மாமல்லபுரத்து யானைக் கோயில் |
பாரத நாட்டுக் கோவில்கள்
பாரத நாட்டிலே பழைய காலம் முதல் பலவகையான கோவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தக் கட்டடங்களை நாகரம், திராவிடம், வேசரம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. நாகர அமைப்புக் கோவில்கள் விந்திய மலைக்கு வடக்கேயும், திராவிட அமைப்புக் கோவில்கள் விந்திய மலைக்குத் தெற்கேயும் அமைக்கப்பட்டன என்று சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. வேசர அமைப்புக் கோவில்கள் பாரத நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டன. வேசர அமைப்புக் கட்டடங்களை ஆதிகாலத்தில் பௌத்த மதத்தார் அதிகமாகக் கட்டினார்கள். வேசரக் கட்டடங்களில் சில உட்பிரிவுகளும் உண்டு. ஆனால், பொதுவாகப் பார்க்கும் போது வேசரக் கட்டடங்கள் தரையமைப்பிலும் கட்ட அமைப்பிலும் விமான (கூரை) அமைப்பிலும் வட்ட வடிவம் அல்லது அரைவட்ட வடிவம் உடையவை என்பது தெரியவரும். இவற்றில் சில முழுவட்டமாகவும் சில அரைவட்ட வடிவமாகவும் சில விமானம் மட்டும் வளைந்த (அரைவட்ட) அமைப்புள்ளனவாகவும் இருக்கின்றன. வேசரக் கோவில் கட்டட அமைப்புகளில் யானைக்கோவில் என்றும் கஜபிருஷ்டம் என்றும் கூறப்படுகிற ஒருவகைக் கோவிலைப்பற்றி இங்கு ஆராய்வோம்.
கஜபிருஷ்டக் கோவில்கள்
கஜபிருஷ்டக் கோவில் அமைப்பைச் சேதியகிருஹம் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பிராகிருத மொழியில் இது 'சேதியகர என்று கூறுப்படுகிறது. தமிழில் இது யானைக் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது. சிற்பசாஸ்திர நூல் இந்தக் கட்டடங்களை கஜபிருஷ்டம் என்றும் ஹஸ்தி பிருஷ்டம் என்றும் குஞ்சர பிருஷ்டம் என்றும் கூறுகின்றன. கஜம், ஹஸ்தி, குஞ்சரம் என்னும் சொற்களின் பொருள் யானை என்பது. யானையைப் பக்கங்களிலிருந்தும் பின்புறத்தி லிருந்தும் பார்த்தால் எவ்விதமான தோற்றமாகக் காணப்படுகிறதோ அப்படிப்பட்ட வடிவமுடையது இந்தக் கட்டடங்கள். ஆகவேதான் இக்கட்டடங்களுக்குக் கஜபிருஷ்டக் கோவில், ஹஸ்திபிருஷ்டக் கோவில், குஞ்சரக்கோவில் என்று பெயர்கள் கூறப்படுகின்றன. குஞ்சரக்கோவில் என்பதை மணிமேகலை காவியத்தில் குச்சரக்குடிகை என்று கூறப்படுகிறது. குச்சரம் என்பது குஞ்சரம் என்பதன் வலித்தல் விகாரம். காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தக் கோவிலாகிய சம்பாபதிக் கோவில் இந்த அமைப்பாக இருந்தது. ஆகவே இக்கோவில் குச்சரக்குடிகை என்று பெயர் பெற்றிருந்தது.
தமிழ்நாட்டுக் கோவில் கட்டடங்களின் பெயர்களைக் கூறுகிற அப்பர் (திருநாவுக்கரசு) சுவாமிகள் யானைக் கோவிலை ஆலக்கோவில் என்று கூறுகிறார். அவர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களில் திருத்தாண்டகம் ஒன்றில் இப்பெயரைக் கூறுகிறார்.
தமிழ்நாட்டுக் கோவில் கட்டடங்களின் பெயர்களைக் கூறுகிற அப்பர் (திருநாவுக்கரசு) சுவாமிகள் யானைக் கோவிலை ஆலக்கோவில் என்று கூறுகிறார். அவர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களில் திருத்தாண்டகம் ஒன்றில் இப்பெயரைக் கூறுகிறார்.
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்த்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே.
(திரு அடைவு. திருத்தாண்டகம் 5)
தாழ்த்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே.
(திரு அடைவு. திருத்தாண்டகம் 5)
இதில் ஆலக்கோவில் கூறப்படுவது கண்க.
'ஆலக்கோவில்' என்பதை ஆலமரத்தின் கீழே அமைந்த கோவில் என்று தவறாகச் சிலர் கருதுகிறார்கள். அப்படி யானால், புன்னைமரம், மகிழமரம், வேப்பமரம், அரசமரங் களின் கீழிருக்கும் கோவில்கள் முறையே புன்னைக்கோவில் மகிழக்கோவில், வேப்பங்கோவில், அரசங்கோவில் என்று பெயர்கள் கூறப்படவேண்டுமன்றோ? அவ்வாறு கூறுப்படுவது இல்லையாகையால், ஆலக்கோவில் என்பது யானைக்கோவில் என்பதன் மரூஉ என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஆலக்கோவில் என்பதற்கு ஆலமரத்தின் கீழிருக்கும் கோவில் என்று கூறுவது தவறு. (தொடர்புரை காண்க.)
யானைக்கோவிலை 'ஆனை மாடம்' என்றும் அப்பர் சுவாமிகள் கூறுகிறார். திருக்கடந்தைத் தூங்கானை மாடத் திருப்பதிகம் காண்க (அப்பர் தேவாரம், முதற்றிருமுறை). 'பெண்ணாகடத்துப் பெருந்தூங்கானை மாடத்தை'யும் கூறுகிறார் (அப்பர் தேவாரம், 3 ஆந் திருமுறை, திருவீழி மிழலை 3). திருஞானசம்பந்தரும் 'தூங்கானைமாடம்' திருக் கோவிலைக் கூறுகிறார் (சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை). இவ்வாறு, ஆனைக்கோவில் கட்டடங்கள் தேவாரத்திலும் கூறப்படுகின்றன.
அதன் வளர்ச்சி
யானைக்கோவில் கட்டடங்கள் ஆதிகாலத்தில், அதற்குரிய சாதாரண அமைப்பாகக் கட்டப்பட்டன. பிறகு காலஞ் செல்லச்செல்ல யானைக்கோவில் கட்டட அமைப்பில் சில சிறு அமைப்புகள் தோன்றலாயின. ஆகவே ஆனைக்கோவில் கட்டட வரலாற்றில் மூன்றுவித வளர்ச்சியைக் காண்கிறோம். அவற்றை ஆதிகாலம், இடைக்காலம், பிற்காலம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஆதிகாலம் என்பது ஏறத்தாழ கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலம். இக்காலத்து யானைக்கோவில் கட்டடங்களைப் பௌத்தக் காலத்து யானைக்கோவில் என்று கூறலாம். ஏனென்றால், அக்காலத்தில் பௌத்த மதத்தார்களால் இக்கோவில் கட்டடங்கள் பெரும்பாலும் கட்டப்பட்டன.
