Skip to main content

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி


இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம்.

களிமண் சுவடிகள்

சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப காலத்தில் பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்தக் களிமண் சுவடிகள் மேல்நாட்டுக் காட்சிச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

பேபரைஸ் புத்தகம்

பண்டைக் காலத்திலே, நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் எகிப்தியர் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் கண்ட முடிவு. அக்காலத்து எகிப்தியர்கள் எழுது கருவியாகப் பயன்படுத்திய பொருள் பேபரைஸ் என்பது. பேபரைஸ் என்னும் இச்சொல்தான் இப்போதும் 'பேபர்' என்று காகிதத்தாளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், எகிப்தியர் கையாண்ட பேபரைஸ் வேறு; இப்போதைய பேபர் வேறு. பேபரைஸ் என்பது எகிப்து தேசத்துச் சதுப்பு நிலங்களிலும், தண்ணீர்த் தேக்கமுள்ள இடங்களிலும் வளர்ந்த ஒருவகைக் கோரைச் செடியின் பெயர். இந்தக் கோரை, பத்து அல்லது பதினைந்து அடி உயரம் வளரும். ஒவ்வொரு தாளும் ஓர் ஆளின் கைப் பருமன் அளவு இருக்கும். இக்கோரைத்தாள்களை அறுத்து வந்து, பட்டையை உரித்து ஒரே அளவாக நறுக்கிப் பதப்படுத்தி, வெயிலில் வைத்து உலர்த்துவார்கள். காகிதம் போன்று இருந்த இக்கருவிக்குப் பேபரைஸ் என்னும் அக்கோரையின் பெயரே வாய்த்தது.

இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பேபரைஸ் தாள்களை ஒன்றோடொன்று ஒட்டிச் சேர்த்து நீண்ட சுருளையாகச் செய்வார்கள். பெரிய சுருளில் 20 தாள்கள் ஒட்டப்பட்டிருக்கும். பேபரைஸ் தாள்கள் பற்பல அளவுகளில் அக்காலத்துக் கடைகளில் விற்கப்பட்டன. அவை இரண்டு அங்குல அகலம் முதலாகப் பதினைந்து அங்குல அகலம் வரையில் இருந்தன.

இந்தப் பேபரைஸ் தாள்களில், எழுதுவதற்கு ஒரு வகைப் பேனா பயன்பட்டது. இப்பேனா நாணற் செடிகளின் தண்டினால் செய்யப்பட்டது. நாணற் குழாய்களைச் சுமார் 6 அங்குல நீளமுள்ள துண்டுகளாக வெட்டி, அதன் ஒரு முனையைக் கூர்மையாகச் சீவிக்கூரின் நடுவைச் சிறிது பிளந்துவிட்டால், அது நேர்த்தியான பேனாவாக அமையும். இந்தப் பேனாக்களினால் கறுத்த மை கொண்டு பேபரைஸ் தாள்களில் பண்டைக் காலத்து எகிப்தியர் எழுத்து வேலைகளைச் செய்துவந்தார்கள். இலக்கியம், இலக்கணம், காவியம், கணக்கு, கடிதம் முதலிய எல்லாம் பேபரைஸ் தாளிலேதான் எழுதப்பட்டன.

எகிப்தியர் கொண்டிருந்த இந்த வழக்கத்தையே, அந்நாட்டுக்கு அடுத்திருந்த தேசத்தவரும் கைக்கொண்டனர். எகிப்து தேசத்துக்கு அண்மையிலிருந்த கிரேக்கரும் (யவனர்), பினீஷியரும், உரோமரும், எபிரேயரும், அர்மீனியரும், அராபியரும் எகிப்தியர் வழங்கிய பேபரைஸ் தாள்களையே தமது எழுதுகருவியாகக் கொண்டனர். இக்கருவி பாலஸ்தீனத்தில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் உபயோகத்திலிருந்து வந்தது. கிரேக்கர்கள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இதை உபயோகித்து வந்தனர். உரோமர்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பேபரைஸைப் பயன்படுத்தினர். இந்நாடுகளில், கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையில் பேபரைஸ் வழக்காற்றில் இருந்துவந்தது.

