சென்னை மாநகரம் தொண்டை நாட்டில் உள்ளது. இந்நகரம் ஏற்பட்டுச் சுமார் 300 ஆண்டுகள் ஆகின்றன. இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்றான புலியூர்க் கோட்டத்தில் சென்னை நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தைத் தெலுங்கர்களில் சிலர், தங்களுடையது என்று வரலாறு உணராமல், விபரம் அறியாமல் கூறுவது பொருத்த மற்ற, உண்மைக்கு மாறான செய்தியாகும்.
விசயநகர அரசு, முகம்மதியரால் தோல்வியுற்றுச் சிதைந்து போயிற்று. சிதைந்து போன விசயநகர அரசன் வழிவந்தவன் சந்திரகிரி அரசன், அக்காலத்தில் (17ஆம் நூற்றாண்டில்) நாடெங்கும் கொள்ளையும் குழப்பமுமாக இருந்தபடியால், எந்தெந்த நாடு யார்யாருக்குரியதென்று சொல்ல முடியாமல், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்னும் நிலையில் இருந்தது. அந்தக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த டே என்னும் ஆங்கிலேயர் 1639இல் சந்திரகிரி அரசனிடமிருந்து சென்னையில் கோட்டையுள்ள இடத்தை மாத்திரம் வாடகைக்கு வாங்கினார். அக்காலத்தில், சென்னை சந்திரகிரி அரசனுக்குச் சொந்தம் என்றே வைத்துக்கொண்டாலும், பிற்காலத்தில் அது வேற்றரசருக்கு உரியதாயிற்று என்னும் செய்தியை வரலாறு கூறுகிறது.
1646இல் சந்திரகிரி அரசன், முகம்மதியரால் தாக்கப் பட்டுச் சந்திரகிரியைவிட்டு மைசூருக்கு ஓடி ஒளிந்தான். அவனுடைய அரசும் நாடும் முகம்மதியரால் பிடிக்கப்பட்டு முகம்மதியரின் ஆட்சிக்கு வந்துவிட்டன. அதாவது, கோல் கொண்டா அரசன் சந்திரகிரி அரசனைத் துரத்திவிட்டுச் சந்திரகிரி இராச்சியத்தைச் சென்னையுட்படப் பிடித்துக் கொண்டான். ஆகவே, 1670இல், கிழக்கிந்தியக் கம்பெனியார் தங்கள் செயின்ட் சார்ச் கோட்டையையும், சென்னை நகரத்தையும் கோல்கொண்டா அரசனிடம் இருந்து மீண்டும் வாடகைக்குப் பெற்றனர். இந்த வாடகை உடன்படிக்கைப்படி, கோல்கொண்டா (முகம்மதிய) அரசனுக்குக் கம்பெனியார் ஆண்டு ஒன்றுக்கு 1200 வராகன் வாடகை கொடுக்க ஒப்புக்கொண்டனர். இந்த உடன்படிக்கையை முன்னின்று செய்துகொடுத்தவர் நவாப் நெக்நம் கான் (Nabob Neknam Khan) என்பவர்.
ஆகவே, வரலாறு அறியாத தெலுங்கரில் சிலர் 'மதராஸ் மனதே' என்று கூச்சல் போடுவதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா? அறிவு இருக்கிறதா? 1692இல் எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டைகளை கம்பெனியார் முகம்மதியர் இடத்தில் இருந்து பெற்றுக்கொண்டு சென்னையுடன் சேர்த்தார்கள். அசித் கான் (Assid Khan), நவாப் சுல்பிகார் கான் (Nabob Zulfikar Khan) ஆகிய இருவர்களிடமிருந்து இந்தப் பகுதிகளை வாங்கினார்கள்.
நவாப்பின் சந்ததியார் இன்றும் (சென்னை நகரத்துக்கும் கர்நாடகத்துக்கும் சொந்தக்காரராக இருந்தபடியால்) பென்ஷன் பெற்று வருகிறார்கள். உண்மை இப்படியிருக்க, சுயநலம் கொண்ட இரண்டொரு ஆந்திரர் தந்நலம் கருதி, 'மதராஸ் மனதே' என்று சொல்வது பொருளற்ற கேலிக் கூத்தாகும்.
இவர்கள் முகம்மதியர்களான கர்நாடக நவாபுகளைத் தெலுங்கர் என்று கருதுகிறார்களா? தெலுங்கரும் முகம்மதி யரும் ஓர் இனம்தானா? சந்திரகிரி அரசர் வழிமுறையும் கர்னாடக நவாபு வழிமுறையும் ஒன்றுதான் என்று இவர்கள் ஒப்புக்கொள்வார்களா? அது உண்மையா?
ஆசை வெட்கம் அறியாது என்கிற பழமொழிப்படி வரலாற்றைப் புரட்டிப் பாராமல் வீண் புரளி செய்வது அறிவுடைமையாகாது.
இராசராசன் போன்ற சோழ அரசர்கள் ஆந்திரம் உட்பட கலிங்க நாட்டை வென்று அரசாண்டார்கள். ஆகையால், இப்போது ஆந்திர நாடும் கலிங்க தேசமும் தமிழர் களுக்குரியன என்று கூறினால், அது எவ்வளவு நகைப்பிற் கிடமாக இருக்குமோ அப்படித்தான், தெலுங்கர் சென்னை தெலுங்கருக்குரியது என்று கூறுவதும் நகைப்பிற்கிடமா யிருக்கிறது.
-
செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 23, பால் 2, 1948
Comments
Post a Comment