இடைக்கால யானைக்கோவில் கட்டடங்கள் ஏறத்தாழக் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையில் அமைக்கப்பட்டவை. இவற்றைப் பல்லவர் காலத்து யானைக்கோவில்கள் என்று கூறலாம். ஏனென்றால், இவை பெரும்பாலும் பல்லவ அரசர் காலத்தில் அமைக்கப்பட்டவை.
பிற்காலத்து யானைக்கோவில்கள் ஏறத்தாழக் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையில் அமைக்கப்பட்டவை. இக்கால யானைக்கோவில்களுக்குச் சோழ பாண்டியர் காலத்து யானைக்கோவில் என்று பெயர் கூறலாம். ஏனென்றால், பிற்காலச் சோழரும் பாண்டியரும் இக்கோவில்களை அமைத்தார்கள். சோழ பாண்டியருக்குப் பிறகு விஜயநகர அரசர் காலத்திலும் சில யானைக்கோவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம்.
இந்த முறைப்படி யானைக்கோவில் கட்டட அமைப்பை யும் அதன் வளர்ச்சியையும் ஆராய்வோம்.
பௌத்தக் காலத்து யானைக்கோவில்கள்
(கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை)
பெளத்தர் தொன்றுதொட்டு சைத்தியாலம் (சைத்தியக்கிருஹம்) என்னும் கோவில்களை அமைத்தார்கள் என்றும் அக்கோவில்கள் கஜபிருஷ்டக்கோவில்கள் என்றும் யானைக் கோவில்கள் என்றும் பெயர்பெற்றன என்றும் கூறினோம். பெளத்தமதம், தென் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இலங்கைத் தீவிலும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவிற்று. எனவே, தமிழ்நாட்டில், பௌத்தக் கால யானைக்கோவில் கட்டடங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் அமைக்கப்பட்டன என்று கொள்ளலாம். பௌத்தக் காலத்து யானைக்கோவில்களை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். அவை: மலைப் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட யானைக்கோவில்கள்; செங்கற் களால் கட்டப்பட்ட யானைக்கோவில்கள் என்பன.
மலைப்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட அக்காலத்து யானைக்கோவில்கள் இன்றும் அழியாமல் நின்று நிலவுகின்றன. அந்தப் பாறைக்கோவில்களைப் பார்த்து அதன் அமைப்பு எப்படியிருந்தன என்பதைத் தெரிந்து கொள்கிறோம். ஆனால், அந்த யானைக்கோவில்களின் உட்புற அமைப்பும் முகப்பு (வாயிற்புற) அமைப்பும் எவ்வாறு இருந்தன என்பது மட்டும் இவைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அக்கோவில்களின் மேற்புற அமைப்பு பாறைக்கோவில்களில் அமைக்கப்படவில்லை. அக்கோவில் களின் மேற்புறங்கள் (விமானங்கள்) பாறையில் அமைக்கப் படாமல், வெறும் பாறையாகவே விடப்பட்டிருக்கிறபடியால், மேற்புற அமைப்பைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
பெளத்தக் காலத்தில் செங்கற்களினால் கட்டப்பட்ட யானைக்கோவில்கள் ஏறக்குறைய எல்லாம் அழிந்துவிட்டன. ஏனென்றால், செங்கற்கட்டடங்கள் நெடுங்காலம் நிற்பது இல்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில், சம்பாபதி என்னும் பௌத்தத் தெய்வத்துக்குக் குச்சரக்குடிகை (குஞ்சரக்குடிகை) என்னும் கோவில் அமைந்திருந்தது என்றும், அது யானைக்கோவில் உருவமாக அமைந்திருந்ததென்று அதன் பெயரிலிருந்து (குச்சரக்குடிகை - குஞ்சரக்குடிகை - யானைக்கோவில்) தெரிகிறது என்றும் இச்செய்தி மணிமேகலை காவியத் திலிருந்து அறியப்படுகிறது என்றும் கூறினோம். அந்தக் கோவில் இப்போது மறைந்து போயிற்று. தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் காலத்து யானைக்கோவில்கள் எல்லாம் செங்கற்களால் கட்டப்பட்டபடியால் ஒன்றைத் தவிர மற்றவை அடியோடு அழிந்துபோயின. ஆனால், ஆந்திர தேசத்தில் கட்டப்பட்ட பௌத்தக் காலத்து யானைக்கோவில்களின் முழு கட்டடங்கள் அழிந்துபோன போதிலும் அவற்றின் அடிப் பகுதிகளாவது இப்போதும் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பெளத்தர் காலத்து யானைக்கோவில் கட்டடங்கள் முழுவதும் அழிந்து போக, ஆந்திரநாட்டுப் பெளத்தக்கால யானைக்கோவில்களில் அடிப்பகுதிகளாவது அழியாமல் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டிலே பக்தி இயக்கம் தோன்றிச் சைவ நாயன் மார்களும் வைணவ ஆழ்வார்களும் வெளிப்பட்டுப் பெளத்த ஜைன மதங்களுடன் சமயப் போர் செய்தார்கள். தமிழ்நாட்டில் சமயப் போர் தொடங்கிய சில நூற்றாண்டுக்குப் பிறகு ஆந்திர நாட்டில் சமயப்போர் ஆரம்பித்தது. ஆகவே, தமிழ்நாட்டில் லிருந்த பௌத்தர் காலத்து யானைக் கோவில் கட்டடங்கள் போற்றுவார் இல்லாமல் விரைவாக அழிந்துவிட்டன. ஆந்திரநாட்டில் பௌத்த மதம் சில நூற்றாண்டுக்குப் பிறகும் நிலைபெற்றிருந்து பிறகு அழிக்கப்பட்டது. ஆகையினால்தான் ஆந்திர நாட்டில் பௌத்தக்கால யானைக்கோவில்களின் சிதைவுகள் இப்போதும் காணப்படுகின்றன.
ஆந்திர நாட்டிலே காடுகளிலும் குன்றுகளிலும் ஆங்காங்கே சிதைந்து அழிந்து கிடக்கிற பௌத்தக் கோவில் களை அரசாங்கத்துப் புதைபொருள் ஆராய்ச்சிக்காரர் (ஆர்க்கியாலஜி இலாகா) கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களுள் நமது ஆராய்ச்சிக்குரிய ஆனைக்கோவில் கட்டடங்களும் காணப்படுகின்றன. அவை, மேற்கூரையும் சுவர்களும் இல்லாமல் தரைப்பகுதி மட்டும் காணப்படுகின்றன. இத்தரையமைப்பைக் கொண்டு, அக்கோவில்கள் நீண்ட அரைவட்டமாக இருந்தன என்பதை அறிகிறோம்.
