தனர். மனிதர் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். அடிமைகளுக்குப் பிறந்த சந்ததிகளும் அடிமைகளாகவே வாழ்ந்தனர், அடிமைகளை யுடையவர்கள், ஆடு மாடுகளை விற்பதுபோல, தங்களிடம் மிருந்த அடிமைகளை விலைக்கு விற்றனர்; ஆடு மாடுகளைப் போலவே அடிமைக் கூட்டமும் இருந்தது என்று கூறினால், பலருக்குப் புதுமையாக இருக்கும், சிலர் நம்பவும் மாட்டார் கள். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தார் களா? 'இது என்ன புதுமை!' என்று வாசகர்கள் வியப்படை வார்கள்.

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலும் ஆயிரக்கணக்கான மனித அடிமைகள் வாழ்ந்து வந்தார்கள். செல்வம் உள்ளவர் அக்காலத்தில் காசு கொடுத்து ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினார்கள். அடிமைகள் வேண்டாத போது அவர்களைக் காசுக்கு விற்றார்கள். சமீப காலத்தில், உலகம் முழுவதும் மனித அடிமை கூடாது என்று சட்டம் செய்யப்பட்ட பிறகு, ஏனைய நாடுகளில் அடிமைத்தன்மை விலக்கப்பட்டது போலவே, தமிழ்நாட்டிலும் அடிமை முறை விலக்கப்பட்டது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலத்தில் அடிமைகள் இருந்தார்கள் என்பதற்குச் சாசனச் சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன. ஆனால் இந்தியச் சரித்திரத்திலும் தமிழ்நாட்டுச் சரித்திரத்திலும் மனித அடிமைகளைப் பற்றிய செய்தி எழுதப்படவில்லை. இந்நாட்டில், மக்கள் சமூகத்தில் நடைமுறையில் இருந்த அடிமைத்தனத்தைப் பற்றிய செய்தி இந்தியச் சரித்திரத்திலும், தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் ஏன் இடம்பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் ஆட்சியில் திருவாவடுதுறைக் கோவிலுக்கு ஒரு பெண் மகள் அடிமையாக விற்கப்பட்டாள் என்னும் செய்தியை அக்கோவிலில் உள்ள ஒரு சாசனம் கூறுகிறது.

ஜெயங்கொண்ட சோழவள நாட்டில், ஆக்கூர் நாட்டு கலைச்செங்காடு என்னும் ஊரில் உள்ள திருவளம்பூர் உடையார் கோவிலுக்கு எட்டு ஆட்கள் அடிமையாக விற்கப்பட்டனர். இவர்களை விற்றவன் பெயர் கவகாசி கலையன் குமரன் ஆன தம்பிரான் தோழன் என்பது. இச்செய்தி மேலப் பெரம்பலூர் தக்ஷிணபுரீஸ்வரர் கோவில் சாசனத்தில் காணப்படுகிறது.

திருச்செங்காட்டங்குடி கோவில் சாசனம் இராஜராஜன் - 2 உடைய 13 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது, நான்கு பெண்கள் அக்கோவிலுக்குத் தேவரடியாராக 700 காசுக்கு விற்கப். பட்டனர் என்று கூறுகிறது.

திருவாலங்காடு வீரட்டானேசுவரர் கோவில் சாசனம், அக்கோவிலில் அடிமை ஊழியர்கள் பற்றிக் கூறுகிறது. இவ்வடிமைகளில் சிலர் வயிராதராயராலும் அவர் மனைவி யாராலும் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டவர். வேறு சில அடிமைகள் காசு கொடுத்து வாங்கப்பட்டவர்.

திருச்சி மாவட்டம் திருச்சி தாலுகா திருப்பலத்துறை தாருகவனேசுவரர் கோவில் சாசனம் சக ஆண்டு 1326இல் எழுதப்பட்டது. கி.பி. 1374இல் எழுதப்பட்டது. மழவதரையர் என்பவர் தன்னிடமுள்ள அடிமைகளைப் பிரீதிதானமாகக் கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. இவருக்கு உள்ள நிலபுலங்களையும் வீடுமனைகளையும் பிரீதிதானமாகக் கொடுத்த இவர், தமது அடிமைகளையும் தானமாகக் கொடுத்தார். அந்த அடிமைகளின் பெயர்களும் கூறப்படு கின்றன. அப்பெயர்களாவன: தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம் பிள்ளை மகன் தாயினும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள், பிறவி, அழகியாள், இவள் மகள் நம்பாள், இவன் தம்பி வளத்தான், இவன் தம்பி தாழி, இவன் தம்பி வளத்தான், இவன் தம்பி ஆண்டி . பிறவி முதல் ஆண்டி வரையில் உள்ள ஏழு பேரையும், மழவதரையர், கம்பண்ண உடையார் காரியப்பேர் சந்தரசன் என்பவரிட மிருந்து விலைக்கு வாங்கினார். மற்றவர்கள், இவரிடம் முன்னமே அடிமைகளாக இருந்தவர்.

புதுக்கோட்டை திருமய்யம் தாலுகா திருமய்யம் சத்திய மூர்த்தி கோவில் சாசனம் பராக்கிரம பாண்டிய தேவர் என்னும் அரசனுடைய 7ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஒரு பிரபு தன் மகனுக்குக் காணி மனை அடிமை கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. "சீராள தேவன் முனையதரையன் மக்கள் நாயனாரேன், என் மகன் சீராள தேவர்க்கு நான் குடுத்த காணியாட்சியும் மனையும் அடிமையும் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது" என்று இந்தச் சாசனம் துவங்குகிறது. பிறகு காணி மனைகளைக் குறிப்பிடுகிறது; அடிமைகளின் பெயர் களையும் கூறுகிறது. அப்பெயர்களாவன: தேவி, அவள் மகள் சீராள், இவள் தம்பி மக்கனாயன், இவனுடைய சிறிய தாய் ஆவுடையாள், இவள் தம்பி சீராளதேவன், இவள் மருமகள் சீராள், பெரியநாச்சி மகன் திருமய்ய மலையாளன், சிவத்த மக்கள் நாயகன் ஆகப் பேர் எட்டு. "வளத்தி மகள் மன்றி, இவள் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகன் பொன்னன், விளத்தி மகன் வில்லி இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சியும் மனையும் மற்றும் எப்பேர்ப் பட்ட சமுத்த விருத்திகளும் தானாதான விக்கிரயங்களுக்கு உரித்தாவதாக” என்று முடிகிறது இந்தச் சாசனம்.

"புத்த ஜாதகக் கதைகளில் அடிமைகள் விற்கப்பட்டதும் வாங்கப்பட்டதும் ஆன செய்திகள் கூறப்படுகின்றன.

நமது நாட்டு அடிமை வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதினால் அது ஒரு பெரிய புத்தகமாகும். சிலப்பதி காரத்திலும் தொல்காப்பியத்திலும்கூட அடிமைகளைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அடிமை முறை, தமிழர் சமுதாயத்தில் மிகப் பழைய வழக்கமாகக் காணப்படுகிறது. இது பற்றிப் பல்கலைக்கழக மாணவர் ஆராய்ச்சி செய்யலா மல்லவா?

-

நண்பன், மலர் 8, செப்டம்பர் 1958

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...