Skip to main content

உதிரப்பட்டி அல்லது இரத்தக்காணி - மயிலை சீனி. வேங்கடசாமி


பரும் யானையொடு பாஞ்சால ராயனை
வெங்களத் தட்ட வென்றி யிவையென
நெய்த்தோர் பட்டிகை யாக வைத்துப்
பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து.

என்பது பெருங்கதை (வத்தவ காண்டம். கொற்றங் கொண்டது. 10 - 13). நெய்த்தோர்ப் பட்டிகை என்பதற்குக் குறிப்புரை எழுதிய டாக்டர் சாமிநாத ஐயர் அவர்கள், நெய்த்தோர் - இரத்தம், பட்டிகை - பத்திரிகை' என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தொடருக்கு விளக்கம் காண முடியவில்லை. இஃது ஐயரவர்களுடைய குறையன்று. இக்காலத்துப் புலவர்கள் வேறு யார் உரை எழுதினாலும் இவ்வளவுதான் எழுத முடியும். பண்டைக்காலத்து உரையா சிரியர்கள் இத்தொடருக்கு உரை எழுதியிருந்தால் தெளிவான விளக்கவுரை எழுதியிருப்பார்கள். பண்டையுரையாசிரியர் ஒருவரும் இதற்கு உரை எழுதவில்லை.

'நெய்த்தோர்ப் பட்டிகை' என்பது, பண்டைக்காலத்தில் வழக்காற்றில் இருந்து இக்காலத்தில் வழக்கற்றுப்போன ஒரு செய்தியெனத் தெரிகிறது. பண்டைக் காலத்துச் சாசனங்களின் உதவியினாலே, இச்சொற்றொடரின் உண்மைப் பொருள் அறியக்கிடக்கிறது.

உதயணன், பாஞ்சால மன்னனை வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சியினாலே, பத்து ஊர்களை நெய்த்தோர்ப் பட்டிகை யாகக் கொடுத்தான் என்பது மேலே காட்டிய செய்யுளின் கருத்து. நெய்த்தோர் என்பது இரத்தம் அல்லது உதிரம் எனப் பொருள்படும். பட்டிகை என்பதற்குப் பத்திரிகை என்று பொருள் கொள்வதைவிட பட்டி எனப் பொருள் கொள்வது சிறப்புடைத்து. நெய்த்தோர்ப்பட்டி என்று பெருங்கதையில் வழங்கப்பட்டுள்ள இச்சொற்றொடர் சாசனங்களில் உதிரப் பட்டி என்று வழங்கப்பட்டிருக்கிறது. வேறு சாசனங்களில், இரத்தக்காணி என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், நெய்த்தோர்ப்பட்டி, உதிரப்பட்டி, இரத்தக்காணி என்னும் பெயர்கள் ஒரே பொருளைக் குறிக்கின்றன என்பது விளங்குகிறது.

தன் அரசனுடைய வெற்றிக்காகப் போர்க்களம் புகுந்து பகைவருடன் ஆற்றலோடு போர் புரிந்து உதிரத்தைச் சிந்திக் கொற்றத்தை நாட்டிய போர் வீரர்களுக்கு, வெற்றி பெற்ற அரசன் நிலங்களை இனாமாக அளிப்பது வழக்கம். இவ்வாறு தானம் செய்யப்பட்ட நிலத்திற்கு இரத்தக்காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்று பெயர் வழங்கப்பட்டன. சில சமயங்களில், போர் வீரன் உயிர் நீத்தலும் உண்டு. அப்போது அவனது ஆற்றலைப் பாராட்டி, இறந்துபட்ட வீரனுடைய உறவினருக்கு உதிரப்பட்டி வழங்கப்படும். தமிழ்நாட்டு மூவேந்தரும் குறுநில மன்னரும் மறைந்துபோன இக் காலத்திலே, பண்டைய பழக்க வழக்கங்களும் மறைந்து போயின. ஆயினும், பழைய நூல்களிலே அப்பழைய பழக்க வழக்கங்களைக் குறிக்கும் சொற்கள் நின்று நிலவுகின்றன. இக்காலத்து அச்சொற்களுக்குப் பொருள் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. சாசனங்கள், சில சமயங்களில், இவ்விதச் சொற்களுக்குப் பொருள் காண உதவி செய்கின்றன. உதிரப்பட்டியைக் குறிக்கும் சில சாசனங்களைக் கீழே தருகிறேன்.

இராமநாதபுரம் சில்லா, திருப்புத்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ள சுயம்பிரகாசர் கோயில் சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழ தேவருடைய 7 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், சுந்தன் கங்கை கொண்டான் என்னும் பெயருடைய துவராபதி வேளான் என்பவன், தனது வாளிலார் (வாள் வீரர்?) போர்க்களத்தில் இறந்ததற்காக அவ்வீரர்களின் சுற்றத்தார்க்கு உதிரப்பட்டியாக நிலம் கொடுக்க வாக்குறுதி செய்ததைக் கூறுகிறது (47 of 1928).