நாகார்ச்சுனகொண்டா என்னும் மலை முற்காலத்தில் பேர்போன பௌத்தத் திருப்பதியாக இருந்தது. இது ஆந்திர நாட்டிலே குண்டூர் மாவட்டத்திலே கிருஷ்ணையாற்றங் கரையிலே இருக்கிறது. குண்டூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் வண்டியில் மாசெர்லா என்னும் இடத்துக்குப் போய் அங்கிருந்து 16 மைல் சென்றால் இந்த மலையையடையலாம். இங்கு, அழிந்துபோன சில பௌத்தக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் மூன்று, யானைக்கோவில் அமைப்பில் காணப் படுகின்றன. இவற்றின் தரையமைப்பைப் படத்தில் காண்க.
அழிந்துபோய் தரையமைப்பு மட்டும் காணப்படுகிற இந்தப் பௌத்த யானைக்கோவில் கட்டடத்தைக் கட்டியவர் சாந்தி ஸ்ரீ என்னும் அரசியார். இவர் அக்காலத்தில் இப் பகுதியை யரசாண்ட இக்காகு (இஷ்வாகு) அரசகுலத்தைச் சேர்ந்தவர். இச்சயித்தியக் கோவிலை இவர் கி.பி.2ஆம் நூற்றாண்டில் கட்டினார். இந்தக் கோவிலின் தரையிலே கல்லின் மேல் எழுதப்பட்ட சாசன எழுத்து இவ்வாறு தொடங்குகிறது.
ஸித்தம் நமோ பகவதோ புத்தஸ சேதிய கர
இதன் பொருள் : "பகவானுக்கு வணக்கம். புத்தருடைய சேதிய கிருகம்". இதனால், இது பகவன் புத்தருக்கு அமைக்கப்பட்ட சயித்தியக்கோவில் என்பது தெரிகிறது.
இவ்விடத்திலேயே வேறு இரண்டு யானைக் கோவில்களின் தரையமைப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கட்டியவர், மேற்படி இக்காகு அரச குலத்தைச் சேர்ந்த போதிஸ்ரீ என்னும் அரசியார்.
குண்டபல்லி கிராமம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த எல்லூர் தாலுகாவில் இருக்கிறது. இக்கிராமத்தில் இடிந்துபோன பெளத்தக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் யானைக்கோவிலும் ஒன்று. இதன் தரையமைப்பு நீண்ட அரைவட்டமாக இருக்கிறது. இதன் நீளம் 53 அடி, 7 அங்குலம். அகலம் 14 அடி, 5 அங்குலம். சுவரின் கனம் 4 அடி, 3 அங்குலம்.
கஞ்சம் மாவட்டம் சிக்ககோல் தாலுகாவில் வம்சதாரை என்னும் ஆற்றின் தென்கரையில் சாலிஹண்டம் என்னும் கிராமம் இருக்கிறது. கலிங்கபட்டணம் என்னும் துறைமுகத்திற்குத் தெற்கே 6 மைலில் இது இருக்கிறது. இந்தக் கிராமத்தையடுத்துள்ள குன்றின் மேலே உள்ள அழிந்துபோன பௌத்தக் கட்டங்களில் ஒன்று யானைக்கோவிலின் தரையமைப்புடையது. இதன் நீளம் ஏறக்குறைய 24 அடி, அகலம் 12% அடி. சுவரின் கனம் 3 அடி. இக்கட்ட டம் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கவேண்டும். இக்கட்டடச்சுவரில் உள்ள செங்கற்கள் 18" x 11" x 3” அளவுள்ளன.
விசாகப்பட்டணம் மாவட்டத்தில் உள்ள விஜய நகரத்திலிருந்து வடகிழக்கே 8 மைலுக்கப்பால் இராமதீர்த்தம் என்னும் கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தின் வடக்கேயுள்ள குருபக்தகொண்ட என்னும் குன்றின்மேல் இடிந்துபோன பௌத்தக் கட்டடங்கள் சில உள்ளன. அவற்றில் ஐந்து கட்டடங்கள் யானைக்கோவில்கள். இவற்றின் தரையமைப்பு அகல நீளங்கள் வருமாறு :
1ஆவது யானைக்கோவில்: இது மேற்குப் பக்கத்தில் உள்ளது. உட்புறமாக இதன் நீளம் 40 அடி. அகலம் 11 அடி. வாயிலின் அகலம் 4 அடி. சுவர் கனம் 44 அடி. இதில் 7 அடி உயரம் உள்ள, கருங்கல்லால் அமைந்த தாது கர்ப்பம் (சேதியம்) காணப்படுகிறது.
2ஆவது யானைக்கோவில்: இது 4 அடி 8 அங்குலம் உயரம் உள்ள மேடை மீது கட்டப்பட்டிருக்கிறது. நீளம் 26 அடி 9 அங்குலம். அகலம் 11 அடி 4 அங்குலம். வாயிலின் அகலம் 4 அடி 5 அங்குலம். சுவர் கனம் 2 அடி 4 அங்குலம். இதில் 9 அடி உயரம் உள்ள கருங்கல்லினால் அமைந்த சேதியம் இருக்கிறது.
3ஆவது யானைக்கோவில்: இது மேலே கூறப்பட்ட வற்றைவிடச் சற்றுப் பெரியது. இதன் முன்புற வாயிலின் அகலம் 4 அடி 10 அங்குலம். இதில் இருந்த தாது கர்ப்பத்தின் அடிப்புறம் மட்டும் இப்போது காணப்படுகிறது. இதன் சுற்றளவு 9 அடி 9 அங்குலம்.
4ஆவது யானைக்கோவில்: இதன் நீளம் 33 அடி 5 அங்குலம். அகலம் 11 அடி 6 அங்குலம். சுவர் கனம் 4 அடி 9 அங்குலம். இதிலும் கருங்கல்லினால் அமைந்த சேதியம் - காணப்படுகிறது.
5 ஆவது யானைக்கோவில்: இதன் நீளம் 30 அடி அகலம் 13 அடி 6 அங்குலம். சுவர் கனம் 3 அடி 6 அங்குலம்.
குருபக்தகொண்டாவுக்கு வடக்கே கால் மைலுக்கப்பால் துர்க்ககொண்ட என்னும் குன்று இருக்கிறது. இங்கு அழிந்து கிடக்கும் பெளத்தக் கட்டடங்களில் ஒன்று யானைக்கோவில். இதன் நீளம் 60 அடி அகலம் 13 அடி.
