Skip to main content

நெய்க் குடத்தில் கை விடுதல் - மயிலை சீனி. வேங்கடசாமி


குமிழி கிளம்பும்படி நன்றாகக் காய்ச்சப்பட்ட நெய்யில் கையை விட்டால் எப்படியிருக்கும்?

இது என்ன முட்டாள்தனமான கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்படிச் செய்வது பண்டைக்கால வழக்கம். பண்டைக் காலத்தில் நமது நாட்டில், காய்ச்சின நெய்க் குடத்தில் கையை விடுவது ஒரு முறையாக (சத்திய சோதனையாக) நடைபெற்றுவந்தது. ஆங்கில அரசாட்சிக்குப் பிறகு அவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. உடன்கட்டை ஏறுதல், நரபலி கொடுத்தல் முதலிய கொடிய வழக்கங்களை ஆங்கில அரசாங்கத்தார் தடுத்துவிட்டது போலவே, நெய், எண்ணெய் இவற்றைக் கொதிக்கவைத்து அதில் கையை இடச் செய்வதையும் அரசாங்கத்தார் தடுத்துவிட்டார்கள். ஒருவன் ஒரு வழக்குத் தொடர்கிறான். அந்த வழக்கில் வாதியாவது, பிரதிவாதியாவது சொல்வது உண்மை , சத்தியம் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கு ஒரு முறையைப் பண்டைக் காலத்தில் வழங்கி வந்தார்கள். அது என்னவென்றால், ஒரு குடத்தில் நெய் அல்லது எண்ணெயை விட்டு அதை நன்றாகக் கொதிக்கும்படி காய்ச்சி அது கொதித்துக் கொண்டிருக்கும் போதே, வழக்கில் சம்பந்தப்பட்ட வாதியை அல்லது பிரதிவாதியை அதில் கை விடச் செய்வதுதான். அவன் சொல்வது சத்தியமாக இருந்தால் அவன் கை சுட்டு வெந்து போகாமலிருக்குமாம்! அவன் சொல்வது பொய்யாக இருந்தால் அவன் கை சுடப்பட்டு வெந்து விடுமாம்! இந்த வழக்கத்துக்குத்தான் நெய்க் குடத்தில் கை விடுதல் என்று சொல்வது.

இன்னொரு முறையும் உண்டு. அதென்னவென்றால் நெய் அல்லது எண்ணெய்க்குப் பதில் ஒரு நல்ல பாம்பைப் பிடித்துக் குடத்தில் அடைத்துக் குடத்தின் வாயைத் துணியால் மூடிக் கட்டி விடுவார்கள். பிறகு, வாதி அல்லது பிரதிவாதியை அக்குடத்தில் கையை விடச் செய்வார்கள். அவன் சொல்வது உண்மையாக இருந்தால் குடத்தில் உள்ள பாம்பு அவனைக் கடிக்காதாம்; பொய்யாக இருந்தால் பாம்பு கடித்து விடுமாம்! இந்த வழக்கம் நமது தென் இந்தியாவில் பண்டைக் காலம் முதல் இன்றைக்குச் சுமார் 150 வருஷங்கள் வரையில் நடைமுறையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதற்கு அத்தாட்சி யாக இலக்கிய ஆதாரமும் சரித்திர ஆதாரமும் உண்டு. அவற்றை இங்கே விளக்குவோம்.

பழமொழி நானூறு என்பது சங்கச் செய்யுளாகிய பதினெண் கீழ்க்கணக்குள் ஒன்று. இந்த நூலில் உள்ள ஒரு செய்யுள், பாம்புக் குடம் அல்லது நெய்க் குடத்துள் கைவிடும் வழக்கத்தைச் சொல்கிறது. அது வருமாறு:

கைவிட்ட ஒண்பொருள் கைவர வில்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயி லன்னாய்!
கடம் பெற்றான் பெற்றான் குடம் (பழமொழி. 119)

இப்பாட்டில் குறிக்கப் பெற்ற குடம் என்பது பாம்புக் குடம் அல்லது நெய்க் குடத்தைக் குறிக்கும். "பாழ்ந்தனிசு வேண்டிப் பாம்புக் குடம் பெற்றான்'' என்பதும் பழந்தமிழ்ப் பழமொழி.

