திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்ற இலங்கை நாட்டுத் திருப்பதிகளுள் திருக்கேதீச்சுரமும் ஒன்று. இலங்கைத் தீவின் மிகப்பழைய துறைமுகப்பட்டினமாகிய மகாதிட்டை என்னும் இடத்தில் இத்திருப்பதி இருக்கிறது. மகாதிட்டை என்பது மாதோட்டம் என்றும் பெயர்பெறும். சிங்கள அரசர் சாசனத்தில் இது மகாவுட்டு என்று கூறப்படுகிறது. இது மகாதிட்டை என்று பெயர் மருவியது போலும். மகாதிட்டை இலங்கையின் மேற்குக் கரையில் மன்னாருக்கு அருகில் இருக்கிறது.
இத்துறைமுகப் பட்டினம், தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்லும் பிரயாணிகள் கரை இறங்கும் துறைமுகப் பட்டினமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இலங்கையின் முதல் அரசனான விஜயன் என்பவன் முதன் முதலாக இலங்கைக்கு வந்தபோது இந்தத் துறை முகத்திலேதான் இறங்கினான். இந்த விஜய அரசன் மணம் செய்து கொண்ட பாண்டிய மன்னன் மகள், இலங்கைக்குச் சென்றபோது இத்துறைமுகத்திலேதான் இறங்கினாள். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கும் சென்ற பிரயாணிகளுக்கு இது வசதியான துறைமுகமாக இருந்தது. இங்குத் தமிழர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையை கி.பி. 352 முதல் 379 வரையில் அரசாண்ட ஸ்ரீமேகவர்ணன் என்னும் அரசன் காலத்திலேயே இங்கு ஒரு இந்து தேவாலயம் இருந்ததென்று தாட்டாவம்சம் என்னும் நூலினால் தெரியவருகிறது. இந்தத் தேவாலயந்தான் திருக் கேத்தீச்சுரம் என்பதில் ஐயமில்லை . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த திருஞானசம்பந்த சுவாமிகள் இத்தலத்தைப் பாடியுள்ளார். திருக்கேத்தீச்சுரம் கடற்கரையை அடுத்துள்ள மாதோட்டம் என்னும் இடத்தில் பாலாவி என்னும் ஆற்றின் கரைமேல் இருக்கிறதென்று அவர் பதிகத்தில் கூறியுள்ளார்.
இராஜராஜ சோழனுடைய உத்தியோகஸ்தனான தாழி குமாரன் என்பவன் இவ்விடத்தில் ராஜராஜேஸ்வரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்றும் சாசனத்தில் தெரியவருகிறது. மாதோட்டம் பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும் (சிங்களவருக்கும் தமிழருக்கும்) புண்ணிய க்ஷேத்திரமாகப் பண்டைக் காலமுதல் இருந்து வருகிறது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த ஐந்தாம் தப்புலன் என்னும் சிங்கள அரசன், ஏறத்தாழ கி.பி. 924-ல் எழுதியுள்ள சாசனம் ஒன்றில், ''மகாவோடி (மகாதிட்டையில் பசுவைக் கொன்றவர் செல்லும் நரகத்திற்குப் போவாராக'' என்று எழுதியுள்ளான். இதனால், இதனைப் பரிசுத்த ஸ்தலமாகப் போற்றி வந்தார்கள் என்பது தெரிகிறது.
லோகோபகாரி, பு 51, இ 36, 20-12-1947
Comments
Post a Comment