சாஞ்சி என்னும் இடம் போபால் சமஸ்தானத்தில் இருக்கிறது. சாஞ்சியின் பழைய பெயர் சோதியகிரி என்பது. சேதியகிரி என்பது சிதைந்து சாஞ்சி என்று கூறப்படுகிறது. இங்குப் பெளத்தக் கட்டடங்கள் சிதைந்து இடிந்து உள்ளன. இவற்றில் முக்கியமான கட்டடம் புப்புலாகாரமாக அதாவது நீர்க்குமிழிபோன்ற அமைப்புடையது. இங்குள்ள ஒரு கட்டடம் யானைக்கோவில் அமைப்பாக இருந்தது.
இதுகாறும் இடிந்து சிதைந்து அழிந்துபோன யானைக் கோவில்களின் செங்கற் கட்டடங்களின் தரையமைப்பைக் கண்டோம். யானைக்கோவிலின் செங்கற் கட்டடங்களை முழு உருவத்துடன் பார்க்கவில்லை. பெளத்தக் காலத்து யானைக் கோவில்களின் முழு உருவமுள்ள யானைக்கோவில்கள் உண்டா என்பதைப் பார்ப்போம். ஆம், உண்டு. சிறிதும் சிதையாமல், முழு உருவத்தோடு உள்ள, செங்கற்களால் கட்டப்பட்ட பௌத்தக் காலத்து யானைக்கோவில்கள் மூன்று இருக்கின்றன! அந்த மூன்று யானைக்கோவில்கள் இப்போது கபோதேசுவரர் கோவில் என்றும், திரிவிக்ரமன் கோவில் என்றும் தூங்கானைமாடம் என்றும் பெயர் பெற்றுள்ளன. இந்தப் பெளத்த காலத்து யானைக்கோவில்களைப் பார்த்து, ஆதிகாலத்தில் எவ்வாறு ஆனைக்கோவில்கள் செங்கற்களால் அமைக்கப்பட்டன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆதிகாலத்து யானைக்கோவிலில், அதாவது பெளத்தக் காலத்துக் கஜபிருஷ்ட விமானக்கோவிலில், இப்போது முழு அமைப்போடு உள்ளவை கபோதேசுவரர் கோவிலும் திரி விக்கிரமன் கோவிலும் பெண்ணாகடத்து யானைமாடக் கோவிலும் என்று கூறினோம். இக்கட்டடங்களின் அமைப்பை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்பு இக்கோவில்களைப் பற்றிய பொதுவான சில வரலாறுகளைத் தெரிந்து கொள்வோம்.
கபோதேசுவரர் கோவில்
ஆந்திர தேசத்துக் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 15 மைல் தூரத்தில் உள்ள சேஜர்லா கிராமத்தையடைந்தால் அங்குக் கபோதேசுவரர் கோவிலைக் காணலாம். முற்காலத்தில் பெளத்தமதக் கோவிலாக இருந்த இது பிற்காலத்தில் சைவசமயக் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.
திரிவிக்கிரமன் கோவில்
இது பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்தது. இப்போதைய மகாராஷ்டிர தேசத்தில் உள்ளது. ஷோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்சி என்னும் நகரத்திலிருந்து கிழக்கே 30 மைலுக்கப்பால் தேர்னா ஆற்றின் கரைமேல் உள்ள தேர் என்னும் கிராமத்தில் இக்கோவில் இருக்கிறது. தேர் கிராமத்தின் பழைய பெயர் தகரை என்பது. தேர் என்னும் இக் குக்கிராமம் பண்டைக்காலத்தில் தகரை என்று பேர் பெற்றிருந்த வாணிகம் செழித்த நகரமாக இருந்தது. பழம் பெருமையை இழந்து இப்போது குக்கிராமமாக இருக்கிற இவ்வூரில், பௌத்தக் காலத்து யானைக்கோவில் அழியாமல் இருக்கிறது. பெளத்தக் கோவிலாக இருந்த இது பிற்காலத்தில் வைணவக் கோவிலாக மாற்றப்பட்டுத் திரிவிக்கிரமன் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது.
செங்கல்லினால் கட்டப்பட்ட பெளத்தக் காலத்து யானைக்கோவில்கள் அழியாமல் முழு உருவத்துடன் இருப்பவை இவ்விரண்டு கோவில்கள் மட்டுமே. இவை இரண்டும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை என்று கருதப்படுகின்றன.
இக்கோவில்களைச் சூழ்ந்து முன்பக்கத்திலும் சுற்றுப் புறங்களிலும் மண்டபங்களும் கட்டடங்களும் பிற்காலத்தில் புதிதாக அமைக்கப்பட்டன. ஆதிகாலத்தில் இந்த மண்டபங்களும் கட்டடங்களும் இல்லை. இக்கோவில்களைப் பெளத்தரிடமிருந்து சைவ, வைணவர்கள் கைப்பற்றிக் கொண்ட பிறகு, புதிய மண்டபங்களும் கட்டடங்களும் மூலக் கோவிலைச் சூழ்ந்து கட்டினார்கள். சுற்றிலுமுள்ள கட்டடங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் நடுவில் உள்ள பழைய பௌத்தக் காலத்து யானைக்கோவிலைக் காணலாம். இனி, இவற்றின் கட்டட அமைப்பைப் பார்ப்போம். (படம் காண்க)
இரண்டு கட்டடங்களும் ஒரேவிதமாக அமைப்புள்ளவை யாகத் தெரிகின்றன. தரையமைப்பு நீண்டு பின்புறம் வளைந்து அரைவட்டமாக இருக்கின்றன. சுவர்களும் அதே அமைப்புள்ளதாக இருக்கின்றன. மேற்கூரை (விமானம்) யானைமுதுகு போன்று வளைவாக இருக்கிறது. அதாவது படகைக் கவிழ்த்துவைத்தது போன்று இருக்கிறது. முன்புறத்தில் வாயிலும் வாயிலுக்கு மேலே 'நெற்றி முகமும்' அமைந்துள்ளன. இரண்டு கட்டடங்களிலும் உள்ள செங்கற்கள் ஒரே அளவுள்ளவையாக இருக்கின்றன. ஒவ்வொரு கல்லும் 17 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் 3 அங்குல கனமும் உள்ளதாக இருக்கிறது. முழுவதும் சுடுமண்ணால் (செங்கல்லினால்) கட்டப்பட்டு வெளிப்புறத்திலும் உட் புறத்திலும் வெண்சுதை பூசப்பட்டுள்ளன. யானையை நிறுத்தி அதைப் பின்புறத்திலிருந்தும் பக்கங்களிலிருந்தும் பார்த்தால் எப்படி இருக்குமோ அவ்வித அமைப்புள்ளதாக இந்த யானைக் கோவில் கட்டடங்கள் இருக்கின்றன.