எழுதுவோர் ஓரிடத்தில் அமர்ந்து, பேபரைஸ் சுருளையை வலது பக்கம் வைத்துக்கொண்டு, இடது கையினால், பிரிக்கப்பட்ட தாளைப் பிடித்துக்கொள்வார்கள். விரிந்த தாள் மடியில் படிந்திருக்கும். அதன்மேல், வலது கையினால், விரிந்த பகுதியில் நாணற் பேனாவினால் மை தொட்டு எழுதுவார்கள். ஒரு பத்தி எழுதியானவுடன், எழுதப்பட்ட பகுதியை இடது கையினால் சுருட்டிப் பிடித்துக்கொண்டு, அடுத்த பத்தியை எழுதுவார்கள். இவ்வாறு சுருளை முழுவதும் பத்திபத்தியாக எழுதப்படும். முழுவதும் எழுதியானவுடன், நன்றாகச் சுருட்டிக் கயிற்றினால் கட்டிவைப்பார்கள். இவ்வாறு எழுதப்பட்ட பேபரைஸ் ஏட்டுச் சுரளைகளில் சில இப்போதும் மேல்நாட்டுக் காட்சிச்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.

பைபிள்

கிரேக்க தேசத்தார், பேபரைஸ் சுருளைகளை பிப்லியன் (Biblion) என்று தமது மொழியில் வழங்கினர். பிப்லியன் என்னும் சொல்லுக்குச் சுவடி (புத்தகம்) என்பது பொருள். உரோமர்கள் தமது லத்தீன் மொழியில் பைபிள் (Bible) என்று வழங்கினர். பைபிள் என்றாலும் சுவடி என்பதுதான் பொருள். எனவே, நூல் அல்லது புத்தகம் என்னும் பொருள் உடைய பைபிள் என்னும் சொல், முற்காலத்தில் பொதுவாகப் புத்தகங்களுக்கு வழங்கப்பட்டு, இக்காலத்தில் கிறித்துவ வேதப்புத்தகத்துக்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது என்பது விளங்குகிறது.

பிப்லியன், பைபிள் என்னுஞ் சொற்கள் பிப்லாஸ் என்னும் சொல்லிலிருந்து உண்டானவை. அக்காலத்தில் கப்பல் வாணிகத்தில் பேர் போன பினீஷியரின் முக்கியத் துறைமுகப் பட்டினம், மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையிலிருந்த பிப்லாஸ் பட்டினம், துறைமுகத்திலிருந்து பேபரைஸ் தாள்களைக் கொண்டுபோய்க், கிரேக்க உரோம நாடுகளில் விற்றார்கள். கிரேக்கரும் உரோமரும் பிப்லாஸிலிருந்து வந்த பேபரைஸுக்குப் பிப்லியன் என்றும், பைபிள் என்றும் பெயரிட்டார்கள்.

கோடக்ஸ் புத்தகம்

தொடக்கத்திலே, நெடுங்காலம் வரையில், பேபரைஸ் நீண்ட சுருளைகளாக அமைந்திருந்தன. பேபரைஸ் சுருளையை முழுவதும் பிரித்துப் பார்த்தால் அன்றி, குறிப்பிட்ட ஒரு பகுதியை வாசிக்க இயலாது. இந்தச் சங்கடத்தைப் போக்குவதற்குப் பிற்காலத்திலே, புத்தக அமைப்பில் பேபரைஸ் தாள்களை அமைத்தனர். ஒரே அளவாக உள்ள பேபரைஸ் தாள்களை இரண்டிரண்டாக மடித்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி 'பைண்ட்' செய்தனர், அதாவது, தற்காலத்திய புத்தக உருவத்தில் அமைத்தனர். இவ்வாறு அமைக்கப்பட்ட பேபரைஸ் புத்தகங்களை எளிதாகப் புரட்டித் தமக்கு வேண்டிய பகுதியை எடுத்து வாசிக்கலாம். இத்தகைய சுவடிகளுக்கு கோடக்ஸ் (Codex) என்பது பெயர். கோடக்ஸ் அல்லது கெளடக்ஸ் என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்குப் பொருள் மரப்பலகை என்பது. மெல்லிய பலகைகளாக அறுக்கப்பட்ட சிறு பலகைகளை நன்றாக இழைத்து, அதன் மேல் மெழுகைப் பூசி, அதில் கூரிய ஆணியால் கடிதம் எழுதுவது உரோமரது பண்டைக் காலத்து வழக்கம். இவ்வாறு அமைக்கப்பட்ட பலகைகளைக் கோடக்ஸ் என்று வழங்கினர். பிறகு, புத்தக வடிவில் அமைக்கப்பட்ட பேபரைஸ் சுவடிகளுக்கும் கோடக்ஸ் என்னும் பெயர் வழங்கப்பட்டது.