வைணவ சமய ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவராகிய குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் திருவாஞ்சைக்களம் என்னும் நகரத்தில் அரசாண்டிருந்தவர். அவர் சிறந்த வைணவ பக்தர். அவரது அரண்மனையில் ஒருநாள் ஸ்ரீமத் நாராயண மூர்த்தியின் விக்ரகத்துக்கு அபிஷேகம் செய்யும் பொருட்டு அவ்விக்ரகத்தின்மேல் அணியப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆபரணங்களைக் கழற்றிவிட்டு திருமஞ்சனம் செய்த பிறகு மீண்டும் ஆபரணங்களை அணிகிற சமயத்தில் முக்கியமான சில ஆபரணங்கள் காணாமல் போய்விட்டன. அதைப்பற்றி அரண்மனை அதிகாரிகளை விசாரித்தபோது அவர்கள் திருமஞ்சனம் செய்த பட்டர்மீது பழி சுமத்தினார்களாம். வைணவ பக்தராகிய குலசேகராழ்வார் பட்டர்கள் களவு செய்திருக்கமாட்டார்களென்றும், அவர்கள் யோக்கியர் களென்றும் சொல்லி, அதை நிரூபிக்கப் பாம்பு அடைக்கப் பட்ட குடம் ஒன்றைத் தருவித்து சபை முன்பாக அக்குடத்துள் தமது கையை விட்டாராம். பாம்பு அவரைக் கடிக்கவில்லை என்று சரித்திரம் கூறுகிறது. இதிலிருந்து பாம்புக் குடத்தில் கையிடும் வழக்கம் அக்காலத்திலிருந்ததென்பது விளங்கும்.

இந்தச் சரித்திர ஆதாரம் தெய்வகடாக்ஷம் பெற்ற ஆழ்வார்களைப் பற்றியது. ஆகையால் இதை ஒரு ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்று வாசகர்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் இந்தக் குடத்தில் கையிடும் வழக்கம் பண்டைக் காலத்தில் தோட்டி முதல் தொண்டமான் வரையில் எல்லோரி டத்திலும் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இதற்குக் கூழங்கைத்தம்பிரான் சரிதையும் குடகு நாட்டரசன் சரித்திரமும் தக்க சான்றாகும்.

தஞ்சை ஜில்லாவிலுள்ள மடங்கள் ஒன்றில் ஒரு தம்பிரான் இருந்தார். அவர் இலக்கண இலக்கியங்களிலும் சைவ சாஸ்திரங்களிலும் மிக்க வல்லவர். அவர்மீது அம் மடத்தைச் சேர்ந்த மற்றத் தம்பிரான்கள் ஒரு அவதூறான குற்றத்தைச் சுமத்தினார்கள். அவர் தம்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுத்தபோது அவரை எண்ணெய்க் குடத்துள் கைவிட்டுச் சத்தியம் செய்யச் சொன்னார்களாம். அவரும் அதற்குச் சம்மதித்து, கொதிக்கக் காய்ச்சின எண்ணெய்க் குடத்தைக் கொண்டு வரச் செய்து பலர் முன்பாக அக்குடத்துள் கையை விட்டார். சூட்டின் மிகுதியால் கை நன்றாகச் சுட்டு வெந்து போய் விட்டது. அதுமுதல் அந்தக் கை அவருக்கு உபயோகப்படாமலே போய்விட்டது. அதனால் அவருக்குக் கூழங்கைத் தம்பிரான் என்று பெயர் வழங்கப்பட்டது. இவர் யாதொரு குற்றமும் செய்யாமலிருந்தும் தம்மீது அவதூறாக அடாப்பழி சுமத்தப்பட்டதையும், தான் குற்றமற்றவர் என்பதை வெளிப்படுத்தும் பொருட்டு எண்ணெய்க் குடத்தில் கையிட்டு அதனால் கையைக் கூழையாக்கிக் கொண்டதையும் கண்டு மனம் நொந்து இந்த ஊரிலேயே இருக்கக்கூடாது என்று நினைத்து இலங்கைக்குச் சென்று அங்கு யாழ்ப் பாணத்தில் தம் வாழ்நாளைக் கழித்தார்.