இரண்டு கட்டடங்களிலும் சுவரில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. கபோதேசுவரர் கட்டடத்தில் சுவருக்கும் கூரைக்கும் இடையிலே 'கழுத்து' என்னும் உறுப்பு இல்லாமல் சுவரும் கூரையும் ஒன்றாக இருக்கின்றன. ஆனால், திரிவிக்கிரமன் கட்டடத்தில் சுவருக்கும் கூரைக்கும் இடையிலே 'கழுத்து' என்னும் உறுப்பு அமைந்திருக்கிறது. மேலும், சுவரில் இடையிடையே சுவரோடு சுவராகத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தூண்கள் 'கழுத்து வரையில் அமைந்துள்ளன. 'கழுத்துக்குக் கீழே எழுதகம் அமைந் திருக்கிறது. 'கழுத்து' தூண்கள், எழுதகம் ஆகிய இவை யெல்லாம் இக்கட்டடத்துக்கு அழகு தருகின்றன.
இச்சிறு வேறுபாடுகள் தவிர இரண்டு கட்டடங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. இரண்டு கட்டடங்களில் (பக்கங் களிலும் பின்புறத்திலும்) சாளரங்கள் இல்லை.
வாயிலுக்கு மேலேயுள்ள 'நெற்றி முகம் சாளரங்களாக அமைந்துள்ளன. இதன் வழியாகக் காற்றும் வெளிச்சமும் கட்டடத்துள் சென்றன. இப்போது, சைவ வைணவர்கள் இச்சாளரங்களை அடைத்துவிட்டார்கள். ஆனால், 'நெற்றி முகம் அமைக்கப்பட்டதன் முதல் நோக்கம் காற்றும் வெளிச்சமும் கட்டடத்துக்கு உள்ளே வருவதற்காகவே.
கபோதேசுவரர் கட்டடத்தின் உட்புறத்தில் 72 அடி உயரத்துக்கு மேலே, விதானம் அமைத்தது போல (தளம் இட்டது போல) மேற்புறம் தெரியாதபடி மறைத்துவிட்டார்கள். இது பிற்காலத்தில் அடைக்கப்பட்டது. திரிவிக்கிரமன் கட்டடத் தில் இவ்வாறு அடைக்கப்படவில்லை.
இரண்டு யானைக்கோவில்களும் செங்கல் கட்டடங்கள் என்றும், இச்செங்கற்கள் ஒவ்வொன்றும் 17 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் 3 அங்குல கனமும் உள்ளது என்றும் கூறினோம். இக்கற்களின் அளவைக் கொண்டு இக்கட்டடங் கள் அமைக்கப்பட்ட காலத்தைக் கண்டறியலாம். இக்கற்கள் மெளரிய அரசர் காலத்துக் கற்களைவிடச் சற்றுச் சிறியனவாகவும், குப்த அரசர் காலத்துக் கற்களைவிடச் சற்றுப் பெரியதாகவும் இருக்கின்றன. ஆகவே இக்கட்டடங்கள் இவ்விரண்டு அரச பரம்பரையார் ஆண்ட காலத்துக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். அதாவது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இவை கட்டப்பட்டவை என்று கூறுகிறார்கள். வேறு சிலர் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இக்கட்டடங்கள் கட்டப்பட்டவை என்று கூறுகின்றனர். எப்படியிருந்தபோதிலும் இந்த யானைக்கோவில் கட்டடங்கள் ஆதிகாலத்துக் கட்டடங்களாகும். அதாவது பௌத்தக் காலத்து யானைக்கோவில் கட்டடங்களாகும்.
ஆனைமாடம்
தமிழ் நாட்டிலேயுள்ள ஆதிகாலத்து (பெளத்தக்காலத்து ) யானைக்கோவில் ஒன்று இருக்கிறது என்று கூறினோம். இக்கோவிலைக் 'கடந்தைத்தூங்கானைமாடம்' என்று கூறுவர். பெண்ணாகடம் என்னும் ஊரில் இக்கோவில் இருக்கிறது (திருவானைக்கா என்றும் பெயர் கூறுவர்). விழுப்புரம் - திருச்சி இருப்புப்பாதையில் பெண்ணாகடம் ரெயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு நாழிகை தூரத்தில் இக்கோவில் இருக்கிறது. இக்கோவிலைக் கட்டியவன் சோழன் செங் கணான் என்பவன். சோழன் செங்கணான் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் இருந்தவன். அவனால் கட்டப்பட்ட இந்த யானைமாடக்கோவில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அமைந்தது. எனவே, கபோதேசுவரர், திருவிக்கிரமன் யானைக்கோவில் களைவிட இது பழமையானது.
யானைக்கோவில் அமைப்பாக உள்ள இந்தக் கட்டடம், ஏனைய பௌத்தக் காலத்து யானைக்கோவிலைப் போன்றதே. இது சிவபெருமானுக்காகச் சோழன் கட்டிய கோவில். ஆனால், இதைப் பெளத்தக் காலத்துக் கோவில் என்று ஏன் கூறுகிறோம் என்றால், பெளத்த மதத்தார்களால் சிறப்பாகக் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தபடியால் இப்பெயர் கூறுகிறோம். இது ஆதிகாலத்திலிருந்தே சிவனுக்காகக் கட்டப்பட்ட கோவில். அதாவது பௌத்தக் கோவிலாக இருந்து சைவக் கோவிலாக மாற்றப்பட்டது அன்று.
இந்தப் பெண்ணாகடத்து யானைக்கோவில் கட்டடத் தில், ஏனைய யானைக்கோவில் கட்டடங்களில் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது என்னவென்றால், இக்கட்டடத்தின் சுவர்களில் சாளரங்கள் அமைத்திருப்பதுதான். இருபுறத்துச் சுவர்களிலும் பின்புறத்துச் சுவரிலும் ஒவ்வொரு சாளரம் வீதம் மூன்று சாளரங்கள் இக்கட்டடத்தில் சிறப்பாக அமைந் துள்ளன. இது அக்கட்டடத்துக்கே உரிய தனிச்சிறப்பு. ஆதிகாலம், இடைக்காலம், பிற்காலம் ஆகிய காலங்களில் அமைக்கப்பட்ட யானைக்கோவில் கட்டடங்கள் ஒன்றி லேனும் இதுபோன்ற சாளர அமைப்புகள் கிடையா. செங்கட்சோழன் கட்டிய இந்த யானைக்கோவிலில் மட்டும், தனிச்சிறப்பாகச் சாளரங்கள் இருக்கின்றன. ஏன்? இதன் காரணம் என்ன?