தோல் புத்தகம்

எகிப்து நாடு வெப்பமுள்ள நாடு. அதைவிட வெப்பம் குறைந்த கிரேக்கம், இத்தாலி முதலிய தேசங்களில் பேபரைஸ் விரைவில் கெட்டுப்போனபடியால், அந்நாட்டார் வேறு எழுதுகருவிகளைத் தேடலாயினார். மிருகங்களின் தோல்கள் பேபரைஸுக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டன. எகிப்து தவிர ஏனைய மத்தியதரைக் கடல் ஓரத்திலுள்ள நாடுகள் தொன்றுதொட்டுத் தோலை எழுது கருவியாக வழங்கிவந்தன. பிறகு, பேபரைஸ் உபயோகப்படுத்தப்பட்டது. பேபரைஸ் விரைவில் கெட்டுப்போவதைக் கண்ட பிறகு, இவர்கள் தோலையே மீண்டும் எழுதுகருவியாகப் பயன்படுத்தினர். எகிப்திலுங்கூடத் தோல் எழுதுகருவியாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும், பேபரைஸ் அடியோடு வழக்கொழிந்துவிடவில்லை. இரண்டும் கையாளப்பட்டுவந்தன.

சாதாரண மிருகங்களின் தோலைவிட, வெள்ளாட்டின் அல்லது செம்மறியாட்டின் தோலை நன்கு பதப்படுத்தி எழுது கருவியாகப் பயன்படுத்தினார்கள். இதற்கு மெம்ரெனா (Membrana) என்று பெயர் வழங்கினர். ஆட்டுத்தோலைச் சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து மயிர்களைக் களைந்துவிட்டு, மறுபுறத்தில் உள்ள சதைப்பற்றுகளையும் நீக்கி, மரச்சட்டத்தின் மேல் உலரவைத்து, சீமைச் சுண்ணத்தினாலும் ஒருவகைக் கல்லினாலும் தேய்த்து மெருகு ஏறச் செய்வார்கள். இது நேர்த்தியான எழுத்து கருவியாகவும், இருபுறத்திலும் எழுதக்கூடிய தாகவும் இருந்தது.

இதைவிட நேர்த்தியான எழுதுகருவி , கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்டது. இது வெல்லம் (Vellum) என்று பெயர் பெற்றது. இது ஆட்டுத் தோலினால் செய்யப்பட்ட எழுதுகருவியைவிட மிக நேர்த்தியாகவும், அழகும் மெருகும் உள்ளதாகவும் இருந்தது கன்றுக்குட்டித் தோல் என்னும் பொருளுடைய வெல்லம்' என்னும் லத்தீன் மொழிச் சொல், பிறகு, ஏனைய மிருகங்களின் தோல்களினால் செய்யப்பட்ட எழுதுகருவிகளுக்கும் வழங்கப்பட்டது.

பெர்கமேனா

தோலினால் செய்யப்பட்ட எழுதுகருவிகளுக்கெல்லாம் இன்னொரு பொதுப் பெயரும் வழங்கிவந்தது. அப்பெயர் பெர்கமேனா (Pergarmenia) என்பது. சின்ன ஆசியாவில் பெர்கமம் என்னும் ஒரு நகரம் இருந்தது. இந்த நகரத்தில் ஏராளமான தோலினால் செய்யப்பட்ட எழுத்து கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்கப்பட்டன. பெர்கமம் நகரத்தில் செய்யப்பட்டபடியால், இத்தோற்கருவிகளுக்குப் பெர்கமேனா என்று அந்நகரத்தின் பெயரே வழங்கப்பட்டது, கலிங்க நாட்டிலிருந்து வந்த துணிகளுக்குப் பண்டைக் காலத் தமிழர் கலிங்கம் என்று பெயர் வழங்கியதைப் போல.