வாசகர்களே! இவர் கொதிக்கும் எண்ணெயில் கையில் அது கையைச் சுட்டுவிட்டதாலேயே இவர் குற்றவாளி என்று சொல்லிவிடலாமா? கொதிக்கும் எண்ணெய்க்கு இவர் நல்லவர், இவர் கெட்டவர், இவர் உண்மை சொல்கிறார், இவர் பொய் பேசுகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டா? நல்லவனையும் கெட்டவனையும் அது ஒரு தன்மையாகவே சுட்டுவிடும் குணமுடையதல்லவா? இதை உணராமல் அவர் குற்றஞ் செய்திருப்பதால்தான் எண்ணெய் அவரைச் சுட்டு விட்டது என்று சொல்வது பகுத்தறிவுக்குப் பொருந்துமா? அவர்மேல் குற்றஞ்சாட்டினவர்களும் கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு, கை சுடப்படாமல் இருந்தால் அல்லவோ குற்றஞ் சாட்டினவர் சொல்வது உண்மை என்று ஏற்படும். வாதி, பிரதிவாதி இருவரையும் எண்ணெயில் கையிடச் செய்து யாருடைய கை வெந்து போகாமல் இருக்கிறதோ அவர்கள் சொல்வதுதான் நியாயம் என்று முடிவுகட்ட வேண்டும். அப்படிக்கின்றி ஒரு பக்ஷத்தாரை மட்டும் கையிடச் செய்வது நியாயமாகுமா?

யாழ்ப்பாணஞ் சென்ற கூழங்கைத் தம்பிரானைப் பற்றிச் சிறிது சொல்லிவிட்டு மேலே செல்லுவோம். கூழங்கைத் தம்பிரான் யாழ்ப்பாணஞ் சென்று அங்கு இருபாலை நெல்லையப்ப முதலியார் முதலியவர்களுக்குத் தமிழ் ஆசிரிய ராக அமர்ந்து தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பாடஞ் சொல்லி வந்தார். டச்சு பாஷை, போர்த்துகீசு பாஷைகளையுங் கற்றுத் தேர்ந்தார். யாழ்ப்பாணத்தில் பெருஞ் செல்வராக இருந்த வைத்தியலிங்கச் செட்டியார், பெருங் கல்விமானாய் விளங்கிய பிலிப்பு - தெ - மெல்லோ (Philip De Melho 1723 - 1790) முதலியவர்களின் உற்ற நண்பராக விளங்கினார். பல தனி நிலைச் செய்யுட்களும் சித்திவினாயகர் இரட்டை மணிமாலை முதலிய நூல்களும் இயற்றியிருக்கிறார். யோசேப்புப் புராணம் என்னும் கிறிஸ்து சமய நூல் ஒன்றை இயற்றியதாகவும் கூறுவர். இவர், யாழ்ப்பாணம் ஆங்கிலேயர் கையில் அகப்பட்ட சிறிது காலத்திற்குப் பின் காலமானார்.