இந்த யானைமாடக் கோவிலில் அகநாழிகையில் (அகநாழிகை - திருவுண்ணாழிகை - கர்ப்பக்கிருகம்) எப்போதும் நீர் இருந்துகொண்டேயிருக்கிறது. நீரிலே இலிங்க உருவம் எழுந்தருளப்பட்டிருக்கிறது. இது பஞ்சபூத இலிங்கங்களில் அப்புலிங்கம். ஆகவே இது நீரின் இடையே அமைக்கப்பட்டிருக்கிறது. அப்பர் சுவாமிகள் தாம் அருளிய திருவானைக்கா திருத்தாண்டகத்தில், நீரில் எழுந்தருளியுள்ள இச்சிவலிங்க மூர்த்தியைச் 'செழுநீர்த்திரள்' என்று கூறுகிறார்.
சூரிய வெளிச்சம் படாத இடத்தில் நீர் தேங்கியிருந்தால் அந்நீர் கெட்டுப்போகும். காற்றும் வெளிச்சமும் புகாதபடி இக்கோவிலில் நீர் இருந்தால் கெட்டுப்போகும் அல்லவா? ஆகவே, காற்றும் சூரிய வெளிச்சமும் உள்ளே புகும்படியாக இந்த யானைக்கோவில் கட்டடத்தின் சுவர்களில் சாளரங்கள் அமைத்திருக்கிறார்கள். இதுதான் இக்கட்டடத்துக்குத் தனிச்சிறப்பாகச் சாளரம் அமைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது. (படம் காண்க.)
கி.பி. 3ஆம் நூற்றாண்டில் செங்கட் சோழனால் கட்டப்பட்ட இத்தூங்கானை மாடக்கோவிலை கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகளும் திருஞானசம்பந்தரும் தமது தேவாரப் பாடல்களில் பாடியிருக் கிறார்கள். அப்பர் சுவாமிகள் 'கடந்தையுள் தூங்கானைமாடம்' என்றும் 'பெண்ணாகடத்துப் பெருந்தூங்கானை மாடம்' என்றும் கூறுகிறார். திருஞானசம்பந்த சுவாமிகள் 'கடந்தைத் தடங்கோயில் தூங்கானை மாடம்' என்றும் 'பெண்ணா கடத்துப் பெருங்கோயில்' என்றும் கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சியினாலே பௌத்தக் காலத்து யானைக் கோவிலின் அமைப்பைக் கண்டோம். அந்தக் காலத்து யானைக்கோவில்கள் நீண்ட சதுரமாய்ப் பின்புறம் அரைவட்ட வளைவாய் அமைந்த தரையமைப்பையும் சுவர் அமைப்பையும் உடையதாய் யானைமுதுகு போன்ற (அல்லது படகைக் கவிழ்த்து வைத்தது போன்ற) கூரையையுடையது. முன்புற வாயிலுக்கு மேலே 'நெற்றி முகம்' என்னும் சாளரம் அமைந்திருந்தது. செங்கல்லினால் கட்டப்பட்டு உட்பக்கமும் வெளிப்பக்கமும் சுதையும் சுண்ணமும் பூசப்பட்டது. நெற்றி முகத்தைத் தவிர வேறு சாளரங்கள் இல்லாதது (பெண்ணாகடத்து யானைக்கோவில் இதற்கு விதிவிலக்காக உள்ளது). யானையின் உருவம் போல அமைந்திருந்தபடியால் யானைக்கோவில் என்றும் குஞ்சரக்குடிகை (குச்சரக்குடிகை) என்றும், கஜபிருஷ்டம், ஹஸ்திபிருஷ்டம் என்றும் பெயர் பெற்றது.
இக்கட்டட அமைப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால், ஏனைய கோவில் கட்டட அமைப்புகளில் கழுத்தாகிய பிரஸ்திரத்துக்கு மேலே அமைக்கப்படுகிற கர்ணகூடு, பஞ்சரம்சாலை என்னும் உறுப்புகள் அக்காலத்து யானைக் கோவில்களுக்குக் கிடையா. மேலும், சுவரின் வெளிப்புறத்தில், ஏனைய கோவில் கட்டடங்களில் அமைக்கப்படுகிற 'கோஷ்ட பஞ்சரம்' என்னும் உறுப்பும் ஆதிகால யானைக்கோவில்களில் கிடையா.
ஏறத்தாழக் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்தில் எழுதப்பட்ட காமிகாகமத்தில் கஜபிருஷ்ட ஹஸ்திபிருஷ்டக் கோவில்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஏனைய சிற்ப சாத்திர நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.
பல்லவர் காலத்து யானைக்கோவில்கள்
கி.பி. 600 முதல் 900 வரையில் அமைக்கப்பட்ட யானைக்கோவில் கட்டடங்களுக்குப் பல்லவர் காலத்து யானைக்கோவில்கள் என்று பெயர் கூறலாம். ஏனென்றால் பல்லவ அரசர் ஆட்சி கி.பி. 600க்கும் 900க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறப்புப் பெற்றிருந்ததோடு இக்காலத்திலே பல்லவ அரசர்கள் பலவிதமான கோவில் கட்டடங்களைச் சிறப்பாகச் செய்து அமைத்தார்கள் என்று சரித்திரங் கூறுகிறது. கி.பி. 600க்கு முற்பட்ட காலத்து யானைக்கோவில்களைப் பெளத்த கால யானைக்கோவில்கள் என்று பெயர் சூட்டினோம். பல்லவர் காலத்து யானைக்கோவில் கட்டடங்கள் சில இப்போதும் உள்ளன. சில அழிந்து மறைந்து போயின. முதலாம் மகேந்திரவர்மன் காலம் முதல் அபராஜிதவர்மன் காலம் ஈறாக அமைக்கப்பட்ட யானைக்கோவில்களைத்தான் பல்லவர் காலத்து யானைக்கோவில்கள் என்று கூறுகிறோம்.
இவைகளில், காஞ்சிபுரத்துக்கு அடுத்துள்ள கூரம் கிராமத்தில் இருந்த எச்சாதர பல்லவேச்சுரம் என்னும் யானைக்கோவில் அழிந்து மறைந்துவிட்டது. இதுபற்றிப் பின்னர்க் கூறுவோம். இப்போது நன்னிலையில் உள்ள பல்லவர் காலத்து யானைக்கோவில்கள் நாம் அறிந்த வரையில் நான்கே. அவை: மாமல்லபுரத்துச் 'சகாதேவரதம்' எனப்படுகிற யானைக்கோவிலும், ஒரகடத்து வாடாமல்லீச்சுரர் கோவிலும், குடிமல்லத்துப் பரசுராமேச்சுரக் கோவிலும், திருத்தணிகை வீரட்டானேச்சுரர் கோவிலும் ஆகும். இவற்றின் அமைப்புகளை ஆராய்ந்து பார்ப்போம்.