பெர்கமேனா என்னும் எழுதுகருவி எப்படி வழக்காற்றில் வந்தது என்பது பற்றி வர்ரோ (Vario) என்பவர் கூறும் கீழ்க்கண்ட செய்தியைப் பிளினி (Pliny) என்னும் யவன ஆசிரியர் தமது இயற்கைச் சாத்திர வரலாறு என்னும் நூலில் குறித்துள்ளார்: 'பெர்கமம் நாட்டு அரசனான யூமேனஸ் இரண்டாமவன் (Eumenes II, B.C. 197 - 159) என்பவருக்கும், எகிப்து நாட்டு மன்னரான டாலமி (Ptolemy) என்பவருக்கும் தமது நாட்டுப் புத்தகசாலைகளைப் பற்றிப் போட்டி ஏற்பட்டது. பெர்கமம் நாட்டு நூல்நிலையம், அலெக்ஸாந்திரியா நகரத்து நூல் நிலையத்தைவிடச் சிறப்படைந்து விடுமோ என்று ஐயுற்ற டாலமி அரசன், தனது எகிப்து தேசத்திலிருந்து பேபரைஸ் எழுதுகருவிகளைப் பெர்கமம் நாட்டுக்கு அனுப்பக்கூடாதென்று உத்தரவிட்டான். இதனால், பெர்கமம் நாட்டில் அதிகமான நூல்கள் எழுதப்படுவது தடைப்படும் என்பது அவன் கருத்து. பெர்கமம் நாட்டாருக்கு பேபரைஸ் கிடைக்காமற் போகவே, அந்நாட்டார் மெம்ரேனா என்னும் தோற்கருவிகளைக் கையாண்டனர்.

இவர் கூறும் இச்செய்தி உண்மையா அல்லது கட்டுக் கதையா என்பது தெரியவில்லை. ஆனால், தோலினால் எழுதுகருவிகளை உண்டாக்கி வெளிநாடுகளிலும் விற்பனை செய்து பேர் பெற்ற இடம் பெர்கமம் என்னும் நகரம் என்பது இதிலிருந்து உறுதிப்படுகிறது.

கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து, தோல் எழுதுகருவி, மெல்ல மெல்ல நாடெங்கும் வழங்கலாயிற்று. பேபரைஸ் உபயோகமும் இருந்துவந்தது. படிப்படியாகத் தோற்கருவிகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தோல் எழுதுகருவிகள் முக்கிய இடம் பெற்றன. சீசரியா (Caesarea) என்னும் இடத்தில் இருந்த ஒரிஜன் (Origen), பாம்பிலஸ் (Pamphilus) என்பவர்கள் அமைத்திருந்த நூல் நிலையங்கள் பாழடைந்து விட்டன. கி.பி. 4ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நூல் நிலையங்களைப் புதுப்பித்துச் செம்மைப்படுத்திய அகசியஸ் யூசொய்யஸ் என்னும் இரண்டு பாதிரிமார்கள், இந்நிலையங் களிலிருந்த சிதைந்துபோன பேபரைஸ் சுவடிகளைத் தோல்களில் எழுதிவைக்கும்படி ஏற்பாடு செய்தார்கள்.

கான்ஸ்டன்டின் என்னும் சக்கரவர்த்தி, தமது கான்ஸ்டான்டி நோபில் என்னும் நகரத்திலிருந்த 50 கிறித்துவக் கோயில்களுக்கு 50 விவிலிய நூல்களை வெல்லம் என்னும் தோல்களில் எழுதிவைக்கும்படி கி.பி. 332 இல் உத்தரவு செய்தார் (இத்தோற் கருவிகள், புத்தக உருவ அமைப்பிலே செய்யப்பட்டன). இத்தகைய சான்றுகளினால் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலே, பேபரைஸ் தாள்களைவிடத் தோற்புத்தகங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரிகின்றது.

பட்டும் மூங்கிலும்

ஆதிகாலத்தில் சீன தேசத்தார் மூங்கிற் பட்டைகளின் மேலே எழுதிவந்தனர். பிறகு, பட்டுத் துணி நெய்யும் தொழில் சீன தேசத்திலே தோன்றிற்று. அப்போது அவர்கள் பட்டுத் துணிகளை எழுதுகருவியாகக் கொண்டனர். துகிலிகையினால் (பிரஷினால்) மையைத் தொட்டு ஓவியம் எழுதுவதுபோல அவர்கள் பட்டுத் துணியிலும் மூங்கிற் பட்டையிலும் எழுதி வந்தார்கள். பிறகு, காகிதம் செய்யும் முறையையும் அவர்களே கண்டுபிடித்தார்கள். அப்போது காகிதத்தில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது. அதனால் காகிதத் தொழிற்சாலைகள் சீன நாட்டில் ஏற்பட்டன.