இராமநாதபுரம் சில்லா, சாத்தூர் தாலூகா, திருத்தங்கல் கிராமத்தில் உள்ள பாறைக்குன்றில் எழுதப்பட்ட சாசனம் (577 of 1922). இதில், வரதுங்கராம தனிப்புலி, கலங்காத கண்ட நாயகரின் வழிவந்த வள்ளி பொம்மன், கலங்காத கண்ட நாயகர் என்பவருக்குத் திருத்தங்கல் கிராமத்தில் இரத்தக்காணி தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இந்தச் சாசனத்தின் பக்கத்தில், ஒரு வீரன் தரையில் நின்றவண்ணம் அருகில் இருக்கும் குதிரையின் தலையை வாளால் வெட்டுவது போன்றும், அக்குதிரையின் மீது ஒருவீரன் அமர்ந்து வாளேந்தியிருப்பது போன்றும், இக்குதிரை வீரனுக்கும் பக்கத்தில் மற்றொரு வீரன் குதிரைமீதமர்ந்து இருப்பது போன்றும் சிற்பம் கற்பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது.

தென் ஆர்க்காடு சில்லா, திருக்கோவலூர் தாலுகா, காடையார் கிராமத்துச் சாசனம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில், நாடியா கவுண்டர் மகன் கலிதீர்த்தான் என்பவன் போர்க்களத்தில் உயிர் நீத்தமைக்காக, ஏரம் நாயகர் என்பவர் நிலம் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது (237 of 1936).

போர்க்களத்தில் பிறருக்காக உயிர் கொடுத்தவருக்கு மட்டும் உதிரப்பட்டி தானம் அளிக்கப்பட்ட போதிலும், போரில் இறக்காமல் தனிப்பட்ட முறையில் பிறருக்காகவோ அல்லது பிறர் தொந்தரவு பொறுக்க முடியாமலோ உயிர் விட்டவர்க்கும் உதிரப்பட்டி வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு உதாரணம்:

தென் ஆர்க்காடு சில்லா, சிதம்பரம் தாலூகா, அரகண்டநல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் சாசனம். இது, பொன்னாண்டை என்னும் பெயருள்ள தேவராட்டியார் மகன் இளவெண்மதி சூடி ஆடினான் என்பவன், கோயில் மண்டபம் கட்டி முற்றுப்பெறும் பொருட்டுத் தன் தலையை அறுத்துக் கொண்டதற்காக 100 குழி நிலம் உதிரப்பட்டியாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறது (197 of 1934-1935).

புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகா காரமங்கலம் அகத்தீசுவரர் கோயில் சாசனம், பாண்டியன் ஸ்ரீ குலசேகர தேவரின் 32 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. மேற்படி கோயில் மண்டபத்தைப் பழுது தீர்த்துக்கொண்டிருந்த கல்தச்சன், அறங்குளவன் என்பவன் பெரிய அடிபட்டுக் காயம் பட்டபடியால், மிழலைக் கூற்றத்து பாம்பாற்று நாட்டுத் தலைவனான தன்ம ஆட்கொண்ட தேவர் என்னும் தன்மராயர் அவனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்தார் என்று இச்சாசனம் கூறுகிறது.

ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ வல்லப தேவருடைய 13 ஆவது ஆண்டுச் சாசனம் (172 of 1935-36) சுந்தர பாண்டிய பட்டன் மனைவி பிறர் கொடுமை தாங்காது நஞ்சுண்டு இறந்தமைக்காக மேற்படி பட்டனுக்கு உதிரப் பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

தஞ்சை சில்லா நன்னிலம் தாலூகா அச்சுதமங்கலம் சோமநாதேசுவரர் கோயில் சாசனம், ராசராச தேவருடைய 20 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது (406 of 1925). இதில், சோமநாத மங்கலம், சோமநாத சதுர்வேதி மங்கலம் என்னும் கிராமங்களுக்கும் சீதக்க மங்கலம் என்னும் கிராமத்துக்கும், முடி கொண்ட சோழப் பேராறு என்னும் ஆற்றின் நீரை நிலங்களுக்குப் பாய்ச்சுவதில் சச்சரவு ஏற்பட்டு அதன் காரணமாக ராசராசப் பேரரையன் என்பவனைத் தவறாகக் கொன்றுவிட்ட குற்றத்திற்காக அவன் மகன் எதிரிலாப் பேரரையனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.

இதுகாறும் எடுத்துக் காட்டிய சாசனச் சான்று களிலிருந்து இரத்தக்காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்பன இன்னதென்பது அறியக்கிடக்கிறது.

-

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 22, பரல் 10, 1948

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...