மாமல்லபுரத்து யானைக்கோவில்
மகாபலிபுரம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற மாமல்லபுரம் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கற் பட்டு இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 18 மைல் தூரத்தில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. இங்குப் பாறைகளைச் செதுக்கியமைக்கப்பட்ட சிற்பங்களும் கோவில்களும் உள்ளன. இப்பாறைக் கோவில்களில் 'பஞ்ச பாண்டவரதங்கள்' என்னும் பெயருள்ள தொகுதி ஒன்றுண்டு. இத்தொகுதிகளைச் சேர்ந்த ஒன்றுதான் நாம் கூறுகிற மாமல்லபுரத்து யானைக் கோவில் என்பது. இந்தக் கோவில் அமைப்பைப் பாமரமக்கள் 'நகுல் சகாதேவரதம்' என்று பெயர் கூறுகிறார்கள்.
'பஞ்சபாண்டவரதங்கள்' என்று பெயர் கூறப்படுகிற இவை உண்மையில் இரதங்கள் அல்ல; கோவில்களாகும். அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த கோவிற் கட்டட அமைப்புக்களின் உருவத் தோற்றத்தை இக்கருங்கற்பாறை களில் அக்காலத்துச் சிற்பிகள் அமைத்துக் காட்டியுள்ளனர். இளங்கோவிலின் அமைப்பு, இரண்டு நிலை மூன்று நிலை மாடக் கோவில்கள், யானைக்கோவில் முதலிய கோவில்களின் வெளித் தோற்றமும் அமைப்பும் எவ்வாறிருந்தன என்பதைக் காட்டுவதற்காகவே இக்கோவில்கள் கருங்கற்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கட்டடங்களின் உட்புற அமைப்புகளைக் காட்டுவது இவற்றை அமைத்த சிற்பிகளின் நோக்கம் அன்று. உட்புற அமைப்புகளையும் அமைத்துக் காட்டுவது அச்சிற்பிகளின் நோக்கமாயிருந்தால், உட்புற அமைப்புகளையும் அமைத்துக்காட்டியிருப்பார்கள். அவ்வா றில்லாமல், பலவிதக் கோவில் அமைப்புகளின் வெளித் தோற்றத்தை மட்டும் காட்டுவதே அவர்கள் நோக்கமாக இருந்தபடியால், கருவரையாகிய திருவுண்ணாழிகைகளை அமைக்காமல், விமானங்கள், சுவர்கள், கூடுகள், கூட கோஷ்டபஞ்சரங்கள் ஆகிய வெளித்தோற்றங்களை மட்டும் செம்மையாகவும் செப்பமாகவும் அமைத்துக் காட்டியுள்ளனர். சில பாறைக் கோவில்களின் விமான அமைப்புகளை மட்டும் நுணுக்கமாகவும் செப்பமாகவும் செய்துவிட்டு, மற்றப் பகுதிகளைச் செம்மையாக முடிக்காமல் விட்டிருக்கின்றனர்.
இந்த நோக்கத்தைக் கொண்டுதான், அதாவது கோவில் கட்டடத்தின் விமானத்தையும் சுவர் அமைப்பு, கூடகோஷ்ட பஞ்சர அமைப்பு ஆகியவற்றை மட்டும் (கர்ப்பக்கிருகமாகிய உண்ணாழிகையின் அமைப்பைக் காட்டுவது நோக்கமாக இல்லாமல்) கொண்டுதான், 'நகுல சகாதேவரதம்' என்று பெயர் கூறப்படுகிற யானைக்கோவிலையும் அமைத்திருக் கிறார்கள். இது வெறும் யானைக்கோவில் அமைப்பு மட்டுமன்று, யானைக்கோவிலில் மாடக்கோவில் அமைப்பும் ஆகும். இந்த யானைக்கோவில் மூன்று நிலையுள்ள மாடக் கோவிலாகும்.
கி.பி. 600க்கு முற்பட்ட பெளத்தர் காலத்து யானைக் கோவில் கட்டடங்களில் இரண்டுநிலை மாடக் கோவில் மூன்றுநிலைமாடக் கோவில்கள் காணப்படவில்லை. ஆனால், மூன்று நிலையுள்ள மாடக்கோவிலாக அமைந்த யானைக் கோவிலை மாமல்லபுரத்தில் காண்கிறோம். இது மாடக் கோவில் கட்டடங்களில் புதிதாகப் புகுத்தப்பட்ட மாறுதல் ஆகும். இரண்டு நிலை மூன்று நிலைகளையுடைய யானைக் கோவில்களைச் காமிகாகமம் கூறுகின்றது. இவ்வயானைக் கோவில்களுக்கு ஹஸ்திபிருஷ்டம்' என்றும் 'கஜபிருஷ்டம்' என்றும் காமிகாகமம் பெயர் கூறுகின்றது (காமிகாகமம் 60 ஆவது ஏகபூமியாதி விதிபடலம்). ஆனால், இரண்டுநிலை மாடமாக அமைந்த யானைக்கோவில் கட்டடம் இப்போது காணக்கிடைக்கவில்லை. முன்பு இருந்து பிற்காலத்தில் மறைந்துவிட்டனபோலும். ஆனால், மூன்று நிலை மாடமாக அமைந்த யானைக்கோவில் மாமல்லபுரத்து நகுல சகாதேவ ரதம்' ஒன்றே. யானைக்கோவில் அமைப்பில் உள்ள மூன்று நிலைமாடக் கோவில் இதைத் தவிர வேறொன்றும் கிடையாது.
இதன் அமைப்பை ஆராய்ந்து பார்ப்போம். நீண்ட அரைவட்டமாக அமைந்துள்ள இந்த யானைக் கோவில் தெற்கு நோக்கி நிற்கிறது. தெற்கு வடக்காக இதன் நீளம் 18 அடி. அகலம் 11 அடி உயரம் ஏறத்தாழ 16 அடி. இக்கட்டடத்தின் முன்பாகத்தில் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அந்த மண்டபத்தை இரண்டு சிங்கத்தூண்கள் தாங்குகின்றன. இந்த மண்டபம் இக்கட்டடத்துக்கு அழகையளிக்கின்றது. மண்டபத்துக்குள் நுழைந்தால் கட்டடத்தின் உள்ளே நுழைய வாயில்நிலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வாயிலுக்குள் நுழையமுடியாது. ஏனென்றால், முன்பு கூறியது போன்று திருவுண்ணாழிகை என்னும் அகநாழிகை (கருவறை) அமைக்கப்படாமல் இருக்கிறது. வாயிலின் இருபக்கங்களிலும் யானையின் முன்பக்க உருவம் (யானையின் தும்பிக்கையும் தலையும் காதுகளும்) சிற்பமாக அமைந்துள்ளது.
இதன் முதல் நிலையமைப்பைப் பார்ப்போம். இதன் சுவர் அமைப்பு நீண்ட அரைவட்டமாக அமைந்து, 'அதிஷ்டானம்' என்னும் சிறு மேடையின்மேல் நிற்கிறது. சுவர்களில் இடை யிடையே சுவர்களைச் சார்ந்து (திரிவிக்கிரமன் யானைக் கோவிலில் கண்டதுபோல) தூண்கள் அமைந்து கட்டடத்துக்கு அழகு தருகின்றன.