காகிதத்தில் அச்சடிக்கும் முறையையும் சீனர்களே கண்டுபிடித்தார்கள். ஆனால், தனித்தனி அச்செழுத்துகளை அவர்கள் உண்டாக்கவில்லை. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மரப்பலகையில் எழுத்துகளைச் செதுக்கி அச்சிட்டார்கள். ஆகவே, ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு மரப்பலகை எழுத்துகள் செதுக்கி அச்சிடப்பட்டன.

ஓலைச்சுவடிகள்

எகிப்தியர், கிரேக்கர், உரோமர், அராபியர், யூதர் முதலிய இனத்தார் பண்டைக் காலத்தில் பேபரைஸ் தாளையும் விலங்குகளின் தோல்களையும் எழுதுகருவியாக வழங்கிவந்த காலத்தில், நமது நாட்டார் பனையோலையினால் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகளில் நூல்களை எழுதிவந்தார்கள். பனையோலை களை ஒரே அளவாக நறுக்கி ஒன்றாகச் சேர்த்து இரண்டு மரச்சட்டங்களை இருபுறங்களிலும் நீண்ட பக்கமாக அமைத்து, அவைகளின் ஊடே இரண்டு துளைகளை அமைத்துக் கயிறு கொண்டு சுற்றிக் கட்டிய சுவடிகள் தாம் ஓலைச்சுவடிகள். இப்பனையோலை ஏடுகளில் இரும்பினால் அமைந்த எழுத்தாணி களினால் வரைவார்கள். ஓலைச்சுவடிகளைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்பார்கள் ஆகையால், அதைப் பற்றி அதிகமாக எழுதவேண்டியதில்லை. இத்தகைய ஓலைச்சுவடிகள்தாம் இந்தியா, பர்மா, இலங்கை முதலிய கீழைநாடுகளில் முற்காலத்தில் வழங்கிவந்தன.

குறியீடுகள் முதலியன

பேபரைஸ், தோல், பனையோலை ஆகிய பண்டைக் காலத்து எழுதுகருவிகளில் எழுதப்பட்ட எழுத்துகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறியீடுகளைக் கொண்டிருக்கவில்லை. அன்றியும், சொற்களைத் தனித்தனியே பிரித்தெழுதாமல் ஒரே கோவையாக எழுத்துகள் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதப்பட்ட சுவடிகளைப் படிப்பது கடினமாகவும் வருத்தமாகவும் இருந்தது. பழக்கப்பட்டவர்கள் மட்டும் இவைகளைப் படிக்கமுடியும், பழக்கப்பட்டவர்களுக்கும் வாசகத் தொடரைப் புரிந்து கொள்வது கடினமாய் இருந்தது. மேல் நாட்டார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சொற்களைப் பிரித்து எழுதத் தொடங்கினார்கள். இன்னும் பிற்காலத்தில் புள்ளிகள் முதலிய குறியீடுகளை வழங்கினார்கள். நமது நாட்டு ஓலைச் சுவடிகளில் முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகள் அமைக்கப் படவில்லை.

பேப்பர் கடதாசி வந்த வரலாறு

இப்பொழுது பேபர் என்று வழங்குகிற எழுதுதாகளை முதன்முதல் கண்டுபிடித்தவர் சீன நாட்டுச் சீனர்கள் என்பதை முன்னமே கூறினோம். கந்தைத் துணி, சணல், நார், வைக்கோல், முசுக்கட்டை மரம் முதலிய பொருள்களிலிருந்து காகிதத்தை அவர்கள் செய்து உபயோகப்படுத்தி வந்தார்கள். சீனர் காகிதத்தாளுக்கு என்ன பெயர் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு இப்போது வழங்கப்படுகிற பேபர் என்னும் பெயர், 'பேபரைஸ்' என்னும் எகிப்திய மொழியிலிருந்து வந்தது. சீனர் கடதாசியைக் கி.பி. முதல் நூற்றாண்டில் உண்டாக்கினார்கள். அக்காலத்தில் சீனர் செய்த காகிதத் துண்டுகளில் சில, சீன நாட்டு நெடுஞ்சுவர்களிலிருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டன. அன்றியும், சீன நாட்டிலே, புதைபொருள் ஆராய்ச்சியாளர் பழைய சீன நாட்டுக் காகிதங்களைப் பூமிக்குள்ளிருந்தும் கண்டெடுத்தனர்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் அராபியர் பெருவாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அக்காலத்தில் அராபியர் அகலமான எலும்புகளையும் ஓடுகளையும் எழுது கருவிகளாக உபயோகித்து வந்தனர். அவர்கள் இந்தியா, சீனா முதலிய கீழ்நாடுகளுடன் பெருத்த வாணிபம் செய்து வந்தார்கள். அக்காலத்தில் மத்திய ஆசியாவில் சமர்கண்டு என்னும் இடத்தில் சீனர் காகிதப் பட்டறை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு காகிதம் செய்துவந்தனர். வாணிபத்தின் பொருட்டு அங்குச் சென்ற அராபியர், காகிதம் செய்யும் தொழிலின் இரகசியத்தைக் கி.பி. 650 இல் கண்டு கொண்டனர். பிறகு, தாங்களே காகிதம் செய்யத் தொடங்கினார்கள். இவ்விதமாக அராபியர் காகிதத் தொழிலைச் சீனரிடமிருந்து கற்றுத் தங்கள் நாடுகளில் பரவச் செய்தனர்.