சுமார் நூறு வருஷங்களுக்கு முன் மைசூருக்கு அடுத்த குடகு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். இந்த அரசனுடைய தகப்பனார் லிங்கராஜா என்பவர் இறந்து போனதற்குக் காரணம், அரண்மனையில் உத்தியோகஞ் செய்திருந்த பண்டித ராமையா என்பவன் நஞ்சு வைத்ததனால்தான் என்று அவன் மேல் இவ்வரசன் ஐயுறவு கொண்டான். ஆகவே பண்டித் ராமையாவை சபை முன்பாக வரவழைத்து லிங்கராஜா இறந்ததற்குக் காரணங் கேட்டான். பண்டித ராமையா, தான் குற்றமற்றவன் என்றும் தனக்கு ஒன்றும் தெரியாதென்றுஞ் சொல்ல, அந்த அரசன், அப்படியானால் கொதிக்கும் எண்ணெயில் கையிட்டுச் சத்தியஞ் செய்யும்படிச் சொன்னான். அவன் அதற்குச் சம்மதித்து அவ்விதமே கொதிக்கும் எண்ணெயில் கையிட கை வெந்து கொப்புளித்துப் போயிற்று. அப்போது அவன், இது கலிகாலமாகையால் அப்படி வெந்து போயிற்றென்றும் நான் குற்றமற்றவன் என்றும் வாதாடினான். அதை ஒப்புக்கொள்ளாமல் அந்த அரசன் அவனைக் கொலை செய்வித்தான்.

இது போலவே பழுக்கக் காய்ச்சிய இரும்பில் கையை அறைந்து சத்தியம் செய்யும் வழக்கமும் முற்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இது கொடுமையான மூட நம்பிக்கை என்பதில் சற்றும் ஐயமில்லை. தன்னைச் சேர்ந்த பொருள் களைச் சுட்டுச் சாம்பலாக்குவது நெருப்பின் தன்மை. கிரேதாயுகமாயிருந்தாலும், கலியுகமாயிருந்தாலும் இதுவே நெருப்பின் இயல்பாகும். நெருப்பாயிருந்தாலும் கொதிக்கக் காய்ச்சின நெய்யாக இருந்தாலும் அல்லது பழுக்கக் காய்ச்சின இரும்பாயிருந்தாலும் தன் மீது கையிடுபவன் சத்தியவந்தனா அல்லது பொய்யனா என்று எண்ணும் வித்தியாசம் இல்லாமலே இருவரையும் சுட்டுக் கொளுத்தி விடும். இது நெருப்பின் இயற்கைத் தன்மை என்றுணராமல் அதில் கையையிட்டுச் சத்தியம் செய்யச் சொல்வது எவ்வளவு மூடத்தனம்? சத்தியத்தைக் கண்டுபிடிப்பதற்கு வேறு வழி கிடையா? இதுபோன்ற முட்டாள்தனமானதும் கொடுமை யானதுமான பழக்கவழக்கங்கள் நமது நாட்டில் அனேகம் இருந்தன. இப்போது அவை தடுக்கப்பட்டுப்போயின.

இந்த மூடத்தனம் நமது நாட்டில் மட்டிலுமல்ல, வெளிநாட்டிலும் (வேறுருவில்) இருந்ததாக அறிகிறோம். இங்கிலாந்தில் தகராறு ஏற்படும் இரு கட்சியார்களுக்குள் யார் குற்றவாளி என்று பார்ப்பதற்காகச் சண்டைக்கு விடுவது வழக்கம். சண்டையில் எவன் வெற்றி பெறுகிறானோ அவனே நியாயவான் என்று கொள்ளப்பட்டது. இந்தச் சண்டை - நியாயமுறை தனிப்பட்ட இடங்களில் மட்டிலுமல்ல, ஆங்கில நீதிமன்றங்களில் கூட நடைபெற்றதாம். வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தை ஆண்டு வந்த காலத்தில் அவரது நிர்வாக சபையிலிருந்த ஒருவருக்கும் அவருக்கும் தீராப் பகை ஏற்பட்டது. அதனைத் தீர்த்துக் கொள்வதற்காக இறுதியில் இருவரும் சண்டை போட்டார்கள் என்றும் வாரன் ஹேஸ்டிங்ஸ் வெற்றி பெற்றதால் அவர் நீதிவான் என்று கருதப்பட்டதென்றும் கதை.

ஊழியன், மலர் 14, இதழ் 52, 28-06-1935

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...