இதன் இரண்டாம் நிலையின் சுவர் அமைப்பும், முதல் நிலைச் சுவர் அமைப்புப் போன்றே நீண்ட அரை வட்ட மாகவும் சுவரின் இடையிடையே தூண்களுடையதாகவும் அமைந்திருக்கிறது. ஆனால், முதல் நிலைச் சுவரைவிடச் சற்று உள்ளடங்கியிருக்கிறது. இரண்டாம் நிலையின் சுற்றுப்புறங் களில், முதல் நிலைச் சுவரையொட்டி, 'கூடகோஷ்ட பஞ்சரங்கள்' அமைந்து கட்டடத்துக்கு அழகைத் தருகின்றன.
மூன்றாவது நிலையின் சுவர்கள் இரண்டாவது நிலைச் சுவரைவிடச் சற்று உள்ளடங்கி, நீண்ட அரைவட்ட அமைப்பாக இடையிடையே தூண்களைப் பெற்றிருக்கின்றது. மூன்றாம் நிலையின் சுற்றுப்புறங்களிலும், இரண்டாம் நிலையில் உள்ளது போலவே கூட கோஷ்டபஞ்சரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு மூன்று நிலைகளும் அழகுபட அமைந்துள்ளன.
மூன்றாவது நிலைக்கு மேல் உள்ள விமானத்தின் (கூரை) அமைப்பு யானையின் முதுகு போன்று அமைந்திருக்கின்றது. இந்த விமானத்தைப் பக்கங்களில் இருந்து பார்த்தால் யானைமுதுகின் தோற்றம் போன்றும் பின்புறத்திலிருந்து பார்த்தால் யானையின் பின் தோற்றம் போலவும் காணப் படுகின்றது. விமானத்தின் உச்சியில் வரிசையாகக் கலசங்கள் இருந்தன. இப்போது அவை காணப்படவில்லை. அவை இருந்த அடையாளங்கள் மட்டும் தெரிகின்றன. இந்த விமானத்தின் முன்புறம் 'நெற்றிமுகம்' என்று பெயர் பெறும். நெற்றி முகத்தின் மேலே, மூன்று கொம்புள்ள மனிதன் தலையுருவம் அமைந்திருக்கிறது. அது உடைந்திருக்கிறது.
விமானத்தின் முன்புறமாகிய நெற்றி முகத்தில், மூன்று வாயில்கள் போன்ற அமைப்பும் நடுவாயிலின் மத்தியில் சேதியம் (தாகோப - தாது கர்ப்பம்) போன்ற உருவமும் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் திருவுண்ணாழிகை (கர்ப்பக்கிருகம்) அமைக்கப்பட்டிருந்தால், அதனுள் எழுந்தருளப்பண்ணியிருக்கும் சோதியத்தின் உருவம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை இது காட்டுகிறது. நெற்றி முகத்தில் காணப்படுகிற இந்தச் சேதிய உருவப் புடைப்புச் சிற்பம், யானைக் கோவில்கள் பெளத்தர் வழிவந்த கட்டடம் என்பதை நினைவூட்டுகின்றன. இந்தப் பௌத்தச் சேதிய அடையாளங்கள் பல்லவர் காலத்திலும் விடாமல் தொடர்ந்து வந்துள்ளன என்பது கருதத்தக்கது.
பெளத்தர் கால யானைக்கோவில் விமானங்களில் காணப்படாத புதிய அமைப்பு இந்த விமானத்தில் காணப் படுகிறது. அது, விமானத்தின் மூன்று பக்கங்களிலும் பின் புறத்திலும் நீண்டு குறுகிய மூன்று 'பஞ்சரங்கள்' அமைக்கப் பட்டிருப்பதுதான். இந்தப் பஞ்சரங்கள் இரத விமானத்துக்கு அழகு தருகின்றது.
இந்த யானைக் கோவிலின் கிழக்குப் பக்கத்தில், யானை ஒன்று நிற்பது போலக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. (படம் காண்க)
இந்த யானையின் உருவம் இங்கு இருப்பது காரணமாக, இக்கட்டடம் இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோவிலாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். ஜராவதம் என்னும் வெள்ளை யானை இந்திரனுடைய ஊர்தி என்பது உண்மைதான். ஆனால் இந்த யானைக்கோவில் இந்திரனுக்காக அமைக்கப்பட்டது அன்று. ஏனென்றால் இது அமைக்கப் பட்ட கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் (இக்கோவில் மாமல்லன் என்னும் நரசிம்மவர்மன் முதலாவன் - வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் காலத்தில்) அமைக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே, இந்திரன் வழிபாடு குறைந்துவிட்டது. ஆகவே இது இந்திரனுக்காக அமைக்கப் பட்ட கோவில் அன்று.
இந்த யானையின் உருவம் இக்கட்டடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிற காரணம் என்னவென்றால், இது யானையின் முதுகு போன்ற விமானத்தை (உச்சியை) யுடைய கஜபிருஷ்ட விமானக்கோவில் என்பதைக் காட்டுவதற்காகத் தான் என்று தோன்றுகிறது. இந்த யானையின் உருவத்தைப் போலவே இக்கட்டடத்தின் உருவமும் அமைந்திருக்கிறது என்பதைக் கூறுவது போல இக்கட்டடத்தையமைத்த சிற்பி இந்த யானையின் உருவத்தையும் அமைத்தார் போலும்.
மாமல்லபுரத்து அழகான கோவிற் சிற்பங்களில் இந்த யானைக்கோவில் சிற்பமும் கண்ணுக்கும் காட்சிக்கும் இனிமை யானது. இதையமைத்த சிற்பியின் பெயரை வாழ்த்துவதற்கு அவன் பெயர் கூடத் தெரியவில்லையே!
அடிக்குறிப்பு: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தமது தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்னும் நூலின் துணை நூற்பட்டியலில் 'ஆணைக் கோவில் கையெழுத்துப் பிரதி என்று குறிப்பிட்டுள்ளார். இதைத் தனிநூலாக எழுத அவர் திட்டமிட்டிருந்தார் என்று தோன்றுகிறது. கையெழுத்துப் படியாக இருந்த இக்கட்டுரை அச்சில் முதன் முதலாக மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் என்ற தலைப்பில் ப.சரவணன் தொகுத்த 6 தொகுதிகளில் முதல் தொகுதியில் வெளியானது. இக்கட்டுரையில் 'படம் காண்க' என்று எழுதியிருப்பினும் கையெழுத்துப்படியில் எங்கும் படம் வரையப்படவில்லை.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி 1) | மக்கள் வெளியீடு | தொகுப்பாசிரியர்: ப.சரவணன்
Comments
Post a Comment