கி.பி. 800இல் பாக்தாத் நகரத்தில் காகிதப் பட்டறை இருந்தது. கி.பி. 900இல் எகிப்து நாட்டில் ஒரு காகிதப் பட்டறை இருந்தது. கி.பி. 1100இல் மொராக்கோ தேசத்தில் காகிதத் தொழிற்சாலை இருந்தது. அராபியர், ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள ஸ்பெயின் தேசத்தையும் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்டார்கள். அக்காலத்தில், அதாவது, கி.பி. 1150இல் ஸ்பெயின் தேசத்திலும் அராபியர் காகிதத் தொழிற்சாலையை ஏற்படுத்தினார்கள். பிறகு, அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாட்டினர் காகிதம் செய்யக் கற்றுக்கொண்டார்கள். இவ்வாறு, கீழ்நாடாகிய சீன தேசத்திலிருந்து காகிதத் தொழில், அராபியர் வழியாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து அராபியர் மூலமாகவே மேல்நாடுகளுக்குச் சென்றது. கடதாசித்தாள், பேபரைஸ், தோல் இவைகளைவிட விலை குறைவாகவும் அதிக வாய்ப்பாகவும் இருந்தபடியால், கடதாசித் தாள்களை மக்கள் நாளுக்கு நாள் அதிகமாகக் கையாளத் தொடங்கினார்கள். ஆகவே, நாளடைவில் பேபரைஸும் தோலும் வழக்கொழிந்துவிட்டன. நமது நாட்டுக்கும் முகம்மதியர்கள்தாம் கடதாசியை முதன்முதல் கொண்டுவந்தனர். கடதாசி வந்த பிறகு ஓலையில் எழுதும் வழக்கம் மறைந்துவிட்டது.

இயந்திரக் காகிதம்

காகிதப் பட்டறையில் கையினாலேயே கடதாசியை அக்காலத்தில் செய்துவந்தார்கள். ஆகவே, அக்கடதாசிகள் தடித்தனவாயும் முரடாயும் இருந்தன. பிறகு, 19 ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே, பிரான்ஸ் தேசத்தில் மெஷின் என்னும் இயந்திரத்தினால் கடதாசித் தாள் செய்யத் தொடங்கினார்கள். இந்த யந்திரம் பிற்காலத்தில் படிப்படியாகச் சீர்திருத்தப்பெற்று, இப்போது புதிதாகப் பல நுட்பமான கருவிகளுடன் அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தக் காகித யந்திரங்களின் மூலமாகப் பல வகையான காகிதங்களை நாம் இன்று பெற்றுக் கொள்ளுகிறோம்.

காகிதத் தொழில் செம்மைப்படுத்தப்பட்டது போலவே நாணற் குழாய்ப் பேனாக்களுக்குப் பதிலாகக் குவில்பேனா என்னும் இறகுப்பேனா வந்து, அதற்குப் பிறகு நிப்பு உள்ள முட்பேனா உண்டாகி, இப்போது பெளண்டன் பேனாவும் வழக்காற்றில் இருந்துவருகிறது.

நாம் இப்போது சாதாரணமாக வழங்கிவருகிற பேபர், பேனாக்களை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் காண்பார்களானால், எவ்வளவு வியப்பும் மகிழ்ச்சியும் அடைவார்கள்!

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 23, பரல் 5, 1948

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...